Advertisement

11

நள்ளிரவு மணி இரண்டை தான்டி இருக்கும். மொபைலின் ஒலி நந்துவை தூக்கத்திலிருந்து எழுப்பிட.

‘இந்த நேரத்துல யார் போன் பண்றாங்க? ஒருவேளை ஷ்ரவனா இருக்குமோ?’ என்று எண்ணியபடி தூக்கக்கலக்கத்தில் போனை எடுத்து பார்க்க அது அடிப்பதை நிறுத்திக்கொண்டது.

“நம்பர் தான இருக்கு. யாரா இருக்கும்?” என்று தூக்கத்தில் இருந்து எழுந்து அதே நம்பருக்கு டையல் செய்தான்.

சுவிச் ஆப் என்று வந்தது.

“என்னதிது? போன் ஆப் ஆகிருக்கு?” என்று போனில் வந்திருந்த மெசெஜ்ஜை பார்த்தான்.

சற்றுமுன் கால் வந்திருந்த அதே நம்பரில் இருந்து அந்த குறுஞ்செய்திகள் வந்திருந்தன.

நந்து நான் அகல்யா. நம்ம காதலை பத்தி அப்பாக்கு தெரிஞ்சிருச்சு. அதனால என்னை ரெண்டு நாளா வீட்டுக்குள்ளையே அடைச்சு வச்சிருக்கார். போனை பிடுங்கி வச்சிட்டார்.

அம்மாவையும் ரொம்ப மிரட்டி வச்சிருக்கார்.

இதெல்லாம் கூட பரவால்ல. ஆனா …. அவர் அவங்க பிரெண்ட் பையன்கூட எனக்கு நாளைக்கு காலைல கோவில்ல கல்யாணம் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணிட்டார்.

என்னால உன்னை மனசுல நினைச்சிகிட்டு வேற ஒருத்தன் கூட வாழ முடியாது. அவன் கட்ற தாலி மட்டும் என் கழுத்துல ஏறுச்சு அப்புறம் என்னை நீ பிணமா தான் பார்ப்ப.

நாளைக்கு காலைல என் கழுத்துல எறப்போற தாலி நீ கட்றதாத்தான் இருக்கனும்.

இப்போ என்னால போன் பேசமுடியாது. அப்பா இங்க எங்களை நம்பாம இங்க எங்க கூடயே இருக்காரு. அதனால தான் உனக்கு மெச்செஜ் அனுப்பிட்டு அப்புறம் மிஸ்ட் கால் தரேன். நாளைக்கு காலைல ஒன்பது மணி தான் உனக்கு நான் கொடுக்கிற கெடு.

என்னை வந்து கூட்டிட்டு போவன்னு எதிர்பார்த்திருக்கும் உந்தன் அகல்யா…” என்று இருந்தது.

அதை படித்தவனுக்கு தூக்கி வாரி போட்டது.

“என்னோட அகல்யா அங்க கஷ்டபட்டுட்டுருக்கா அது தெரியாம நான் இங்க இருக்கேன். அவங்க அப்பா அவளை அடிச்சாரா என்னனு தெரியலையே? நான் உடனே அவளை பார்க்கணுமே” என்று கவலையாக புலம்பினான்.

‘இல்ல… நான் இப்போ அங்க வந்தா… உங்கப்பா உஷாராகிடுவாரு. நீ கவலையே படாத அகல்யா. நாளை நீ என் பொண்டாட்டி. இதை யாராலும் மாத்த முடியாது.’ என்று நினைத்தவன் ஷ்ரவனுக்கு போன் செய்ய நினைக்கும் பொழுது அவனின் அம்மா கூப்பிடுவது கேட்டு அவரிடம் ஓடினான்.

“என்ன அம்மா?” என்றான் பதற்றமாய்.

“ஒண்ணுமில்லைப்பா. ரொம்ப நேரமா உன் ரூம்ல லைட் எரிஞ்சிகிட்டே இருந்ததா அதான் என்னனு தெரியலையேன்னு கூப்பிட்டேன். என்னப்பா உனக்கு உடம்பு ஏதும் முடியலையா? ஏன் இந்நேரத்திற்கு முழிச்சிட்டு இருக்க?” என்றார் பொறுமையாக.

‘அம்மாகிட்ட சொல்லிடலாமா?’ என்று நந்து யோசிக்க.

“என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன். நீ ஏதோ யோசிச்சிட்டு இருக்க?” என்றார் மீண்டும்.

“இல்லம்மா. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான் தயங்கியபடி.

“என்னப்பா சொல்லு? அதுக்கு ஏன் இவ்ளோ தயங்குற?” என்றார் உடனே.

“அம்மா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்” என்றான் மெதுவாய்.

முதலில் நம்பாமல் அவனை பார்த்தாலும் “என்ன சொல்ற நந்து நீயா? பொண்ணுங்கன்னாலே உனக்கு பிடிக்காதே?” என்றார் சந்தேகமாய்.

“ஆமாம்மா! ஆனா அவளை பார்த்தவுடனே எனக்கு பிடிச்சிருச்சு. இவள் என் கூட வாழ்க்கை முழுக்க வந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சி. அவகிட்ட சொல்ல எவ்ளோ நாள் முயற்சி பண்ணேன். ஆனா அவ சம்மதிக்கலை. ஒரு வழியா என்னை ஏத்துகிட்டா. அதுக்கப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுது அந்த பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம ஷ்ரவனோட தங்கச்சின்னு” என்றான் மிகவும் பொறுமையாக அவரை பார்த்துக்கொண்டே.

முதலில் சற்று கோபமாய் இருந்தவர் ஷ்ரவனின் தங்கை என்றதும் அவரின் முகத்தில் ஒரு புன்னகை ஒளிர்வதை கண்டவன் சற்று நிம்மதி அடைந்தாலும் என்ன சொல்வாரோ என்று கலக்கம் கொண்டான்.

“ஷ்ரவனுக்கு தங்கச்சி இருக்காளா? சொல்லவே இல்ல.” என்றார் சற்று கோபமாய்.

“அவன் எனக்கே அவளோவா சொன்னது இல்ல. அவங்கப்பாவுக்கு தான் அவன்னாலே வேப்பங்காயாய் இருக்குமே அதனால அவன் அங்க இல்லாம தனியா தான இருக்கான்” என்றான் நந்து.

“ஹ்ம்ம். அதுசரி மணி மூணாவுது இந்நேரத்துக்கு எதுக்கு இந்த கதைய என்கிட்டே திடிர்ன்னு சொல்ற? வேற நேரம் கிடைக்கலையா?” என்றார் கிண்டலாய்.

“அம்மா. அதுவந்து, அகல்யாவோட அப்பாவுக்கு எங்க விவகாரம் தெரிஞ்சிருச்சு” என்று நடந்தவற்றை முழுவதுமாக கூறினான்.

“எனக்கு உன் மேல கோபம் தான். நான் பார்க்கிற பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சிருந்தேன். ஹ்ம்ம் நாம நினைக்கிற எல்லாம் நடக்குதா என்ன?” என்றார் பெருமூச்சிவிட்டபடி.

“அம்மா உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் நாளைக்கு போகலை. ஆனா நான் போகலைன்னா நிச்சயமா அவ உயிரோட இருக்க மாட்டா. அவ இல்லன்னா நான் உயிரோட இருந்தும் வெறும் பிணம் தான்.” என்றான் தீர்மானமாய்.

அவனையே சிறிது நேரம் உற்று பார்த்தவர்.

பின்பு சிரித்தபடி, “டேய் நீ உன் காதல்ல எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கன்னு பார்த்தேன். பரவால்ல அந்த பொண்ணு மேல உயிரையே வச்சிருக்க. அப்புறம் நான் எப்படி வேணாம்னு சொல்லுவேன். போ போய் சந்தோஷமா என் மருமகளை கூட்டிட்டு வா.” என்று சிரித்தார்.

அப்பொழுது தான் நந்துவுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது.

“சரிம்மா. இப்போ நீங்க தூங்குங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்.” என்று தன் அம்மாவின் நெற்றியோடு நெற்றி மோதி அவரை படுக்க வைத்து போர்த்திவிட்டு விளக்கணைத்து வெளியே வந்தான்.

“நாளைக்கு கண்டிப்பா என்னோட நீ இங்க என் பொண்டாட்டியா இருப்ப அகல்” என்று நினைத்தபடி உறங்கிப்போனான் நந்து.

இதை எதையும் அறியாத ஷ்ரவன் காலை தன் தந்தை அழைத்த திருமணதிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தான்.

கோவிலை நெருங்கும் வேளை நந்து ஷ்ரவனுக்கு போன் செய்தான்.

“ஹலோ! என்னடா நந்து?” என்றான் அவசரமாக ஷ்ரவன்.

“டேய் ஷ்ரவன் நீ எங்க இருக்க?” என்றான் நந்து.

“நான் இங்க கோவிலுக்கு வந்துருக்கேன்” என்றான் ஷ்ரவன்.

“கோவிலுக்கா?” நந்து.

“ஆமாடா. எங்க அப்பா போன் பண்ணிருந்தார். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து கலந்துகிட்டு எனக்கு கெட்ட பேரு வராம பார்த்துகன்னார். அதான்டா வந்துருக்கேன். சரி டா நேரமாகுது. நான் கல்யாணம் முடிஞ்சப்புறம் கூப்பிட்றேன். நான் கோவிலுக்குள்ள போகப்போறேன்” என்று போனை வைத்தான் ஷ்ரவன்.

“என்ன ஷ்ரவனுக்கு தெரிஞ்சு தான் எல்லாம் நடக்குதா? அதான் என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலையா? “ என்று ஆத்திரத்தில் நிதானத்தை இழக்கிறோம் என்பதை மறந்து ஷ்ரவனின் மேல் தீராத கோபம் கொண்டான்.

கோவிலுக்குள் நுழைந்த ஷரவனை தடுத்தார் விஷ்ணு.

“ஷ்ரவன். நல்லவேளை நீ வந்துட்டியா? உங்கம்மா பண்ணி வச்சிருக்க வேலைய பாரு. முக்கியமா எடுத்துட்டு வரவேண்டிய தாலிய வீடல் வெச்சிட்டு வந்துட்டா. நானே போய் எடுத்துட்டு வந்துடலாம்னு தான் வந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. நீ வீட்டுக்கு போய் எடுத்துட்டு உடனே வந்துடு.” என்று வீட்டு சாவியை கொடுத்துவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டார்.  

“இவங்களுக்கு இதே வேலையா போச்சு” என்று நினைத்தபடி வீட்டிற்கு சென்றான்.

இங்கே கோவிலில் எல்லா சடங்குகளும் நடந்துகொண்டிருக்க,

“ஐயர்! இந்த தாலியை கொண்டு போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என்று மாங்கல்ய தட்டை கொடுக்க அஹ்டை வாங்கிகொண்டு சென்றார் ஒரு பெண்.

வீட்டில் தாலி இல்லாததை தேடி பார்த்த ஷ்ரவன் விஷ்ணுவிற்கு போன் செய்து “அப்பா! இங்க தாலி இல்லையே” என்றான் அவசரமாக.

“அதுக்கு தான் நானும் போன் பண்ண வந்தேன். நீயே அதுக்குள்ள பண்ணிட்ட. இங்கயே இருக்கு. உங்கம்மா கல்யாண டென்ஷன்ல மறந்து சொல்லிட்டா. நீ சீக்கிரம் கோவிலுக்கு வா” என்று போனை வைத்தார்.

“அட இவருக்கு என்ன தான் ஆச்சு? இபப்டி மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காரு.” என்று திட்டியபடி அங்கிருந்து கோவிலுக்கு வந்துகொண்டிருந்தான் ஷ்ரவன்.

அனைவரும் ஆசிர்வதித்து தாலி வந்துவிட அய்யர் தட்டில் இருந்து தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்க திரும்பினார்.

அதேநேரம் கோவிலுக்குள் வேகமாக ஓடிவந்தான் …..

Advertisement