Advertisement

அத்தியாயம் –9
நரேன் அழுவதைப் பார்த்து ஓடிவந்த அந்த செவிலிப்பெண் “என்னப்பா? ஏன் அழுகுற” என்றுக் கேட்க
அறையினுள்ளே கையைக் காட்டியபடி “அப்பா..” என்று அழுதான்.
உள்ளே செவிலி சென்றபொழுது நரேனின் தந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய் மூக்கை விட்டு நகர்ந்துகிடக்க, செவிலி அதை கிரகிக்கும் முன்னரே இறுதி மூச்சோடு நரேனது தந்தையின் உயிர் பிரிந்தது.
உடனே செவிலிப்பெண் பதறிப்போய் சென்று சதாசிவத்தை அழைத்துவர, நரேனின் தந்தை உடலைப் பரிசோதித்து பார்த்தவருக்கு அவரது உடல் நிலை புரிந்துவிட்டது, சதாசிவத்தின் பார்வை கத்தி கத்தி அழுதுக் கொண்ருந்த நரேனின் மீது வேதனையோடு விழுந்தது.
அதன்பிறகு நரேனின் தந்தை உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து அடக்கம் செய்துவிட்டு தன்னுடனேயே தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார் சதாசிவம்.
பத்மாவதியிடம் விசயத்தை சொல்ல தேம்பித் தேம்பித் அழுதுக் கொண்டிருந்த நரேனைப் பார்க்கையில் பத்மாவதிக்கு மனம் கசிந்தது. அவனருகே சென்று அவனைத் தூக்கி சோபாவில் அமர வைத்தவர் “உன் பேர் என்னடா?” என்றுக் கேட்டார்.
அவன் அழுதுக் கொண்டே “நரே..ன்” என்று வாய்க்குள்ளேயே சொல்ல
பத்மாவதிக்கு ‘நா’ ன் மட்டும் கேட்க “நாகேந்திரனா?” என்றுக் கேட்டார்.
அவனும் மறுக்காமல் “ஆமாம்” என்பது போல் தலையாட்டிவிட்டான். அவன் வெறுக்கும் ஐடன்டிடியை அழிக்க நினைத்தானோ என்னவோ…
“நீ எதுக்கும் கவலைப்படாதப்பா.. நாங்க இருக்கோம்ல உனக்கு.. நீ இங்கேயே இருந்துக்கலாம்” என்று பத்மாவதி சொல்லிக் கொண்டிருக்க, இவர்களை எதிர் சோபாவில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த லலிதா “அம்மா அவன் பேட் பாய்.. அவன் வேண்டாம்.. அவன் வேண்டாம்” என்றுக் கத்த ஆரம்பித்துவிட்டாள்.
பத்மாவதி சதாசிவம் இருவரும் என்ன முயன்றும் லலிதாவை சமாதானம் செய்ய முடியவில்லை.
“சரி லல்லி.. நீ அழாத.. நாம நாகேந்திரன ஹாஸ்ட்டல்ல சேர்த்திரலாம்.. நீ அழாத” என்று அவர்கள் சமாதானத்திற்காக சொல்லிய பின்பே ஓய்ந்தாள் லலிதா.
ஆனால் அந்த நிமிடத்திற்கு சமாதானம் ஆனாளே தவிர, நாளுக்கு நாள் நாகேந்திரனை வெளியே அனுப்ப சொல்லி அவள் பிடிக்கும் அடம் அதிகமாகிக் கொண்டே போனது.
ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சதாசிவம் நாகேந்திரனையும் கூட்டி வந்து சாப்பிட அமர வைக்க, அவனைப் பார்த்தவுடன் அறையினுள் சென்றுக் கதவை சாத்திக்கொண்டவள் “அவன் இங்க இருந்து போனா தான் நா வெளிய வருவேன்..” என்றுக் கத்த ஆரம்பித்துவிட்டாள்.
இதை தொடர்ந்து நாகேந்திரன் விடுதி இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டு, விடுதியிலேயே தங்கிப் படித்து வர ஆரம்பித்தான். அவன் படிப்பிற்கான எல்லா செலவையும் சதாசிவமே ஏற்றுக் கொண்டார்.
வருடங்கள் கடக்க பன்னிரெண்டாவது முடித்து வாலிபனாய் வந்து நின்றான் நாகேந்திரன்.
“நீ என்ன படிக்கணும்னு ஆசப்படுறியோ அதையே படி” என்று சதாசிவம் சொல்ல அவன் “எம்பிபிஎஸ்
படிக்கப் போறேன் அங்கிள்” என்றான்.  
     
சம்மதமாக தலை அசைத்தவர் அவனை வீட்டிற்கு கூட்டி வர,ஹாலில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்த லலிதா இவனைப் பார்த்ததும் அவளறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள்.
“வாப்பா நாகா… ரெண்டு பேரும் சாப்டுங்க” என்று சொன்னபடி பத்மாவதி சமயலறை சென்று சாப்பாட்டை எடுத்துவர சாப்பிட்டவன் “எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு ஆன்டி நா வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
மருத்துவபட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சதாசிவத்திடம் அனுமதிக்கேட்டு அவரது மருத்துவமனையில் வேலைப் பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது அவனுக்கு நிறைய கெட்டசகவாசங்கள் கிடைத்தது.
குனத்தை எடுத்துக்கொண்டால் ஏற்கனவே அவன் பிஞ்சிலேயே பழுத்தவன், கெட்ட சகவாசங்களும் சேர சொல்லவா வேண்டும்?
முதல் பழக்கம் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடம் கஞ்சா விற்பவர்களுடன் எற்பட்டது,  அதனை தொடர்ந்து பிள்ளைக்கடத்தல், தங்கக்கடத்தல், சிலை கடத்தல் என எல்லா திருட்டுத் தொழில்களிலும் கால் பதிக்க ஆரம்பித்து இருந்தான்.மருத்துவம்படித்தானோ இல்லயோ எல்லாவிதமான குறுக்குவழி பாடங்களையும் தப்பே இல்லாமல் கற்று இருந்தான்
மருத்துவபடிப்பு முடிந்ததும் சதாசிவத்திடம் கேட்டு அந்த மருத்துவமநியிலேயே வேலைக்கு சேர்ந்தான்.
நாகா நான்கு வயதில் இங்கு வந்தபொழுது இந்த மருத்துவமனை எப்படி இருந்ததோ இப்பொழுது அவனது இருபத்து மூன்று வயதிலும் அப்படியே தான் இருந்தது.
அவன் மருத்துவமனையில் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு  மாதங்கள் ஓடியிருந்தன.
லலிதாவிற்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார் சதாசிவம்.
என்றும் இல்லாமல் அன்று தானாக  வீட்டிற்கு வந்தான் நாகேந்திரன்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு வருகிறான் ஆனாலும் அந்த வீட்டில் ஒரு துளி மாற்றமில்லை. பத்தொன்பது வருடங்களுக்கு முன் அந்த வீட்டை எப்படிப் பார்த்தானோ அப்படியே தான் இருந்தது.
வீட்டின் உள்ளே பத்மாவதி இருக்க உள்ளே வரும் இவனைப் பார்த்தவர் “அடடே நாகா… எப்படி திபுதிபுன்னு வளந்துட்டே.. எத்தன வருஷமாச்சுப்பா உன்னப் பாத்து.. எப்படி இருக்கப்பா?” என்று விசாரிக்க,
மெலிதாக சிரித்தவன் “நல்லாருக்கேன் ஆன்ட்டி.. அங்கிளப் பாக்கலாம்னு ஹாஸ்பிட்டல் போனேன்… அங்கிள் அங்க இல்லைன்னாங்க.. அதான் வீட்டுக்கு வந்தேன்” என்றான் நாகேந்திரன்.
ஆறடிக்கும் மேல் உயரம், கட்டுமஸ்தான உடல், வயதிற்கே உரிய ஆண்மையழகு என அவனைப் பார்ப்பவருக்கு அவனது சிறு வயது புகைப்படத்தைக் காண்பித்து “இது தான் அவன்” என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.
அவனது கண்கள வீட்டை சுற்றி சுழலவிட்டபடி வந்து அமர்ந்தான் அவரது எதிரே இருக்கும் சோபாவில் பணிப்பெண்ணை அழைத்து டீ எடுத்து வர சொன்ன பத்மாவதி அவனது வேலையைப் பற்றி விசாரிக்க, அவனும் சகஜமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது தோழிகளுடன் வெளியே போய்விட்டு வீட்டினுள் நுழைந்தாள் லலிதா.
தாவணிப்பாவாடை , இரட்டை சடை என எண்பதுகளில் இருக்கும் பெண்ணுக்கே உரியத் தோற்றத்திலும், அவளது பருவத்திற்கு ஏற்ற முழு அழகியாய் வந்தவளைக் கண்ட நாகேந்திரன் முகத்தில் எதையும் காட்டாமல் எழுந்தபடி “சரி ஆன்ட்டி நா கிளம்புறே.. அங்கிள ஹாஸ்பிட்டல்லையே பார்த்திக்குறேன்” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
போகும் அவனை பார்த்துக் கொண்டு உள்ளே வந்த லலிதா “இது யாருமா புதுசா இருக்காங்க?” என்றுக் கேட்க
“அட அவன் யாருன்னு தெரியலையா? நம்ம நாகா தான் லல்லி, சின்ன வயசுல எப்டி எலும்பும் தோலுமா இருப்பான்.. இப்போ பாரு வாட்ட சாட்டாம ஆகிட்டான்” என்று சொல்லிவிட்டு நகர
“முன்னாடி அவன்ட்ட இருக்குற கெட்டப் பார்வைய இப்போக் காணுமே… திருந்திட்டான் போல” என்று நினைத்துக் கொண்டவள் தனதறைக்கு சென்றுவிட்டாள்.
லல்லிக்கு இந்த ரத்தம், கத்தி என்றவையெல்லாம் ஆகவே ஆகாது. ரத்தத்தைப் பார்த்தாளே மயக்கம் வந்துவிடும், அதனால அவள் பெரிதும் விருப்பப்பட்ட ஆசிரியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து அதை முடிக்கவும் போகிறாள். அவளின் கோரிக்கையின் பேரில் சதாசிவம் அவளுக்கு ஒரு புதிய பள்ளியையும் கட்டிக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆறு மாதங்களில் அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தான் நாகேந்திரன்.
சதாசிவம் இந்த மருத்துவமனையைக் கட்டி முப்பத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எத்தனையோ ஏழை மக்களுக்கு பணமே வாங்காமல் ட்ரீட்மெண்ட் செய்துக் கொடுத்திருக்கிறார். அதனால அவரது இந்த மருத்துவமனையில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.. வேலையை பணத்திற்காக செய்யாமல் மனத்திருப்திக்காக பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருக்கிறார் சதாசிவம்.
மருத்துவமனையில் இருந்து வரும் பணத்தில் நான்கில் ஒரு பங்கே தனக்கு வைத்துக் கொண்டு மற்ற பணத்தையெல்லாம் அறுவை சிகிச்சைக்காகவும், மற்ற சிகிச்சைகளுக்காகவும் பணம் இல்லாமல் திண்டாடும் மக்களுக்கு தானே பணம் போட்டு உதவி செய்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பணம் என்றாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர் என்றால் நயா பைசா கூட அவர்களிடம் இருந்து வாங்கமாட்டார்.
அனாதை ஆசிரமம்,கோவில் நற்கொடைகள் என மிச்சம் இருக்கும் பணத்தைக் கொடுப்பார்.
யாராவது ஒருவருக்கு நல்ல முறையில் சிகிச்சைக் கொடுத்தும் இறந்துப் போய்விட்டால் அவர்களின் சொந்தக்காரர்களின் அனுமதியோடு இறந்தவரின் உடல் பாகங்களை எடுத்துவைத்து, உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் காசில்லாத மக்களுக்கு பயன்படுத்துவார்.
ஆனால் பல மருத்துவமனைகளில் எந்த அனுமதியுமின்றி இது திருட்டாக நடந்துக் கொண்டிருக்கிறது. படிப்பறிவில்லாத ஏழை மக்களே இதில் அதிகம் சிக்குகின்றனர்.
இறந்தவரின் உறவினர்களிடம் கூட அனுமதி கேட்காமல், தங்களுக்கு தேவையான உறுப்புகளை எடுத்துவிட்டு போஸ்ட்மார்ட்டம் என்கிறப் பெயரில் வெள்ளைத்துணியைக் சுற்றிக் கட்டி கொடுத்து விடுகின்றனர்.
இதோடு நிறுத்தாமல் சிகிச்சைக் கட்டணம் என்கிறப் பெயரில் வேறு பல ஆயிரங்களை கட்ட சொல்லிவிடுகின்றனர்.ஆனால் உறுப்பை திருட்டுத்தனமாய் எடுத்தவர்களோ பல லட்சங்களுக்கு அவற்றை விற்று பணம் சம்பாதித்துக் கொள்கின்றனர்.
சதாசிவத்தின் மருத்துவமனை விருட்சம் விட்டுக் கிளைகளாகப் பரவமால் ஏன் இன்றுவரை ஒரே ஒரு மருத்துவமனையாக இருக்கின்றது என்பதற்கான காரணத்தை இங்கு வேலை பார்க்க வந்த சில மாதங்களிலேயே புரிந்துக் கொண்டான் நாகேந்திரன்.
அவரைப் பொருத்தவரையில் அவரது மருத்துவமனையை விரிவடைய செய்யவில்லை என்றாலும், சிகிச்சைக்காக என்று வரும் ஏழை மக்களுக்கு நல்ல முறையில் வைத்தியம் பார்த்தால் மட்டும் போதும் என்றக் கொள்கையுடனேயே இருந்தார்.
இதோடு அவரது கை ராசியும் சேர்ந்துக் கொள்ள, அவரின் பெயர் ஊரெங்கும் பரவ ஆரம்பித்து இருந்தது. பணம் இல்லாத மக்கள் கூட நம்பி இவரது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் ஆத்ரேயா மருத்துவமனை என்றால் ஒரு தனி மதிப்பே இருந்தது.
அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் அனுமதிக்க இடம் இல்லை என்றால் கூட “நாங்க கீழ கூடப் படுத்துக்குறோம் தாயி” என்று செவிலியிடம் கூறிவிட்டு அங்கேயே பாயை விரித்துப்படுத்தாலும் படுத்துவிடுவார்களே தவிர வேறொரு மருத்துவமனையை நாடி செள்ளமாட்டனர்.
எந்த ஒரு நோயாய் இருந்தாலும் ஆத்ரேயா சென்றால் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை மக்களிடையே பரவ ஆரம்பித்து இருந்தது.
அன்று ஒரு நாள் மட்டுமே சதாசிவத்தின் வீட்டிற்கு சென்றானே தவிர அதன் பின் அங்கு செல்லவில்லை. ஆனால் லலிதா எங்கு செல்கிறாள், என்ன செய்கிறாள் என்பதையெல்லாம் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்தான் நாகேந்திரன்.
அன்று லலிதாவின் பிறந்த நாளாக இருக்க ‘டீச்சர் ட்ரைனிங்’ கிளாஸ் எல்லாம் முடிந்ததும் அவளது நண்பர்கள் அவளிடம் பார்ட்டி கேட்டு நச்சரிக்க, பக்கத்தில் இருந்த ஐந்து நட்சத்திரவிடுதியோடு இணைந்த உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்றாள்.
ஒவ்வொருவரும் கையில் ஒவ்வொரு வகையான  கோப்பையாகவும், மின்மினி விளக்கு போல் தெரிந்த ஒளியில் குத்தாட்டம் ஆடுவதாகவும் இருக்க, இவள் நண்பர்களிடம் “வேண்டுவனவற்றை வாங்கிக் கொள்ளுங்கள் நான் பணம் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு போய் அங்கிருந்த சோபாக்கள் ஒன்றில் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
பாடல் ஓசை காதை கிழிக்க, பல வகையான பானங்களின் வாசனை அவ்விடத்தில்.
அப்பொழுது இவளது தோழியும் தோழனும் சேர்ந்து நடனமாடுவதை இவள் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்க “மேடம் ஜூஸ்” என்றபடி வந்தான் ஒருத்தன்.
இவளும் பார்வையை நண்பர்கள் இடத்தில் வைத்தபடி ஜூசை எடுத்து அருந்திவிட்டாள்.
நிமிடங்கள் நகர மயக்கத்தில் விழுந்தாள் லல்லி.
கூட்டத்தில் இருந்து வெளிவந்த ஒரு உருவம் அவளை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டு மறைந்துவிட்டது.

Advertisement