Advertisement

“நாங்க என்னடா பண்ணமுடியும்? தெளிவா சொல்லு” என்றான் நந்து ஒன்றும் புரியாமல்.
“சொல்றேன். ஆனா எல்லாத்தையும் இப்போ சொல்ல நேரமில்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கொல்லிமலை கிளம்புங்க” என்றான் ஷ்ரவன்.
“என்னது கொல்லிமலையா? எதுக்கு அங்க?” என்றனர் இருவரும்.
“என்னை உயிரோட கொண்டு வரப்போற ரகசியம் அங்க தான் இருக்கு” என்றான் ஷ்ரவன் மெல்ல கவலையாய் சிரித்து.
“என்னது உன்னை மறுபடியும் கொண்டு வரதுக்கு அங்க போகணுமா? டேய் ஏதாவது புரியற மாதிரி சொல்றியா?” என்றான் நந்து.
“டேய் ஏன்டா இப்படி கேள்வி கேட்டு என் உயிரை வாங்குற? இப்போ உங்களுக்கு என்னை திரும்பி கொண்டு வரணும்னா நேரம் ரொம்பக்குறைவா இருக்கு. இன்னும் நாலு நாளைக்குள்ள அங்க நான் நினைச்ச மாதிரி நடக்கலைன்னா. அப்புறம் நீங்க எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னை கொண்டு வரமுடியாது. இதோ இப்படி பேசுறிங்களே அதுகூட முடியாது” என்றான் ஷ்ரவன்.
“எனக்கு ஒன்னும் புரியலை.முதல்ல நாம கிளம்புவோம். ஆமாடா. அகலயாவும் நம்மகூட வரலாம்ல?” என்றான் நந்து கவலையாய் அகல்யாவை பார்த்தபடி.
ஏற்கனவே ஷ்ரவன் தன்னுடைய உடன்பிறந்தவன் இல்லை என்பதால் மிகவும் கவலையாய் இருக்கும் அகல்யா இப்போது மிகவும் பரிதாபமாக நந்துவை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அகல்யாவை திரும்பி பார்த்த ஷ்ரவன்.
“டேய் அவ என்கூட பிறக்கலைன்னாலும் அவ மட்டும் தான் எனக்கு தங்கச்சி. அதுல எந்த மாற்றமும் இல்ல. இதை அவகிட்ட சொல்லிடு. ஆனா இப்போ நாம போக போற இடத்துக்கு அவ வர வேணடாம். நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் அங்க போக முடியும்.” என்றான் ஷ்ரவன்.
“ஹம்ம் சரி டா.” என்று அகல்யாவிடம் சென்றவன் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துக்கூறினான்.
“சரி நாங்க வரோம் அகல்யா.” என்றான் நந்து.
“சரி. ஆனா வரும்போது கண்டிப்பா எங்க அண்ணனோட தான் வரணும்” என்று சிரித்தாள் அகல்யா.
“இங்க பார் அகல்யா. இங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியல. ஆனா ஷ்ரவன் சொல்றான்னா கண்டிப்பா ஏதோ இருக்கு அந்த நம்பிக்கையில் தான் நாங்க போறோம். அவன் உயிரோட வந்தா அதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்கு நமக்கு.” என்றான் நந்து.
“போற வழில நிறைய ஆபத்து இருக்கு. அதனால நீங்க ரெண்டு பேரும் ரொம்ப  ஜாக்கிரதையா இருக்கனும். அப்டியே நான் சொல்றதையம் கூட எடுத்துக்கோங்க” என்றான் ஷ்ரவன்.
“சரிடா” என்ற நந்து ஷ்ரவன் கூறியவற்றை தன் பைக்குள் வைத்துக்கொண்டான்.
“சரிடா. கிளம்பியாச்சு. போலாமா?” என்று வந்து நின்றனர் நந்துவும் ஷன்மதியும்.
ஷன்மதி அன்று மலர்ந்த மலர் போல் மலர்ந்திருக்க, அவளை வைத்த விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஷ்ரவன்.
“டேய் போதும்டா. உன் ரொமான்ஸை நீ திரும்பி வந்தப்புறம் வச்சிக்க. இப்போ போகலாம்” என்றான் நந்து குறும்பாய்.
‘பொறாமை புடிச்ச பைய’ என்று மனதினுள் பொங்கிய ஷ்ரவன்.
‘வந்ததுர்லர்ந்து இவன் கூடயே இருந்துட்டேன். என் மதிக்கிட்ட கொஞ்சம் தனியாகூட பேசமுடியலை’ என்று சிறுபிள்ளை போல் மனதினுள் சண்டையிட்டு கொண்டிருந்தான்
“இப்போ நீ என்ன தான் சொல்ற? கிளம்புறியா இல்லையா?” என்றான் நந்து வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற.
“ஹ்ம்ம்…” என்று ஷ்ரவன் எதுவும் கூறாமல் தயங்க.
“இப்போ எதுக்குடா கால்ல கோலம் போடாம, வாயில கோலம் போட்ற? என்ன விஷயம் சொல்லு?” என்றான் அடக்கிவைத்த சிரிப்பை வெளிக்காட்டாமல்.
‘என்னது வாயில கோலம் போடறனா?’ என்று வெடுக்கென்று அவனை திரும்பி முறைக்க.
“சும்மா டா” என்று கண்ணடித்தான் நந்து.
“ஹ்ம்..” என்று மீண்டும் ஷ்ரவன் தயங்க.
“என்னடா? வா போகலாம்” என்றான் நந்து அவசரமாய்.
சுற்றிமுற்றி பார்த்தவன், “ஹ்ம்ம்..போலாம்.. அதுக்கு முன்னாடி நான் மதிக்கிட்ட தனியா பேசணும்” என்றான் மதியின் விழிகளில் கறைந்தவனாய்.
இருவரையும் மாறி மாறி பார்த்த நந்து தலையில் அடித்து கொண்டான்.
“இதுக்கு ஏன்டா என்கிட்டே கேக்குற? போங்கடா.. நான் என் பொண்டாட்டிகிட்டயாவது பேசிட்டு வரேன்” சிரித்தபடி அகல்யாவிடம் சென்றான் நந்து.
ஷன்மதி தான் உடைமாற்றிய அறைக்குள் செல்ல. காற்றில் கரைந்த உருவமாய் ஷ்ரவன் அவளின் பின்னே சென்றான்.
“என்ன ஷ்ரவன்? என்கிட்டே ஏதாவது முக்கியமா சொல்லனுமா?” என்றாள் அவனின் முகம் பார்த்து.
“ஹ்ம்ம்.. சொல்லணும்.. அதுக்கு முன்னாடி..” என்றவன் அவளை ஆசையோடு கட்டிக்கொண்டான்.
இருமேனிகள் தொட்டுக்கொள்ளாத ஸ்பரிசம் ஆனாலும் காதலின் ஆழத்தால் அந்த தொடுகையை உணரமுடிந்தது இருவராலும்.
மெல்ல ஷன்மதியின் கரம்பிடித்து கட்டிலில் அமரவைத்தவன் தான் அவள் முன் மண்டியிட்டான்.
“மதிம்மா. இப்போ நான் சொல்லப்போறது உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியமா இருக்கனும்.ரொம்ப ரகசியமானது. நந்துவுக்கு கூட தெரியக்கூடாது… அப்டி தெரிஞ்சா அவன் உயிருக்கு ஆபத்து. அதுவுமில்லாம..” என்ற ஷ்ரவன் அவள் முகம்பாராமல் முகம் திருப்பி விழிமூடி தயங்கி நின்றான்.
“அதுவுமில்லாம என்ன ஷ்ரவன்?” என்றாள் ஷன்மதி.
“அது.. வந்து.. மதி.. ” என்று அவள் விழியோடு தன் விழி கலந்திருக்க.
“போன ஜென்மங்கள்ல.. நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா பரிபூரணமா வாழ்ந்துருக்கோம். இந்த ஜென்மத்துலையும் நாம் கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சிட்டோம்னா அவங்க நினைச்சதை செய்யமுடியாது. அதனால தான் நாம வாழறதுக்குள்ள ..” விழி நீர் சுரக்க அமைதியானான்.
அவனின் முகத்தை திருப்பி உணரமுடியாத ஒரு தொடுதலில் அவன் விழிகளில் முத்தமிட்டவள்.
“இங்க பாரு ஷ்ரவ். நாம உடலால் சேர்ந்தாதான் நாம கணவன் மனைவின்னு நினைக்கிறவங்களுக்கு தெரியலை நம்ம காதல் அதற்கும் அப்பாற்பட்டதுன்னு” என்று சிரித்தாள் ஷன்மதி.
என்ன சொல்வது என்று தெரியாத திகைப்பு அவள் வார்த்தைகளில் ஏற்பட, “மதிம்மா..” என்று அவளை அணைத்துக்கொண்டு அழுதபடி அவளுக்கு அன்னையாய் இருந்தவன் இன்று அவளின் அரவணைப்பில் சிறுகுழந்தையானான்.
“அதுமட்டுமில்ல மதி. இன்னும் நாலு நாள்குள்ளே நீங்க என்னை மீட்கலைன்னா. அவங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு என் உடலை எரிச்சிடுவாங்க.” என்றான் ஷ்ரவன்.
“ஐயோ ஷ்ரவன் நீங்க சொல்றது உண்மையா?’ என்று பதறினாள் மதி.
“மதிம்மா. நீ முதல்ல டென்சன் ஆகறதை நிறுத்து. நான் சொல்றதை கொஞ்சம் தெளிவா கேட்டுக்கோ” என்றான் ஷ்ரவன்.
“ம்ம்” என்று தலையாட்டிய மதி அவனை வயிற்றில் புளிகரைக்க பார்த்து கொண்டிருந்தாள்.
“நந்துவை ஒரு துணைக்காக தான் உன்கூட வரசொல்லிருக்கேன். ஏன்னா அவனால் உள்ள வரமுடியாது. ஆனா, அந்த கேட் வரைக்கும் அவன் உன்கூட பாதுக்காப்பா வருவான். அதுக்கப்புறம் நீ தான் என்னை நினைச்சு பயமில்லாம இருக்கனும்” என்றான் ஷ்ரவன்.
.

Advertisement