Advertisement

இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் எதிரில் அமர்ந்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஷ்ரவனை முறைத்தவள்.
“டேய்! எரும பார்த்துட்டு தான இருக்க? நீ என்கூட தான் இருக்கன்னு நான் சொன்னா நம்பமாட்டேங்கிறாங்க. ஒழுங்கு மரியாதையா நீயே இவங்க முன்னாடி வந்து சொல்லு” என்றாள் ஷர்வனின் கண்களை நோக்கி.
“ஹுஹஊம் … நீயே தான் சொல்லணும் செல்லகுட்டி. நான் வரமாட்டேன்” என்றான் வேண்டுமென்றே அவளை சீண்ட.
“அப்போ நீ வரமாட்ட?” என்றாள் அவளும் அவனை அதே குறும்புடன்.
“வரேன். எனக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துடு. உடனே தெரியரேன்.” என்றான் கண்ணடித்தபடி.
“என்னது? அதெல்லாம் முடியாது” என்றாள் முகம் சிவக்க.
“இப்போ இல்ல.. நாம தனியா இருக்கும்போது ஒண்ணே ஒன்னு அதுவும் சின்ன குழந்தைகளுக்கு தரமாதிரி கண்ணத்துல தர சீனே கிடையாது.” என்றான் இன்னும் ஷன்மதியை வம்பிழுக்க.
“அப்புறம்?” என்றாள் படபடக்கும் நெஞ்சை அடக்கியபடி.
“டைரெக்ட்டா இங்க தான்” என்றான் ஷ்ரவன் தன் இதழின் மேல் விரல்வைத்து.
“ஹா..” என்றாள் அதிர்ச்சியாய் மதி.
“ஹே! என்ன நீ இப்படி ஷாக் ஆகுற? ஒரே ஒரு முத்தம் தான் கேட்டேன். அதுக்கு போய் இப்படி முழிக்கிற?” என்றான் கன்னத்தில் குழிவிழ சிரித்தபடி.
“முடியவே முடியாது” என்றாள் வேர்த்து விருவிருத்து.
“அப்போ நானும் வரமுடியாது” என்றான் சட்டைக்காலரை தூக்கிவிட்டபடி.
“அப்போ நீ வரமாட்ட?” என்றாள் ஷன்மதி.
“ஆமாம்” என்றான் ஷ்ரவன்.
“அப்போ சரி. உன்னை எப்படி சொல்ல வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்” என்றாள் விழிகளில் குறும்பு மின்ன.
‘என்ன நான் வரமுடியாதுன்னு சொன்னா, இவ என்கிட்ட கெஞ்சுவான்னு பார்த்தா இவ எனக்கு சவால் விட்றா? என்ன பண்ண போறா இந்த சிண்டு?’ என்று ஷ்ரவன் தனக்குள்ளே யோசித்துகொண்டிருக்க.
இங்கே அவள் வேலையை காட்டி கொண்டிருந்தாள் ஷன்மதி.
“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா. இதோ என் முன்னாடி தான் எனக்கு சவால் விட்டுட்டு உட்கார்ந்துருக்கார் உங்க நண்பன். இதோ இப்போ அவர் இருக்கார்னு நான் நிரூபிக்கிறேன்” என்று ஒரு வெற்றுதாளை எடுத்து ஷ்ரவனை பார்த்து சிரித்தபடி “மிஸ்.ஷன்மதி சுந்தரம்” என்று தந்தையின் பெயரோடு சேர்த்து எழுதினாள்.
இதை பார்த்த ஷ்ரவனுக்கு கோபம் தலைகேறியது.
“ஏய்! கழுத உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் உன் பேர் பக்கத்துல என் பேர் மட்டும் தான் இருக்கணும்னு. இரு உன்னை அப்புறம் கவனிக்கிறேன்” என்று அவளை திட்டிக்கொண்டு காற்றினில் கலந்த மறைந்த உருவத்திலேயே அவள் எழுத்தில் இருந்து மிஸ்.சுந்தரம் என்ற எழுத்துகளை அழித்துவிட்டு மிசஸ்.ஷன்மதி ஷ்ரவன்” என்று எழுதினான்.
இங்கு நடப்பதை விழிகள் விரிய நம்ப மறுத்து நந்துவும் அகல்யாவும் பார்த்து கொண்டிருந்தனர்.
தான் நினைத்தது நடந்துவிட்டது என்று சிரிப்பை வாயினில்  கைவைத்து அடக்கி ஷ்ரவனை பார்த்துகொண்டிருந்தாள் ஷன்மதி.
“ஷன்மதி. நீ சொன்னது நிஜம் தானா? ஷ்ரவன் இங்க தான் இருக்கானா? ” என்று நந்து ஷன்மதியை பார்த்து கேட்க.
‘ஆமாம்’ என்று தலையாட்டினாள் ஷன்மதி.
“அப்புறம் ஏன் எங்களுக்கு தெரிய மாட்டேங்கிறான்?” என்றான் நந்து ஏமாற்றமாக.
“அது நீங்க உங்க நண்பன்கிட்டயே கேளுங்க. நீங்க பேசறது அவருக்கு கேட்கும்” என்றாள் ஷ்ரவனை பார்த்துக்கொண்டே.
“ஏய் வாலு. நீ இருக்கியே” என்று செல்லமாய் அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான் ஷ்ரவன்.
“இப்போ தான் நீ இருக்கன்னு தெரிஞ்சிருச்சுல்ல? இப்போ அவங்க கண்ணுக்கு தெரியலாம்ல?” என்றாள் ஷன்மதி.
விழிகளை அழுந்த மூடி திறந்தவன். ” மதிம்மா! நீ நினைக்கிற மாதிரி எல்லோர் பார்வைலயும் நான் படமாட்டேன்” என்றான் கரிசனமாக அவளின் நெற்றிகூந்தலை பின்னுக்கு ஒதுக்கிவிட்டபடி.
“ஏன்?” என்றாள் அப்பாவியாய்.
“அது… உனக்கும் எனக்குமான இந்த பந்தம் நீ நினைக்கிற மாதிரி இந்த ஜென்மத்துல மட்டும் ஏற்பட்டது இல்ல.. ” என்றான் மெல்ல அவளின் கைவிரல்களை ஒவ்வொன்றாய் நெட்டெடுத்துக்கொண்டே அந்த காந்த கண்களை ஊடுருவி.
“பின்ன??” என்றாள் அவனின் பேச்சில் ஆச்சர்யம் கொண்டவளாய் ஷன்மதி.
“நம்மளோட இந்த பந்தம் மூணு ஜென்மங்களா தொடர்ந்து வந்துட்டுருக்கு..” என்றான் ஷ்ரவன்.
“நிஜமாவா?? இல்ல என்னை வச்சி விளையாட்றியா?” என்றாள் ஷன்மதி.
“நீ உயிரா நினைக்கிற என் மேல சத்தியமா” என்றான் தன் தலையில் கைவைத்து.
“போதும் போதும் உன்மேல சத்யம் பண்ணவேணாம்” என்றாள் பதறிக்கொண்டு ஷன்மதி.
இதை பார்த்துக்கொண்டிருந்த நந்துவுக்கும் அகல்யாவுக்கும் ஒன்றும் புரியாமல முழிக்க.
“டேய் ஷ்ரவா! நீ இங்க தான் இருக்கன்னு தெரிஞ்சு போச்சு. நாங்களும் இங்க தான் இருக்கோம். என்னடா நடக்குது இங்க?” என்றான் பரிதாபமான முகத்தோடு.
அதை பார்த்த ஷ்ரவன், “இவனுக்கு என்கிட்ட ஏதாவது தெரியனும்னா இப்படி தான் பப்பி பேச வச்சிக்கிட்டு கேப்பான். இன்னும் கொஞ்சம் கூட மாறல” என்று விழுந்து விழுந்து சிரித்தான்.
ஷன்மதியின் விழிகளில் நீர் பெருக நந்துவிடம் திரும்பி, “அண்ணா! இவர் இப்படி மனசுவிட்டு சிரிச்சு எவ்ளோ நாளாச்சு தெரியுமா?” என்றாள் ஷன்மதி முழுசும் முழுவதும் புன்னகை மலர.
“எனக்கு எப்படிம்மா தெரியும்? அதான் உன் புருஷன் உனக்கு மட்டும் தான் தெரிவார் போல?” என்றான் சிறுபிள்ளை கோபிப்பது போல.
“ஹம். சரி தான். இவருக்கு சலைச்சவர் இல்ல நீங்க. ரெண்டு பேரும் ஆள் தான் வளர்ந்துருக்கிங்க ஒழிய இன்னும் சின்ன பசங்களாதான் இருக்கீங்க” என்று சிரித்தாள் ஷன்மதி.
“அப்படியே வச்சிக்கோ. இப்போ உன் புருஷர் என் கண்ணுக்கு காட்சி தருவாரா மாட்டாரா?” என்றான் நந்து வீராப்பாய் முறைத்தபடி திரும்பிக்கொண்டு.
“ஏங்க அண்ணன் இவ்ளோ கேக்குறார் இல்ல! இப்போ நீ என்ன தான் சொல்ற?” என்று முறைத்தாள் ஷ்ரவனை பார்த்தாள்.
“நான் உண்மையதான் சொல்றேன் மதிம்மா. ஆனா, நந்து கண்ணுக்கு மட்டும் என்னை தெரிய வைக்கமுடியும்” என்றான் ஷ்ரவன் நம்பிக்கை ஊட்டும் வகையில்.
“எப்படி?” என்றாள் மதி.
“நீ எப்படி என் வாழ்க்கை துணையா தொடர்ந்து வரியோ அதே போல நந்துவும் எனக்கு போன பிறவில ஒரு பாசமான அண்ணன்” என்றான் ஷ்ரவன்.
“எனக்கு ஒன்னும் புரியல தலையே சுத்துது. நீ அண்ணனை முதல்ல உன்னை பார்க்கவை. அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.” என்றாள் ஷன்மதி முடிவாய்.
“சரி! என் கைகள் மேல நந்துவோட கைகளை எடுத்து வை மதி.” என்று புன்னகைத்தான் ஷ்ரவன்.

Advertisement