Advertisement

அத்தியாயம் – 6
“மேடம் யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி அதில் பாஸாகி டெல்லிக்கு ட்ரைனிங் போயிட்டாங்க” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொல்ல
“ஓ…ஓகே சார் நான் அவுங்கள பாத்துப் பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்னை வந்து சேர்ந்தான்.
வந்தவனுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவளது நினைவாகவே இருக்கவும் டெல்லி புறப்பட்டான். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு டெல்லியில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத்தங்கி போலீஸ் ட்ரைனிங் நடக்கும் இடம் விசாரித்து அந்த இடத்திற்கு சென்றும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. ஏனென்றால் “ட்ரெய்னிங் நடக்கும் இடத்திற்குள் வெளியாட்கள் யாரும் போக முடியாது.. உள்ளே இருப்பவர்களும் வெளியே வரமாட்டார்கள்” என்று இரண்டு நாட்களாக இவன் ட்ரைனிங் நடக்கும் இடத்தின் வெளியையே தவம் கிடப்பதைப் பார்த்து அந்த டீக்கடை முதலாளி சொன்னார்.
இதில் மனம் சோர்ந்துப்போய் சென்னை வந்தவன் தேவசேனா பற்றிய தகவல்களை சேகரித்துத் தருமாறு ஒரு டிடக்டிவ் ஏஜென்சியில் சொல்லிவிட்டு அவனது தொழிலைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். அதன் பின்னர் அவளது நினைவு அப்பப்ப வந்தாலும் அவள் ட்ரைனிங் முடித்துவரட்டும்…நேரே சென்று அவளைப் பார்த்து தன்னைப் பற்றியும் தன் காதலையும் அவளிடம் சொல்ல வேண்டும்’ என்று நினைத்து அவனது வேலையில் மூழ்கிப் போனான். சில மாதங்களில் அவள் பற்றிய தகவல்கள் அவனிடம் வந்துவிட அவற்றைப் படித்தவனின் முகத்தில் ஆச்சரியமே… “அட என் அத்த பெத்த ரத்தினமே” என்று நினைத்தவனின் முகத்தில் ஏற்கனவே மின்னிக் கொண்டிருந்த ஐநூறு வாட்ஸ் பல்பு  இப்பொழுது பிரகாசத்தில் ஆயிரம் வாட்ஸ்சாக  ஜொலிக்க ஆரம்பித்து இருந்தது.
நேற்று அவசர அவசரமாக  மீட்டிங் போவதற்காகப் புறப்பட்டு அவனது தம்பி துருவேந்திரனுக்காக  சோபாவில் அமர்ந்தபடி காத்திருந்தான்..
அவனது தம்பியோ அப்பொழுது தான் எழுந்து வந்து “குட் மார்னிங்டா” என்றான்.
இவன் பல்லைக்கடித்துக்கொண்டு “மீட்டிங் அட்டென்ட் பண்ண ஒன்பது மணிக்குள்ள அங்கே இருக்கணும்.. நீ இப்பதான் எழுந்து வர்ற… சரியான சோம்பேறிடா நீ… ஆபீஸ்சுக்கு கூட ஒழுங்கா வர்றதில்ல… நான் சொல்ற மீட்டிங் எதையும் அட்டென்ட் பண்றது இல்ல..” என்றுப்  பொரிந்துத் தள்ளிவிட்டு “இப்போயே டைம் ஆச்சு… நீ சீக்கிரம் வா நான் கிளம்பிப் போறேன்” எனவும்
“காலையிலேயே ஆரம்பச்சுட்டான்டா அட்வைச” என்று சொல்லியபடி
“நீ சிங்கிளா இருக்கறதுனால தான் என்னோட நிலைமை உனக்குப் புரியல… நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணு அப்ப என்னோட நிலைமை புரியும்” என்று அவனும் காய்ந்தான்.
உண்மையில் தேவசேனாவின் மீது காதல் கொண்டவனின் பெயர் துஷ்யந்தன் தான் துருவ் அல்ல.
இவர்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் ஒருவன் துஷ்யந்தன் இன்னொருவன் துருவேந்திரன். துஷ்யந்தன் ஏன் பெயரை மாற்றி சொன்னான் என்பதை பின்வரும் அத்தியாயங்களில் அறிந்துக் கொள்ளலாம்.
துருவுக்கு ஒரு நிமிடம் முன் பிறந்தவன் துஷ்யந்தன். இருவரும் உருவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.அழகன்கள். துஷ்யந்தன் தாடையில் எம்ஜிஆர், சரத்குமாருக்கு மாதிரி தாடையில் குழி இருக்கும். அது அவனுக்கு இன்னும் அழகு சேர்க்கும். ஆனால் துருவுக்கு அது இருக்காது. இதை வைத்துதான் வீட்டில் இருப்பவர்கள் துஷ்யந்தன் யார்? துருவ் யார் என்று கண்டுப்பிடிப்பார்கள்.
இவர்களின் சித்தப்பா முத்துராமனுக்கும் அவரது மனைவி சிவகாமிக்கும் குழந்தை இல்லை. அதனால் இரட்டைகளில் ஒருவனான  துருவ்வைபிறந்த ஒரு மாதக் குழதையில்  இருந்து சென்னையிலேயே முத்துராமனின் வீட்டில் தான் வளர்ந்தான். முத்துராமன் சென்னையில் தொழிலதிபராக இருக்கின்றார். துருவ் இங்கு வந்த சில வருடங்களுக்குப் பிறகு  கல்லூரிப் படிப்பிற்காக துஷ்யந்தனும் இங்கு வந்து துருவோடு சேர்ந்துக் கொள்ள, இருவரும் இவர்களின் சித்தப்பா வீட்டில் தங்கிப்  படிப்பை முடித்து வெளிநாடு போய் பிசினஸ் பற்றிய மேற்படிப்பு படித்துக் கொண்டே அதிலிருக்கும் நுணுக்கங்களையும் வெளியில் போய் வேலை செய்து கற்றனர்.
வெளிநாடு சென்று தொழில் கல்வி படித்துக்கொண்டே அதில் உள்ள நுட்பங்களை கற்பதற்காக அங்குள்ள கம்பெனிகளில் வேலை செய்தனர் இருவரும், அப்போது அங்கு வேலை செய்த இந்திய தமிழ் வம்சாவழியைச் சார்ந்த தமிழினி என்பவள் மேல் காதல் கொண்டான் துருவேந்திரன்.
முதலில் அவளைப் பிடித்ததற்கு காரணம் அவளின் பெயர். என்ன தான் அவள் முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுப் போய் குடியுரிமை வாங்கி அங்கு வசித்து வந்து கொண்டிருந்தாலும் அவர்களின் நாட்டுப்பற்றும்,மொழிப்பற்றும்,தமிழ் மண்ணில் வைத்த பாசமும் இன்று வரை அவர்களுக்கு குறையவில்லை. அதனால் தன் வாரிசுகளுக்கு சுத்தமான தமிழ் கற்றுக்கொடுத்து அவர்களது குழந்தைகளுக்கும் சுத்தத் தமிழ் பெயர்களையே வைத்து வளர்த்தனர்.
சொந்த மண்ணை மறவாத அவளின் பாட்டி அவளுக்கு தமிழினி என்று பெயர் வைத்ததாக அவளின் அப்பா சொன்னார் என்றாள் அவனிடம்.
தமிழினி அழகி,  புத்திசாலி.
வேலை நிமித்தமாக அவளிடம் பேச ஆரம்பித்தவன் பழகப்பழக அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதே உண்மை. அவள் இல்லாமல் அவன் இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது அவனின்னிலை. அவளும் அப்படித்தான் அவன் மேல் பித்தாய் இருந்தாள்.
துருவேந்திரன்  படிப்பு முடிந்ததும் “நான் இந்தியா போயிட்டு  ஃபேமிலிட்ட பேசிட்டு உன்ன பொண்ணு கேக்குறேன்” எனவும்
‘போனால் வரமாட்டான் தான் ஏமாந்துப்போய் விடுவோம்’ என்று நினைத்து
“நீங்க வர மாட்டீங்க” என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டாள் தமிழினி. அவளை சமாதானப்படுத்தி அவளின் வீட்டுக்குப் போகுமாறு அனுப்பி வைத்துவிட்டு அவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான். காலையில் துருவேந்திரனுக்கு போன் ஒன்று வந்தது. 
                    
தமிழினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவளை இப்பொழுது மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் அவன் பெயரையே சொல்லி புலம்பிக் கொண்டிருப்பதாகவும் தமிழினியின் தாய் போனில் பேசினார். இதைக்கேட்டு அதிர்ந்து விரைந்து மருத்துவமனைப்போய் அவளைப் பார்த்தவன் அவளை நன்றாகத்  திட்டிவிட்டு
“என் மேல் நம்பிக்கை வெய் நான் ஊருக்குப் போயி பேசிட்டு குடும்பத்தோட வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறே” என்று சொல்ல
“இல்ல இல்ல நீங்க என்னைய விட்டுட்டு போயிடுவீங்க” என்று பைத்தியம் பிடித்தவள் போல் கத்த ஆரம்பித்துவிட்டாள் தமிழினி.
சட்டென்று  விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அவளின் கையில் போட்டு ‘நீதான் எனக்கு மனைவி’ என்றான்.
அப்போதும் அவள் அவனை முழுதாக நம்பாமல் போக கடைவீதிக்குச் சென்று  மஞ்சள் கயிறு ஒன்று வாங்கி வந்து அவளின் தாயையும் தந்தையையும் முன்னிறுத்தித் ஐசியூவில் இருந்தவளுக்கு தாலி கட்டினான். தன் குடும்பத்தை ஊருக்குப் போய் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து தான் அதைப் பண்ணினான். அவளை கல்யாணம் பண்ணியதும் அவன் இருக்கும் வீட்டிற்கு வந்தவன் துஷ்யந்தனிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல
“ நாம எதுக்கு இங்க வந்தோம்? நீ என்னடா பண்ணி வச்சிருக்கே?” என்று துஷ்யந்தன் குதி குதி என்று குதித்தான்.
நிலைமையை சொல்லி அவனை சமாதானப்படுத்தி “நீதான்டா வீட்டுல பேசணும்” என்று விண்ணப்பம் விடுத்து துஷயந்தனை சம்மதிக்கவும் வைத்தான். அதன் பின்பு தமிழினியின் உடல்நிலை சரியானவுடன் அவளையும் கூட்டிக்கொண்டு இந்தியா வந்து சேர்ந்தனர் மூவரும்.
இவர்களின் தந்தை பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு இவர்கள் இருவரைத் தவிர இன்னும் இரண்டு ஆண்கள், 5 பெண்கள் என இவர்களோடு சேர்த்து ஒன்பது மக்கள் பெரிய குடும்பம்.
ஐந்து பெண் பிள்ளைகளையும் தன் சொந்தத்திலேயே கொடுத்து, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் மனைவியின் சொந்தத்திலேயே எடுத்து அவரது கிராமத்தில் தலைவராக கௌரவமான நிலையில் இருக்கிறார்.
துஷ்யந்தன் வந்து துருவேந்திரனின் திருமண விசயத்தை சொன்னதும் “தன் பையன் வெளிநாடு படிக்கப்போனவன் அங்குக் கூட வேலைப்பார்த்தபெண்ணை கூட்டிக்கொண்டு வந்து விட்டான்” என்று தெரிந்தால் பெண் எடுத்தவர்களும் பெண் கொடுத்தவர்களும் சொந்தங்களும் இன்னும் ஊர் மக்களும் என்ன நினைப்பார்கள்? என்று நினைத்து துருவை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
அதனால் துருவையும் அவனது மனைவி தமிழினியையும் சென்னையில் இருந்த சித்தப்பா வீட்டில் தங்க வைத்து தானும் அங்கிருந்தபடியே பிசினஸ் பண்ணி துருவையும் அதில் இணைத்துக் கொண்டான் துஷ்யந்தன். சென்னை வந்ததும் துஷ்யந்தன் தனக்கு சொந்தமாக ஒரு பங்களா வாங்கிவிட்டு அதில் போய் வசிக்கப்போவதாக சொல்ல முத்துராமனும், சிவகாமியும் துஷ்யந்தனை வற்புறுத்தி தங்களோடே இருக்க வைத்துக் கொண்டனர். அவன் மறுத்தபொழுது “துருவ்வும் சரி நீயும் சரி.. ரெண்டு பேருமே என்னோட பசங்கடா” என்று அணைத்துக் கொண்டார்.
துருவேந்தனுக்கு இப்பொழுது நான்கு மாதப்பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தை தான் இரவு முழுவதும் அஜீரண கோளாறால் அழுது கொண்டே இருந்தது. அதை சமாதானம் பண்ணி மருந்து கொடுத்து உறங்க வைக்கவே காலை ஐந்து மணியாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் அதற்குமேல தான் தூங்கினான்.
அதனால் தான் எட்டு மணிக்கு மேல் எழுந்து வந்தான் துருவேந்திரன். வந்தவுடன் துஷ்யந்தன் காயவும் தனது அறைக்கு சென்றுக் குளித்து துணி மாற்றி வருவதற்குள் துஷ்யந்தன் கிளம்பிவிட்டான்.
சாலையில் காரில் போய்க் கொண்டிருந்த துஷ்யந்தனின் காருக்கு முன்னால் போலீஸ் ஜீப் ஒன்று போக பின்னால் போய்க் கொண்டிருந்தான் இவன்.
முன்னால் போன ஜீப் திடீரென்று நடுரோட்டில் பிரேக் அடித்து நின்றது.
ஏற்கனவே வீட்டில் துருவ் வேறு தாமதமாக எழுந்து வந்ததற்கு காய்ந்து விட்டு வந்தவனுக்கு இந்த சம்பவம் இன்னும் அதிகமான எரிச்சலை ஏற்படுத்தியது.
முன்னே இருந்து ஜீப்பைப் பார்த்துக்கொண்டே “இந்த கவர்மெண்ட் ஜாப்ல இருக்கவங்களுக்கு திமிர் தான்.. அதுவும் இந்த போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்களுக்கு இன்னும் ஜாஸ்தியா இருக்கும் போல…  பப்ளிக்ல வண்டிய அங்க நிப்பாட்டாதிங்க இங்க நிப்பாட்டாதிங்கன்னு ரூல்ஸ் போடுவாங்க.. ஆனா அவங்க மட்டும் ஃபாலோ பண்ண மாட்டாங்க” அவனது மீட்டிங்கிற்கு வேறு டைம் ஆக மனதில் புலம்பிக்கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான்.
அப்பொழுது ஜீப்பில் இருந்து தேவசேனா இறங்கிவரப்பார்த்தவன் வெகுநாட்கள் கழித்து அவளைப் பார்த்ததும், அதுவும் சென்னையில் பார்த்ததும் ஆச்சரியத்தில் சுற்றம் மறந்து மெய்மறந்து இருந்தான் அப்பொழுது இவன் பின்னேயே  ராயல் என்ஃபீல்டில் வேகமாக வந்திருந்த துருவ்.. துஷ்யந்தன் காரிடம் வந்து ஒட்டி நின்றபடி
“என்னைய எப்படி எப்படி திட்டிட்டு அரக்கப்பரக்க ஓடி வந்த? அதும் என்னைய விட்டுட்டு வேற வந்த.. இப்பப்பாரு நானும்  உன் கூடவே வந்துட்டேன்ல” என்று அவன் தன்னை தானே மெச்சிக்கொள்வதுதை எல்லாம் துஷ்யந்தன் கவனிக்கவே இல்லை.
அங்கு தேவசேனா இறங்கிப் போய் நாடு ரோட்டில் நின்று அழுதுக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு நிற்பதையே மின்னும் கண்கலோடுப் பார்த்துக் கொண்டிருந்தான் துஷ்யந்தன்.
அவள் குழந்தையை சமாதானப் படுத்திக் கொண்டே “யார் குழந்தையை இப்படி வண்டிங்க வந்துப்போகும் இடத்தில விட்டுருக்குறாங்க”என்று நினைத்துக் கொண்டே குழந்தையை கையில் வைத்து சமாதானப்படுத்தியபடித் திரும்ப அக்குழந்தையின் தாய் ஓடி வந்து வாங்கிக் கொண்டு
“ரொம்ப நன்றி மேடம்” எனவும் “குழந்தைய இப்படித்தான் ரோட்டில் விடுவீங்களா?” என்று அவருக்கு பல அட்வைஸ்களை வழங்கி விட்டு ஜிப்பை எடுத்தாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த துஷ்யந்தனின் மூளையில் திடீர் யோசனை ஒன்று வந்து இறங்கியது.
துருவிடம் தான் ஓட்டி வந்தக்கார் கீயைக் கொடுத்துவிட்டு “நீ ஆபீஸ் போ.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு நான் பாத்துட்டு வந்துடறேன்” என்று துருவேந்திரன் அமர்ந்திருந்த ராயல் என்பீல்டை விட்டு இறங்கச் சொல்லி பரபரத்தான்.
“ திடீரென்று இவனுக்கு என்ன ஆயிற்று?” என்பது போல் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே “நீ இன்னைக்கு ஒரு மார்க்கமாதான்டா இருக்கே” என்று விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் துருவ்.
அவன் போனதும் ராயல் என்ஃபீல்டை எடுத்துக்கொண்டு தேவசேனா போகும் ஜீப்பை பாலோ செய்தான் துஷ்யந்தன்.
சில நிமிடங்களில் ஜீப்  போய் டிராபிக்கில் மாட்டிக்கொள்ள ஜீப் அருகே  தன் வண்டியை நிப்பாட்டி தன்னை அறிமுகப் படுத்தும் விதமாக ஜீப்பின் கண்ணாடியில் ஹார்டின் வரைந்து அவளை சீண்டி விட்டு விட்டு பறந்தான். அதே மாதிரி ரிஷப்ஷனிலும் அந்த குட்டிப்பெண்ணிடம் பேப்பரில் குந்தாணி என்று எழுதிக் கொடுத்து விட்டு மறைந்து நின்று அவளுக்கு தன்னை நினைவு இருக்கிறதா என்று அவளின் முகத்தை ஆராய்ந்தவனுக்கு அவளது முகத்தில் இருந்து எதுவும் தெரியாமல் போக ஏமாற்றத்தில் கிளம்பிவிட்டான்.
இப்போது காலையில் கூட பிசினஸ் விஷயமாக தன் நண்பனைப் பார்த்துப் பேசி விட்டு வரும் பொழுது தான் தேவசேனா செக்போஸ்ட்டில் அத்தனை ஆண் காவலர்கள் நடுவில் கம்பீரமாக நின்று ஆளுமையுடன் அவர்களை வேலை வாங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு “நம்ம ஆளு எங்க நின்னாலும் கெத்து தான்..” என்று தன்னுள் பேசிக் கொண்டே வந்தவனின் கவனம் சிதறி நடுரோட்டில் கிராஸ் பண்ணி கொண்டு இருந்தவனை பார்த்து சடன் ப்ரேக் போட துஷ்யந்தனின் காருக்குப் பின்னால் வந்த லாரி அவனது வண்டியின் பின் பக்கத்தை  பதம் பார்க்க,ரோட்டில் விழுந்தவனை அடித்து விட்டோமோ என்றப் பதட்டத்தில் இருக்க, அதன் பின் நடந்தவை எல்லாம் இவனுக்கு சாதகமாக முடிந்தது.
இப்பொழுது அவளுடன்  ஒரு பயணம் என்று நினைக்கும் பொழுதே சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.
தன்னைப் பார்வையாலையேப் பருகியவாறு வருபவனைப் பார்க்கையில் தேவசேனாவிற்கு எரிச்சலாக இருந்தது. ரோட்டில் கவனத்தை செலுத்தியபடி
“நீங்க எங்க இறங்கனும் மிஸ்டர்?” என்றுக்கேட்டாள்.
கனவுலகில் இருந்து களைந்தவன் “ஏங்க இறங்குரதப் பத்தி பேசுறீங்க,… நீங்க ம்ன்னு மட்டும் சொல்லுங்க உங்க கூட எங்க வேணும்னாலும் வரத் தயாரா இருக்கேன்” என்று அவளுடன் பேச்சுக் கொடுக்கும் ஆவலில் முகத்தை அப்பாவியாக  வைத்துக்கொண்டுப் பேச
இவன் பக்கம் திரும்பி முறைத்துவிட்டு மறுபடியும் ரோட்டை பார்த்தவாறு ஏதோ சொல்ல வாய்  எடுக்க அவளின் போன் அலறியது.
  போன் திரையின் ஒளியில் வரும் நம்பரை பார்க்க “அப்பா” என்று வரவும் உதட்டில் சிறு புன்னகையோடு ஆன் பண்ணி “ஹலோ அப்பா” என்றாள். அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ “நீங்க அம்மாகிட்ட குடுங்க.. நான் பேசுறேன்” எனவும் அவளது தாய் பேசினார்.
“ இப்போ கொஞ்ச நேரத்துல வந்துருவேன்மா நான் காலைல வரும்போது நீங்க எல்லாரும் தூங்கிட்டு இருந்தீங்க.. சோ தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைச்சேன்.. 9 மணிக்கு மேல கால் பண்ணலாம்னு நெனச்சுட்டு இருந்தேன் அப்புறம் வேலை வந்துருச்சா அதில் மறந்து போயிட்டேன்” என்று சொல்லிவிட்டு இன்னும் சில வினாடிகள் பேசியவள் போனை அணைக்க அப்பொழுதும் அவன் பார்வை அவள் மேல்தான் இருந்தது.
இவள் பேசாமல் இருக்கவும் அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளந்தவன்
“அரேபியன் குதிரைடா” என்று பெல்ட் போட்டு தொப்பை இல்லாமல் நிமிர்ந்து இருக்கும் இடுப்பை பார்த்தவாறு நினைத்தவன் வாய்த்தவறி வெளியிலும் சொல்லிவிட்டான்.
“ ஐயையோ மைன்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு வெளியில் சொல்லிட்டோமே” என்று நினைத்தபடி அவன் அவளது முகம் பார்க்க திரும்பாமலேயே ரோட்டைப் பார்த்தவாறு
“ அரேபியன் குதிரைய நீங்க பார்த்திருக்கீங்களா? மிஸ்டர்” எனவும்
“துஸ்..”என வந்தவன்  “துருவ்” என  தன் பெயரை எடுத்துக்கொடுத்து “இரண்டு வருடங்களுக்கு முன் வரை பார்த்ததில்லை ஆனா இப்போ இந்த நிமிஷம் பாத்துக்கிட்டு இருக்கேன்” எனவும் அவளுக்கு பொறுமை பறந்துபோய்க் கொண்டிருந்தது.
இவள் கல்லூரி படிக்கும் பொழுது எத்தனையோ ஆண்கள் இவளது அழகில் மயங்கி இவள் பின்னாடி சுற்றி இருக்கிறார்கள். ஆனால் இவளின் ஒற்றை கனல் பார்வையில் பயந்து இவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விடுவர்.. “ஒரு வார்த்தை பேசாமல் பார்வையாலேயே ஓட வைக்க முடியுமா?” என்று இவளைப் பார்த்து சக மாணவிகள் மாணவர்கள் காதுபடவே பேசுவது உண்டு.
அப்படிப்பட்டவளை அசராமல் பார்த்து வைத்தான் இந்தக் கள்வன்.
குழந்தையை மீட்பதற்கு இவனும் ஒரு காரணம் என்ற ஒரே காரணத்திற்காக பொறுமையாக அவனது பார்வை பேச்சு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தாள். இல்லை என்றால் இந்நேரம் ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்து டிரீட்மென்ட் எடுக்கும் அளவிற்கு அவனை நொறுக்கி எடுத்து இருப்பாள் என்பது திண்ணம். தன் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு
“எங்கே இருக்கு சார் உங்க வீடு?” என்று மறுபடியும் அழுத்தமாக கேட்க
“ நம்ம வீடு” என்று ஆரம்பித்து கோபத்தில் சுழிக்கும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே  அவன் சென்னையில் வாங்கி இருக்கும் புதிய வீட்டின் அட்ரஸ் சொல்ல, சில நிமிடங்களில் அந்த வீட்டின் கேட் முன்னால் போய் நிப்பாட்டி அவன் இறங்கியதும் அவ்வீட்டின் செழுமையை அவள் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து
“முத முறையா வர்றிங்க…வாங்க ஸ்வீட் சாப்பிட்டு போலாம்” என்று சொல்ல
இவள் அவன் பக்கம் திரும்பாமலேயே “நோ தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு பறந்து விட்டாள்.
வருவாள்…

Advertisement