Advertisement

என்னதான் கணவனின் கரம் பிடித்து இங்கு வந்துவிட்டாலும் தனக்கிருக்கும் ஒரே சொந்தம் அண்ணன் தானே? இப்போதாவது கோபம் குறைந்திருக்கும் என்று நினைத்து சென்றவள். அவர்களின் பழிவாங்கும் எண்ணம் முழுவதுமாக அடங்கவில்லை என்பதை அவர்களின் உரையாடலில் தெரிந்துகொண்டாள் மலரிதழ்.
தங்களின் அறையில் ஓயாரமாய் சிறிய மதில் சுவர் மேல் பாதி அமர்ந்தபடி தீவிர யோசனையில் இருப்பவளின் எண்ணத்தை அறிந்தவன். பின்னாலிருந்து அவளின் கூந்தலை தடவிகொடுத்தவாறு, “என் செய்ய? என்னை நீ மணமுடித்திராமல் உன் தமையனின் விருப்பப்பபடி நடந்திருந்தால் இத்துணை கவலை கொள்ள வேண்டியதில்லை அல்லவா?” என்றான் பொய்யான கவலையோடு.
அவனின் பேச்சு எள்ளி நகையாடும் வண்ணம் இருப்பதை உணர்ந்து அவனை இடையில் கரம் வைத்து முறைத்தாள்.
“என்ன சொன்னீர்? மனதார உம்மை நேசித்து விட்டு இன்னொரு ஆணின் கரம் என் மேல் பதிப்பதற்கா? சொல்லும் உன் நாவையே களவாடும் கள்ளி நான் என்பதை நீர் மறக்கமாட்டீர் என நினைக்கிறன்” என்றாள் மலரிதழ்.
“ஹ்ம்ம்.” என்று உள்ளுக்குள் சிரித்தவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என் உள்ளத்தையும் என்னையும் சேர்த்து களவாடியவளாயிற்றே நீ? இதை செய்யமாட்டாயோ?” என்று விழிகளில் சிரிக்க.
“உமக்கு குறும்பு தலைக்கு மேல் ஓங்கியுள்ளது. இனி உம்முடன் பேச மாட்டேன் போங்கள்.” என்று வெளியே செல்ல திரும்பியவள் கரம் பிடித்து சுழற்ற அவனின் மார்பிலே மலர்பந்தாய் முட்டி நின்றாள்.
“இப்பொழுது என்ன வேண்டும்?” என்றாள் மலரிதழ்.
“அதற்குள்ளே என் இதயராணிக்கு மூக்கின் மேல் கோபம் வநதுவிட்டதோ? உன் இதழ்களின் சுவையில் சொக்கி நின்று உனக்குள் கறைந்தவனடி நான். நீயே என்னை நீங்கி சென்றாலும் உன் உயிரின் கடைசி நொடி என் நெஞ்சமாகவே இருக்கும். அல்லது என் விழியின் இறுதி மூடல் உனது பூமுகமாக தான் இருக்கும் மலர்.” என்றதும் அவனின் நெஞ்சத்தில் அழுந்த முகம் புதைத்து விசும்ப தொடங்கினாள்.
“என் உள்ளம் கலங்கும்படி என்ன பேச்சிது? என்னால் இதெல்லாம் கேட்கவே முடியவில்லை. நினைத்தாலே உள்ளம் பதறுகிறது. இனி ஒரு முறை இது மாதிரி பேசாதீர். நீர் இல்லாத இப்புவியில் என் உடல்கூட இருக்க விரும்பாது.” என்று விழிநீர் பெறுக தேம்ப.
“என்னை மன்னித்துவிடு மலர். இனி இது போல் பேசமாட்டேன்.” என்று அவளின் நெற்றியில் தன் இதழ் பதித்து தலைவருடினான்.
“உன் வருத்தம் புரியாமல் இல்லை எனக்கு. இதனை சரி செய்ய என்னிடம் ஒரு வழி உள்ளது.” என்றான் ஒரு விரலை கன்னத்தில் வைத்து யோசித்தபடி.
“என்ன என்று சொல்லுங்கள். அதுபோலவே செய்துவிடலாம்” என்றாள் மலரிதழ் ஆர்வமாக.
“ஹ்ம்ம் சொல்லட்டுமா?” என்றான் குறும்புடன்.
“ஹ்ம்ம்” என்றாள் மலரிதழ்.
“அது என்னவென்றால்…” என்று அவளை பார்த்து சிரிக்க.
“சீக்கிரம் சொல்லுங்கள். ஏன் என்னை இப்படி காக்க வைக்கிறிர்?” என்று சிணுங்கினாள் மலர்திழ்.
“சரி சரி.. மாமனின் முகத்தில் ஓங்கி அறைய நம் புதல்வன் வந்துவிட்டால் தானாக உன் அண்ணனின் கோபம் எல்லாம் பறந்துவிடும்.” என்றான் விழிகளில் அவளின் செயல்களை விழுங்கியபடி.
நம் புதல்வன் என்ற சொல்லை கேட்டதும் வெட்கத்தின் பிடியில் சிக்கிய மலரிதழ்.
தன் தாமரை கரங்களால் முகம் மூட, ஆண்மைக்கே உரிய பெரும் சிரிப்பொலியை எழுப்பி அவளை நெருங்கி விரல்களை நீக்கி அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
“என்ன வெட்கம் அன்பே? நம் வாழ்க்கையின் வசந்தமென வீசப்போவது நம் வாரிசல்லவா? எனக்குள் ஒரு பூரிப்பு தட்டுகிறது உன் மெல்லிய தேனிதழால் அச்செய்தியை கேட்க. நம் காதலின் சாட்சி உன் மேனியில் வளர அதை காணும் நாளுக்காக ஏங்க தொடங்கிவிட்டேன்.” என்று அவர்கள் காதலினால் கரைய நாம் விலகி நிற்போம்.
*****
“எவ்வளவு துணிவிருந்தால் என் அரண்மனைக்குள் வந்து என்னையே எச்சரித்து செல்வான். அவனுக்கு எமனே நான் தான் கனியழகா” என்று கொந்தளித்து கொண்டிருந்தவனை தோல் தட்டி சமாதானம் செய்தான் கனியழகன்.
“நண்பா மருதா. கோபம் கொள்வதால் உன் உடலுக்கு தான் கெடுதல் அதைவிடுத்து அதற்கான திட்டத்தை வகுப்போம். என் உள்ளத்தில் ஒரு திட்டம் உதயமாகி இருக்க, அதை சொல்லலாமாவேண்டாமா என்று தயக்கமாக உள்ளது.” என்றான் கனியழகன்.
“என்னிடம் சொல்ல என்ன தயக்கம் கனி.. சொல்லு” என்றான் விழிகளில் வெறி மின்ன.
தன் திட்டத்தினை விவரித்த பின் மருதனை பார்க்க, அவனும் அவனை வெற்றி கொண்டதை போல் சிரித்தான்.
“அருமை நண்பா! உன் திட்டம். எப்பொழுது செயல் படுத்த போகிறோம். நிச்சயமாக இது வேலை செய்யும். ஆனால் அதற்குமுன் ஒன்று செய்யவேண்டும்” என்றான் மருதன்.
“என்ன நண்பா?” என்றான் கனியழகன்.
“நம் திட்டம் செயல்படும் முன் அவனின் விசேட சக்திகளின் யுக்திகளை கற்று கொள்ள வேண்டும். அது என்னால் முடியாது. ஆனால் உன்னால் முடியும்” என்ற மருதனை தலையசைத்து ஆமோதித்தான் கனியழகன்.
“அவன் விழிகளை நேருக்கு நேர் பார்ப்பவரின் உள்ளம் அறியும் திறன், மற்றும் வேண்டும் என்ற பொழுது ஒருவரின் உடம்பிற்குள் நுழைந்து செயல்களை முடித்தபின் வெளியேறும் திறன், மற்றும் பார்வையாலே எதிரிலிருப்பவர்களின் நோய்களை கண்டு அதற்கான மருந்துகளை அபூர்வ பச்சிலைகளின் மூலம் குணப்படுத்தும் திறன். இவற்றை எல்லாம் விட இன்னொரு அதிதீவிர சக்தியை வரமாக சித்தர்களிடம் பெற்றவன் ஆயிற்றே ?” என்று மருதன் கூற.
அவனின் சொற்களில் இருக்கும் உண்மையை உணர்ந்தவன், “அச்சக்திகளின் தந்திரத்தை நான் கற்றறிய வேண்டும் நண்பா. முடிந்ததும் நம் திட்டத்தின் மூலம் அவனின் உயிர் பறிக்கப்படும் பின் உன் தங்கையை மனம் புரியவேண்டும் நண்பா” என்று குரோதத்துடன் சிரித்தான் கனியழகன்.

Advertisement