Advertisement

அத்தியாயம் – 10
இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
சதாசிவம் மருத்துவமனைக்கு புது கருவிகள் வாங்குவதற்காக டெல்லி புறப்பட்டார்.
அவர்கள் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் வெளிநாடு போவோர் வருவோர் மட்டுமே விமான சேவையை அதிகம் பயன்படுத்துவர்.
ஒருசிலர் நம் நாட்டுக்குள்ளேயும் கூட விமானத்தில் சென்று வந்ததும் உண்டு. ஆனால் இப்பொழுது மாதிரி அதிக விமான நிலையங்கள் அன்று இருந்திருக்கவில்லை.
அதனால் சதாசிவம் எப்பொழுதும் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
போக இரண்டு நாள் வர இரண்டு நாள், சென்ற வேலையை முடிக்க என அவர் சென்று வர ஒரு வாரத்திற்குள் அல்லது சில நேரம் அதற்கு மேலும் கூட ஆவது உண்டு .
அதனால் மருத்துவமனையை நிர்வாகிக்கும் பொறுப்பை நாகேந்திரனிடம் கொடுத்துவிட்டு பத்மாவதியிடம் சொல்லிக் கொண்டு அதிகாலையிலேயே டெல்லியை நோக்கியப் பயணத்திற்கு புறப்பட்டு இருந்தார்.
காலையில் எழுந்த லலிதாவிற்கு மயக்கம் வருவது போலிருக்கவும் ‘இரவு சரியாக சாப்பிடாதது வேலையைக் காட்டுகிறது போல’ என்று நினைத்துக் கொண்டவள், எழுந்து குளித்து தயாராகி கீழே சென்று உணவு மேசையில் போய் அமர, பத்மாவதி பணிப்பெண்ணை ஏதோ வேலை ஏவியபடி சமயலறையில் இருந்தார்.
இவளைப் பார்த்ததும் இவளை நோக்கி வர “அம்மா பசிக்குதும்மா” என்று சிணுங்கினாள் லலிதா.
உடனே அவர் அவளுக்கு சூடான இட்டிலிகளைப் பரிமாற அவற்றை பிய்த்து வாயில் திணித்தபடி “அப்பா எங்கம்மா? இன்னும் சாப்பட வரல?” என்று வினவினாள்.
“உங்கப்பா காலைலேயே டெல்லிக்கு கிளம்பிட்டாரு.. நீ தூங்கிட்டு இருக்கவும், உன்னைய எழுப்பல” என்று பத்மாவதி சொல்ல, இது எப்பொழுதும் நடப்பது தான் என்பதால் அமைதியாக சாப்பிட்டு முடித்தவள் எழுந்து வந்து சோபாவில் அமர, மீண்டும் மயக்கம் வர கூடவே குமட்டலும் வர மாதிரி இருக்க வாயய் பொத்தியவாறு ஓடினாள் சின்கை நோக்கி சின்க்கில் சென்று வாந்தி எடுத்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
பார்த்துக் கொண்டிருந்த பத்மாவதிக்கு தான் பதட்டம் அதிகமாகிவிட்டது.
வேலையாட்களை வரவைத்து கைத்தாங்களாக லலிதாவை அழைத்து சென்று சோபாவில் படுக்க வைத்தனர்.
பணிப்பெண்ணிடம் சொல்லி மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்க சொல்ல, சிறிது நேரத்தில் நாகேந்திரன் வந்து சேர்ந்தான்.
அவனது முகத்தில் பதட்டம் இருந்தாலும் மனமெல்லாம் உற்சாகம் இருந்தது.
“ என்னாச்சு ஆன்ட்டி?” படபடப்பாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“சாப்ட்டு எழுந்து வந்தா.. அப்டியே வாமிட் பண்ணிட்டு மயங்கிட்டா… நைட்டும் ஒழுங்கா சப்பிடல.. “ என்று புலம்ப
“ஓகே ஆன்ட்டி லேட் மீ சி..” என்றபடி அவளை சோதித்தவன் நிமிர்ந்து “ இவங்க ரூம் எங்க இருக்கு?” என்றுக் கேட்டான்.
பத்மாவதி மாடியை நோக்கி கைகாட்ட “என்னோட மெடிகல் கிட்ட கொஞ்சம் எடுத்துட்டு வாங்க” என்று பணிப்பெண்ணிடம் சொன்னவன் லலிதாவைத் தூக்கியவாறு மாடி ஏறினான்.
இரண்டு மாதங்களுக்கு முன் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் மயக்க மருந்து கலந்த பழரசத்தை அருந்தி மயங்கிய லலிதாவை ஒரு தனியறைக்கு தூக்கி சென்று அவளது கற்பை சூறையாடிவிட்டு உடைகளை சரி செய்து விட்டு அங்கு எப்போது போனாலும் இவன் பணக்கட்டை தூக்கி போட்டால் இவனுக்கு முறைவாசல் வேலையாளிடம் பணம் கொடுத்து இவளைப் பற்றியத் தகவலை சந்தேகம் வராமல் அவளது நண்பர்களிடம் தெரிவிக்க சொன்னது ஞாபாகம் வந்தது நாகேந்திரனுக்கு. இவன் அன்று போட்ட விதை, இன்று துளிர்விட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவன் முகத்தில் என்றுமில்லா ஒரு இளநகை.
இந்தத் துளிரை வைத்து தான் அவனது ஆசை, லட்சியம் என் எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
பின்னாடியே பத்மாவதியும், வேலைக்காரப்பெண்ணும் பெட்டியுடன் வந்து நின்றார்கள்.
தனது கருவிகளை எடுத்து லலிதாவைப் பரிசோதித்தவன் “சூடா கொஞ்சம் பால் கொண்டு வாங்க” என்று சொல்ல பணிப்பெண் கிளம்பி போக, பத்மாவதியை எப்படி அந்த இடத்தை விட்டு நகர்த்துவது என்று சிந்தித்தவன் “ஆன்ட்டி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டுவர்றிங்களா” என்று கேட்க
“இதோ கொண்டு வர்றேன்பா” என்றபடி கீழே இறங்கிப் போய்விட்டார்.
அரைமயக்கத்தில் இருந்த லலிதாவை கன்னங்களில் தட்டி எழுப்பியவன் அவளது முகம் காட்டும் உணர்ச்சிகளை அவதானிக்க முயல
அவளோ “எங்கம்மா எங்க? நீ எதுக்கு என் ரூமுக்குள்ள வந்திருக்க?” என்றபடி எழுந்தாள்.
அவளை உறுத்துப் பார்த்தவன் “நீ இப்போ கன்சீவா இருக்கே.. “ என்று அமைதியான குரலில் சொல்ல அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தவள் பின்பு உதட்டை சுழித்தபடி “என்ன ஒளர்ற?” என்றாள் அசட்டையாக
“உளறல… நா சொல்றது உண்ம தான்.. ஆனா இத இன்னும் உங்கம்மா கிட்ட சொல்லல… வெறும் புட் பாய்சன்னு தான் சொல்லிருக்கேன்.. இதக் கேட்டு அதிர்ச்சில அவுங்களுக்கு எதாச்சும் ஆகிருச்சுனா அதான்.. இல்ல உங்கம்மாகிட்ட சொல்லிடலாம்னா எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல…” அசட்டையாக தோளைக் குலுக்கினான்.
அவனது பயமற்ற செயலில் அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
நாட்கள் தள்ளிப் போயிருப்பதை யோசித்தவள் “இல்ல இவன நம்பக் கூடாது… அப்பறமா இவன் சொல்றது உண்மையா பொய்யான்னு பாத்துக்கலாம்” என்று சிந்தித்தபடி “எதுவும் சொல்லவேண்டாம்” என்றாள் அவனிடம் பட்டென்று
“அப்போ என்ன பண்ண போற? உங்கப்பா மான மரியாதை, உன் குடும்ப கௌரவம் எல்லா என்னாகும்? “ என்று அவன் அடுக்கிக்கொண்டே அவள குழப்ப  ஏனோ லலிதாவின் மனதினுள் இந்த விசயத்தில் முதல் முறையாக பய உணர்வு ஏற்பட ஆரம்பித்தது.
இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் “உன்னோட இந்த நிலைக்கு காரணமானவன் யாருன்னு சொல்லு.. நானே உங்கப்பாகிட்ட பேசுறேன்” என்றான் மிகவும் தீவிரமான குரலில்
அவள் யாரை  சொல்வாள்? 
அவள் ஒன்றும் புரியாமல் சிந்தனைகளில் அமைதியாகி விட தண்ணியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்திருந்தார் பத்மாவதி. வந்துக் கொண்டிருந்தவரின் வாயிலிருந்து “ப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தி கண்டதையும் தின்ன வேண்டியது…. அப்ரோ அது செரிக்கல… இது செரிக்கலன்னு படுத்துக்க வேண்டியது” என்ற வசவு சொற்கள் நடனமாட, கேட்டுக் கொண்டிருந்த லலிதாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஐந்து நட்சத்திர விடுதியில் மயங்கி விழுந்தது ஞாபகம் வந்தது.
சிறிதாக முளைவிட்டிருந்த பயம் இப்பொழுது கடகவென செடியாக வளர ஆரம்பித்தது. நினைக்கவே தலை வலிக்க ஆரம்பித்தது. தலையை பிடித்தபடி படுத்துக்கொண்டாள்.
உள்ளே வந்த பத்மாவதியிடம் ஒரு மாத்திரையைக் கொடுத்தவன் “பால குடிச்சுட்டு இத சாப்ட சொல்லுங்க” என்றான்.
அவரும் அவளை எழுப்பி குடிக்கவைக்க “அவுங்க ரெஸ்ட் எடுக்கட்டும் ஆன்ட்டி..  அவுங்கள கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்று சொன்னபடி வெளியில் நடக்க, தானும் அவனுடன் சேர்ந்து நடந்தார் பத்மாவதி.
படிகளில் இறங்கியபடி “இப்போ நா கிளம்புறேன் ஆன்ட்டி.. எப்போ என்னானாலும் என்னைய கூப்டுங்க… அங்கிள் வர வேற அஞ்சு நாள் ஆகும்.. அதுவரையும் நாந்தா ஹாஸ்பிட்டல பாத்துக்கணும்… சோ… ம்ம்ம் பாக்கலாம் ஆன்ட்டி” என்றபடி கீழே வந்துவிட்டவன்
“ம் என்று ஏதோ யோசனை செய்தவன் போல் என் பெட்டி.. அத லலிதாவோட ரூம்லைய வச்சிட்டு வந்துட்டேன்… எடுத்துட்டு வந்தர்றேன்” என்றபடி மீண்டும் படிகளில் தாவி ஏறினான்.
லலிதா குத்துக்கால் வைத்து அதன்மேல் தலையைக் கவிழ்த்தபடி அழுதவாறே அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு தெரிந்துவிட்டது. நாள் கணக்கை எண்ணிப் பார்த்திருந்தாள். ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகியிருக்க, ‘இதை எப்படி மறந்தேன்.. அவன் சொல்வது உண்மை தான்’ என்றுப் புரிய அவளது மனதில் இடி விழுந்தது. ஒன்றும் புரியவில்லை.
‘தனக்கே தெரியாமல் தன்னை யாரோ களங்கப்படுத்திவிட்டான்… தன் குடும்பத்திற்கு தன்னால் அவமானம் வந்து விடும்” என்றுக் கலங்கினாள் அந்த அப்பாவி பெண்.
மனது மீண்டும் மீண்டும் குழம்ப பயித்தியம் பிடிப்பது போலிருக்க, ‘தற்கொலை’ யோசனையைக் கையில் எடுத்தாள்.
‘இவ்வளவு பெரிய அவமானத்தை நிச்சயம் அப்பாவாலும் அம்மாவாலும் தாங்கிக் கொள்ள இயலாது… அதனால் அப்பா டெல்லியில் இருந்து வருவதற்குள்.. தற்கொலை செய்துக் கொள்ளலாம்’ என்று அவசரமாக முடிவெடுத்தாள்.
அந்த நேரம் உள்ளே வந்தான் நாகேந்திரன்,அவள் உளறிக் கொண்டிருந்ததெல்லாம் காதில் விழ ‘லலிதா’ என்று அழைத்தான்.
கலங்கியக் கண்களோடு அவள் நிமிர்ந்துப் பார்க்க, உடனே பதறிப் போனவன் போல் அவளிடம் வந்தவன் கண்ணீரை துடைத்து விட்டபடி “அழாத லலிதா.. எந்த ஒரு தப்பான முடிவும் எடுத்துராத… உன்னோட இந்த நிலமைக்கு காரணமானவன நா சும்மா விடமாட்டேன்… யாருன்னு மட்டும் சொல்லு அவன் யாரா இருந்தாலும் உன் முன்ன கூட்டிட்டு வந்து நிப்பாட்டுறேன்… நானே அங்கிள் கிட்ட பேசி உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறே..” என்று அவன் பரிதவிக்க
அவனைப் புரியாமல் பார்த்தாள் லலிதா.
அவள் பார்வையைக் கண்டுக் கொண்டவன் “என்ன பாக்குற.. உனக்கு வேணும்னா என்னைய பிடிக்காம இருக்கலாம்… ஆனா நா இன்னைக்கு மூணு வேலையும் சோறு சாப்ட்டு,படிச்சு இன்னைக்கு டாக்டரா இருக்கேன்னா அதுக்கு காரணம் அங்கிள் மட்டும் தான்.. அவரோட பேருக்கு ஒரு களங்கம்னா அத அழிக்க நா என்ன வேணும்னாலும் பண்ண தயாரா இருக்கேன்.. நீ பயப்படாம யாருன்னு மட்டும் சொல்லு.. இந்த விசயம் கொஞ்சம் கூட வெளியில கசியாம உங்க கல்யாணத்த நடத்தி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்று வசனம் பேச, அவன் நடிக்கிறான் என்பது கூட வெளியில் தெரியாத அளவிற்கு அவனது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்தது லலிதாவின் மனது அவனை நம்ப ஆரம்பித்து விட்டது உண்மை என்பது போல்.
ஆனாலும் அவளுக்கு மனதினில் ஏதோ ஒரு விதம் பயம் ஓடிக்கொண்டே இருக்க, இதில் அவளை சீரழித்தவன் யாரென்றே வேறு தெரியாமல் இருக்க மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்தாள்
“இங்க பாரு லலிதா.. இப்படி அழுதுட்டே இருந்தா எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.. என்கிட்ட சொல்லு.. என்னைய உன்னோட ப்ரெண்டா நெனச்சு சொல்லு… யாரு அவன்” அழுத்தமாகக் கேட்டான்.
அவளோ “மொதல்ல இங்க இருந்து வெளிய போ” என்றுக் கத்தினாள். அதில் அவளருகே நெருங்கி அவளது வாயைப் பொத்தியவன் “ஷ்ஷ்…கத்தாத வாய மூடு.. ஆன்ட்டி கீழ தான் இருக்காங்க.. நீ இப்டிக் கத்துறது அவுங்க காதுல விழுந்தா என்னவோ ஏதோன்னு கிளம்பி இங்க வந்துருவாங்க…. அப்ரோ அவுங்க கேக்குற எந்தக் கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது.. இல்ல ஆன்ட்டி கேக்குற கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லிக்கிவன்னா சொல்லு நா உன் வாயில இருந்து கைய எடுக்குறேன்” என்று நிதானமாக அவளது கண்களைப் பார்த்தவாறுக் கூற அவள் தலை குனிந்தாள்.
மெதுவாக அவளது வாயில் இருந்து கையை எடுத்தவன் “கத்தாம அழாம பேசு, உன் நல்லதுக்காகவும், உன்னோட குடும்பத்தோட நல்லதுக்ககாவும் தான் நா இவளோ நேரமா பேசிட்டு இருக்கேன்.. சோ அழாம சொல்லு.. யார் அவன்?” கேட்ட முதல் கேள்வியிலேயே மீண்டும் வந்து நின்றான் நாகேந்திரன்.
“எனக்குத் தெரியல.. யாருன்னே தெரியல.. தெரியல……” தலையில் அடித்தபடி கதறினாள் லலிதா… அவளது நிலையைப் பார்த்தும் நாகேந்திரனின் மனது கொஞ்சம் கூட கசியவில்லை.
மாறாக “என்ன சொல்ற லலிதா? தெரியலையா????” அதிர்ச்சி ஆனவன் போல் கேட்டான்.
“ஆமா எனக்குத் தெரியல..”  என்று ஆரம்பித்தவள் அவளது சந்தேகத்தில் உள்ள அன்றைய பிறந்தநாள் பார்ட்டியைப் பற்றி சொன்னாள்.
இவனும் எதுவுமே தெரியாதவன் போல் ‘உம்’ கொட்டினான்.
அவள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க “ இப்போ இந்த குழந்தைய என்ன பண்ண போற லலிதா?” கண்களை கூர்மையாகியபடிக் கேட்டான் நாகேந்திரன்.
அவளோ “இல்ல.. அப்பா அம்மாவ தலை குனிய வச்சிட்டு என்னால இந்த உலகத்துல வாழ முடியாது… நா செத்தே போறேன்” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“என்ன பேசுற லலிதா… இது உனக்கே தெரியாம நடந்த விபத்து.. நீ எப்படி இதுல குற்றவாளியாவ…? அதுவும் போக உன் வயிற்றில வளருற குழந்த என்ன பாவம் பண்ணுச்சு? நீ நிரபராதி…. நீ இந்த மாதிரி தப்பான முடிவு எடுக்கக்கூடாது” என்று நியாயம் பேசினான் அந்த அநியாயவாதி.
அவன் சொன்னவற்றைக் கேட்டு அவள் குழம்பி போய் இருக்க “நீ.. நீ தப்ப நெனைக்கலன்னா நா ஒன்னு கேக்கவா?” தயக்கமான குரலில் கேட்டான்.
அவள் ‘என்ன’ என்பது போல் நிமிர்ந்து பார்க்க “எனக்கு தெரியும்.. நான்னா உனக்கு பிடிக்காது.. ஆனா உங்கப்பா செஞ்ச உதவியால மட்டும் தான் நா இன்னைக்கு இந்த சமூகத்துல டாக்டரா நிக்குறேன்.. அவருக்கும் அவரோட குடும்பத்துக்கு எந்த குறையும், தலை குனிவும் வரக் கூடாதுன்னு நா நெனைக்குறே.. அதனால நீ எந்த தப்பான முடிவும் எடுத்துராத… உனக்கு.. உனக்கு ஓகேன்னா நா..நானே உன்னைய கல்யாணம் பண்ணிக்கவா? உன் வயித்துல வளருற குழந்தைய நா என் குழந்தையாட்டம் பாத்துக்குறே.. இந்த விசயம் என் உயிர் இருக்குற வரைக்கும் வெளியில யாருக்கும் தெரியாம பாத்துக்குறே.. எனக்கு என்னைக்கும் அங்கிள் இன்னைக்கு இருக்க இதே கௌரவத்தோட இருக்கணும் அவளோ தான்… என்னோட இந்த முடிவுல உனக்கும் சம்மதம்னா நீ அங்கிள் கிட்டயும் ஆன்ட்டிகிட்டயும் என்னைய புடிச்சுருக்குன்னு சொன்னா போதும்.. யோசிச்சு முடிவு எடு.. உன்னோட முடிவுக்காக காத்திருக்கேன் ” என்று நீளமாகப் பேசிவிட்டு நடையைக் கட்டிவிட்டான்.
அதன்பிறகு சதாசிவம் வரும்வரை நாகேந்திரன் இவளது வீட்டிற்கு வரவே இல்லை.
சதாசிவம் போன வேளையெல்லாம் முடிந்து வீடு வந்து சேரும் வரை, தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தாள் லலிதா. அவளது தாய் வந்து எதாவது பேசும்பொழுதெல்லாம் எதையாவது சொல்லி சமாளித்துக் கொண்டே இருந்தாள். பத்மாவதி சாப்பிட அழைத்தாள் மட்டுமே கீழே போய் வருவாள்.
இப்படியாக சதாசிவமும் வீடு வந்து சேர, மருத்துவமனை சார்ந்த வேலையில் மூழ்கிப்போய்விட்டார். பத்மாவதி சதாசிவத்திடம் லலிதாவைப் பற்றி எடுத்து சொல்ல, அன்று அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு செல்லாமல் காலை உணவு வரும் நேரம் வரை சோபாவிலேயே லலிதாவிற்காக காத்திருந்தார்.
எப்பொழுதும் போல் பத்மாவதி அழைக்க தனதறையை விட்டு வெளியே வந்த லலிதாவின் பார்வை சதாசிவத்தை ஹாலில் பார்த்து தயங்கி நின்றது.
இவளைக் கண்ட சதாசிவம் “ஏன் ஒரு மாதிரி இருக்கிறாள், முகமெல்லாம் வாடி போய் இருக்கிறது’ என்று நினைத்தபடி “வாடா லல்லி சாப்பிடலாம்… “ என்று அழைக்க மெதுவாக கீழே வந்தவள் முகத்தில் வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “என்னப்பா உங்கள வர வர வீட்ல பாக்கவே முடியல.. காலையில நாலு மணிக்கெல்லாம் ஹாஸ்பிட்டல் போயர்ரிங்க.. நைட்டும் வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகுது போல” என்று பேசியபடி இருவரும் உணவுன்னும் மேசையை நோக்கி சென்றனர்.
மேசையில் அமர்ந்த பிறகும் ஏதேதோ பேசிக் கொண்டே உண்டுக் கொண்டிருந்த சதாசிவம் “ஆங்.. பத்து.. என்னோட பிரண்ட் வரதன் அவனோட பையன் கனடால டாக்டரா இருக்கான்.. ஏதோ ஒரு பங்க்ஷன்ல நம்ம லல்லிய பாத்திருப்பான் போல,, அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சாம்.. அதான் வரதன்ட்ட சொல்லி என்கிட்ட கேக்க சொல்லிருக்கான்…” என்று சொல்லிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த  லலிதாவிற்கு உணவு தொண்டைக் குழியில் இருந்து கீழே இறங்காமல் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.
கண்கள் எல்லாம் கரிக்க கண்ணீர் வத்து விடுமோ என்று நினைத்து தலை குனிந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்த சதாசிவம் “நீ என்ன சொல்ற லல்லி.. உனக்கு ஒகேவா?” என்றுக் கேட்க
கஷ்டப்பட்டு உணவை தொண்டைக்குள் தள்ளியவள், தொண்டையை செருமி தன்னை சமன்படுத்திக் கொண்டு “அப்பா.. நா.. இல்ல.. எனக்கு நாகேந்திரன பிடிச்சிருக்குப்பா..” என்றாள்.
   
வருவாள்….

Advertisement