Advertisement

அத்தியாயம் – 4
“வாட்?” என்று தேவசேனா கத்தியதும் “என்ன ஆச்சோ?” என்பது போல் வசந்தாவும் மதிவதனாவும் பார்க்க, ராஜ நாதனின் முகம் மட்டுமே சாதாரணமாக இருந்தது. அவர் கலக்டர்ராக இருந்த காலத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஆமா மேடம்.. நாங்களும் இவளோ நேரமா விசாரிச்சோம்… ஆனா மந்திரான்ற பேர்ல யாருமே இங்க அட்மிட் ஆகலைன்னு அடிச்சு சொல்றாங்க” என்றார் வளவன்.
இதைக் கேட்ட தேவசேனாவின் புருவங்கள் சுருங்கின.
“அப்படி என்றால் கிஷோரும், மந்திராவும் பொய் சொல்கிறார்களா? ஆனால் எதற்காக… அதுவும் அவ்வளவு பெரிய பிரபிலமான மருத்துவமனை மேல் எதற்காக பழி போட வேண்டும்” என்று யோசித்தவள், கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தபடி “சரி இப்போயே ரொம்ப லேட் ஆச்சு.. நீங்க வீட்டுக்கு போங்க..” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.
“என்ன தேவா என்னாச்சு?” என்று வசந்தா பதட்டமாகக் கேட்க
“அது ஒன்னும் இல்லம்மா.. ஜஸ்ட் கேஸ்” என்றவள் “கிளம்பலாம்” என்று சொல்ல
“அக்கா நா உன்கூட வருவேன்… ஜீப்ல” என்று துள்ளிக் குதித்தாள் மதிவதனா.
“சரி தேவா.. நீயும் மதியும் ஜீப்ல வந்துருங்க.. நானும் அம்மாவும் கார்ல வர்றோம்” என்று ராஜநாதன் கூறிவிட
தேவாவும் மதியும் தேவாவின் ஜீப்பில் ஏறிக்கொள்ள ஜீப் கிளம்பியது.
வழியெல்லாம் மதி கொசுவின் ரீங்கராமாக தொணதொணத்துக் கொண்டே வர, தேவசேனாவின் கைகள் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தாலும் அவள் மதிவதனாவின் பேச்சை கவனிக்காமல் ஏதோ யோசனையிலேயே  சுழன்றுக் கொண்டிருந்தாள்.
தன் பேச்சைக் கவனிக்காத அக்காவின் மீது கோபம் வர அவளின் காதருகே சென்று “ஊ…” எனக் கத்தினாள் மதி.
இதில் யோசனையில் இருந்து வெளிவந்த தேவசேனா ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்தவாறு இன்னொரு கையால் காதை குடைந்தவாறு “ஏய் வாலு… இப்போ எதுக்கு காதுகிட்ட வந்து கத்துனே?” என்று தேவா கத்த
“பின்ன என்னக்கா நா இங்க ஒருத்தி உயிரக் குடுத்துக் கத்திட்டு வர்றேன்.. நீ கனவுல யார் கூடவோ டூயட் பாடிட்டு இருக்கியே” என்று சலித்துக் கொள்வது போல் மதி பேச
“உனக்கு வளர வளர வாயும் நீளுது..” என்று சொன்ன தேவா பேச்சை மாற்றும் பொருட்டு “சரி காலேஜ் பத்தி கேட்டுருந்தேன்ல.. என்ன முடிவு பண்ணிருக்கே?” என்றுக் கேட்டாள் அதட்டலாக நீங்க அப்பா இரண்டு பேரும் பொதுவாழ்வில் மக்களுக்கு சேயும் சேவைகள பார்த்து நானும் எதாவது செய்யனும் சோ அதனால் 
“எம்பிபிஎஸ்” என்றாள் ஆர்பாட்டமாக
“ஹ்ம்ம் குட் சாய்ஸ்.. சரி உனக்கு எந்த காலேஜ் வேணும்னு சொல்லு… போய் அப்ளை பண்ணிட்டு வந்துடலாம்” என்று தேவா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வீடு வந்திருந்தது.
ராஜநாதன் காரும் வந்திருக்க எல்லோரும் குட் நைட் சொல்லிவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.
அறைக்கு வந்தவள் போட்டிருந்த யூனிபார்மை மாற்றிவிட்டு வந்து கட்டிலில் பொத்தென விழுந்தாள்.
அவளுக்கு முன் சுவரில் இருந்த கடிகாரம் நேரம் பன்னிரண்டு முப்பது எனக் காட்டிக் கொண்டு இருந்தது.
கண்களை மூடியவளுக்கு தூக்கம் வரவில்லை . மாறாக கதறி அழுத மந்திராவின் முகமே வந்தது. விலுக்கென எழுந்து அமர்ந்தாள்.
மந்திராவின் கண்களில் அவள் கண்டது உண்மையை தான். மந்திராவினுள் இருந்து வெளிப்பட்ட வலி ஒரு தாய் தனது குழந்தையின் பாதுகாப்பின்மையை உணரும் பொழுது வெளிப்படும் வலி தான் என்று தேவாவின் மனது அடித்துக் கூறியது.
அப்படி இருக்கும் போது மருத்துவமனையில் இருந்து ஏன் இப்படி ஒரு தகவல் வர வேண்டும்?
மேலும் மேலும் யோசிக்க குழப்பமே  மிஞ்சியது .அவளின் தூக்கமோ பறந்தோடி போயிருந்தது.
நேரம் செல்ல செல்ல மந்திராவின் அழுகையும், வளவனின் சொற்களுமே அவளது மனதை வட்டமிட்டபடி இருந்தன.
எழுந்து பால்கனியில் வந்து நின்றுக் கொண்டாள்.
இந்த பிரச்சனையைப் பற்றி யோசித்தபடியே சில நிமிடங்கள் நடந்தவள் “நாளைக்கு வளவன கூட்டிட்டுப் போய் நாமளே அந்த ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சிடலாம்” என்று நினைத்தவள் எடுத்த முடிவோடு உறங்கலாம் என்று வந்து கட்டிலில் படுத்தாள்.
அவள் படுத்து ஒரு பத்து நிமிடங்கள் கூட இருக்காது அவளது போன் அடித்தது.
யாரேன்றுப் பார்த்துவிட்டு அட்டென்ட் செய்து காதுக்கு கொடுத்தவள் “சொல்லுங்க ஏட்டையா” என
“மேடம்.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம ஆபிஸ் லேண்ட்லைன்க்கு ஒரு கால் வந்துச்சு மேடம்.. ஒரு பொண்ணு பேசிச்சு மேடம்… நீங்க தேடிட்டு இருக்க குழந்தைய கர்நாடகா எடுத்துட்டுப் போகப் போறாங்க.. சீக்கிரமா போனா காப்பாத்திடலாம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு மேடம்” என்று ஏட்டையா சொல்ல
தேவசேனாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறந்து போய்விட்டது.
ஏட்டையா கூறியதை எல்லாம் நன்றாக கிரகித்தவள், சில வினாடிகள் யோசித்துவிட்டு “சென்னைல இருந்து கர்நாடகா போற எல்லா ரூட்டையும் க்ளோஸ் பண்ணுங்க… எல்லா ரூட்லையும் செக் போஸ்ட் போட்டு செக் பண்ண சொல்லுங்க… நாம செக் பண்ணாம ஒரு வண்டியும் சென்னை எல்லைய தாண்டி கர்நாடகா போகக் கூடா…” என்று கடகடவென கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தவள் ஒரு வினாடி அமைதியானாள்
“ஒருவேள ஏட்டையாக்கு வந்த காலே போலிஸ் ஓட கவனத்த வேறதுல திருப்புறதுக்காக இருந்தா?” என்று யோசித்தவள் “இல்ல ஏட்டையா.. சென்னை முழுக்க எல்லா ரூட் செக் போஸ்ட்டையும் அலர்ட் பண்ணுங்க.. சென்னைல இருந்து ஒரு வண்டி கூட நாம அனுமதிக்காம வெளிய போகக் கூடாது.. அதோட எதுக்கு இருந்தாலும் அந்த கிஷோருக்கும் கால் பண்ணி என்ஹெச் போர்க்கு வர சொல்லிருங்க” என்றுவிட்டு போனை வைத்தவள் கடகடவென குளித்துவிட்டு யூனிபார்மை மாட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீடே இருளில் மூழ்கி இருந்தது..
“அம்மா அப்பா தூங்கிட்டு இருப்பாங்க.. அப்பறமா சொல்லிக்கலாம்” என்று நினைத்துவிட்டு சென்று தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.
ஜீப் அந்த காலை இருளில் சீறிப் பாய்ந்துக் கொண்டு சென்றது.
தேவசேனா நாலாம் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து இறங்கிய பொழுதே வளவன் அங்கு இருந்தார். அவரோடு இன்னும் சில போலிஸ் ஆபிசர்ஸ்சும் இருந்தனர். இவளைக் கண்டதும் எல்லோரது முகத்திலும் ஒரு சிறு அதிர்ச்சி தென்பட்டது உண்மை. காரணம் அவள் வருகிறேன் என்று சொல்லி இருந்தாலும், இவ்வளவு அதிகாலையில் அவள் வரமாட்டாள்.. என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.. இவளைக் கண்டதும் வளவனும் மற்றவர்களும்  சல்யூட் வைக்க அதை தலை அசைத்து ஏற்றுக் கொண்டவள், “வளவன் நீங்க என்ஹெச் சிக்ஸ்சுக்கு போங்க.. நா இங்க பாத்துக்குறேன்” என்றுவிட்டாள்.
அவரும் சென்றுவிட சில நிமிடங்கள் நகர்ந்தன.
ஒரு பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும் அங்கிருந்த ஒரு காவலரிடம் “இங்க பாத்துகோங்க.. நா வர்றேன்” என்றுவிட்டு போய் ஜீப்பை எடுத்து அடுத்த செக்போஸ்ட்டுக்கு போனாள். இவ்வளவு நேரம் ஒரு வித அலட்சியத்தோடு அங்கே வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இவளைக் கண்டதும் அலெர்ட் ஆகினார்கள்.. அங்கு பத்து நிமிடம் என அடுத்த அடுத்த செக் போஸ்ட் என ஜீப்பில் சுற்றி வந்தாள். இதில் எல்லோரும் எப்பொழுது இங்கு வருவாளோ என்ற பயத்துடனேயே சரியாக வேலை பார்க்க ஆரம்பித்தார்கள்.
மூன்று செக்போஸ்ட்டுகளில் இருந்து தப்பித்து நாலாவதாக இந்த செக் போஸ்ட்டில் வந்து நின்றது சுமோ ஒன்று.
அதில் ஓட்டுனரோடு சேர்த்து மூவர் இருந்தனர். குண்டாக இருந்த ஒருவன் “அந்த பொம்பள இங்கேயும் இருப்பாளோ?” என்றபடி சுமோவின் ஜன்னல் வழி தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தான்.
கார்களும், கனரக வாகனங்களும்,சில இருசக்கர வாகனங்களும் தான் அவனுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நின்றுக் கொண்டிருந்தது.
அவனது சுமோக்கு பின்னாலும் அதே போல் வண்டிகள் வந்து நிற்க ஆரம்பித்து இருந்தன.
தலையை உள்ளே இழுத்துக் கொண்டபடி பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு போனை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுத்தான்.
பிசி என்று பதில் வர, இவனைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்தில் இருந்தவன் “ஏன்டா?” எனவும்
“நைட்டு ரெண்டு மணிக்கு எடுத்த வண்டி.. இவளோ நேரம் ஆகியும் சிட்டிய விட்டே வெளிய போக முடியல, எவளோ நேரம் தான் சுத்திட்டே இருக்கது.. எந்த வழில போனாலும் இந்த டீசி அம்மா வந்து நின்றுது… இப்போ இது ஒன் வே வேற திரும்பியும் போக முடியாது…. அதான் பாஸ்க்கு போன் பண்ணேன்… பிசின்னு வருது… இப்போ என்ன தான்டா  பண்றது?” என்று இவன் காய
இவர்களின் சம்பாசனைகளை கேட்டுக் கொண்டிருந்த இவர்களின் புதிய ஓட்டுனர் “எனக்கு பயமா இருக்கு அண்ணாத்த” என்று சொல்ல
“நீ நம்ம தொழிலுக்கு புதுசுல.. அதான் பயப்படுற..” என்று சொன்ன குண்டனின் மனதுக்குள்ளையுமே ஒரு துளி பயம் எட்டிப் பார்த்தது.
அவன் இந்த கடத்தல் தொழிலில் ஐந்து வருடங்களாக இருக்கிறான். அவனது மேலிடத்தில் இருந்து கொடுத்த வேலைகளை எல்லாம்  இதுவரை கச்சிதமாக முடித்து இருக்கிறான்.
இந்த முறை மட்டும் வேலை சொதப்பிவிட்டால் அடுத்த வினாடி அவர்களின் மூவரின் உயிரும் அவர்களின் மேலிடத்தின் கைகளில் பறிபோய்விடும் என்று இவனுக்கு மிக நன்றாகவே தெரிந்ததால் தான் அவனுள் பயம் எட்டி பார்த்தது.
இதற்கு முன்னரும் கொடுத்த வேலையை ஒழுங்காக முடிக்கதவர்களை குருவியை சுடுவதைப் போல சுட்டு தள்ளுவதை அவன் நேரிலேயே பார்த்திருக்கிறான்.
அப்பொழுது இவனது போன் அடிக்க சிந்தனைகளில் இருந்து வெளிவந்தவன் திரையில் தெரிந்த நம்பரை பார்த்து எச்சில் விழுங்கியபடி போனை ஆன் பண்ணி காதுக்கு கொடுத்தான்.
“ஏன்டா நாயே கால் பண்ணா எடுக்கமாட்டியா?” என்றது எதிர்பக்கம்.
“இல்ல பாஸ்… காட்டு வழில அதான் சிக்னல் கெடைக்கல… நா இப்போ கூட உங்களுக்கு கால் பண்ணேன்… பிசின்னு வந்துச்சு..”
“சரி சரி.. எங்க போயிட்டு இருக்கீங்க?” என்று கேட்கவும்
செக் போஸ்ட் ஒன் வேயில் நிற்பதையும், முன்னர் அவர்கள் கடந்த வந்த செக் போஸ்ட்டுகள் பற்றியும் சொல்லி முடித்தான் குண்டன்.
“அந்த செக் போஸ்ட்ல இருக்க கான்ஸ்டபில்கிட்ட இப்போ தான் பேசினே.. அந்த புது டெபுட்டி கமிஷனர் அங்கே நின்னுகிட்டு அவளே ஒவ்வொரு வண்டியையும் செக் பண்ணி அனுப்பிட்டு இருக்காளாம்… சரி அவளுக்கு என்ன ஆகும்னு சொல்லு பே பண்ணிடலாம்ன்னு சொன்னா, அவ  உண்மை, நேர்மை, நியாயத்தோட சொரூபம்ன்னு என்கிட்டையே புகழ்ந்துட்டு இருக்கான்… அதனால அவளுக்கு எதாச்சும் தெரிஞ்சுட்டா வேலை போய்டும்ன்னு பயப்படுது அந்த நாயி.. அதனால நீ “அந்த” பெட்டிய எடுத்துகிட்டு அந்த எதிர்பக்க ஒன் வேல போய் நில்லு.. உன் கூட இருக்கவனுங்க.. செக் போஸ்ட்ட தாண்டி சுத்தி வந்து உன்னைய பிக்கப் பண்ணிக்குவானுங்க.. சீக்கிரம் க்விக்” என்று சொன்னபடி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இவ்வளவு நேரமும் குண்டனையே வெறித்து  பார்த்துக் கொண்டிருந்த இருவரிடமும் விஷயத்தை சொல்லி, அதோடு ஒரு இடத்தையும் குறிப்பிட்டு “அங்க வந்துருங்கடா” என்று சொல்லிவிட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு இவர்களுக்கு வலது பக்கம் இருந்த ஒன் வே நோக்கி கடகடவென எச்சரியக்கையோடு “யாராவது தன்னை கவனிக்கிறார்களா?” என்று எல்லா பக்கமும் பார்த்தபடி நடக்க ஆரம்பித்தான்.
இவன்  வலது புறம் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த நேரம் இவனுக்கு இடது பக்கம் இருந்து வேகமாக ஒரு கார் வந்துக் கொண்டிருந்ததை குண்டன் கவனிக்கவில்லை.
காரில் இருந்தவன் இவனைக் கவனித்துவிட்டு வேகமாக காரின் பிரேக்கை அழுத்தி நிப்பாட்டிய போதும் கார் அந்த குண்டனின் மேல் லேசாக இடித்துவிட்டு தான் நின்றது.
கார் இடித்ததில் அவன் கீழே விழ அவனது கையில் இருந்த பெட்டி ரோட்டை தாண்டி விழுந்துவிட்டது.
கார் சடன் ப்ரேக் போடப் பட்டதால் அதற்கு பின் வந்துக் கொண்டிருந்த லாரியும் காரின் பின் பக்கத்தை பதம் பார்க்க பெரிய சத்தத்துடன் லாரி குழுங்கி நின்றது.
இந்த சத்தம் கேட்டு செக் போஸ்ட்டில் நின்ற எல்லோரும் சம்பவ இடத்திற்கு விரைய, குண்டன் அவசர அவசரமாக, அதே சமயம் குழுங்கி நின்றக் காரில் இருந்தவன் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வரவும், ரோட்டை விட்டு நகர்ந்து போய் விழுந்திருந்த பேட்டியின் மேல் குண்டனின் பார்வை போக, அவன் இருந்த இடம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போலிசாரைப் பார்த்தவன் மின்னலென ஓடி மறைந்தான்.
காரில் இருந்து வெளியே வந்தவன் இதயெல்லாம் விசித்தரமாக பார்க்க, அவனின் பார்வை அந்த பெட்டியின் மீது விழுந்தது.

Advertisement