Advertisement

13
“ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? ” என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன். 
“ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது.  ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த. அதான் இன்னைக்கு இப்படி ஓட்றேன்.” என்றாள் மதி சிரித்தபடி.
“இன்னும் ஒரு மணிநேரம்.  நாம அங்க இருப்போம்.” என்று கூறியவன் அமைதியான சிந்தனையில் இருந்தான்.
“ஹ்ம்ம்.. எனக்கும் எப்போ போவோம்னு இருக்கு ” என்றபடி காரை  ஓரமாக நிறுத்தினாள். 
“என்ன ஆச்சு? எதுக்கு காரை நிறுத்திட்ட?” என்றான் புருவம் சுருக்கி.
“அதுவா கொஞ்சம் தலைவலியா இருக்கு. அதான் ஒரு காபி குடிச்சா நல்லா இருக்கும்னு நிறுத்தினேன். ” என்றாள்.
“தலைவலிக்குதா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போவோம்.”    என்றான் கவலையாய்.
“அதெல்லாம் வேண்டாம் ஷ்ரவன். ஒரு காபி குடிச்சிட்டு போவோம்” என்று அருகில் இருந்த கடையில் தேனீரை பருகிவிட்டு கிளம்பினர்.
நந்துவின்  கிராமத்திற்கு வந்தவுடன் அங்கிருந்த இயற்கை சூழல் ஷன்மதிக்கு மிகவும் பிடித்திருந்தது.  
“ஷ்ரவன் இந்த இடம் ரொம்ப அருமை யா இருக்குல்ல? நீயும் நானும் சேர்ந்து வந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.” என்றவள் விழியோரம் துளிர்க்கும் நீரை சுண்டி விட்டாள்.
“மதி குட்டி. நீ அழக்கூடாதுனு உனக்கு சொல்லிருக்கேன்ல? நிச்சயமா உன்னோட சோகத்தையெல்லாம் நான் சரி செய்வேன்.” என்றான் கண்ணில் சிறு நம்பிக்கையோடு.
“என்ன சொல்ற ஷ்ரவன்?  என்னோட சந்தோஷம் எதுல இருக்குனு நினைக்கிற?” என்றாள் வழியும் விழிநீரை துடைக்காமல் அவனை பார்த்து.
அந்தத் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருப்பதை அவனும் அறிவான். அதறகான விடையை தேடி தான் இந்த பயணம்.
அவனின் இந்த புதுயுக யுத்ததிற்கு கைகொடுப்பானா அவனின் தோழன் என்ற ஆவலை தாங்கி.
தீவிர யோசனையில் இருந்த ஷ்ரவனின் கவனத்தை கலைத்தது மதியின் குரல்.
“என்ன இவ்ளோ நேரம் யோசிச்சிட்டு வர ஷ்ருவ்? ” என்றாள் ரோட்டை பார்த்தபடி.
“அது நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ஆனா இப்போ வீடு வந்துருச்சு. நீ அவங்க எல்லோர்கிட்டையும் முதல்ல பேசு. நான் இங்க உன்கூட தான் இருக்கேன்றதை நான் சொல்றவரைக்கும் சொல்லவேண்டாம்.” என்றான் மிக மெதுவாய்.
  “இவ்ளோ நேரம் அமைதியா வந்தியே அப்போவே சொல்லிருக்கலாம்ல?” என்றாள் சிறிய ஏமாற்றத்துடன்.
“அது… அது… எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல மதிம்மா.  ஆனா நந்துகிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லணும். நீ தனியா இருக்கும் போது உனக்கு நான் விளக்கமா சொல்றேன். இப்போ இறங்கி வீட்டுக்குள்ள போ.” என்றான்.
எதுவும் பேசாமல் அவனின் விழிகளுள் கரைந்தவள். 
‘சரி ‘ என்ற ஒற்றை தலை ஆட்டலோடு இறங்க முற்பட்டாள் .
“மதி” என்று அவளின் கரத்தை பற்ற, ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“அது…” என்று  தயங்கியபடி இழுத்தவன். கண்களை மூடி நிதானித்து பின் அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து “உனக்காக தான் நான் இருக்கேன். எப்பவும் உனக்கு நான் மட்டும் தான் புருஷன்” என்றான் லேசாக விழிகள் கலங்கி.
“இதுக்கா இவ்ளோ தயங்கன ஷ்ரவன். நீ இந்த உலகத்துல இல்லேன்னாலும் நீ மட்டும் தான் எப்பவும் என் புருஷன். உன்னை மறந்துட்டு வேற ஒருத்தரை நினைக்க முடியாது டா.” என்று சிரித்தாள்.
இறங்கி அந்த வீட்டின் கதவை தட்டியவள் பொறுமையாய் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டாள் .
அரை நொடி கடந்த பின் அகல்யா கதவை திறந்தாள்.
“சொல்லுங்க. யாரு வேணும்?” என்றாள் உள்ளே இருந்து.
நிதானமாக அகல்யாவை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்.
“இது தான் என் தங்கச்சி அகல்யா மதிக்குட்டி. சோ கியூட்.” என்றான் ஷ்ரவன் அவள் காதருகில்.
“ஹ்ம்ம்..” என்று லேசாக முனகியவள்.
“மிஸ்டர். நந்து இருக்காறா?” என்றாள் அவளை சட்டை செய்யாதவாறு.
“இருக்கார். நீங்க?” என்றாள்  புருவம் சுருக்கி.
“உள்ள போய் பேசலாமா? இல்ல வாசலையே தான் நிக்க வைப்பிங்களா?” என்றாள் நக்கலாக.
“முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க? அப்புறம் உள்ள விடலாமா இல்ல வேணாமான்னு நான் யோசிக்கிறேன்” என்றாள் அகிலயா காட்டமாக.
பெருமூச்சுவிட்ட ஷன்மதி. “ஓகே. நான் மிஸஸ்.ஷ்ரவன்” என்றாள் தெளிவாக அழுத்தமான குரலில்.
ஒரு நொடி அவள் கூறியதை கேட்டு திகைத்தவள்.
“அ…ண்…ணி…” என்றாள்  திக்கி திணறி.
அவளை அணைக்க சென்ற அகல்யாவை கைகாட்டி தடுத்து, “போதும் உங்க பாசத்தை பார்த்து பூரிச்சு போய் தான் வந்துருக்கேன்.” என்று அவளை தாண்டி உள்ளே வந்தவள்.
“எங்க என் புருஷனோட பழைய பிரென்ட் உன்னோட புருஷன் மிஸ்டர் நந்தகுமார்.” என்றாள் கோவமாக.
மதியின் குரலை கேட்டு உடை மாற்றிக்கொண்டிருந்த நந்து வேகமாக “யாரு அகல்?” என்று கேட்டபடி வெளியே வந்தான்.
ஷண்மதியை பார்த்தவன் “யாரு நீங்க?” என்றான் பொறுமையாய்.
“திரும்ப திரும்ப நான் யாருன்னு சொல்லிட்டு இருக்க முடியாது மிஸ்டர்.நந்தகுமார். இருந்தாலும் சொல்றேன். நான் மிஸஸ்.ஷன்மதி ஷ்ரவன். ஒரு காலத்துல உங்க உயிர் தோழனா இருந்தாரே ஷ்ரவன் அவரோட மனைவி. பழைய பாக்கியை தீர்த்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றாள் காட்டமாக.
“நீ யாரா வேணா இருந்துட்டு போ. இங்க என் வீட்டுக்கு எதுக்கு வந்துருக்க? வந்த விஷயத்தை சீக்கிரமா சொல்லிட்டு கிளம்பு” என்றான் விடாமல் கோபமாக.
“இப்போ எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகற மதி. அவன் ரொம்ப நல்லவன். அவன்கிட்ட அப்டி பேசாத டா. எனக்கு கஷ்டமா இருக்கு” என்றான் வருத்தமாய்.
யாருக்கும் தெரியாமல் அவன் கண்களுக்கு மட்டும் தெரியும் ஷ்ரவனை எரித்து விடுவது போல் விழிகளில் நீரோடு முறைத்தாள் மதி.
“சும்மா நிக்க தான் வந்திங்களா?” என்றான் நந்து.
“போதும் நான் ஒன்னும் உங்க நண்பனில்லை நீங்க இல்லாத பழியை தூக்கி போட்டாலும் அமைதியா இருக்கிறதுக்கு.” என்றாள் வெடிக்கும் எரிமலையாய் .
“என்ன உளறீங்க?” என்றான் நந்து முறைத்து.
“யாரு உளர்றா?”என்றவள் திரும்பி         
அகல்யாவை பார்த்து “கல்யாணம் ஆகி உங்க வீட்டுகாரர் கூப்பிட்டார்னு வந்துட்டிங்க. அதுக்கப்புறம் உங்க அம்மாகிட்டயோ இல்ல உங்கண்ணன் கிட்டயோ பேசினீங்களா?” என்றாள் அமைதியாய்.
“இல்லை” என்றாள்.
“உங்களை காதலிச்சவரை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க கரெக்ட். ஆனா அதுக்காக உங்களை இவர்கூட வாழ வழி பண்ண உங்க அம்மாவையும் தன்னை இதுல அப்பா சிக்க வைக்கிறார்னு தெரியாமயே வந்து மாட்டிக்கிட்ட உங்க அண்ணனையும் ஒரேடியா மறந்துட்டீங்களா?” என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.
எதுவும் பேசாமல் தலை தாழ்த்தி அழும் அகல்யாவை பார்த்த நந்து. “இப்போ எதுக்காக தேவை இல்லாததை பேசிட்டு இருக்கீங்க? நாங்களே இப்போ தான் பழசை மறந்துட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கோம் அது பிடிக்காம எங்ககிட்ட பேசி சமாதானம் பண்ண சொன்னாரா உங்க வீட்டுக்காரர்.” என்றான்  ஏளனமாய்.
எதுவும் பேசாமல் சோகமான புன்னகையை உதிர்த்தவள் அகல்யாவிடம், “என் புருஷன் எந்த தப்பும் செய்யலை. அதை நான் இப்பவே நிரூபிக்கிறேன்.” என்று தன் மொபைலில் ஷ்ரவனின் அன்னைக்கு டையல் செய்தவள்.
“உங்க அம்மா தான். அன்னைக்கு என்ன நடந்தது? உங்க அண்ணனுக்கு இதை பத்தி தெரியுமான்னு மட்டும் கேளுங்க வேற எதுவும் பேச வேண்டாம்” என்றாள் மதி.
“ஹலோ” எதிர்முனையில் தேய்ந்த ஒரு குரல் ஒலிக்க.
“ஹலோ. நான் அகல்யா பேசுறேன்” என்றாள்  மனதை ஒருநிலை படுத்தி.     

Advertisement