Advertisement

“இப்போ தான் என்னை உங்க தங்கச்சின்னு சொன்னிங்க. அதுக்குள்ள நீ யாரு பொய் சொல்றன்னு சொல்றிங்களே? நான் பொய் சொல்லி என்ன ஆகபோகுது? உங்ககிட்ட என் புருஷனுக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டா உங்க முன்னாடி வந்து நின்னுருக்கேன். இல்லையே?” என்றாள் அழுகையை கட்டுபடுத்தி.
“நீ போலாம். என் நண்பன எங்க இருந்தாலும் நான் கண்டுபிடிச்சிருவேன்.” என்றான் நந்து ஷன்மதியை காணாமல்.
“அண்ணா! உங்களுக்கு நான் சொல்றதை நம்பமுடியாது தான். ஆனா, அதுதான் உண்மை. இப்பவும் என் மேல நம்பிக்கை வரலேன்னா? இதோ எங்க கல்யாண போட்டோ” என்று தன் மொபைலில் வைத்திருந்த திருமண புகைப்படங்களை எடுத்து காட்டினாள் ஷன்மதி.
நம்பாமல் சந்தேகபார்வையோடு அதை வாங்கி பார்த்தவன் விழிகள் மிகவும் அதிர்ச்சியை வெளிபடுத்தியது.
“இது… இது… எப்டி… நடந்தது?” என்றாள் அகல்யா.
“எல்லாம் அவர் என் கழுத்துல தாலி கட்டின நேரம்” என்று சோகமாய் சொல்ல.
“மதி… என்ன பேச்சு இது? நீ என் வாழ்க்கைல கிடைச்ச தேவதை… இனியொரு தடவை இப்படி பேசின… இல்ல உன் மனசுல கூட இது மாதிரி எண்ணம் தோன்றகூடாது.“ என்று ஷ்ரவன் கோபமாக கூற, கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் அமைதியாய் இருந்தாள்.
“புரியுதா இல்லையா? இல்லன்னா இது நீ என் குரலை கேட்கிறது கடைசியா இருக்கும் சொல்லிட்டேன்.” என்றான் ஷ்ரவன்.
“இல்லல்ல…. இனி அப்படி பேச மாட்டேன்” என்றாள் மெதுவாய் தனக்குள்ளே.
“ஹ்ம்ம்” என்றவன் மெதுவாய் அவளின் கன்னத்தில் தன் இதழை பதிக்க அந்திவானமாய் சிவந்தது அவளின் முகம்.
என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அகல்யாவும் நந்துவும் குழப்பமாய் ஷன்மதியை பார்த்தனர்.               
“அண்ணி. யாருகிட்ட பேசுறிங்க?“ என்று அகல்யா கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் “உண்மைய சொல்லட்டுமா?” என்று மனதுக்குள்  கேட்டாள் ஷன்மதி.
“நான் சொல்ற வரைக்கும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்” என்று ஷ்ரவன் கிசுகிசுக்க.
“நீ பண்ண சேட்டைல இப்போ அவங்க கேக்கறாங்க. நான் சொல்ல தான் போறேன்” என்றாள் ஷன்மதி குறும்பாய்.
“சொல்லித்தான் பாரேன். அப்புறம் உன்னால பேசமுடியாதபடி செய்வேன்” என்றான் ஷ்ரவன் சிரித்தபடி.
“என்னது நான் பேசமுடியாதா? நல்லாதான பேசுறேன்” என்றவளின் எண்ணங்களில் அவனின் வார்த்தைகள் புரிய.
“கொஞ்சம் அமைதியா இருக்கியா?” என்று சிரிப்புடன் முறைத்தவள்.
“என்ன நடந்தது? சொல்லும்மா” என்றான் நந்து.
“அண்ணா! அதுவந்து நாங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா காதலிச்சோம். கல்யாணம் பண்ண கேட்டா அவங்கப்பா சம்மதம் சொல்லல. அவர் எப்படியோ பேசி சம்மதம் வாங்கிட்டார். கல்யாண தேதி முடிவாகி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. கடைசியா எங்க கல்யாணமும் நாங்க ஆசை பட்ட மாதிரி எல்லாருடைய ஆசியோட நடந்துச்சு.“ என்றவளின் தொண்டையை துக்கம் அடைக்க மீண்டும் அழ தொடங்கினாள்.
“அண்ணி” என்று அவளை கட்டி கொண்டாள் அகல்யா.
“கல்யாணம் முடிஞ்சி அவர் புதுசா வாங்கின கார்ல என்னை கூட்டிட்டு போகணும்னு கல்யாணம் முடிஞ்ச உடனே நாங்க ரெண்டு பேரும் கிளம்பினோம்” என்று தொடர்ந்தாள்.
எதுவும் பேசாமல் அமைதியாக அழுதுகொண்டிருந்த ஷன்மதியின் இதழில் தன் இதழை லேசாக ஒற்றிய ஷ்ரவன்.
“சொன்னதையே எத்தனை தடவை சொல்றது பொண்டாட்டி?” அவளின் காதருகில் கேட்டான்.
அவனின் செய்கையை ரசித்தவள் பின் மெதுவாய் அதற்குபிறகு நடந்து அனைத்தையும் கூறினாள்.
எல்லாவற்றையும் கேட்ட நந்துவும் அகல்யாவும் பேரதிர்ச்சியில் இருந்தனர்.
அகல்யாவால் தன் சகோதரனின் இழப்பை தாள முடியாமல் அழுது கொண்டிருக்க, நந்து தன் சோகத்தை மறைத்து அகல்யாவை தேற்றினான்.
“அகல்.. உங்கண்ணன் மேல கோபம் இருந்தாலும் அவனை விட்டு ஒதுங்கி வந்தோமே தவிர அவனுக்கு எதுவும் ஆகனும்னு நாம மனசார கூட நினைச்சது கிடையாது. என்னாலையும் அவன் இழப்பை தாங்க முடியலை. நீ அழுதா அவனுக்கு பிடிக்காது. அவனோட ஆத்மா எங்க இருந்தாலும் நம்மளை சுற்றியே தான் இருக்கும். நீ இப்படி அழுதா அவனுக்கு சுத்தமா பிடிக்காது.” என்று அகல்யாவின் தலையை தடவி ஆறுதலாய் கூறினான் நந்து.      
“எங்களை பத்தி உனக்கு எப்படி தெரியும்? அப்போ என்னை பத்தி உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே ஷ்ரவன் சொல்லிருக்கானா?” என்று கேட்டான் நந்து.
“அது கல்யாணத்துக்கு முன்னாடி உங்களை பத்தி எதுவும் தெரியாது. “ என்றாள் ஷன்மதி தடுமாற்றமாய்.
“அப்போ எப்படி தெரியும்?” என்றான் நந்து லேசான வருத்ததுடன்.
எதுவும் பேசாமல் தயங்கியபடி ஷன்மதி இருக்க.
“இப்போ என்னை பத்தி பொறுமையா எடுத்து சொல்லு மதிம்மா” என்றான் ஷ்ரவன்.
விழிகளை மூடி மூச்சை இழுத்துவிட்டவள்.
“அண்ணா நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்திப்பங்கன்னு தெரியலை. அவர் இறந்தாலும் அவர் ஆத்மாவா என்கூட தான் இருக்கார்.” என்றாள் ஷன்மதி கண்ணீரை துடைத்தபடி.
“என்னது?” என்றான் நந்து.
“ஆமாண்ணா! அவர் தான் உங்களை பத்தி என்கிட்டே சொன்னார். இங்க வர வழி சொல்லி என்னை கூட்டிட்டு வந்ததும் அவர் தான்” என்றாள் ஷன்மதி.
ஷ்ரவன் இறந்ததால் இவளுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று ஷன்மதியை பாவமாய் பார்த்தனர்.
“சரிம்மா. வா நீ ரொம்ப தூரம் வண்டி ஓட்டிட்டு வந்துருக்க. ரெஸ்ட் எடு. அகல்யா உள்ள கூட்டிட்டு போய் சாப்பிடவை”  என்றான் நந்து.
“வாங்கண்ணி!” என்று மதியின் கையை பிடித்து அழைத்து சென்றாள் அகல்யா.
தான் இவ்ளோ தூரம் சொல்லியும் எந்த உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் சாப்பிட சொல்கிறாரே என்று யோசித்தாள் ஷன்மதி.
பின் நின்றவள் திரும்பி, “என்னை பைத்தியம்னு நினைக்கிறிங்களாண்ணா?” என்றாள் வெற்று புன்னகையை உதிர்த்து.
“அப்படில்லாம் இல்லம்மா. ஷ்ரவன் இல்லாத துயரத்துல உனக்கு அவன் கூட இருக்க மாதிரி தெரியுது வேற ஒன்னும் இல்ல. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு எல்லாம் சரி ஆகிடும்” என்றான் நந்து.

Advertisement