Advertisement

16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்…
மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம் என்னை எழுப்புன அவ்ளோதான்னு போய் மறுபடி தூங்கிட்டு இருக்கா…!! என்ன பண்ணலாம்?’ என்று வடிவேல் கணக்காய் உதட்டில் விரல் வைத்து வானத்தை பார்த்து யோசித்துகொண்டிருக்க…
அங்க நம்ம பச்சைமிளகாய் அவனை ஏமாற்றாமல் தூக்கத்தில், தலையை போர்த்தியிருந்த போர்வையை இடக்கையால் விலக்கியபடி தன் உடலை குறுக்கி நெடுக்கி நெட்டி முறித்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே கண்களை மூடி படுத்திருக்க, இவன் பாடு தான் திண்டாட்டம்.
‘எழுந்தாள்ள? ஒழுங்கா வந்து டி குடிக்கலாம்ல. திரும்பி தூங்குது பாரு. கடவுளே! நீ ஒரு போலீஸ்காரன் அதுவும் டி.சி.பி வேற வெளிய சொல்லாத எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பாங்க’ என்று அவன் அறிவு கிண்டல் செய்ய.
‘ஏன் போலிஸ்னா காதலிக்க கூடாதா?’ என்று அவனுக்கு வக்காலத்துக்கு வந்தது மனது.
‘ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருகிங்களா? நானே அவள் எந்திரிக்கலைன்னு டென்ஷன்ல இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இங்க அடிச்சிக்கிறிங்க?’ என்று அதட்ட இரண்டும் இருந்த இடம் தெரியாமல் அமைதியானது.

மெதுவாய் எழுந்து ஜன்னலில் ஏதோ வித்யாசமான வாசனை வருதேன்னு ஆர்வமாய் தேநீர் கோப்பையை கையில் எடுத்துவிட்டு குடிக்கலாமா வேணாமான்னு யோசிச்கிட்டு நிக்குறா… பச்சைமிளகாய். 

‘என்ன ஏதோ வித்யாசமாய் வாசனை வருதே?’ என்று ஆர்வமாய் ரசித்து குடித்தாள்.
அவள் ரசித்து குடித்து கொண்டிருப்பதை நம்ம க்ருஷ்வந்த் ஜன்னலில் இருந்து ரசிக்க அவனின் காதை பிடித்து நன்றாக திருகினார் சுந்தரி.
“ஏன்டா உனக்கு இருபத்திநாலு மணி நேரமும் இது தான் வேலையா? இப்ப என்ன பார்த்துட்டு இருக்க அங்க?” என்று கேட்டார்.
“அதுவாம்மா செம்பருத்தி டீ அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதான் பார்த்துகிட்டு இருந்தேன். ஹி..ஹி… ” என்றான்.
“எதுக்குடா திடிர்னு செம்பருத்தி பூ டீ மாத்தி குடுத்துருக்க?”  என்று கேள்வி கேட்க.
“ஹ்ம்ம் நீங்களும் ஒரு டாக்டர்? எந்த சுவற்றில் போய் நான் முட்டி கொள்ள?” என்று தன் அன்னையை கேலி செய்ய.
”அட படவா என்னையே கிண்டல் பண்றியா? இரு உன்னை இன்னிக்கு உதைகாம விடறதில்லை” என்று அவன்முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

“அம்மா! ஹைபிஸ்கஸ் டி நான் ட்ரைனிங்   போன இடத்துல கத்துகிட்டது. ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா  இருந்தா ஹைச்பிச்கிஸ் டீ குடிப்பேன் வித்தின் பைவ் மினுட்ஸ் இம்மிடியட் ரிலிப் கிடைக்கும்” என்றான்.

“அது மட்டும் இலல.. இதயத்துக்கு  ரொம்ப நல்லது, ப்ளட் சர்குலேஷன் ஈசியா ஆகும், இதயம் பலப்படும்,இன்னும் நிறைய இருக்கு” என்றான்.
(உங்க யாருக்கும் ரெசிபி சொல்ல மாட்டேன்…)
அதன் பிறகு வந்த நாட்களில் க்ருஷ்வந்த் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அப்பப்போ சுந்தரி சென்று பேசி அவளுக்கு தேவையானதை செய்து தருவாள்.
ஸ்ருஷ்டிமீராவுக்கு தான் அடுத்தவரிடம் உதவி பெறுவதென்றால் பிடிக்காதே? எவ்வளவோ தடுத்து பார்த்தும் சுந்தரி விடுவதாக இல்லை.

அவளை தன் மகளாக நினைப்பதாக கூறி சில நேரம் செல்லத்திட்டுகளும் கொடுத்தார்.
ஒரு வழியாய் சிறிது சுந்தரியிடம்  ஒட்டி கொண்டாள்.
ஆனாலும் க்ருஷ்வந்த் அவள் கண்களில் இருந்து மறைந்தே அவளுக்கு தொடர்ந்து ஆச்சர்யங்களும் நிறைய அள்ள முடியாத அன்பையும்  தந்து கொண்டிருந்தான்.

மீராவின் ஆவலுக்கு அவளே கடிவாளம் போட்டு கொண்டிருந்தாள்.

அப்படித்தான் ஒரு நாள் அவள் அலுவலகம் சென்று வேலையில் மூழ்கியவள் மணி 1.30 தாண்டி கொண்டிருந்ததையும் கவனிக்காமல் வேலையே கருமமென இருந்தாள்.
மணி இரண்டை தொட்டவுடன் போலிஸ் உடையில் ஒரு பெண் காவலர் உள்ளே வருவதை கவனித்தவள் சுதனால் ஏதாவது பிரச்சனை வரப்போகிறதோ? என்று சற்று கவலைப்பட்டாலும் ‘எதுவா இருந்தா என்ன? எல்லாத்தையும் பார்த்துதானே ஆகணும். பிரச்சனை வருதுன்னு பயந்து ஓடி ஒரு லாபமும் இல்லை. துணிஞ்சி என்னனு ஒரு கை பார்த்துடலாம்’ என்று எழுந்து வந்தாள்.
“என்ன மேடம்? என்ன வேணும்? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க.
“ஐயோ! அதெல்லாம் ஒண்ணுமில்லை மேடம். சார் வீட்டுக்கு போயிருந்தேன். நீங்க சாப்பிட வரல ஏதாவது எடுத்துட்டு போனிங்களான்னு தெரியலைன்னு சொல்லி அம்மா ரொம்ப வருத்தபட்டாங்க. அதான் நான் அந்த பக்கம் தான் போறேன் கொடுத்துட்டு போறேன்னு வாங்கிட்டு வந்துட்டேன். இந்தாங்க டைம்க்கு சாப்பிடுங்க உங்களை நம்பி ஒரு ஜீவன் உள்ள வளருதில்ல?” என்றாள் செல்ல அதட்டலோடு.
“சாரிக்கா. நான் என்னவோ ஏதோன்னு பதறிட்டேன். வேலை ஜாஸ்தி இருந்ததனால சாப்பிட மறந்துட்டேன். அதுக்குள்ள அம்மாவே கொடுத்து விட்டுட்டாங்களா? இதோ இப்பவே சாப்பிட்டுறேன்” என்று டிபன் பாக்சை திறக்க அதில் அவளுக்கு பிடித்த வத்தக்குழம்பு இருந்தது.
“ஹய்! எனக்கு பிடிச்ச வத்தக்குழம்பு. இவ்ளோ நேரம் பசி தெரியல. ஆனா இப்போ இதை பார்த்தவுடனே வயதுக்குல்ல பசி கிள்ளுது. ஒரு கை பார்க்க போறேன். நீங்க வேணா கிளம்புங்கக்கா. உங்கள அக்கான்னு கூப்பிடலாம்ல?” என்றாள் சந்தேகமாய்.
“தாராளமா கூப்பிடுமா. இல்ல உன்னை சாப்பிட வெச்சிட்டு தான் வர சொன்னாங்க.” என்று தட்டை எடுத்து பரிமாற.
“அக்கா உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் நானே போடுக்றேன். நீங்களும் சாப்பிடுங்க அக்கா” என்று அவரை தடுத்து அவளே போட்டு சாப்பிட்டாள்.
“இல்லம்மா நான் சாப்பிட்டேன்.நீ சாப்பிடு”  என்றார்.

மிகவும் ருசித்து பொறுமையாய் சாப்பிட்டு முடித்து “ரொம்ப அருமையா எனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சிருக்காங்க. வயிறு நிரம்ப சாப்பிட்டேன். அம்மா கையால சமைச்ச மாதிரி இருந்தது. வீட்டுக்கு போனவுடனே அம்மாவை கட்டி பிடிச்சு ஒரு முத்தம் தரப்போறேன்.” என்று விழிகள் விரிய கூறினாள்.

“சரிம்மா. இந்தா இது தான் என் நம்பர். உனக்கு எப்போ எது தேவைனாலும் என்னை தயங்காம கூப்பிடு. சரியா. நான் உடனே வரேன். வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடு” என்று கிளம்பினார்.
“அக்கா! எதுல வந்திங்க? நான் வேணா விட்டு வர யாரையாவது அனுப்பவா?” என்று கேட்டாள் ஸ்ருஷ்டிமீரா.
“இல்லம்மா! என் டூ வீலர்ல தான் வந்தேன். நான் போய்கிறேன்” என்று வெளியே சென்று விட்டார்.
வெளியே சென்று சில நிமிடங்கள் ஆகியும் வண்டி சத்தம் கேட்காததால், ‘இன்னும் போகலையா? ஒரு வேளை வண்டி ஏதாவது மக்கர் பண்ணுதோ?’ என்று எண்ணியபடி வெளியே வந்தவள்.
அங்கே, க்ருஷ்வந்த் தன் போலிஸ் வாகனத்தில் அவளுக்காக காத்திருந்து ஏற்றி செல்வதை பார்த்து அவளையும் அறியாமல் விழிநீர் சுரந்தது.
இங்கே!
“என்னக்கா? ரொம்ப கேள்வி கேட்டு தொலைச்சிட்டாளா?” என்றான் க்ருஷ்வந்த்.
‘எமகாதகி என் செல்ல ராட்சசி. கேள்வி கேட்டே நம்மளை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாளே’ என்று எண்ணிக்கொண்டிருக்க.
“இல்ல தம்பி. ரொம்ப நல்ல பொண்ணுப்பா. நல்லா பாசமா பேசுது” என்றார் அந்த பெண் கான்ஸ்டப்ல்.
‘யாரு? அவ. யப்பா சாமி. அந்த பச்சை மிளகாயை போய் இப்படி புகழுறாங்களே?’ என்று சிரித்தவன்.
“நான் சொன்ன மாதிரி செஞ்சிங்களா? எங்க கொடுங்க?” என்றான்.
“நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன் தம்பி.” என்று அவள் பாக்கெட்டில் இருந்த அவனுடைய மொபைலை எடுத்து க்ருஷ்வந்திடம் கொடுத்தாள்.
“அதில் மீராவின் அலுவலகத்தில் இருந்து வண்டியிடம் வரும் வரை நடந்ததெல்லாம் ரெகார்ட் செய்யப்பட்டிருந்தது. வேகமாக ஒட்டி பார்த்தவன்.
“ரொம்ப நன்றிக்கா.” என்றான் மகிழ்ச்சியில்.
“அடபோப்பா. வேலைல மட்டும் தான் கொஞ்சம் கண்டிப்பா இருப்பியே தவிர, எங்களையெல்லாம் நீ சொந்த அக்கா தம்பி மாதிரி நடத்துற. எந்த பந்தாவுமில்லாம ஒன்னும் மன்னுமா பழகுற. எங்களுக்கு ஏதாவதுன்னா ஓடி வந்து உதவுற. உனக்காக இதை கூட செய்யமாட்டோமா?” என்று கூறினார்.
“சரி தம்பி. இந்த சமையல நீ தான் செஞ்சேன்னு அம்மா சொன்னாங்க. நீயே வந்து கொடுத்துருக்காலம்ல?” என்று கேள்வி கேட்க.
“எனக்கும் ஆசை தான்க்கா.” என்று நிறுத்தியவன்.
‘ஆனா, என் ஸ்வீட் சில்லி போண்டா. பேவரைட் பச்சைமிளகாய். ஒத்துக்க மாட்டாளே? என்னை பார்த்தாலே சாமி வராமையே சாமி ஆடிருவாளே. அப்புறம் உள்ளதும் போச்சு நொல்லகன்னான்ற மாதிரி இருக்குற கொஞ்ச நஞ்ச எனர்ஜியும் காரவடை மாதிரி கிறிஸ்ப்பியா பொரிஞ்சி தள்ளி டயர்ட் ஆகி புஸ்ஸுன்னு உக்காந்துருவாளே?’ என்று தனக்குள் பேசிக்கொண்டிருக்க.
“என்ன தம்பி நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? ஒன்னும் பேசாம அமைதியா வரிங்க?” என்றார்.
‘நான் எங்க பேசாம வரேன். அதான் எனக்குள்ள உக்காந்து ஒருத்தி பச்சைமிளகாய் வத்தல் போட்றாளே? அவள பத்தி தான் பேசிட்டு இருக்கேன்’ என்று மீண்டும் தனக்குள் பேசினான்.
“இல்லக்கா. நான் கொடுத்தா அவள் சாப்பிட யோசிப்பா. அதான் அம்மா செஞ்சதுன்னு சொல்ல சொன்னேன். ஓகே கா. நீங்க நம்ம கேஸ் விஷயமா ஒரு இடத்துக்கு டீடெய்ல் வாங்கிட்டு வர சொன்னேன்ல அங்க போயிட்டு வந்துருங்க. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க.” என்று அவர்களை இறக்கி விட்டு வீட்டிற்கு வந்தவன்.
கட்டிலில் ஓய்வாக சாய்ந்தபடி தன் மொபைலில் இருந்த அந்த விடியோவை ரசித்து பொறுமையாக பார்க்க தொடங்கினான்.
அந்த வத்தகுழம்பை பார்த்தவுடன் அவள் விழிகள் பேசும் பல கதையை மொழி இல்லாமலே புரிந்து ஆனந்தப்பட்டு கொண்டிருந்தான்.
அவள் ஒவ்வொரு கவளை சாதத்தையும் எவ்வளவு பூரிபோடும் ஆசையோடும் ருசித்து சாப்பிடுவதை பார்த்தவனால் அவனின் உணவுகளை கட்டுப்படுத்த தெரியாமல் திணற ஆரம்பித்தான்.
அதிலும் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கடைசியாக சிறு குழந்தைகள் பிடித்த உணவானால் வழித்து விரல்கள் ஒவ்வொன்றாய் சப்புவதை போல சப்பி கொண்டிருந்தாள்.
.
‘பாவி பாவி. என்னை பாடா படுத்துருதுக்குன்னே வந்துருக்கா இவ. அதான் ஆசையா அந்த கோலி குண்டு கண்ணை உருட்டி விரித்து எவ்ளோ ஜாலமெல்லாம் செஞ்சு சாபிட்றா. அத பார்த்தாலே என்னால ஒழுங்கா மூச்சி விட முடியலை. இதுலவேற இப்படி ஒவ்வொரு விரலையும் விழி விரித்து ஆர்வமாய் சப்பினால் நான் என்ன செய்ய? கடவுளே இவளோ குழந்தை தனமான ஒரு மனதை படைத்த நீ. அவளுக்கு ஏன் இவ்வளவு சோதனை கொடுத்தாய்? இப்படி ருசிச்சு சாப்பிடற அந்த இதழ்களின் சுவை எப்படி இருக்கும். நினைக்கும்போதே எனக்கு மூச்சி முட்டுது. இதுக்கு மேல இந்த விடியோவை நான் பார்த்தேன் அவ்ளோதான்’ என்று மொபைலை கட்டிலின் ஓரம் தூக்கி பொறுமையாய் வீச, எதிரில் பத்ரகாளியின் அம்சமாய் நின்றிருந்தாள் அவனின் அருமை தங்கை.  
‘அய்யய்யோ! இப்ப எதுக்கு இவ இப்படி முறைச்சிகிட்டு  நிக்குறான்னு தெரியலையே?”  என்று திரு திருவென்று முழித்தான்.   
******”*********
ஹைபிஸ்க்ஸ் டி வேணும்னா சொல்லுங்க நெஸ்ட் ஏபி போடறேன்.

Advertisement