Advertisement

அத்தியாயம் – 8
ராஜநாதன் தேவசேனாவிடம் அவர் கலக்டராக இருந்த பொழுது நாகேந்திரன் எனப்படும் நரேனின் வாழ்க்கை பற்றி சேகரித்து விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க, வாழ்வில் முதல் தோல்வியால் தனது அறையில் கண்களை மூடி அமர்ந்திருந்த நாகேந்திரனின் மனதிலும் அவர் கடந்து வந்த பாதை தான் ஓடிக் கொண்டிருந்தது.
அறுபத்து ஒரு வருடத்திற்கு முன்பு…
சதாசிவம் அவரது வீட்டிற்கு வரச்சொல்லி இருந்த  மறுநாளே பையனை அழைத்துக் கொண்டு சதாசிவத்தின் வீட்டிற்கு சென்றார் நரேனின் அப்பா.
வாயிலில் இருந்த காவலாளியிடம் ஐயா வரச் சொல்லி இருந்தார்கள் என்று சொல்லி சதாசிவம் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை கொடுக்க காவலாளி கேட்டை திறந்து விட்டார்.
நரேனின் பார்வை அவ்வீட்டின் செழிப்பை காணாததைத் கண்டது போல் அளந்தது.
வீட்டின் கேட்டை கடந்து உள்ளே போய்க் கொண்டிருக்கும் பொழுது வீட்டின் முன் இருக்கும் தோட்டத்தில் கொஞ்சம் உள்ளே தள்ளி நான்கு நாற்காலிகள் போடப்பட்டு அதற்கு நடுவில் ஒரு மேசை இருக்க இவற்றிற்கு பின்னே அழகான வெண்ணிற ஊஞ்சல் ஒன்று இருந்தது.
அதில் அமர்ந்தபடி மகளுக்கு சோறூட்டி கொண்டும் தனது கணவனிடம் ஏதோ பேசியபடி சிரித்துக் கொண்டிருந்த சதாசிவத்தின் மனைவி வீட்டை நோக்கி யாரோ உள்ளே போவதைப் பார்த்துவிட்டு
“ யார் அங்கே போறது இந்தப் பக்கம் வாங்க” என்றார்.
சத்தம் வந்த திசை கேட்டு திரும்பிப் பார்த்த நரேனும் அவனது அப்பாவும் அங்கே சதாசிவத்தை கண்டவுடன் அந்த பக்கம் நோக்கி சென்றனர்.
சதாசிவத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பொழுதே நரேனின் தந்தையின் மனதில்
“தினமும் சரக்கு அடிக்கிற அளவுக்கு சம்பளம் வந்தா கூட போதும்” என்ற நினைப்பு இருந்தது.
கூடேப் போய்க் கொண்டிருந்த அவரது மகனுக்கும் பெரிய வீட்டைக் கண்ட அதிசயம் கண்களில் இருக்க, ஊஞ்சலில் சதாசிவத்திற்கும் அவரது  மனைவிக்கும் நடுவில் அமர்ந்து கையால் உணவை வாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீதும் பார்வை பதிந்தது.
அந்த சிறுவயதிலேயே “தனக்கு வீடும் இல்லை இப்படிக் கொஞ்சி சோறூட்ட தாயும் இல்லை” என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது அவனது மனதில். சிறுவயதிலேயே அனுபவிக்கும் ரணமெல்லாம் அவனது மனதில் முதிர்ச்சியை விதைத்துக்கொண்டே போனது.
அதுவும் அந்த சிறு பெண்ணிடம் இருக்கும் சந்தோஷம் அது நரேனின் மனதினுள் இதுவரை அனுபவித்திராத ஏதோ ஒரு புழுக்கத்தை உண்டாக்கியது.
தன்னை ஒருமுறைக் குனிந்துப் பார்த்துக்கொண்டான் அழுக்கு உடையும், அழுக்கு உடலும், எழும்போடு ஓட்டிப்போன தேகமும் அவனது மனதில் வலியை உண்டாக்க நிமிர்ந்து பார்த்தபொழுது எதிரே அமர்ந்து இருந்த அந்த சிறுபெண்ணின் பொலிவான முகமும், பூசிய  உடலும், விலை உயர்ந்த உடையும் அவனது மனதில் இன்னும் அதிக வலியைக் கொடுக்க
அதன் வெளிப்பாடாக அவனது பார்வை அந்த பெண்ணின் மீது வஞ்சகமாக படிந்தது.
தங்களுக்கு அருகில் வந்து விட்ட சிறுவனை பார்த்த அந்த சிறு பெண் தனது வயதை ஒத்த அந்த சிறுவனைப் பார்த்து  சிநேகமாக சிரிக்கவே நினைத்தாள்.
ஆனால் ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை, எனவே முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சதாசிவம் நரேனின் தகப்பனிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க அவரது கையை சுரண்டி அவள் அவளையே முறைத்துக் கொண்டிருந்த நரேனை சுட்டிக்காட்டினாள்.
சரியாக சதாசிவம் நரேனை பார்க்கும் பொழுது தனது முகத்தை அப்பாவியைப் போல் வைத்துக் கொண்டான் நரேன். இந்த மாதிரியான முக மாற்றங்களை முதல்முறையாக பார்த்த அந்த சிறு பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இங்க தோட்ட வேலை பார்த்துட்டு அப்படியே ஆஸ்பிட்டல்லயும் வேலை பாத்துக்கோ, நம்ம ஆளுங்க தங்க பின்னாடி ரூம்ஸ் இருக்கு, அங்க தங்கிக்கோ, உங்க ரெண்டு பேத்துக்கும் வயிறார சாப்பாடு போட்டு, அதோட உன் பையன படிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு, நீ எதுக்கும் கவலைப் படாத” என்றபடி பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நரேனின் தந்தையிடம் சதாசிவம் நீட்ட, பணத்தைப் பார்த்ததும் பளபளத்தது நரேனின் தந்தை முகம்.
‘இன்னைக்கு விலை உசத்தியான சரக்கா வாங்கி அடிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டார்.
அடுத்த நிமிடமே அவரது மனதில் வேறொன்றும் தோன்றியது,
‘நாம சரக்கு அடிக்கிறது டாக்டருக்கு தெரிஞ்சா, கண்டிப்பா வேலையை விட்டு தூக்கிருவாறு  அதனால கண்டிப்பா இங்க தங்க கூடாது’  என்று நினைத்தவர்
“ வேண்டாம் அய்யா நாங்க இப்போ இருக்குற வீட்லயே தங்கிக்கிக்றோம், நாங்க இருக்க வீட்ல என் மனைவியோட ஞாபகம் இருக்கு, அதனால நாங்க அங்கேயே தங்கி இருந்து வந்து வேலை பார்த்துகிட்டு போய்க்கிறோம்” என்றார் சோகமாக
இதைக் கேட்ட சதாசிவம் ‘மனைவி மேல் ரொம்ப பாசம் போல இவருக்கு’ என்று நினைத்தபடி
“சரிப்பா உன் விருப்பம்” என்றுவிட்டார்.
அவரிடம் விடை பெற்றுக் கொண்டவர் நேராக மகனோடு சென்ற இடம் மதுபானக்கடை.
அங்கே உயர்ந்த விலையுடைய இரண்டு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டவர் ஒரு கையில் மகனை பிடித்தவாறு மறு கையில் மது பாட்டில்களுடன் வீடு நோக்கி சாலையில் நடந்து கொண்டிருந்தார்.
இப்படியாக தினமும் காலை தோட்ட வேலைக்கு போய்விட்டு அதன் பிறகு மருத்துவமனை வேலைக்கு போய்விட்டு இரவு வந்து மதுபான கடைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டு… இத்தனை ‘விட்டை’யும் முடித்து மீண்டும் காலையில் எழுந்து நல்ல மனிதர் போல்  வேலைக்கு சென்று வருவார்.
இந்த நிகழ்வே தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்க நரேனின் மனதிலோ சதாசிவத்தின் பெரிய வீடும், அந்த சிறுபெண்ணை அவர்கள் கவனித்துக் கொள்ளும் முறையும் மீண்டும் மீண்டும் மனதில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது.
அவற்றையே நினைத்து நினைத்து தினம் தினம் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தான் அந்த 4வயது மொட்டுக்கு.
சரியான வழிநடத்தல் இல்லை, ஒழுங்கான உணவில்லை, சிறிய கனிந்த பார்வையைக் கூட அவனது தந்தையிடம் கண்டதில்லை. அன்பு. பாசம், பணம், ஆடம்பரம் என தனது வயது உடைய அந்த பெண்ணிற்கு கிடைத்தவை எல்லாம் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கியது அவனது மனது.
அப்படித்தான் ஒரு நாள் எப்போதும்  போல் வேலையை முடித்துவிட்டு மதுபானக்கடை சென்று மதுபானங்களை வாங்கி வாய்க்குள் புகுந்து விட்டு தள்ளாடியபடி மகனை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் நரேனின் அப்பா.
ரோட்டையே பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தான் நரேன்.
அவனது தந்தையும் ஏதோ போதையில் உளறிக்கொண்டே வர, பின் ரோட்டையே பார்த்துக் கொண்டு வந்த அவனின் கண்களுக்குப் பட்டது கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்த லாரி.
இதைப் பார்த்தவன் அவனது  தந்தையின்  பின்னால் நகர்ந்து சரியாக லாரி பக்கத்தில் வரவும் அவரைப் பிடித்து இருந்த கைய பட்டேன உதற அவனது தந்தை போதையில் ஏதோஉளறி கொண்டுக் தள்ளாடியபடி நடு ரோட்டில் போய் விழவும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு ரோட்டின் ஓரமாக வந்து நின்று கொண்டான்.
அவர் தள்ளாடி கீழே விழவும் லாரி அவர்மேல் வந்து மோதவும் சரியாக இருந்தது.
ரத்த வெள்ளத்தில் அவர் மிதக்க இவனது கண்களில் கண்ணீர் வெள்ளம்.
சில வினாடிகளில் மக்கள் கூட்டம் கூடிவிட கிடைத்த வண்டியில் அவரை அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றனர்.
சதாசிவத்தின் ஆத்ரேயா மருத்துவமனை தான் மிக அருகில் இருக்க அங்கே கொண்டு போய் சேர்த்தனர் நரேனின் தந்தையை.
அவருக்கு ட்ரீட்மென்ட் போய்க்கொண்டிருந்தது.
விஷயம் அறிந்து அங்கு வந்த சதாசிவம் வெளியே அமர்ந்து அனாதையாக அழுதுகொண்டிருந்த நரேனைப் பார்த்து
“உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை.. நல்லா இருக்கான் நீ அழாத நான் இருக்கேன்ல பார்த்துக்குறேன்” என்றார் அன்பாக அவனைத் தட்டிக் கொடுத்து.
அறையினுள்ளே சென்றவர்,  நரேனின் தகப்பனைப் பார்க்க, அவர்  மூக்கிலும் வாயிலும் குழாய்கள் பொருத்தப்பட்டு கிடக்க  சென்று பரிசோதித்தவர், செவிலிப்பெண்ணிடம் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள சொல்லி அறிவுரை வழங்கிவிட்டு வெளியே வந்தார்.
அப்பொழுதும் நரேன் அழுது கொண்டேதான் இருந்தான். அவனைப் பார்த்த அவர் அவனது கண்ணீரைத் துடைத்து விட்டு “என் வீட்டுக்கு வர்றியா? அங்க உன் கூட விளையாட லல்லி பாப்பா இருக்கா..” என்று  தாயை இழந்து இப்பொழுது தந்தையின் உடல் நலம் சரியில்லாமல் இருக்க வேதனையில் அனாதையாக வாடிக்கொண்டிருக்கும் குழந்தை என நினைத்து கேட்டார்.
உயிர் உருக அழுதுக்கொண்டிருப்பவனை பார்த்த பிறகும் விட்டு விட்டுப் போக அவருக்கு மனது வரவில்லை.
அவர் “வர்றியா?” என்று கேட்டதுதான் தாமதம் இதற்காகவே காத்திருந்தவன் போல் அவரின் கையைப் பற்றிக் கொண்டான்.
காரில் தன்னுடன் அவனை அழைத்து சென்றவர் காரைக் கொண்டுப்போய் வீட்டில் நிறுத்த, இவரது கார் சத்தம் கேட்டு கொ டாடி என்று அழைத்தபடி வெளியே ஓடிவந்திருந்தாள் இவரது அன்புமகள் லலிதா.
காரைவிட்டு இறங்கியவர் அவளை ஆசையாக தூக்கி கொஞ்சியபடி சுற்றிவந்து மறுபக்கம் இருந்த கதவைத் திறக்க, காரில் இருந்த நரேனைப் பார்த்து முகம் சுழித்து “பேட் பாய்” என்றாள் அவனை சாடியபடி,
“லல்லி வாட்ஸ் திஸ் இப்டிலாம் பேசக்கூடாது” என்றுக் கண்டித்தவர் “இறங்குபா” என்றார் நரேனைப் பார்த்து,
அதன்பிறகு மூவரும் உள்ளே செல்ல, லலிதா அவளது அன்புத் தந்தையிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசியபடி வந்தாள்.
ஹாலுக்கு வந்ததும் இவர்களை நோக்கி வந்த பத்மாவதி நரேனைப் பார்த்துவிட்டு “இவன் நம்ம தோட்டத்துல புதுசாவேலைபாக்குறஅந்த கிந்திக்காரன் பையன் தான?” என்றுக் கேட்க
“ஆமா பத்து” என்றபடி அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்தபடி நரேனின் தந்தை நிலைமையைப் பற்றி பத்மாவதியிடம் எடுத்துரைத்தார்.
எல்லாவற்றையும் கேட்ட பத்மாவின் மனம் கனக்க “சரிங்க இங்கயே இருக்கட்டும்… நம்ம லல்லிக்கு விளையாட்டு துணையாவும் ஆச்சு..” என்றபடி வேலைக்காரப் பெண்ணை அழைத்து நரேனை குளிக்கவைத்து உடுப்பு மாற்றி சாப்பாடுக் கொடுத்து தோட்டத்துக்கு கூட்டி வர சொன்னார்.
இவர்கள் மூவரும் சென்று தோட்டத்தில் பேச்சும் சிரிப்புமாக இருக்க, வேலைக்காரப்பெண் நரேனை குளிக்கவைத்து லலிதாவின் பழைய துணியைப் போட்டு, உண்ணவைத்து அழைத்து வந்திருந்தார்.
இவன் வரும்வரை வளவளத்துக் கொண்டிருந்த லலிதா இவனைப் பார்த்ததும் முகத்தை சுருக்கினாள். நரேனைப் பார்த்த சதாசிவம் “பாரு லல்லி, உனக்கு புது ப்ரென்ட் கெடச்சிருக்கான்.. போய் விளையாடுங்க பாக்கலாம்” என்றுக் கூற அவரது மடியில் இருந்து இறங்கிப் போய் பத்மாவதியின் மடியில் அமர்ந்துக்கொண்டாள்.
தன்னோடு சேர்ந்து மருத்துவமனைக்கு வந்தால் கூட அங்கு இருக்கும் குழந்தைகளிடம் உடனடியாக ஓட்டிப் பழக ஆரம்பித்துவிடும் லலிதா, நரேனைக் கண்டால் மட்டும் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று சதாசிவத்திற்கும் அவரது மனைவிக்கும் புரியவில்லை.
ஒருக்கட்டத்திற்கு மேல் நரேனுடன் விளையாடு என்று வற்புறுத்துவதையும் கூட விட்டுவிட்டார்கள்
இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் நரேன்.
இன்று அவனது வாழ்வில் பல மாற்றங்கள். இத்தனைப் பெரிய பங்களாவில் காரில் வந்து இறங்கி, அவனை ஒரு பெண் குளிக்கவைத்து, உடை உடுத்த வைத்து,சேரில் உட்கார வைத்து உணவுக் கொடுத்து என இவற்றைப் போன்ற எதையும் அனுபவித்ததில்லை இத்தனை நாட்களில்.
ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து, ஓலைவீட்டில், கொசுக்கடியில் இருட்டில் கிடந்தவனுக்கு இவையெல்லாம் மிகவும் புதிதாக தெரிந்தது.
அதிலும் இது எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே அனுபவித்திக்கொண்டிருக்கும் அவனது வயதையே ஒத்த லலிதாவைப் பார்த்தபொழுது அவனுக்கு பொறாமையும் வன்மமும் தலைக்கு ஏறியது. 
இரவு  நரேனிடம் வந்த சதாசிவம் “உன் அப்பாக்கு உடம்புல நல்ல முன்னேற்றம் தெரியுதுபா… சீக்கிரமாவே அவன் குணமாகிருவான்.. நாளைக்கு காலையில என் கூட ஹாஸ்பிட்டல்லுக்கு வர்றிய உங்க அப்பாவ பாக்கலாம்” என்று சொல்ல அவனும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தலை அசைத்தான்.
அடுத்த நாள் காலை தனது காரிலேயே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சதாசிவம் “நீ போய் பாரு.. நா வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு “அவன அவுங்க அப்பவ பாக்க அழைச்சுட்டுப் போங்க” என்று செவிலிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்துக் கொண்டார்.
நரேனை அவனது தந்தை இருக்கும் அறைக்கு அழைத்து சென்ற செவிலிப்பெண், அவரது உடல்நிலையைக் கவனித்துவிட்டு நரேனிடம் “நீ இருப்பா, நா பக்கத்து வார்ட் பேஷன்ட்ட பாத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேப்போனாள்.
செவிலி கதவை சாத்திவிட்டு சென்றதைக் கவனித்துக் கொண்டவன் படுக்கையில் அரை உயிராகப் படுத்திருக்கும் அவனது தந்தையைப் பார்த்தான். நேற்று சதாசவத்தின் வீட்டில் பார்த்த படத்தில் வந்த காட்சி நினைவில் வந்தது அவனுக்கு.
மீண்டும் ஒரு முறை கதவு பக்கம் பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு அதில் ஏறி நின்று அவனது தந்தையின் மூக்கில் இருந்த சுவாசக்குழாயை எடுத்துவிட்டுவிட்டு, மீண்டும் இறங்கி சேரை இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவனது தந்தையைப் பார்த்தான். மூச்சிற்காக தத்தளித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர்.
அதைக் கண்டவன் குடுகுடுவென கதவைத் திறந்து வெளியே ஓடி நின்றபடி “அப்பா… அப்பா” என்றுக் கத்தி அழ ஆரம்பித்தான்.

Advertisement