Advertisement

அத்தியாயம் – 3
ஆத்ரேயா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ்! 
அந்த மருத்துவமனைகளின் சேர்மேன் யாரென்று தேவசேனாவிற்கு சரியாக தெரியவில்லை .
ஆனால் அது கடந்த முப்பது வருடங்களாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் ஆத்ரேயா ஹாஸ்பிட்டல் இந்தியாவின் பல பெரும்நகரங்களிலும் இன்னும்
சில வளர்ந்த நாடுகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் அதிகமாக பணம் புழங்கும் இடங்களில் ஒன்றாக கடந்த வருட ஆய்வு பட்டியலில் வந்த இடங்களுள் இதுவும் ஒன்று.
சுத்தமான மற்றும் சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றது  கிஷோர் குறிப்பிடும் அந்த சென்னை கிளை மருத்துவமனை.
எல்லா வகையான நோய்களுக்கும் தனித்தனி செக்ஷன், தனித்தனி ஸ்பெசலிஸ்ட்டுகள், ஏராளமான நர்சுகள் என இருக்க ஹாஸ்பிட்டலோடு சேர்ந்த மருத்துவக் கல்லூரிகளும் இருக்க, அவற்றில் நிறைய மாணவ மாணவிகளும் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
பணக்காரர்கள், ஏழைகள் என பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ளும் மருத்துவமனை என்ற நன்மதிப்பை மக்களிடம் பெற்ற ஒரு மருத்துவமனை.
அதன் பெயர் இந்தியா எங்கும் கொடி கட்டிப் பறக்க, அதன் புகழ் வானத்தை தொட இன்னும் சில படிகளே இருக்கும் நிலை. இவை எல்லாம் தேவசேனா மீடியாக்கள் மூலமும், செய்தித்தாள்கள் மூலமும் அறிந்த விஷயங்கள் ஆகும்.
அப்படிப்பட்ட மருத்துவமனையிலா இப்படி ஒரு நிகழ்வு நடந்தது?
ஆச்சரியமாக இருந்தது தேவசேனாவிற்கு
சில நிமிட யோசனைக்குப்பின்  கிஷோரைப் பார்த்தவள்
“நீங்க சொன்னத எல்லாம் ஸ்டேட்மெண்ட்டா எழுதிக் குடுத்துட்டுப் போங்க.. நா இன்னைக்கே ஆக்ஷன் எடுக்குறேன்.. “ என்று சொன்னவளின் கண்கள் எதிரில் இருந்த கிஷோரின் முகத்தையும், மந்திராவின் முகத்தையும் ஆராய அவர்கள் இவளது கூற்றை நம்பவே இல்லை என்று சொன்னது,
“என் மேல நம்பிக்க வைங்க… இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல உங்கள காண்டாக்ட் பண்றேன்” என்று சொன்னாள்.
அதன் பின் கிஷோர் எத்தனை சமாதானப்படுத்தியும் மந்திராவின் கண்ணீரை மட்டும் நிறுத்தவே முடியவில்லை.
அழுதுக் கொண்டே இருக்கும் தனது மனைவியை தோளில் சாய்த்துக் கொண்டே பெட்டிஷன் எழுதி ஏட்டையாவிடம் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் தனது மனைவியோடு வீடு வந்து சேர்ந்தான்.
அழுதுப் புலம்பும் தனது மனைவியை பார்த்தவனின் மனதுக்கு வேதனையாக இருந்தது.
ஏழு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து, ஒவ்வொரு நாளும் அவனது மனைவியை அவனது தாயும் சொந்த பந்தங்களும் “மலடி” எனக் கூறி வார்த்தையாலையே குத்தி குத்தி வதைத்ததை பார்த்து அவர்களோடு சண்டையும் போட முடியாமல் அவனது வேலையை சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு மனைவியோடு இங்கு வந்து இருந்த மூன்று மாதத்தில் மந்திரா கருவுற்றதும் இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவளை தாங்கு தாங்கு என்று தாங்கி அவளின் சந்தோசத்தில் இவனும் சந்தோஷம் அடைந்தான்.
ஆனால் இன்றோ அப்படி கஷ்டப்பட்டு பெற்ற குழந்தை காணாமல் போனதா? இறந்தே பிறந்ததா? எது உண்மை என்று தெரியாமல் மனதிற்குள்ளையே குமைந்தான்.  
.
சில மணி நேரங்கள் கடந்து இருக்க இங்கு தேவசேனா வளவனிடம் அந்த குழந்தை கேசைப் பற்றி ஆத்ரேயா மருத்துவமனையில் சென்று விசாரித்து வருமாறு கட்டளையிட்டாள்.
அதற்கு தலையை சொரிந்த வளவன் “இப்போயே மணி ஆறாகிருச்சு மேடம்… நாளைக்கு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
“இன்னைக்கு இப்போவே போய் விசாரிக்கணும்… கூட ரெண்டு கான்ஸ்டபில கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு “அவ்வளவு தான்” என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த பையிலின் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
ஓகே மேடம் என்ற வளவன் இரண்டு கான்ஸ்டபில்களோடு மருத்துவமனை சென்று இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.
பையிலில் மும்முரமாக இருந்தவளின் பார்வை கடிகாரத்தை தொட்டு மீள “இன்னும் ஏன் வளவன் போன் செய்யவில்லை” என்ற எண்ணத்தோடு தனது போனை எடுத்துப் பார்த்தாள். போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. எடுத்து சார்ஜரில் கனக்ட் செய்துவிட்டு வேலையை தொடர ஆரம்பிக்க போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.
எடுத்துப் பார்த்தாள் வசந்தா தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
அட்டென்ட் செய்துக் காதுக்குக் கொடுத்தாள்.
“என்ன தேவா கெளம்பிட்டையா?”
“எங்கம்மா?”
“என்ன தேவா? ரிஷப்ஷனுக்கு போகணும், நா வீட்டுக்கே வர்றேன்மா ஒன்னாவே சேந்து போகலாம்ன்னு சொன்னியே? உனக்கு எப்போ இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? சுவிட்ச்ட் ஆப்ன்னு வந்துச்சு” என்று வசந்தா அந்த பக்கம் பொரிந்து தள்ள அப்பொழுது தான் ரிஷப்ஷன் விசயமே ஞாபகம் வந்தது தேவசெனாவிற்கு.
வேலைப் பளுவில் அதை மறந்துவிட்டதை எண்ணி “ஸ்ஸ்ஸ்..” என்றபடி ஆள்காட்டி விரலால் புருவத்தை  நீவியவள்
“இதோ வர்றேன்மா… நீங்க எல்லாரும் மண்டபத்துக்கு வந்துருங்க… நானும் அங்க வந்தர்றேன்” என்றவள் மீண்டும் வசந்தா புலம்ப ஆரம்பிக்கும் முன் “பை மா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.
மண்டபத்திற்கு வெளியே வந்து ஜீப்பை நிறுத்தியவள் வெளியே நின்றபடி வசந்தாவின் எண்ணிற்கு அழைப்பை விடுத்து அவள் வந்திருப்பதை சொல்ல வெளியே வந்த வசந்தாவின் முகம் உருட்டிக் கொண்டிருக்கும் சப்பாத்தி மாவைப் போல் கோணல் மானலாகப் போனது
“ஏன் தேவா ஏன் இப்படி பண்ற…. அட்லீஸ்ட் வீட்டுக்குப் போய் இந்த காக்கி ட்ரெஸ்ச கழட்டிட்டு வேற ட்ரெஸ் போட்டுட்டு வந்துருக்கவும் தான” என்று அலுத்துக் கொள்ள
“அம்…மா” என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பேச ஆரம்பிக்க
“அடடே வசந்தா நீங்களா?.. எப்படி இருக்கீங்க?” என்றபடி கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்மணி ஒருவர் நலன் விசாரிக்க
வசந்தாவும் அவரோடு அலாவலாவிக் கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த தேவாவிற்கு சலிப்புத் தட்ட “ப்ச்” என்றபடி அவள் வேறு புறம் திரும்ப “இது… இது” என்றபடி தேவாவை சுட்டிக் காட்டியபடி ஞாபாகப் படுத்த முயன்றுக் கொண்டிருந்தார் அந்த முன் ஐம்பதுகளில் இருக்கும் பெண்.
“என் பொண்ணு தாங்க… தேவசேனா,சென்னைக்கு புது டிசிபி… வேலைல அவளோ பக்தி… அதான் வேல முடிச்சுட்டு தான் நா ரிஷப்ஷனுக்கு வருவேன்னு அப்டியே யூனிபார்ம்மோடையே வந்துட்டா” என்றபடி வசந்தா ஈயென சிரித்து வைக்க
“இவ்வளவு நேரம். இந்த ட்ரெஸ்ச குறை சொல்லிட்டுருந்த வாயா இந்த வாய்” என்பது போல் பார்த்திருந்தாள் தேவசேனா.
இதைப் பார்த்த வசந்தா “வாங்க உள்ள போய் பேசுவோம்.. வா தேவா” என்றபடி அழைத்து சென்று மதிவதனா இருக்கும் இடத்தை காண்பித்துவிட்டு அந்த பெண்ணோடு கடலை வறுக்க ஆரம்பித்தார்.
சுற்றி இருந்தவர்கள் எல்லாம் இவள் காக்கி உடையிலேயே வந்திருப்பதை வினோதமாகப் பார்க்க அதையெல்லாம் கண்டுக் கொல்லாத தேவசேனா மதிவதனாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
காக்கி யூனிபார்மில் கம்பீரமாக தனது அக்கா நடந்து வருவதைப் பார்த்த மதிவதனா “அக்கா… நீ டெபுட்டி கமிஷனர் ஆபிஸ்ன்னு நெனச்சு ரிஷப்ஷன் நடக்குற மண்டபத்துக்கு வந்துட்ட” என்று சொல்லிவிட்டு ஏதோ பெரிய காமடி சொன்னது போல் கிளுக்கி சிரித்தாள்.  
“உனக்கு வர வர வாய் ஓவரா ஆகிடுச்சு” என்றபடி தேவா விளையாட்டாய் கையை ஒங்க “அக்கா நோ நோ” என்றபடி பின்னால் நகர்ந்தவள் இன்னொரு பெண்ணின் மீது போய் இடித்துக் கொண்டாள்.
“சாரி” என்றபடி திரும்பியவள் “ஹே சம்யுக்தா நீ எப்ப வந்த?” என்று ஆர்ப்பாட்டமாக கத்தினாள்.
“இப்போ தான்” என்று சம்யுக்தா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
“வித்யாவும் வந்துருக்காளா?” என்று சம்யுக்தாவின் இரட்டை சகோதரியான வித்யுக்தா பற்றி விசாரித்தாள் மதி.
மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள்.
“வந்துருக்கா மதி.. அங்க இன்னும் நம்ம ப்ரெண்ட்ஸ் நெறைய பேர் வந்துருக்காங்க… வாயேன்” என்று சம்யுக்தா மதியின் கையைப் பிடித்து இழுக்க
“அக்கா நீ இங்கயே இரு நா ஒரு பைவ் மினுட்ஸ்ல வந்தர்றேன்” என்றபடி சம்யுக்தாவின் இழுப்புக்கு சென்றாள் மதி.
மதிவதனா விட்டுவிட்டு போய்விட்டதால் ராஜநாதன் எங்கே இருக்கிறார் என்றுப் பார்த்து அவர் அருகே சென்று அமரலாம் என்று தேவசேனா யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது ஒரு நான்கு வயது சிறுமி பட்டுப்பாவாடை அணிந்து தத்தி தத்தி இவளை நோக்கி நடந்து வந்தாள்.
“ஆன்ட்டி… இது உங்களுக்கு தான்” என்று முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி ஒரு காகிதத்தை நீட்ட
“எனக்கா? யார் குடுத்தாங்க?” என்று அந்த குட்டிப் பெண்ணின் கன்னத்தை கிள்ளியபடி அந்த காகிதத்தை வாங்கினாள் தேவசேனா.
“அது.. அதோ அந்த  அங்கிள்” என்றது அந்த மழலை ஒரு திசையில் கைகாட்ட அந்த பக்கம் பார்த்த தேவசேனாவின் பார்வைக்கு எந்த அங்கிளும் தெரியவில்லை. நிறைய ஆன்ட்டிகள் மட்டுமே தெரிந்தனர்.
“ஆனா அங்க யாருமே இல்லையேடா” என்றபடி புருவ சுருங்களோடு தேவசேனா திரும்ப அந்த குட்டிப்பெண் எங்கோ ஓடிப் போயிருந்தாள். கையில் இருந்த அந்த  காகிதத்தை எடுத்துப் பார்த்தாள்.
“ஹே குந்தாணி!!!!! அம் வெயிட்டிங் பார் யூ டூ கம் டூ மை ஹோம்” என்று எழுதியிருந்தது..
படித்தவளின் பார்வை “குந்தாணி” என்ற வார்த்தையிலேயே அதிர்ந்து நின்று இருந்தது.
சுற்றி முற்றியும் பார்வையை வேகமாக சுழற்றினாள். யாரும் இவளைக் கவனிப்பது போல தெரியவில்லை.
அப்பொழுது அங்கு வந்த மதிவதனா “அக்கா வா.. அப்பா உன்னைய கூட்டிட்டு வர சொன்னாரு… பொண்ணு மாப்பிள்ளைய பாத்து கிப்ட் குடுத்துட்டு வரலாம்னு” என்று சொல்ல
கையில் வைத்திருந்த காகிதத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் திணித்தபடி எழுந்தாள் தேவசேனா.
மாப்பிள்ளை பெண்ணை பார்த்து பரிசு குடுத்து வாழ்த்து தெரிவித்து, போட்டோவிற்கு போஸ் கொடுத்து என எல்லாம் முடிய இறங்கியபடியே “சரி நா கெளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் வொர்க் இருக்கு” என்று சொல்ல
“என்ன அக்கா இது? அதுக்குள்ளையா? வா சாப்ட்டு ஒன்னா சேர்ந்து போகலாம்” என்று சிணுங்கினாள் மதிவதனா.
“ஆமா தேவா சாப்டாம போனா நல்லாருக்காது” என்று ராஜநாதன் சொல்ல
“இவளோ நேரம் இருந்தாச்சு.. இன்னும் கொஞ்ச நேரம் தான தேவா… வா” என்று வசந்தாவும் எடுத்துரைக்க
“என்ன தங்கச்சி.. இங்கயே நின்னுட்டிங்க… வாங்க வந்து சாப்டுங்க” என்றபடி வந்தார் வசந்தாவின் ஒன்றுவிட்ட அண்ணன்.
இதைக் கேட்டு வசந்தா ஈயென சிரித்தபடி தேவசேனாவின் இடுப்பில் இடிக்க சம்மதமாக முன்னாள் நகர்ந்தாள்  தேவசேனா.
நால்வரும் சாப்பிட்டு முடித்துவிட்டு விடைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்த நேரம் தேவசேனாவின் போன் அடித்தது. வளவன் தான் அழைத்துக் கொண்டிருந்தார். எடுத்துக் காதிற்கு கொடுத்தபடி
“சொல்லுங்க வளவன்.. போன விஷயம் என்னாச்சு?” என்றாள் தேவசேனா.
“மேடம்  அந்த மந்திரா இந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகக் கூட இல்லையாம் மேம்.. அப்டி எந்த பேஷன்ட்டையும் நாங்க அட்டென்ட் பண்ணலன்னு ஹாஸ்பிட்டல்ல சொல்றாங்க மேடம்” என்று வளவன் சொல்ல
“வாட்?” என்றுக் கத்தினாள் தேவசேனா.
வருவாள்….

Advertisement