Advertisement

நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க,  நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல்.

“அணைக்கும்
தூரத்தில் இருக்கும்
உன்னை
ஒரு முறையேனும்
தொட்டு விடும் ஆசைகொண்டு
ஓடி வரும்
என்னை விட்டு
விலகி ஓடும்
உன்னை தீண்டும் வரை

ஓயாமல் தொடர்ந்து வருவேன் அன்பே!

“என்னடா இங்க உட்கார்ந்துருக்க? ஏதோ பலமான யோசனையோ?” என்று அவனின் அருகில் அமர்ந்தபடி கேட்டான் ஷ்ரவன்.

“ஒன்னுமில்லடா! சும்மா தான்” என்றான் தன் உள்ளங்கைகளை பார்த்தபடி.

“நீ சும்மான்னு சொல்லும் போதே ஏதோ இருக்கு. என்னனு சொல்லு?” என்றான் ஷ்ரவன்.

“இன்னைக்கு கோவில்ல ஒரு பொண்ண பார்த்தேன்டா. ப்பா! என்ன ஒரு அழகு? அவளை பார்த்தவுடனே எனக்கு ரொம்ப புடிச்சிருச்சுடா. அவ என்கூட வாழ்க்கைமுழுக்க கைக்கோர்த்துட்டு வரணும்னு ஆசையா இருக்கு” என்றான் முகத்தில் ஒரு பிரகாசம் மின்ன.

அவனின் முகத்தில் மின்னும் பிரகாசத்தையும் சந்தோசத்தையும் கண்டவன் இறைவனிடம் அது என்றும் நிலைக்க வேண்டிக்கொண்டான் ஷ்ரவன்.

“ஆஹாஹா! அதான் கப்பலே கவுந்துடுச்சா? யாருடா அந்த பொண்ணு?” என்று மகிழ்ச்சியாய் கேட்டான் ஷ்ரவன்.

“அதான் தெரியலையே? இன்னைக்கு தான்டா முதல்முறையா பார்த்தேன். அவளை பார்த்ததுல இருந்து எனக்கு வேற எதுலயும் கவனம் போக மாட்டேங்குதுடா” என்றான் சிறுபிள்ளையாய் சிணுங்கியபடி.

கலகலவென சிரித்த ஷ்ரவன், “சரி விடுங்க பாஸ். இதெல்லாம் சகஜம் கண்டுபிடிச்சிடலாம். ஆனா உனக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியாது போல இருக்குடா” என்றான் லேசான வருத்ததுடன் ஷ்ரவன்.

“ஏன்டா?” என்றான் நந்து ஒரு நொடி அதிர்ந்தவனாய்.

“நீ தான நான் சொல்ல சொல்ல கேக்காம என் பிசினெஸ் சம்மந்தமா பாரின் யுனிவர்சிட்டில படிக்க ஒன் இயர் கோர்ஸ் போட்ருந்த. அங்க எனக்கு சீட் கிடைச்சிருக்குடா. இன்னும் ஒன் வீக்ல நான் போகணும்.” என்றான் கோபமாய்.

“ஐ!! சூப்பர்டா. அப்ளிகேஷன் போட்டது மட்டும் தான் நான். அதுக்கு என்ட்ரன்ஸ் எழுதி பாஸ் பண்ணது நீ தான?” என்று சிரித்தான் நந்து.

“ஹ்ம்ம்.. அது உன் நம்பிக்கையை பொய்யாக்க கூடாதுன்னு எழுதினேன். இப்போ மட்டும் நீ வேணான்னு சொல்லு இப்பயே அதை கேன்ஸல் பண்ணிட்றேன் பாரு” என்றான் முகம் மலர.

“அடி ராஸ்கல். அங்க சீட் கிடைக்க எத்தனை பேர் தவம் கிடக்கிறான். நீ மெரிட்ல பாஸ் பண்ணிட்டு அவங்களே என்பது பெர்சென்ட் பீஸ் கட்டிடுவாங்க. மீதி ட்வென்டி பெர்சென்ட் தான் கட்டனும் இது மாதிரி ஒரு வாய்ப்பு திரும்ப கிடைக்குமா? மரியாதையா மூட்டை முடிச்சியை கட்டற வழியை பாரு. அவளை நான் கண்டுபிடிச்சிக்கிறேன்” என்றான் நந்து.

“என்னடா இப்படி சொல்லிட்ட? எனக்கு உன்னையும் நம்ம நாட்டையும் விட்டுட்டு போக விருப்பமில்லைடா” என்றான் வருத்தமாய்.

“அதுகென்னடா? நாட்கள் சீக்கிரமா ஓடிட போகுது. இதை நீ முடிச்சிட்டு வந்தப்புறம் இந்த பிசினஸ்ல உன்னோட பார்வையே மாறிடும் டா. நீ உங்கப்பா முன்னாடி ரொம்ப உயரத்துக்கு போய் காட்டனும்டா” என்றான் கண்களில் கனவுடன்.

தன்னை உயர்த்தி பார்க்க துடிக்கும் நண்பனை பெருமையுடன் கட்டிக்கொண்டான் ஷ்ரவன் கண்கள் பனிக்க.

“சரிடா சீக்கிரமே தங்கச்சியை கண்டுபுடி” என்றான் ஷ்ரவன் நந்துவின் தோளில் விளையாட்டாய் தட்டியபடி.

“என்னது தங்கச்சியா?” என்றான் நந்து ஆச்சர்யமாய்.

“ஆமாடா உனக்கு மனைவி ஆகபோறான்னா எனக்கு தங்கச்சி தான வேணும்” என்று கலகலவென சிரித்தான் ஷ்ரவன்.

“ஆமால்ல” என்றான் தலையை சொரிந்தபடி வழிந்து சிரித்தபடி நந்து.

“ஆமாவா? இல்லையா?” என்றான் நந்துவை மேலும் சீண்ட ஷ்ரவன்.

“போதும் போதும். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். நீ ஊருக்கு போற வேலையை மட்டும் பாரு” என்றான் நந்து எழுந்துகொண்டே.

இருவரும் பேசியபடி கடற்கரையை விட்டு தங்களின் அறைக்கு கிளம்பினர்.

இடையில் நந்துவின் அம்மாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திருப்பதாக செய்தி வர அங்கே அன்னையுடன் இருந்தான் நந்து.

அன்றோடு இருவரும் அவரவர்களின் வேலையில் மூழ்கிவிட நேரில் சந்திக்காமலயே வெளிநாடு கிளம்பி சென்றான் ஷ்ரவன்.

ஒரு வாரம் கழித்து நந்துவுக்கு போன் செய்தான் ஷ்ரவன்.

“ஹலோ நந்து! எப்படிடா இருக்க? எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு. கிளம்பும்போது வேற பார்க்க முடியல” என்றான் வருத்தமாக.

“நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? நீ படிப்புல கவனத்தை வை. சீக்கிரம் ஓடிரும் நாட்கள்” என்றான் நந்து.

“அம்மா எப்படி இருக்காங்கடா” என்று ஷ்ரவன் கேட்டான்.

“அம்மாக்கு இப்போ பரவால்ல. மைல்ட் அட்டாக் தான் சீக்கிரம் சரி ஆகிடும்னு சொல்லிருக்காங்க. இங்க எதை பத்தியும் நீ கவலைப்படாத. நான் சொல்றேன்”    என்றான் நந்து.      

Advertisement