Advertisement

அத்தியாயம் – 7
“ஹாஸ்பிட்டலுக்குப் போய் கேசுக்கு சம்பந்தமானவர்களைப் பிடித்து உண்டு இல்லை என்று பண்ணவேண்டும்.. ஒரு தாயயும் குழந்தையும் பிரித்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் வேண்டும்.. இன்னும் எத்தனைப்பேர் இந்த மாதிரி கஷ்டப்பட்டார்களோ” என்று நினைத்தவளுக்கு மனமெல்லாம் வேதனை.
துஷ்யந்தனை இறக்கிவிட்டுவிட்டு மருத்துவமனை  நோக்கி வண்டியை எடுத்தப் போய்க் கொண்டிருக்குபொழுது வழியில் ஏதோ ஆக்சிடன்ட் ஆகி இருக்க அந்த வேலையயும் இவள் தலையில் எடுத்து போட்டுக்கொண்டு அதைக் கிளியர் செய்து, அதைக் கேஸாக பைல் செய்து எல்லாவற்றையும் முடித்துவிட்டு மணியைப் பார்த்தால் இரவு 12 மணி என்றுக் காட்டியது.
வசந்தா வேறு போனில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். “சரி மருத்துவமனைக்கு காலையில் சென்று பார்ப்போம்” என்று நினைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டாள்.’
வசந்தா தூங்காமல்,அவரது உடல் நிலையயும் கூட பொருட்படுத்தாது இவளுக்காக விழித்திருந்தார்.
“ஏழு மணிக்கு போன் பண்ணும் பொழுதே வந்துட்டு இருக்கேன்னு சொன்ன… மணி 12 ஆயிடுச்சு… கொஞ்சம் கூட ஹெல்த் மேல அக்கறை எடுத்துக்கவே மாட்டேங்குற தேவா…சரி சரி போய் ப்ரஷாகிட்டு வா… உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்” எனவும் தலையாட்டிவிட்டு தனது அறைக்கு சென்று உடைமாற்றி முகம் கழுவி சாப்பிட வந்து அமர்ந்தாள்.
“அப்பா மதி எல்லாரும் சாப்பிட்டாங்களாம்மா?” எனவும்
“எல்லாம் சாப்பிட்டோம்” என்று ஒரு சேரை அவள் பக்கம் போட்டு உட்கார்ந்தபடி சாப்பாட்டை எடுத்து அவளது  தட்டில் வைத்தபடி “காலைலயும் மதியமும் சாப்பிட்டியா?”  என்று அவளது தலையை பாசமாக வருடிக் கொண்டே கேட்டார் வசந்தா.
“சாப்பிடலை என்று சொன்னால் தாய் வருத்தப்படுவார்”என்று நினைத்து “ம்” என்றாள். அவள் உண்ண உண்ண அவளது தட்டை நிரப்பிக் கொண்டே இருந்தார் வசந்தா.
அதன் பின் எழுந்து சமையலறை சென்று பாலை சூடு பண்ணி பெரிய டம்ளரில் ஊற்றி அதில் பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ போட்டு கலக்கி கொண்டு வந்து கொடுத்தார்.
தனக்காக காத்து இருந்து, சாப்பிட உணவை வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தவரின் அன்பில் சாப்பிடும்போதே தேவசேனாவிற்கு கண்கள் கசிய ஆரம்பித்து இருந்தது. “அழுது விடுவோமோ” என்று நினைத்து திடம் படுத்திக் கொண்டிருந்தாள்.
முடிந்தும் முடியாமலும் தட்டில் இருப்பவற்றை உண்டு கொண்டிருந்தாள். இப்பொழுது  இவ்வளவு பெரிய டம்ளரில் பாலோடு வந்து நிற்கவும் “அம்மா போதும்மா.. ஆல்ரெடி நிறைய சாப்பிட்டேன் இப்போ பால் வேறயா” என்றுக் கேட்க
“ நீ நல்லாவே சாப்பிடல தேவா அதனாலதான் பால சூடு பண்ணிக் கொண்டு வந்தேன் இதை மட்டுமாவது குடிச்சிட்டு போய் தூங்கு” அவரது அன்பில் கரைந்தாள் தேவசேனா.
தான் பெற்ற பிள்ளைகளையே மனசாட்சி இல்லாமல் ரோட்டில் வீசி விட்டுப் போகும் பெண்கள் மத்தியில் தான் பெறாத பெண்ணின் மேல் இவ்வளவு பாசமா இருக்கிறாரே இவர் இவரது பாசம் கிடைக்க  நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுப் பாலைப்பருகியவாறு அவரைப் பார்த்து நினைத்தவள் கிளாசை அவரிடம் கொடுத்து விட்டு அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
தனதறைக்கு வந்து மெத்தையில் அமர்ந்து இருந்தவள் மதியம் மந்திரா குழந்தையைப் பார்த்ததும் சந்தோசத்தில் வார்த்தைக் கூட வராமல், சுற்றம் மறந்து உலகமே குழந்தை மட்டுமே மாறி நின்றவளின் சந்தோஷம் இப்பொழுது நினைக்கும் பொழுதும் தேவசேனாவினுள் இன்ப ஊற்றி உற்பத்தி செய்தது.
“எதற்காக குழந்தையைப் போய் கடத்தி இருக்கிறார்கள்?.. எதற்காக இருந்தாலும் சரி..இந்த வேலையை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்” என்று நினைத்தபடி காலை ஐந்து மணிக்கு போனில் அலாரம் வைத்துவிட்டு உறங்கிவிட்டாள்.
காலையில் இருந்து உண்ணாமல் கூட வெயிலில் நின்று வேலைப்பார்த்தது ஆழ்ந்த உறக்கத்தை அவளுள் விதைத்தது.
காலையில் அலாரம் அடிக்க எழுந்தவள் தயாராகி ராஜநாதனுடன் ஜாக்கிங் செய்துவிட்டு வந்தாள்.
அதன் பின் வந்து யோகா செய்துவிட்டு குளித்து முடித்து காக்கிச்சட்டையில் தயாராகி ஹாலுக்கு வந்தாள்.
ஹாலின் சோபாவில் அமர்ந்து ராஜநாதன் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
வசந்தா சமயலறையில் இருந்து உணவு பதார்த்தங்களை எடுத்து மேசையில் வைத்துக் கொண்டிருந்தார்.
தேவசேனாவும் ராஜனாதனும் உண்ணப்போக “அம்மா காப்பி” என்றபடி கண்ணை துடைத்துக் கொண்டே தூங்கி வழிந்தபடி வந்து நின்றாள் மதிவதனா.
“போய் பல்லு வெலக்கிட்டு வாடி… வந்துட்டா பல்லு கூட வெலக்காம” என்று அதட்டினார் வசந்தா.
அதட்டல் வந்தால் நிச்சயம் வசந்தா சொல்வதை செய்யும் வரை சோறு போடமாட்டார் என்று தெரிந்து வைத்திருந்த மதி மீண்டும் சிணுங்கிக் கொண்டே தனது அறைக்குள் போய்விட்டாள்.
தேவாவும் ராஜ நாதனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவசர அவசரமாக பல்லை விலக்கிவிட்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள் மதிவதனா.
“அப்பா இவள இன்னைக்கு கூட்டிட்டுப் போய் காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டு வந்துருங்க.. வீட்ல சும்மாவே இருந்து இருந்து சோம்பேறியா போறா” என்று சொல்ல சம்மதமாக தலையை அசைத்தார் ராஜ நாதன்.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க “சாப்பிடுங்க நா போய் பாக்குறேன்” என்றுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் வசந்தா.
வசந்தா சென்றுக் கதவைத் திறந்த பொழுது அங்கே ஒரு காவலர் நின்றுக் கொண்டிருந்தார் “டிசிபி மேடம்கிட்ட குடுக்க சொன்னாங்கம்மா” என்றார்.
அதை வாங்கிவந்து ஹாலின் டேபிளில் வைத்துவிட்டார் வசந்தா.
சாப்பிட்டு முடித்து வந்த தேவசேனா அந்த கவரை எடுத்துப் பார்த்தாள்.
உள்ளே ஒரு பேப்பர் இருக்க எடுத்துப் படித்துப் பார்த்தவளின் கண்களில் அதிர்ச்சி.
அவளுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்திருந்தது. அவளது வேலை திருச்சிக்கு மாற்றப்பட்டிருப்பதாக சொல்லியது அந்த காகிதம்.
“வேலைக்கு சேர்ந்து நாலு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்னப்பா இது ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு” என்று அவள் ராஜ நாதனிடம் சொல்ல அவரிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை.
“கடமைத் தவறாம, நியாயமா உண்மையா வேலைப் பாக்குறவங்க கவர்ன்மென்ட்ல எந்த போஸ்ட்ல இருந்தாலும் நிம்மதியா ஒரு மாசம் கூட வேல பாக்க முடியாது தேவா.. இது என் அனுபவத்தில கண்ட உண்ம” என்று சாந்தமாக சொன்னவர் “இப்படி உட்கார்” என்று சோபாவைக் காட்டியபடி “இப்போ எதாச்சும் புது கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்கியா?” என்றுக் கேட்டார். 
அவளும் அமர்ந்தபடி “ஆமாப்பா..” என்று ஆத்ரேயா மருத்துவமனையில் தொடங்கி நேற்று குழந்ததையைக் காப்பாற்றியது வரை சொல்லி முடித்தாள்.
எல்லாவற்றையும் கவனமாக கேட்ட ராஜ நாதன்.. ஆத்ரேயா மருத்துவமனையின் வரலாற்று பக்கங்களை அவள் முன் திறக்க ஆரம்பித்தார்.
கல்கத்தாவில் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறந்தவன் நரேன் காஷி.
மிகவும் கஷ்டப்படும் குடும்பம். நரேனின் அப்பா மூட்டைத் தூக்குவது போன்றக் கூலி வேலைகளை செய்வது, மருத்துவமனையில் உள்ள பிணங்களை எரிப்பதற்கு எடுத்துச் செல்வது என கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்தும் குடும்பத்தின் வறுமை நிலையை மட்டும் போக்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே துயரப்படும் நிலை. அதனால் தனது மனைவி, மூன்று வயது மகன் நரேன் என இருவரையும் அழைத்துக் கொண்டு பிழைப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார் நரேனின் அப்பா.
மாநிலம் விட்டு மாநிலம் வந்த பிறகும் அவர்களின் குடும்ப நிலை மட்டும் உயரவே இல்லை.. இருக்க இடம் இல்லை, ரோட்டிலும் நடைபாதைகளிலும் வசித்து வந்தனர்.
தமிழ்நாடு வந்து ஒரு வருடம் கடந்து இருந்த சமயத்தில் தான் சென்னையில் குப்பம் இருக்கும் இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
அப்பொழுது நரேனின் அப்பாவிற்கு ஒரு நல்ல மருத்துவமனையில் பிணவறையில் வேலை கிடைத்தது.
அங்கு வேலைப் பார்த்து முடித்தவுடன் நேராக மதுபானக் கடைக்கு சென்று வயிறு முட்டக் குடித்துவிட்டு வந்து அவரது மனைவியைப் போட்டு அடிப்பது மட்டுமே அவரது வேலையாக இருந்து வந்தது.
எப்பொழுதும் போல அன்றும் அவரது மனைவியை பிடித்துத் தள்ளிவிட்டதில் போய்க் குப்பற விழுந்தவர் தான் அப்பெண்.. எழவேயில்லை.
அவள் எழுந்திரிக்காமல் இருக்கவும் குனிந்து தூக்கப் பார்த்தார். அப்பொழுது பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரைப் பார்த்ததும் தான் அவருக்கு தெரிந்தது அவரது மனைவி இறந்துவிட்டாள் என்று.
இதையெல்லாம் கண்களில் கண்ணீரோடும் பயத்தோடும் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் நான்கு வயதுக் குழந்தை நரேன்.
பாயை விரித்து செத்துப் போய்க் கிடப்பவளைத் தூக்கி அதில் கிடத்திவிட்டு மகனை தூக்கிக் கொண்டு மீண்டும் மதுபானக் கடைக்குப் போய்விட்டார்.
மீண்டும் நிலை மறக்கும் போதை உள்ளே போய்விட, காலை விழிப்புத்தட்டியவருக்கு இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபாகத்திற்கு வந்தன.
பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனை எழுப்பிக் கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டார்.
சத்தமாகக் கதவைத் தட்டினார். இவரது சத்தத்தில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் வெளியில் வந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து கதவை இடித்து திறந்துக் கொண்டு உள்ளே போனவர் “ஐயையோ என் பொண்டாட்டி… போயிட்டாளே” என்று எல்லோருக்கும் கேட்கும்படிக் கதறி அழுதார்.
அக்கம் பக்கம் இருந்து வந்துப் பார்த்தவர்கள் எல்லாம் மாரில் அடித்துக்கொண்டு அழுபவரைப் பார்த்து அனுதாபப்பட்டனர்.
“நாலு வயசு பையன என்கிட்டவிட்டுட்டு போயிட்டாளே.. நா மட்டும் தனியா இவன எப்படி வளப்பேன்” என்றபடி நரேனைக் கட்டிக் கொண்டு அழுதார். எல்லாவற்றையும் கண்களில் அழுகையோடுப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.
ஆதரவாக இருந்த தாயும் போய்விட ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டுத் திரிந்தான் நரேன்.
அன்று நரேன் அவனது அப்பா வேலை செய்யும் மருத்துவமனைக்கு அருகே வந்திருக்க இவனைப் பார்த்துவிட்டு வாய்க்கு வந்தபடி அடித்துக் கொண்டிருந்தார் அவனது அப்பா.
அப்பொழுது இவர்களை கடந்து சென்றுக் கொண்டிருந்த கார்களுள் ஒன்று நின்றது. கார் காரில் இருந்து இறங்கி வந்தார் சதாசிவம்.
“ஏன்பா குழந்தைய போய் இப்படி போட்டு அடிச்சுட்டு இருக்கே..” என்று அவர் சத்தம் போட, அவரை உற்றுப் பார்த்தார் நரேனின் அப்பா.
அவருக்கு எதிரே நின்றுக் கொண்டிருந்த சதாசிவம் தான் அவர் வேலை செய்யும் ஆத்ரேயா மருத்துவமனைக்கு சொந்தக்காரர்.
கொலையே நடந்தாலும் பார்த்தும் பார்க்காதுப் போகும் மக்களுக்கு மத்தியில் சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டு மனிதாபிமானத்தில் காரை நிறுத்தி இருந்தார் அந்த மனிதர்.
சதாசிவம் யாரென்று அறிந்திருந்த நரேனின் தகப்பனார் “ஐயா.. நா உங்க ஆஸ்பத்திரியில தான் வேல செய்யுறேன்.. இவன் என் பையன்” என்று அழுதுக்கொண்டிருக்கும் சிறுவனைக் காட்ட
கிழிந்த சட்டை, ஒட்டிப்போன வயிறு, சூம்பிப்போன உடல் என்று இருந்தக் குழந்தையைப் பார்க்கவே பாவமாக இருந்தது சதாசிவத்திற்கு.
“உன்னோட பொண்டாட்டி எங்கப்பா?” என்றுக் கேட்டார் நரேனின் அப்பாவைப் பார்த்து
“அவ எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போய் சேந்துட்டாளுங்க ஐயா” என்றார் அவர் கண்களில் வராத கண்ணீரை துடைத்தபடி. அவர் இங்கு வந்த ஒரு வருடத்தில் தமிழ் அவருக்கு நன்றாகவே பேச வந்திருந்தது.
“சரி சரி… நாளைக்கு என்னைய வந்துப் பாரு.. வரும் போது உன் பையனையும் கூட்டிட்டு வா…” என்று ஒரு விசிட்டிங் கார்டை நரேனின் அப்பாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அந்த நான்கு வயது குழந்தையால் வருங்காலத்தில் அவருக்கும் அவர் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கும் வரப் போகும் நிலையைப் பற்றி அறிந்திருந்தால் காரை நிறுத்தியிருக்க மாட்டாரோ என்னவோ….
வருவாள்….

Advertisement