Advertisement

  1. ஸ்ருஷ்டிமீராவின் புது பயணம்
நான்கு மாதம் கழித்து தான் க்ரிஷுவந்தை பார்த்து லேசாக ஒரு புன்னகை பூத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் இவள் செய்த அக்கப்போரிற்கு அளவே இல்லை.
அன்று க்ருஷ்வந்த் கூப்பிட்டதும் வந்து விட்டாளே ஒழிய…!
ஒருவனை பற்றி எதுவும் தெரியாத போது, நீ எப்படி இவனுடன் வரலாம்? ஏற்கனவே உனக்கு தெரிந்த ஆண்களின் மூலம் நேர்ந்த கொடுமைகள் பத்தாதா? இனி இந்த நொடியில் இருந்து உன் வாழ்வில் எந்த ஆணையும் நம்பக்கூடாது.’ என்று தனக்குள் முடிவு செய்துகொண்டவள் எப்பொழுது இந்த வண்டியைவிட்டு கீழே இறங்குவோம் என்று நெருப்பின் மேல் தகிக்கும் தனலாய் அமர்ந்திருந்தாள்.
இவளின் எண்ணம் பற்றி எதுவும் தெரியாத கிருஷ்வந்த், அவளின் மனபாரத்தை குறைக்க எண்ணி “உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காம வீட்ல உள்ளவங்க கிட்டயோ என்கிட்டயோ கேளுங்க” என்றான்.
அவனின் பேச்சில் கடுப்பானவள் எதுவும் பேசாமல் வர இவனுக்கு பதற்றம் ஆனது.
“மீரா!! மீரா!! உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே? ஹாஸ்பிடல் போலாமா?” என்று பதற்றமாய் கேட்க, அவளுக்கு இன்னும் கோபம் அதிமாக.
“ஹலோ மிஸ்டர்! நான் நல்லா தான் இருக்கேன். நீங்க யாரு என்கிட்டே கேள்வி கேட்க?” என்றவுடன் ஒன்றும் புரியாமல் முழித்தான் கிருஷ்வந்த்.
“இப்ப எதுக்கு பேய்ய பார்த்த மாதிரி முழிக்கிறிங்க?” என்று ஸ்ருஷ்டிமீரா முறைக்க.
“இல்லை.. நான் எதுவுமே கேக்கலையே? ஏதாவது உதவி வேணும்னா கேளுங்கன்னு தானே சொன்னேன்?” என்றான்.
“அதைத்தான் நீங்க ஏன் சொல்றிங்க? நான் உங்ககிட்ட கேட்டேனா? உங்க வண்டில ஏறிட்டா என்ன வேணா பேசிட்டே வருவீங்களா?” என்றாள்.
எதுவும் பேசாமல் அவளின் விழிகளோடு தன் விழிகளை கோர்த்து அமைதி காக்க.
பேதையவள் ஒரு நொடி தடுமாறினாலும் சுதாரித்து “எனக்கு ஒரு உதவி செய்ங்க?” என்றாள்.
“என்ன வேண்டும்?”  என்றான் ஆர்வமாக.
“தயவு செஞ்சு என்னை வீட்ல இறக்கி விட்ற அந்த நொடிலர்ந்து என்கிட்டே பேசறதை நிறுத்திடுங்க. நான் உங்க வீட்ல வாடகை இருக்கப்போற ஒரு டெனண்ட். அவ்ளோ தான்.. அதை தாண்டி நீங்களோ  உங்க வீட்ல இருக்றவங்களோ? என்னை பத்தி தெரிஞ்சிக்கணும்னு  நினைச்சீங்கன்னா? மன்னிச்சிடுங்க எனக்கு உங்க வீடு வேண்டாம்”  என்றாள் தெளிவாக.
எதுவும் பேசாமல் அவள் பேசுவதை மட்டும்  அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்ன டா இது உதவி பண்ண நம்மளையே இந்த பொண்ணு நன்றி இல்லாம பேசுதுன்னு நினைக்காதீங்க. எப்போ முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு எந்த எதிர்பார்ப்பும்  இல்லாம உதவி பண்ணிங்களோ அப்பர்த்துலேர்ந்தே, எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு. அந்த மரியாதை அப்படியே இருக்கணும்னா நான் சொன்னது ஞாபகத்துல  வச்சிக்கிட்டிங்கன்னா  போதும். நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சாலும்  பரவா இல்லை. இந்த குழந்தை  உட்பட நான் யாரையும் நம்ப விரும்பல. போதும் கண்மூடி தனமா   எல்லாரையும்   நம்பி என் வாழ்க்கை போனது தான் மிச்சம்.”  என்று விழிநீர்  உதிர்வதை  மறைக்க வெளியே தலையை திருப்பிக்கொண்டாள்.
‘அவளின் வாழ்க்கையை பற்றி அவன் அறிந்திருந்ததால் அவள் மேல் துளி கூட கோபம் வரவில்லை மாறாக அவளின் மீது மதிப்பு கூடியது. தனக்கு யாருமில்லை.தான் ஒரு பெண் ஆயிற்றே இனி என்ன செய்வது? என்று மூலையில் முடங்காமல்  இனி விழாமல்  நிற்க முயற்சி  செய்கிறாள்’  என்று எண்ணிக்கொண்டான்.  
“என்னடா இவ இப்படி பேசறான்னு நினைகாதிங்க. எனக்கு யார நம்பறது யார் நம்பகூடாதுன்னு? தெரியலை. என்னுடைய கஷ்டங்களை வெளிய சொல்லகூடாதுன்னு ஒரு வைராக்கியதோடு இருக்கேன். எனக்கு முடிக்க வேண்டிய வேலை ரெண்டு இருக்கு. அதுவரைக்கும் யாரும் அன்பு காட்டி என்னை பலவீன படுத்தகூடாதுன்னு நினைக்கிறேன். புரிஞ்சிகோங்க. இதுவே நாம பேசறது கடைசியா இருக்கட்டும்.” என்றாள் சற்று சாந்தமாக.
“என்ன ஒரு துணிச்சல்? ஆனாலும் அன்புக்கு அடிபணியும் அழக்கியபதுமை அல்லவா? அதனால் என்னிடம் பயப்படுகிறாள்.” என்று யோசித்தபடி பெருமூச்செறிந்தான்.
அதன் பின் பத்து நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருவருமே தங்களின் சிந்தனையில் மூழ்கியிருக்க வீடு வந்து சேர்ந்தனர்.
சுந்தரி இன்முகத்துடன் வரவேற்றார் ஸ்ருஷ்டிமீராவை. வரும் வழியிலேயே தன் அண்ணனுக்கும் தோழிக்கும் கூறிவிட்டதால் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களும் வந்து சேர, பால் காய்ச்சும் படலம் இனிதே முடிந்தது.
வினோத் மட்டும் சுந்தரியிடம், “அம்மா! உங்களை நம்பி தான் என் தங்கையை விட்டு செல்கிறேன். அவளை என்னுடன் வைத்து கொள்ள தான் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்ய? நான் வாங்கி வந்த வரம் சாபமாய் மாறி என் மனைவி ரூபத்தில் என் வீட்டில் இருக்கிறது. அவளை எல்லாம் சட்டை செய்யாமல் என்னுடன் தங்க வைத்து கொள்ள முடியும் என்றாலும், அந்த பிசாசு நான் இல்லாத நேரத்தில் பட்டு போன்ற மனசுள்ள என் தங்கையை குதறிவிட்டாள். என்பதாலேயே மனமில்லாமல் தனியே இருக்க சம்மதிக்கிறேன். பாரத்து கொள்ளுங்கள் அம்மா உங்களின் மகளாக. நான் இரண்டு நாளைக்கு ஒரு முறை வந்து செல்கிறேன்” என்று கண்கள் கலங்கினான்.
“அட! நீ என்னப்பா சின்ன புள்ளை மாதிரி? எனக்கு மூணு புள்ளைங்க இல்ல இனி இவளோடு சேர்த்து நாலா பார்த்துக்குறேன். நீ கவலைபடாதே. அம்மா வீட்ல தான் உன் தங்கச்சி இருக்கான்னு நினைச்சிக்கோ. சந்தோசமா போய்ட்டு வா.” என்று வினோத்தை தேற்றினார்.
“சரிம்மா!” என்று நிம்மதியாய் சிரித்தான் வினோத். இவர்களின் உரையாடல் இப்படி இருக்க. வாசலில் வெற்று பார்வையை வீசி நினைவுகளை வேறெங்கோ சிதற விட்டிருந்தாள் மீரா. அவளை அவள் கவனியாமல் கவனிப்பதே நம் தலைவருக்கு வேலையல்லவா?.
“மீருகுட்டி! அந்த ராஸ்கல் அப்புறம் உன்னை எதாவது தொந்தரவு பண்ணானா? எதாவது இருந்தா சொல்லுடா? நீ சொன்ன ஒரே வார்த்தைக்காக தான் அவனை விட்டு வச்சேன். இல்லன்னா எப்பயோ ஒரு கம்ப்ளைன்ட் பைல் பண்ணி அவனை உள்ள தூக்கி வச்சிருப்பேன்” என்றான் கனிவான குரலில் வினோத்.
“இல்லண்ணா! எதுவும் தொந்தரவு பண்ணலைன்னா அவன்” என்றாலும் அவளின் விழிகளில் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டு அலைபாய்ந்து நிறுத்தியது க்ருஷ்வந்த்தை பார்த்தவுடன்.
“எதாவது வேணும்னா சொல்லுடா” என்றான்.
“ஆமாண்ணா! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுங்க. இனிமே அவனுடைய முகத்தை மட்டுமல்ல அவன் பேரக்கூட கேட்க விரும்பலை நான்” என்றாள் மெல்லிய ஆக்ரோஷத்துடன்.
“சரிம்மா! ஏற்பாடு பண்ணிடறேன்” என்று விடை பெற்றான்.

Advertisement