Advertisement

“சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி.

“நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான்.

“அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி.

“அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான்.

“என்ன சொல்ற ஷ்ரவன்? நான் அந்த கம்பனிக்கா? இல்ல இது நடக்காது” என்றாள் உடனே லேசான அதிர்ச்சியுடன்.

“ஏன் அப்டி சொல்ற மதி? இப்போ நம்ம கம்பனிக்கு நீ ரொம்ப தேவைபடற. அதனால தைரியமா வந்து ஜாயின் பண்ணு.” என்றான் சற்று தெளிந்தவனாய்.

“இல்ல.. இது மாதிரி நடக்க முடியாது.” என்றாள் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி.

“இல்லடா..” என்று ஷ்ரவன் முடிக்கும் முன் மதி தொடர்ந்தாள்.

“அது உன் அப்பா கஷ்டப்பட்டு உனக்காக சேர்த்து வச்சது. அதுவுமில்லாம நீ இருக்க வேண்டிய இடத்துல… அவர் இருக்கும்போது நான் எதுக்கு…. என்னை அவங்களுக்கு பிடிக்காது ஷ்ரவன். அதனால இதெல்லாம் வேண்டாம். நான் வெளிய வேற வேலை பார்த்துக்குறேன். ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாத.” என்றாள் படபடவென்று விழிகளை மூடி.

“மதிகுட்டி! முதல்ல நான் சொல்றதை முழுசா கேளு. அப்புறம் உன் முடிவை சொல்லு.” என்றான் கொஞ்சம் காட்டமாக குரலில் லேசான கண்டிப்புடன்.

‘சரி’ என்று அரைமனதாய் தலையசைத்தாள் ஷன்மதி.

“எங்கப்பாக்கு சின்ன வயசுல இருந்தே என்னை டிஸ்கரேஜ் பண்ணி தான் பழக்கம்.” என்றவனை விழிகள் விரிய நோக்கினாள்.

“ஆமா டா! நான் ஒன்னும் உன்னை மாதிரி க்லாஸ் டாப்பர் எல்லாம் இல்லை. ஆவெரேஜ் தான். அதனால தினமும் எனக்கு நிறைய திட்டு கிடைக்கும். அதுவும் ப்ளஸ் டூ முடிச்சு ரிசுல்ட் 950 மார்க் வந்தப்ப. எங்கப்பா என்ன சொன்னாருன்னு தெரியுமா?..” நிறுத்தியவன் சற்றுதயங்கி.

“நீயெல்லாம் அப்பன் சம்பாதியத்துல உக்காந்து சாப்பிடதான் லாக்கி. நான் சம்பாரிச்ச காசோ இல்ல என் கம்பெனில வேலை செய்யறதை தவிர என்னை சார்ந்து தான் இருக்கமுடியும். என்னோட இல்லன்னா நீ ஜீரோ தான். ஒரு வேலை சோத்துக்கூட வக்கில்ல. உன்னால தனியா சுயமா ஒண்ணுமே பண்ணமுடியாது. கடைசி வரைக்கும் என் காலடில தான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட போல. ஒன்னுத்துக்கும் உதவாத தறுதலைய கொடுத்ததுக்கு பதில் கடவுள் எனக்கு கொடுக்காமலையே இருந்திருக்கலாம்”ன்னார்” என்றான் லேசான கலங்கிய முகத்துடன்.

அவனின் ஆறுதலுக்காக கட்டிக்கொள்ள முயற்சிக்க, முடியாமல் தவித்தாள் மதி.

“ஆனா எங்கம்மா அப்படியே ஆப்போசிட் அவங்களுக்கு நான் தான் உயிர். அவருக்கும் சேர்த்து என்மேல பாசமழைய பொழிஞ்சாங்க. அவருக்கு என் மேலே என்ன கோபம்னு தெரியாம தவிச்சிகிட்டு இருந்தப்ப தான் எங்கம்மா சொன்னாங்க அவருக்கு ஆம்பிள பசங்கனா பிடிக்காதுன்னு. பொண்ணா பிறக்கணும்னு எதிர்பார்த்துட்டு இருந்தப்ப நான் பிறந்ததால ஏதோ ஒரு கோபம் அதனால தான் எல்லாத்துக்கும் என்மேல குறை சொல்லிக்கிட்டு இருந்தார்னு. ஆனா என் தங்கச்சி பிறந்தப்புறம் என்னை திட்றதை கொஞ்சம்  நிறுத்தி இருந்தார். ஆனா அன்னைக்கு ரொம்ப அதிகமா பேசிட்டார். அன்னைக்கு தான் எங்க வீட்ல நான் சாப்பிட்டது கடைசி.” என்று நிறுத்தியவன் விழிகளில் இருந்து வழியும் நீரை துடைக்காமல் விழி`மூடி வலி உணர அவனின் வலியை இவளும் உணர்ந்தாள்.

“அப்புறம் என் பிரெண்ட்ஸ் உதவியால ஹாஸ்டல்ல தங்கினேன். என்னோட பெஸ்ட் பிரெண்ட் நந்து எனக்காக எனக்கு பிடிச்ச பி.பி.ஏல நான் எவ்ளோ தடுத்தும் கேக்காம சேர்த்துவிட்டான். நான் அவனுக்கு இதெல்லாம் திருப்பி கொடுத்திடுவேன்ற கண்டிஷன்ல ஹெல்ப் வாங்கிகிட்டேன். ரொம்ப வசதியா இருந்தவன் எனக்காக என்கூட வந்து தங்கினான். எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணான். அவனை மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.” என்றவன் நிறுத்திவிட்டு அவளின் விழிகளை ரசித்தான்.

முகம் தெரியாத நந்துவின் மீது ஒரு மரியாதை உண்டானது மதிக்கு.

“ஆனாலும் என் நண்பனை எல்லாத்துக்கும் எதிபார்த்துகிட்டு இருக்கறது எனக்கு பிடிக்கலை. அதனால கல்லுரி நேரம் போக மீதி நேரத்துல பார்ட் டைம் வேலை பார்த்து என் தேவைகளை முடிஞ்சளவு நானே சரி செஞ்சிகிட்டேன். மெல்ல மெல்ல எங்க அப்பா மேல இருந்த சொல்லமுடியாத கோபம் எல்லாத்தையும் வேலை நேரம் போக மீதி நேரம் முழுவதும் படிப்புல கவனம் செலுத்தினேன். என்னால எவ்ளோ முடியுமோ அதையும் மீறி கஷ்டபட்டு படிச்சேன். பி.பி.ஏல தொண்ணூத்தி அஞ்சு பர்செண்டேஜ்ல பாஸ் பண்ணேன். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச காசுல நந்துவை தொல்லை பண்ணாம எம்.பி.ஏ ல சேர்ந்தேன். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் சீக்கிரத்துல அடைச்சிட்டேன். ஆனா அந்த ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? “ என்று அவளை பார்க்க, அவளும் ஆர்வமாக அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.

‘நான் கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு கொடுத்த காசை எனக்கு தெரியாம என் பேர்ல் பாங்க்ல போட்டு வச்சிருக்கான்.’ என்று நண்பனை நினைத்து சிரித்தான்.

அதோட எம்.பி.ஏ  படிச்சிகிட்டு இருக்கும் போதே நான் ஆசைப்பட்ட மாதிரி பாங்க்ல லோன் ஏற்பாடு பண்ணி எனக்காக என் பேர்ல ஒரு சின்ன ஆபிஸ் திறந்து கொடுத்தான். நான் மறுத்தப்ப, நீ எனக்காக எதாவது செய்யணும்னு நினைச்சன்னா அடுத்த ரெண்டு வருஷத்துல இந்த கம்பனிய நல்ல உயரத்துக்கு கொண்டு போ’ன்னான். அவனோட ஆசைப்படியே கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன். அப்போதான் உன்னையும் பார்த்தேன்” என்று நிறுத்தினான்.

“எனக்கு பிடிச்சிருந்தது. உனக்கு தெரியாமையே உன்னை விரும்ப ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் என் கம்பனிய நல்ல நிலமைக்கு கொண்டு போகணும்னு உன்கிட்ட நெருங்காமயே உன்னை தூரத்துல இருந்தே பார்த்து காதலிச்சிட்டு இருந்தேன். நீயும் படிச்சிகிட்டு இருந்ததால உன்னையும் தொந்தரவு பண்ணலை.” என்றான்.

“அப்புறம் எங்க அம்மா அடிகடி என்னை வந்து பார்ப்பாங்க எனக்காக ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. எனக்கு சாப்பிட பிடிக்காது. ஆனா நந்து அவன் சாப்பிடலைன்னு கவலை படாதிங்கம்மா நான் சாபிட்றேன்ன்னு எல்லாத்தையும் சாப்பிடுவான். எத்தனையோ தடவை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் வர முடியாதுன்னு சொல்லிட்டேன். காசு கொடுப்பாங்க. என்னால அதை வாங்க முடியுமா என்ன? ஹுஹும்ம்… அழுதுட்டே போய்டுவாங்க” என்றான் வருத்தமாய்.

“அப்போ உன் ப்ரெண்ட எங்க அவரை இது வரைக்கும் நான் பார்த்தது இல்லையே/” என்றாள் குழப்பமாக.

“அது…” என்றவன் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.              

.                  

Advertisement