Advertisement

4

புதிய தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் இதுவரை எந்த குறையும் சொல்லாத அளவிற்கு இருந்தது ஸ்ருஷ்டிமீராவின் வேலை.

அப்படி ஒரு கிளையன்ட்டின் வீட்டு க்ரகஹப்ரவேசத்தின் போது அசத்தும் அழகு தேவதையாய் வலம் வந்த ஸ்ருஷ்டிமீராவை இரு ஜோடி கண்கள் நோட்டமிட்டன.

அவளுக்கே தெரியாமல், அவளின் தகவல்களை சேகரித்து அவளின் வீட்டு வாசலை தட்டினர் மெஷ்வசுதனின் தாய் தந்தை.

“சார்! என்னடா இது? யாருன்னே தெரியாத இவங்க, திடிர்னு வந்து நம்ம பொண்ண கேக்கறாங்கன்னு நினைக்காதிங்க. எங்களுக்கு இருக்கறது ஒரே பையன். அவனுக்கு கொஞ்ச நாளா பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். நேத்து உங்க பொண்ண ஒரு பங்க்ஷன்ல பார்த்து ரொம்ப பிடிச்சிருச்சு. பையன் பேரு மெஷ்வசுதன். நல்லா படிச்சிருக்கான். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வசதிக்கு எந்த குறைச்சலும் இல்ல. அதனால எந்த சீர் செனத்தியும் வேணாம். உங்க பொண்ண மட்டும் எங்க வீட்டு மருமகளா அனுப்பினா போதும்.” என்றனர்.

குணசீலன் என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தார். “சார்! நீங்க என்னை மன்னிக்கணும். நான் என் பொண்ணையும், பையனையும் கேட்டு தான் சொல்லணும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க, நான் உங்களுக்கு பதில் சொல்லிட்றேன்” என்றார்.

“சரிங்க சார். நல்ல பதிலா சீக்கிரம் சொல்லுங்க. நாங்க காத்துட்டு இருப்போம். அப்ப நாங்க கிளம்பறோம் சார்” என்று கிளம்பிவிட்டனர்.

“வினோ! அப்பா பேசறேன்பா. சாயந்தரமா கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போப்பா” என்றார்.

“ஏன்ப்பா? உடம்பு ஏதாவது சரி இல்லையா? நான் இப்பயே வரட்டா?” என்றான் பதற்றமான குரலில். என்றும் இல்லாத திருநாளாய் அப்பா அலுவல் நேரத்தில் போன் செய்ததே அதற்கு காரணம்.

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் அதான் வந்துட்டு போ” என்றார்.

“சரிப்பா நான் வரேன்” என்று தொடர்பை துண்டித்தான் வினோத்.

மாலையில் அப்பாவுக்கு பிடித்த பழங்களை கையோடு வாங்கி வந்தவனிடம் “எதுக்குப்பா இதெல்லாம்? இங்க பாரு உன் தங்கச்சி வேலைய. தினமும் ஏதாவது ஒரு பழம் வாங்கி வருவதோடு இல்லாமல், அப்படியே வைத்தால் நான் சாப்பிட மாட்டேன் என்று பழங்களை நறுக்கி வைத்து போகிறாள்.” என்று கூறினார்.

மகிழ்ச்சியில் கண் கலங்க, “நான் இருந்து செய்ய வேண்டிய வேலை, அவள் செய்கிறாள். சந்தோசம்ப்பா” என்றான்.

“விடுப்பா. வீட்ல பாப்பா, உன் பொண்டாட்டி எப்படி இருக்காங்க?” என்றார்.

“ஹம் அவளுக்கென்ன குத்துகல்லாடம் நல்லா தான் இருக்கா? பாப்பா நல்லா இருக்காப்பா. உங்களை தான் எப்ப பாரு கேட்டுட்டு இருக்கா.” என்றான்.

“சரி” என்று ஸ்ருஷ்டிமீராவை பெண் கேட்டு வந்தவர்களை பற்றி கூறினார்.

“சரிப்பா. எனக்கு நாளைக்கு ஒரு நாள் டைம் கொடுங்க. நான் விசாரிச்சிட்டு சொல்றேன். அவசரப்படவேண்டாம். பாப்பாகிட்டயும் கேளுங்க. நான் நாளை சாயந்திரம் வரேன்” அவர்களை பற்றிய தகவலை பெற்று கொண்டு விடைபெற்றான் வினோத்.

அலுவலகம் என்னவோ வீட்டினிலே இருந்தாலும் சைட்டிற்கு நேரடியாக செல்ல வேண்டியது இருப்பதால் ஷ்ருஷ்டிமீரா நிறைய நேரம் வெளியே தான் செலவழிக்க வேண்டியுள்ளது.

இரவு வீடு வந்து சேர்ந்த ஷ்ருஷ்டிமீரா அப்பா ஏதோ யோசனையாய் இருப்பதை பார்த்துவிட்டு, “என்னப்பா? ரொம்ப யோசனையா இருக்கீங்க? வாங்க சாப்பிடலாம்” என்று சாப்பாட்டினை பரிமாறினாள்.

அமைதியாக உண்டவர். “அம்மா உன்கிட்ட பேசணும். இப்படி வந்து உட்கார்” என்றதும் அவரின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“சொல்லுங்கப்பா?” என்றாள்.

“நேத்து ஒரு வீட்டு விழாவிற்கு போனாய் இல்லையா? அங்கே உன்னை பிடித்துப்போய் உன்னை பெண் கேட்டு இருவர் வீட்டுக்கு வந்து விட்டு போனார்கள். அண்ணாகிட்ட சொல்லிருக்கேன் விசாரிக்கிறேன்னு சொல்லிருக்கான். அவனுக்கு முன்னாடி நல்லா விசாரிச்சிட்டேன். நல்ல குடும்பமா தான் தெரியறாங்க. இந்தா இது பையனோட போட்டோ.” என்று புகைப்படத்தை அவளிடம் நீட்டினார்.

விழிகளில் கேள்வியோடு அவரிடம் வாங்கி பிரித்து பார்த்துவிட்டு, “அப்பா இப்போ தானப்பா பிசினெஸ் ஆரம்பிச்சி இருக்கு. அதுக்குள்ள என்னப்பா அவசரம்?“

“என்னடா சொல்ற?”

“கல்யாணம் பண்ணிகிட்டா பிசினெஸ் ஸ்டாப் பண்ண சொல்வாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்று உள்ளே சென்றாள்.     

அவளை பின் தொடர்ந்து சென்றவர்.

“மீரு குட்டி. அப்பாக்கு வயசாகிட்டுடா. இன்னும் எவ்ளோ நாள்? எனக்குப்புறம் உனக்கு துணையா ஒரு பாதுகாப்பு தேவை இல்லையா? உங்க அண்ணனுக்கு உன்னை பார்த்துக்கணும்னு ஆசை இருந்தாக்கூட, உங்க அண்ணியை மீறி எதுவும் செய்ய முடியாது. அதையும் மீறி எதாவது செஞ்சான்னா அவுங்க ரெண்டு பேருக்குள்ளையும் பிரச்சனைகள் வர நம்மளே காரணமா இருக்க கூடாதுடா. நல்லா யோசிச்சி ஒரு முடிவ சொல்லுடா.” என்று சென்றுவிட்டார்.

இரவு முழுவதும் யோசித்தாலும் ஒரு புறம் தன் ஆசையாய் உருவாகிய தொழில் பாதியிலேயே நிற்க.. இன்னொரு புறம் தன் தந்தையின் நியாயமான கோரிக்கையும் நிற்க.. கடைசியில் அவளின் அப்பாவே வென்றார்.

அதற்காக இத்தனை நாள் பாடுபட்டு உருவாக்கிய தொழிலைவிட முடியாது. ‘முதலில் எதுவரை இந்த பேச்சு செல்கிறது என்று பார்ப்போம்?’ என்று விட்டுவிட்டாள்.  

வினோத் விசாரித்த இடத்தில் எல்லாம் சுதனுக்கு நல்ல சான்றிதழே கொடுக்க அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  

பின்னே ஒரு மாஃப்பிள்ளையை பற்றி விசாரிக்கிறோம் என்று தெரிந்தால் யார் தான் அவர்களுடைய குறைகளை கூறுவார்கள். எதிரி வேண்டுமானால் குறை கூறுகிறேன் என்று உண்மையை கூறலாம் ஆனால் அவனுக்கு வேண்டியவர்கள் எப்படி சொல்வர்?

மெஸ்வசுதன் ஸ்ருஷ்டிமீராவை நேரில் பார்த்தபின்பு, திருமணமே வேண்டாம் என்ற தன் முடிவை மாற்றி கொண்டு அவளை திருமணம் செய்ய சம்மதித்தான்.

ஸ்ருஷ்டிமீராவும் சம்மதிக்க. அடுத்த இருபது நாளில் நிச்சயம் செய்துகொள்ளவும், மூன்று மாதம் கழித்து திருமணம் என்றும் முடிவு செய்தனர்.

சம்மதம் கூறிவிட்டாலும், ஸ்ருஷ்டிமீராவிற்க்கு தான் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமலே இருந்தது இந்த உறவு.

பெண் பார்க்க வந்து சென்றதோடு சரி. அதன்பின், திருமணப்பட்டு எடுக்க நேரில் ஒரு தடவை மெஸ்வசுதன் வந்தான். அவ்வளவு தான், இடையில் அவளிடம் போனில் கூட பேசவில்லை. அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, வேலை அதிகமாக இருக்கும் என்று விட்டு விட்டாள்.   

இருவீட்டாரின் பேச்சுவார்த்தைகளும் திருமணத்தில் முடிய, ஒரு சுபமுகுர்த்த நன்நாளில் பெரியவர்களின் ஆசியோடு மெஷ்வசுதன் – ஷ்ருஷ்டிமீரா திருமணம் நடைபெற்றது.  

திருமண நாளிற்கு முன்தின இரவு எல்லோரும் உறங்கிய பின், வினோத் மெஷ்வசுதனின் அறையை தட்ட, மெஸ்வசுதன் கதையை திறந்தான்.

“என்ன? இந்த நேரத்தில வந்துருக்கிங்க ஏதாவது பிரச்சனையா?” என்றான்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வரலாமா?” என்ற விநோத்தை யோசனையோடு பார்த்தபடி கதவை நன்கு திறந்து “உள்ள வாங்க” என்றான்.

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்றான் மெஷ்வசுதன்.

“இல்ல! நான் ஒரு சில விஷயங்கள் உங்களை பற்றி கேள்வி பட்டேன். எதுக்கு மனசுல போட்டு குழப்பிகிட்டு? உங்ககிட்டேயே கேட்டுடலாம்னு தான் வந்தேன்.” என்று அவனை உற்று நோக்கினான்.

“என்ன … என்..ன  கேள்… விப்பட்.. டிங்க?” என்று கேட்கும் பொழுதே மெஷ்வசுதனுக்கு வேர்த்துகொட்டி நா குழற தொடங்கியது.

“ஒன்னும் இல்ல… நீங்க யாரோ ஒரு பொண்ண ரொம்ப சின்சியரா லவ் பண்ணிங்க. இப்போ கொஞ்ச நாளா தான் அவங்க தொடர்பு இல்லாம இருக்கிங்களாம்.. இதெல்லாம் உண்மையா? நான் நேத்து இதை கேள்விப்பட்டவுடனே இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்னு தான் நெனச்சேன்.. ஆனா வேற எந்த ஒரு தப்பும் உங்க மேல சொல்லல. இப்போ முழுசுமா மாறிட்டிங்கன்னு சொன்னதால தான் என் தங்கச்சிகிட்டையும் அப்பாகிட்டயும் இதுவரைக்கும் சொல்லல நான்.” என்று அவனை அக்மைதியாய் பார்த்து கொண்டிருந்தான்.

“நாங்க வசதில வேணா உங்களை விட குறைஞ்சவங்களா இருக்கலாம். ஆனா, என் தங்கச்சிக்கு ஏதாவது தப்பு செஞ்சிங்கன்னு தெரிஞ்சா உங்க முகத்திலேயே முழிக்க மாட்டா. இப்போ நீங்க நல்லா யோசிச்சி சொல்லுங்க. இந்த கல்யாணத்த மேற்கொண்டு நடத்தலாமா இல்ல இதோட நிறுத்திடலாமா?” என்றான் சுதனை கொஞ்சம் மிரட்டிவைக்க, உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும் வெளியே காட்டாதபடி.

பெயருக்கென்று ரஞ்சினி அண்ணி ஸ்தானத்தில் வந்து மண்டபத்தில் நின்றாள். வினோத் தான் கல்யாண மண்டபத்தில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தான்.  

“இல்ல.. இல்ல.. அப்படி எல்லாம் ஒன்னும் செஞ்சுடாதிங்க. நான் ஒரு பெண்ணை விரும்பினது உண்மை தான். ஆனா அவங்களுக்கு இப்போ வேற இடத்துல கல்யாணம் ஆகிடுச்சு. நிச்சயமா உங்க தங்கச்சிய நான் நல்லா பார்த்துப்பேன்” என்றான் அவசரமாய்.

“நீங்க இவ்ளோ சொல்றதால. நான் இதை இதோட விட்டுடறேன். நாள பின்ன ஏதாவது தப்பா தெரிஞ்சுதுனா? அதனால என் தங்கச்சிக்கு ஏதாவது பிரச்சனைன்னா? உங்களை சும்மா விட மாட்டேன் ஞாபகத்துல வச்சிக்கோங்க.” என்றான் மிரட்டும் தொனியில்.

“இல்ல நிச்சயமா. அது மாதிரி எதுவும் நடக்காது.” மெஷ்வசுதன்.

“என் தங்கச்சிய நல்லா பார்த்துகிட்டிங்கன்னா நான் என்னைக்குமே உங்களுக்கு நண்பன் தான்.” என்று வெளியே வந்துவிட்டான்.

அவன் பேசிய அனைத்துமே அந்த நொடியே காற்றில் கரைந்து போனது தெரியாது வினோதிற்கு.

இது எதுவுமே தெரியாமல் அழகிய வெட்க பதுமையாய் ஷ்ருஷ்டிமீரா வந்து நிற்க. ஒரு வழியாய் அவளின் கழுத்தில் மங்களநாணை பூட்டினான்.

சீர்வரிசை பெண்ணுக்கென்று எதுவும் செய்ய வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறியும், குணசீலன் தன்னால் முடிந்தவரை தன் மகளுக்கு என்று சேர்த்து வைத்த நாற்பது சவரன் நகை மற்றும் வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்கி கொடுத்து மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அவர்களின் இல்வாழ்வும் தொடங்க முதல் இரண்டு நாள் மாமியார் வீடு பிரவேசம் இனிமையாய் கழிந்தது மீராவிற்கு. மூன்றாம் நாளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய வந்தது எல்லோரின் சுய ரூபமும்.

Advertisement