Advertisement

அடர்ந்த காட்டின் நடுவே இரையை வேட்டையாடும் வேகத்துடன் தன் புரவியில் சிங்கமும் அச்சம் கொள்ளும் வகையில் கம்பிரமாய் விழிகளை மட்டும் சுழற்றி தேடினான் கவிந்தமிழன்.
சிறு நொடிகள் கழிந்த பின் தன்னை நோக்கி வந்த அம்பை இரண்டென பிளந்தபின்  புன்னகையோடு அவ்விடத்தை நோக்கி சென்றான் கவிந்தமிழன்.
“எனக்காக தன் உயிரையும் துச்சமென நினைக்கும் என் உயிர் தோழா கருவா இன்னும் உனதம்பை என்னை நோக்கி மிகச்சரியாய் எய்ய கற்கவில்லையோ?” என்ற கேலி பேச்சில் கவலைகள் மறந்து உள்ளதால் சிரித்தான் கவிந்தமிழன்.
பச்சை பசேலென்ற  செடிகள் நிறைந்த இடத்திலிருந்து வேறுபாடின்றி வேட்டுவன் உடையிலிருந்த வாட்சாடமான வாலிப ஆண் புன்னகைத்தபடி வந்தான்.
“என்னங்க சாமி பண்றது? நீங்க இந்த ஊருக்கே ராசா. உங்களுக்கு தெரியாத கலையா? நான் சாதாரண வேடுவன். உங்க அளவுக்கு எனக்கு வில் விட தெரியாதுங்க” என்றான் பவ்யமாக.
“இவ்வளவு வளர்ந்தும் என்னை வம்பிழுக்கவில்லை என்றால் உனக்கு உறக்கம் வராதே?” என்று அவனை கட்டி தழுவிக்கொண்டான்.
“நான் உண்மையை தானுங்க சொல்றேன்” என்றான் வேடுவன்.
“உன்னிடம் எத்துணை முறை கூறி உள்ளேன். இதை போல் பேசக்கூடாது என்று?” இடையில் கரம் வைத்து முறைத்தவனை.
“சரி சரி கோபிக்கவேண்டாம் தோழரே” என்று அணைத்துக்கொண்டான் அவனின் ஒரே உயிர் தோழன் கருவா.
“நான் கூறியதை எல்லாம் கச்சிதமாக முடிந்துவிட்டதா?” என்றான் கேள்வியாய்.
“ஆயிற்று அரசே வாருங்கள்” என்று முன்னே நடந்து மரங்களோடு மரங்களை போல் இருந்த ஒரு பச்சை கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே சென்றான்.    
“வாருங்கள்” என்று திரும்பி புன்னகைத்தான்.
இருவர் கைகளிலும் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அந்த இருள் சூழ்ந்த அந்த சுரங்கத்தில் நடக்க ஆரம்பித்தனர்.
சிறிதுதூரம் சென்றதும் சிறு வெளிச்சம் தென்பட வேகமாக நடந்தனர்.
“தோழரே! நீங்கள் கூறியபடி ஒரு தனி உலகத்தை இங்கு உங்களுக்காக உருவாக்கியிருக்கிறேன்” என்று தன் இடக்கையை விரித்து எதிர்புறம் காட்டினான்.
கவிந்தமிழன் விழிகள் விரிய உள்ளே சென்றான்.
“இதை அனைத்தையும் இத்துணை விரைவில் முடிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை கருவா” என்று உள்ளம் நெகிழ கூறினான்.
“இதுவரை எனக்கு அன்பையும் பொன்னையும் என்றும் வாரி வழங்கிய என் தோழர் முதல் முறையாக என்னிடம் உதவி என்று கேட்டிருக்கிறார். அது என் பாக்கியம். அதான் அடியேன் விரைந்து முடித்துவிட்டேன். மிகவும் முக்கியமான நேரமாக இருக்கும் என்று நினைத்தேன்” என்றான் கருவன்.
“உண்மை தான் தோழரே! நிறைய சதி நடக்கிறது என்னை சுற்றி. எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கும். அதற்காக தான் உன்னையும் வர சொன்னேன். வா உனக்கு முக்கியமான சிலவற்றை கூறவேண்டும்.” என்று கூறி அவனை அழைத்து சென்றான்.                 
*************************
தன்னிடம் இருந்த ஓலையை பார்த்த மருதன், “நாம் விரைந்து செல்ல வேண்டிய  நேரம் வந்துவிட்டது”  என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
“ரதத்ததை விரைந்து எடுத்து செல். சிறிது தாமதித்தாலும் நம் திட்டம் அனைத்தும் பாழாகிவிடும்” என்று கர்ஜித்தான் தேரோட்டியை பார்த்து.
“ஆகட்டும் அரசசே. இதோ சென்று விடலாம்” என்று பரிகளை வேகமாக செலுத்தினான் தேரோட்டி.
தேர் வந்து நின்ற இடம் தற்பொழுது தன் பணிகளை முடித்துக்கொண்டு கவிந்தமிழன் வந்துகொண்டிருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி.
தேரிலிருந்து இறங்கிய மருதன் தன் கரத்திலிருந்த தீப்பந்தத்தை எடுத்து கொண்டு சிறிது தூரம் தள்ளி சென்றான்.
“கனி இந்த பகுதி நம் முதல்திட்டத்திற்கு சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவன் கனியழகனை பார்த்து புன்னகைத்தபடி நெருப்பை அங்கிருந்த காய்ந்த சருகுகளின் மீதும், காய்ந்த மரங்களின் மீதும் வைத்தான்.
தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.
“என்ன கனி இதோ இந்த மேற்கு பகுதியை தொடர்ந்து நம் எதிரி நாட்டின் எல்லை ஆரம்பம் அல்லவா? நம் ஏற்பாட்டின்படி அவர்களுக்கு கவிந்தமிழன் தான் இந்த சதியை செய்துகொண்டிருப்பதாக ஓலை அனுப்பியாயிற்று. இந்த தீயை போல் இவர்களின் பகையும் கொழுந்துவிட்டு எறியபோகிறது.” என்று அந்த பகுதியே அதிரும்படி சிரித்தான் மருதன்.
“ஆம் மருதா! அதோடு முடிந்துவிடுமா என்ன?” என்று அர்த்தம் புரிந்தவனாய்  புன்னகைத்தான் கனியழகன்.
“ஹ்ம்ம் … அது தான் உன் அண்ணனின் கெட்ட நேரம் போலிருக்கிறது. இதையெல்லாம் இமைமூடும் நேரத்திற்குள் சரி செய்யும் திறமை கொண்டவன் ஆயிற்றே? ஆதலால் வா அடுத்த திட்டத்தை உடனே செய்ய வேண்டும்” என்று வேகமாக நடந்தான் மருதன். அவனை பின்தொடர்ந்து கனியழகனும் சென்றான்.
சிறிதுதூரம் சென்றவுடன் நீண்ட தூரத்தில் தீயினால் சூழப்பட்டு வெளியேற போராடிக்கொண்டிருந்தான் கவிந்தமிழன்.
“பாவமாக உள்ளது இல்லையா கனி. இப்பொழுதே சென்று காப்பாற்றுவோமோ? இல்லை உடனே அவன் உயிரை குடித்துவிடலாமா?” என்றான் மருதன்.
“இல்லை மருதா! இரண்டுமே நடக்கக்கூடாது. அவனின் உடலில் உயிர் இருக்க வேண்டும். ஆனால் நகரக்கூடாது. அப்பொழுது தான் அவனின் திறமைகளை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்.” என்று சிரித்தான் கனியழகன்.
“சரியாக சொன்னாய். அப்படியென்றால் நீ தான் வில்லம்பு எய்வதில் வல்லவனாயிற்றே?” என்று தன் இடையினில் இருந்து ஒரு குப்பியை எடுத்து அதில் இருந்த திரவத்தை ஒரு வில்லில் ஊற்றி பற்றவைத்து கனியழகனிடம் நீட்டினான்.
“இதை குறித்தவறாமல் அங்கே நிற்கும் கவிந்தமிழனின் மேல்படாமல் அவன் நிற்கும் நிலத்தில் விழவேண்டும்.” என்றான் மருதன்.
சரி தலையசைத்து கனி அதனை பெற்றுக்கொண்டு குறிபார்த்து எய்தான்.
குறித்தவறாமல் கவியின் பாதங்களின் அருகில் சென்று விழுந்தது.
********
“இருட்டி விட்டது. விடியலில் வந்தது. என்னை தேடிக்கொண்டிருக்கும் என்னவளின் விழிகள். விரைந்து செல்லவேண்டும்” என்று தனக்குள் பேசியபடி புரவியை வேகமாக செலுத்தினான் கவிந்தமிழன்.
திடிரென்று காட்டுத்தீ மளமளவென பரவ, “என்ன இது? இது காட்டு தீ பரவும் பருவம் அல்லவே?” என்று யோசித்தவன் மனதில் ஏதோ தவறாக பட்டது.
“ஏதோ சரியில்லை. விரைந்து இதில் இருந்து தப்பிக்க வேண்டும்” என்று  கவிந்தமிழன் விழிகளில் வழிதேட, அணைத்து வழிகளிலும் திஜுவாலை அளவுகடந்து எரிந்தது.
தப்பிக்கும் எண்ணத்தில் இருந்தவன் தன்னிடம் வந்து விழுந்த அம்பை கவனிக்க தவறிவிட்டான்.
சிறிது நேரத்தில் அவனையும் மீறி அந்த குப்பியில் இருந்த மருந்து அவனை மயக்கமடைய செய்தது.
************
‘என்ன ஆயிற்று இவருக்கு? நான் உறக்கத்தில் இருந்தாலும் என்னை எழுப்பி கூறியிருக்கலாம் அல்லவா? என்னிடம் கூறிவிட்டு செல்பவர் இன்று ஒரு ஓலையை எழுதிவைத்துவிட்டு சென்றிருக்கிறார். மாலைப்பொழுதிற்குள் வந்துவிடுவதனால் தான் இப்படி எழுதி வைத்துவிட்டு செல்வார். மாலை நெருங்கி இருள் சூழத்தொடங்கிவிட்டது. இன்னும் அவரின் திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லையே எனக்கு. எனக்கு ஏதோ தவறாக நடக்கப்போவதாக  என் உள்ளம் கூறிக்கொண்டே இருக்கிறது. நெஞ்சமெல்லாம் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. தென்னாடுடைய சிவனே! என் நாதனை என்னிடமே விரைந்து சேருங்கள். உன் ஆலயம் நோக்கி நான் வருகிறேன்’ என்று தனக்குள் வேதனை எண்ணங்களை சுமந்து குழம்பிக்கொண்டிருந்தாள் மலரிதழ்.
“அம்மா! தாங்கள் விடியலிலிருந்து உணவு எதுவும்  எடுத்து கொள்ளாமல் இப்படி அரைவயிராய் இருந்தால் மன்னர் வந்தபின் மிகவும் வருந்துவார். சிறிதேனும் உண்ணுங்கள்.” என்றாள் அவளின் பணிப்பெண்களில் உற்றத்தோழியான ஒருத்தி.
“எனக்கு அவரை காணவேண்டும். அதுவரை உணவேதும் வேண்டாம்” என்று கூறும் பொழுதே மயங்கி விழுந்தாள்.

Advertisement