Advertisement

3

தன் அண்ணனின் நிலையை எண்ணி ஷ்ருஷ்டிமீரா தான் வருதப்பட்டாள்.

காலங்களும்  வேகமாக கடந்து நான்கு மாதங்கள் ஓடிவிட, தன் அண்ணன் அப்பாவாக போகிற செய்தி வந்தவுடன் தலை, கால் புரியாமல் இருவரும் குதித்தனர். தான் தாத்தா ஆக போகிறோம் என்ற சந்தோஷம் அவர்களின் உபசரிப்பில் தெரிந்தது ரஞ்சினியை தரையில் விடாமல் அணைத்து வேலைகளையும் ஷ்ருஷ்டிமீரா செய்துவிட, குணசீலனோ மருமகளுக்கு வாய்க்கு ருசியாக வகை வகையாக சமைத்து கொடுத்தார்.

மாதங்கள் உருண்டோட ஷ்ருஷ்டிமீராவின் படிப்பு முடிய அவளும் அதில் மாஸ்டர் டிகிரி படிக்க அடம்பிடித்தாள். இம்முறையும் மெரிட்டிலேயே சீட் கிடைத்துவிட புத்தக செலவு தவிர ஏதுமில்லாமல் போனது. அந்த புத்தக செலவையும் அவளின் டியூஷன் வருமானத்தில் வாங்கிக்கொள்ள இவருக்கு செலவே இல்லாமல் போனது.     

குழந்தை பிறக்கும் தேதி நெருங்க நெருங்க எல்லோரும் ஒரு வித பதைப்பில் இருந்தனர். வினோத்தும் பேங்க் எக்ஸாம் எழுதி இருந்தான்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை மட்டும் அழைத்து குணசீலனே தன் மருமகளுக்கு சீமந்தம் செய்தார்.

மருத்துவர் கொடுத்த தேதிக்கு முன்னரே வலி வந்ததால் மருத்துவமனை அழைத்து சென்றனர். நீரின் அளவு குறைந்து காணபட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது. தாய் சேய் இருவரும் நலம் என்று மருத்துவர் கூறும் வரையில் பூஜை அறையை விட்டு வெளியே வராமல் அங்கேயே தவமாய் இருந்தாள் ஸ்ருஷ்டிமீரா.

“அம்மா மீரா! அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்துருக்குடா. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க வாடா” என்று தந்தை அலைபேசியில் கூறிய பின்னரே அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தாள்.

குழந்தைக்கு தன் தங்கை பெயரின் சாயலிலேயே ஸ்ருதி என்று பெயர் வைத்தான் வினோத்.

வினோத் எழுதிய அரசு பேங்க் எக்சாமில் பாசாகி ஜூனியர் மேனேஜராக  செலக்ட் ஆகி இருந்தான் ஆரம்பத்திலேயே முப்பதாயிரம் சம்பளம் போடப்பட்டிருந்தது. முதல் மாத சம்பளம் வாங்கி தந்தையிடம் கொடுக்க அவரோ, “உன் மனைவியிடம் கொடுப்பா” என்றார் ஒற்றை வரியில்.   

குழந்தை சிறு சிறு அசைவாலும் சிரிப்பாலும் எல்லோரையும் தனக்கு அடிமையாக்கி வைத்திருக்க இடியை இறக்கினாள் ரஞ்சினி.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஒரு மாலை வேளையில் செய்தி தாளை வாசித்து கொண்டிருந்த குணசீலனிடம் சென்றாள்.

“சொல்லும்மா ஏதாவது வேணுமா?” என்றார் அக்கறையாய்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று கூறும் அண்ணியையே தரையில் அமர்ந்து குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த ஷ்ருஷ்டிமீரா நோக்க, ‘இந்த முறை என்ன ஏழரையை கூட்ட போகிறதோ தெரியவில்லையே?’ என்று இருந்தது அந்த பார்வை.

“சொல்லும்மா?” என்றார்.

“இப்ப அவருக்கு பாங்க்ல வேலை கிடைச்சிட்டதுனால வேலை செய்யற இடம் இங்க இருந்து ரொம்ப தூரமா இருக்கு. அவரால தினமும் போயிட்டு வர கஷ்டமா இருக்கு. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கராறு.” என்றாள்.

“சரிம்மா இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லு?” என்று அவளின் பதிலை கேட்டார்.

“அந்த பக்கமாவே வீடு பார்க்க சொன்னா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாறு. நீங்க தான் கொஞ்சம் அவருக்கு எடுத்து சொல்லணும். அவருக்கு ரொம்ப அலைச்சல்ல அப்புறம் உடம்பு முடியாம போய்டபோகுது.” என்றாள்.

“சரிம்மா நாம் எல்லாரும் வேணா அந்த பக்கமா வீடு பார்த்து போயிறலாம். இந்த வீட்ட வேணா வாடகைக்கு விட்ரலாம்” என்றார் அவளின் எண்ணங்களை ஆழம் பார்க்கும் நோக்கத்தில்.

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்ததே பெரிய விஷயம் என்ற தொனியில், “உங்களுக்கு நாசுக்கா சொன்னா புரியாதா? நாங்க எங்க குடும்பம் மட்டும் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன். அங்கயும் என்கூட வந்து என் உயிரை வாங்கறதுக்கா? அந்த மனுஷனுக்கு சொன்னா புரியமாட்டேங்குது. ஊருல உலகத்துல இல்லாத அப்பா தங்கச்சின்னு புராணம் பாடி என் உயிரை எடுக்கிறார். ஒழுங்கா என்கூட அனுப்பி விடுங்க இல்ல நானும் என் பிள்ளையும் எங்கையாவது போய்டுவோம்” என்று பொரிந்துவிட்டு உள்ளே சென்றுவிட இதை எதிர்பார்த்தவர் போல வேதனை சிரிப்பை சிந்தினார் குணசீலன்.

“என்னப்பா இப்படி பேசிட்டு போறாங்க? நான் அண்ணன் வரட்டும் எல்லாத்தையும் சொல்லி இன்னைக்கு என்ன செய்றேன்னு பாருங்க” என்றாள் மீரா ஆத்திரம் பொங்க.

“இல்லாடா மீராம்மா. அவங்க தனியா இருக்கணும்னு நினைகிறா. இருந்துட்டு போகட்டும். அண்ணனுக்கு இதை பத்தி எதுவும் சொல்லாத தெரிஞ்சா இவ வேணாம்னே சொல்லிடுவான்” என்று உள்ளே சென்றுவிட்டார்.

மீராவினால் இதை ஜீரணிக்க முடியவில்லை.          

‘அப்பா சொல்றதும் சரி தான். அண்ணன் கண்டிப்பா அப்படி தான் செய்வான்’ என்று எண்ணி கொண்டாள்.

குணசீலனும் வினோத்திடம் பேச, “முடியாதுப்பா அவ வேணா அங்க இருக்கட்டும் என்னால உங்கள விட்டுட்டு இருக்க முடியாது” என்றான் விடாபிடியாக.

“இல்லப்பா உனக்கும் அலைச்சலா இருக்கும் இல்ல… நான் சொல்றத கேளு. வார இறுதியில் இங்கே வந்துவிடுங்கள். நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம்” என்று சமாதானப்படுத்தினார்.

ஒரு நல்ல நாள் பார்த்துதனிகுடித்தனம் சென்றுவிட குழந்தை இல்லாத வீடு வெறிச்சோடி கிடந்தது.

குணசீலனும் கொஞ்ச நாளாக போகாமல் இருந்த பகுதி நேர வேலைக்கு சென்றார்.    

ஷ்ருஷ்டிமீரா தன் தோழியின் தந்தையின் மூலம் இருவரும் அவர்கள் படிக்கும் படிப்பிற்கு சம்பந்த பட்ட துறையில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார்கள்.

ஸ்ருஷ்டிமீராவுக்கும் இறுதியாண்டு தேர்வு நெருங்கியது இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.

வினோத் அவ்வபொழுது தன் குழந்தையுடன் வந்து இரவு வரை இருந்துவிட்டு போவான். ரஞ்சினி அதன் பிறகு ஒரு நாளும் வரவில்லை.  

இரவு வீட்டிற்கு இயந்திரதனமாய் வந்து உணவு உண்டு உறங்குவது மட்டும் அவர்கள் வேலையாக இருந்தது.

“அம்மா மீரா உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டேன்னா சந்தோஷமா என் கண்ண மூடிடுவேன்” என்றவரை முறைத்தாள்.

“அதெப்படி என்னை விட்டு நீங்க போய்டுவிங்க? அப்பா எனக்கு இப்ப இருபத்திமூன்று வயசு தான் ஆகுது. இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து செய்து கொள்கிறேன். என்னை துரத்த வேண்டும் என்று கனவு கானாதிர்கள் அப்படியே அனுப்பினால் சண்டை போட்டு அடுத்த ரெண்டாவது நாளே இங்க வந்து நிப்பேன்” என்று சொல்லும் மகளின் காதை திருகினார்.

“வாலு பொண்ணு நீ செஞ்சாலும் செய்வ. சரிம்மா இப்போ என்ன பண்ண போற? இந்த ரெண்டு வருஷமா படிக்கும் போதே பார்ட் டைம் வேலைக்கும் அதோட நுணுக்கங்கள கத்துகிட்ட. அங்கேயே முழு நேரமும் செய்யபோறியா இல்ல வேற இடத்துல வேலை பார்க்க போறியாம்மா?” என்றார்.

“அப்பா ஓரளவு நான் எல்லாத்தையும் கத்துகிட்டேன். அதோட எனக்கு கொஞ்சம் நல்ல கிளையண்ட்சோட காண்டாக்ட்ஸ் இருக்கு அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. அதனால…” என்று மெதுவாக இழுக்கும் மகளை “என்னம்மா தயங்காம சொல்லு?” என்றார்.

“இல்லப்பா எனக்கு நான் சொந்தமா இந்த பிஸினெஸ் செய்யனும்னு தான் ஆசை” என்று சொல்லவே “அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமேம்மா?” என்றார் லேசான பதற்றத்துடன்.

“இல்லப்பா நான் பத்தாவது படிக்க ஆரம்பிச்சு டியூஷன் எடுக்குறேன். நீங்க என்கிட்டே அந்த காச வாங்கனதில்ல. அதுக்கு பதில் எனக்கு சேவிங்க்ஸ் அக்கௌன்ட் ஓபன் பண்ணி கொடுத்திட்டிங்க. மாசம் ஒரு ஏழாயிரம் போட ஆரம்பிச்சேன் இப்போ எட்டு வருஷம் கழிச்சு என் படிப்பு செலவு போக, நான் இந்த ரெண்டு வருஷம் பார்ட் டைம் பார்த்து சேர்த்தது பார்த்தா… இப்போ அதுல ஆறு லட்சம் இருக்குப்பா கூட உங்களால முடிஞ்ச அமௌன்ட் கொடுத்திங்கன்னா சிம்பிளா ஒரு ஆபீஸ் போட்டுப்பேன்ப்பா” என்றாள் விழிகளில் ஆர்வத்துடன்.

தன் மகளை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவரால்.

“சரிம்மா உன் படிப்புக்குன்னு நான் சேர்த்து வச்சது இருக்கு நான் தரேன்” என்றார் எளிதாய்.

“அப்பா” என்று அவரை கட்டிகொண்டாள் விழிகளில் நீரோடு.

“எனக்கு ஒரு யோசனைம்மா” என்றார்.

“என்னப்பா?’”

“உனக்கு இப்போ ஒரு ஆபீஸ் தேவை இல்லையா?” என்றார்.

“ஆமாம்” என்றாள் மீரா.

“அப்போ நம்ம வீட்ட கால் கிரௌண்ட் தான கட்டிருக்கேன். முன்னாடி கால் கிரௌண்ட் சும்மா தான இருக்கு. அதிலயும் முன்னாடி ஒரு கடை போடலாம்னு பேஸ் மட்டும் போட்டு உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போகவே அதை அப்படியே நிறுத்திட்டோம் இல்லையா? இப்போ அதை நான் முடிச்சி தரேன் நீ சேர்த்துவச்சிருக்க காசுல என்ன பண்ணணுமோ பண்ணிகோம்மா” என்றார்.

“நல்ல ஐடியா தான்பா எனக்கு தோணவே இல்ல அப்படியே செஞ்சுடலாம்” என்றாள்.

அவள் முழுவதாக படிப்பு முடிக்கவும் அந்த சின்ன ஆபீஸ் ரெடி ஆகவும் சரியாக இருந்தது.    

அவள் அண்ணனும் அவளுக்கு அவனால் முடிந்த உதவியாய் ஒரு இலச்ச ருபாய் கொடுத்தான்.

ஒரு நல்ல நாளில் அவளுக்கு தெரிந்த க்ளையன்ஸ் உதவியோடு அவள் அப்பா கையினால் ஆபீஸ் திறக்கபட முதல் ஆறு மாதம் மிகவும் மந்தமாக போனது அவளது தொழில். அவளுடைய தோழியும் இதில் அவளுக்கு உதவினாள்.

புதிதாக தொடங்கப்பட்டதால் நம்பி வேலை தருவதற்கு எல்லோரும் யோசித்தனர் பின் ஒரு காண்ட்ராக்ட் வெற்றிகரமாக செய்து கொடுக்க, அதற்கு பிறகு ஓன்றன் பின் ஒன்றாக அவளை தேடி வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அப்படிதான் அவள் கூப்பிடாமலே அவளை தேடி வந்தது ஏழரைநாட்டு சனியும்…    

Advertisement