Advertisement

தேவசேனா 
அத்தியாயம் – 1
அருள் கோடி பிரகாசமாய் 
அவனிக்கு ஒளி தந்து 
இருள்நீக்கி அருள்புரியும் 
சூரிய பகவானே உதித்து எழுவாய்
என்று சூரிய பகவானை வரவேற்கும் சுப்ரபாதம் அந்த மிகப் பெரிய பங்களாவின் வாயில் வரை கேட்டுக்கொண்டிருக்க அதில் மெய்மறந்து அமர்ந்திருந்தார் அந்த பங்களாவின் காவலாளி.
அப்பொழுது அங்கே சீறிப் பாய்ந்து வந்து நின்ற காரிலிருந்து ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவர் வேகமாக கேட்டை திறந்து உள்ளே இருப்பவரைப் பார்த்ததும் அவசரமாக ஒரு சல்யூட்டை வைத்தார்.
காரில் இருந்தவள் ஒரு தலையசைப்பை மட்டும் செய்துவிட்டு காரை பங்களாவின் போர்டிகோவில் கொண்டு போய் நிறுத்தி காரின் கதவை திறந்து இறங்கி வந்தாள்.
 ஐந்தரை அடி உயரம், கைகளின் முட்டிவரை மடித்து விடப்பட்டிருந்தது நீலநிற சட்டை, இறுக்கமாக அவளது கால்களை கவ்வி இருந்த  கறுப்பு நிற பேண்ட்..  இடுப்பிற்கு கீழே  வரை நீளக்கூடிய  முடியை அழகாக வாரி எடுத்து கொண்டை இடப்பட்டிருந்தது, முகத்தில் தெரிந்த பொலிவும் தீர்க்கமும் இன்னும் சிறிது நேரத்தில் துயிலெழவிருக்கும் சூரிய பகவானை நியாபகப் படுத்தின..  நடையில் இருக்கும் கம்பீரம் பார்ப்பவர்களுக்கு சட்டென்று அவள் ஆண்மகனோ என்று தோன்ற வைக்கும்.
 பங்களாவின் காலிங்பெல்லை அடித்துவிட்டு தனது இடது கையில் கட்டி இருந்த வாட்சில் நேரம்  பார்த்தபடி அவள் நின்று கொண்டிருக்க, கதவு திறக்கப்பட்டது.
விடிகாலை வேலைக்கே உரிய சுகந்தமும், சாம்பராணி வாசமும், இதையெல்லாம் தாண்டிய மங்களகரமான சிரிப்புடன், மகாலட்சுமியின் தோற்றத்தில் அவளை வரவேற்றார் அவளது தாய் வசந்தா.
அவளைக் கண்டதும் ஏற்கனவே மலர்ந்து இருந்த முகம் மேலும் மலர “வா தேவா… ட்ரைனிங் எல்லாம் எப்படி போச்சு?” என்றபடி அவளது முகத்தைப் பார்த்தவருக்கு அவளது முகத்தில் இருந்த பயணக்களைப்பு தெரிய, அவள் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்னரே “மொதல்ல உள்ள வா… உன் ரூமுக்குப் போய் ப்ரெஸ் ஆகு… நா டீ எடுத்துட்டு வர்றேன்.. குடிச்சுட்டு அப்பறமா தூங்குவியாம்” என்று அவர் சொல்ல 
“ம்” பஞ்சமாக வந்தது பதில்.
மாடி படிகளில் வேகமாக ஏறியவள் சட்டென்று திரும்பி நின்று “ம்மா.. அப்பாவும் மதியும்” என்று அவள் ஆரம்பிக்கும் போதே “அப்பா வாக்கிங் போயிருக்கார்டா, மதி இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா” என்று அவர் சொல்ல அதற்கு தலையை மட்டும் அசைத்தவள் மீண்டும் வேகமாக படியேறி அவளது அறையை நோக்கி விரைந்தாள்.
மடியேறும் மகளின் அழகிலேயே மயங்கி நின்றுக் கொண்டிருந்த வசந்தாவிற்கு மகளின் கம்பீரத்தில் கர்வம் உண்டானாலும், கூடவே ஒரு பெரும் கவலையும் எழுந்தது.
கர்வம் சரி, பெருங்கவலை எதற்கு என்று கேட்கிறீர்களா?
இவ்வளவு நேரம் குறிப்பிட்டு கொண்டிருந்த அவளின் பெயர் தேவசேனா,வயது இருபத்தி ஏழு, முன்னாள் இன்ஸ்பெக்டர், இந்நாள் சென்னை நகரத்தின் புதிய டெபுட்டி கமிசனர் ஆப் போலிஸ். இந்த சிறு வயதிலேயே இவ்வளவு உயர் பதவியா என்று உங்களின் புருவங்கள் உயரலாம்.. திறமையும், தகுதியும் இருந்தால் எவ்வயதிலும், எப்பதவியும் சாத்தியம் தானே… கம்பீரத்தில் மட்டும் அல்ல புத்திக்கூர்மையிலும் அழகிலும் அவளுக்கு நிகர் அவள் தான், அழகே பொறாமை கொள்ளும் பேரழகி. இன்னும் முடியவில்லை பொறுங்கள், அவள் படித்தது பீ.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் எஞ்சினியரிங், அதிலும் கோல்ட் மெடலிஸ்ட். முன்னாள் கலக்டரான அவளது தந்தையை பார்த்தே வளர்ந்தவள் மக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஆர்வம் கொண்டு இறங்கிவிட்டாள்.
போலிஸ் ட்ரைனிங்கை முடித்துவிட்டு இன்று தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள். 
சென்னையிலேயே அவளுக்கு போஸ்ட்டிங் கிடைத்ததற்கு அவளுக்கு சந்தோஷமாக  இருந்ததோ இல்லையோ, அவளது குடும்பம் வெகுவாக சந்தோசப்பட்டுப் போயிருந்தது.
தேவசேனாவின் அறைக்கு வசந்தா டீ எடுத்து வந்த நேரம் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு ஈர முகத்தை டவலால் தேய்த்தபடி வந்தாள் தேவசேனா. 
அவளிடம் டீயைக் கொடுத்தவர் அவளது பயணக் களைப்பை உணர்ந்தவாறு “இன்னைக்கு புல்லா ரெஸ்ட் எடு தேவா, ரொம்ப டயர்ட்டா தெரியுற” என்று சொல்ல
“இல்லம்மா, அந்த அளவுக்கு எல்லாம் டைம் இல்ல, இன்னைக்கே வேலைல ஜாயின் பண்ணி ஆகணும், அதுவும் எட்டு மணிக்குள்ள” என்று தேவசேனா டீயை பருகியவாறே சொல்ல 
“சரி… ரொம்ப உன்ன கஷ்டபடுத்திக்காத, கொஞ்ச நேரமாச்சும் தூங்கிட்டு கெளம்பி சாப்பிட வா”
“ம்”  என்றபடி டீ கப்பை தாயிடம் கொடுத்தவளுக்கு இத்தனை நேரம் இருந்த பயணக்களைப்பு போய் ஏதோ ஒரு புத்துணர்ச்சி வந்த உணர்வு. அதில் மென்மையானவள் “தேங்க்ஸ் மா” என்றாள் வசந்தாவைப் பார்த்து, டீ கப்பை வாங்கியபடி மென்மையாக சிரித்தவர் “சரி தூங்கு” என்றபடி கதவை சாத்திவிட்டு வெளியேறிவிட்டார்.
ஒரு முக்கால் மணி நேரம் போல் அடித்து போட்டார் போல் தூங்கியவள் அலாரம் அடிக்க எழுந்து கபோர்டை  திறந்து அங்கே கம்பீரமாக தொங்கிக் கொண்டிருந்த காக்கி சட்டையையும் பேன்ட்டையும் எடுத்து பெட்டில் வைத்தவள் குளித்து முடித்து காக்கி உடை அணிந்து ரெடியாகி ஹாலுக்கு வந்தாள்.
ஹாலில் அவளது தாய், தந்தை, தங்கை என மொத்தக் குடும்பம் இவள் வரும் வழி விழி பதித்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
தேவசேனா படிகளில் இறங்க ஆரம்பித்த நேரமே அவளை ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள் அவளது தங்கை மதிவதனா. பல மாதங்கள் கழித்து சகோதரியைப் பார்த்த மகிழ்வு அவளுள்.
வசந்தாவோ மகளை காக்கி உடையில் பார்த்ததும் தான் அந்த காக்கி உடைக்கே ஒரு கம்பீரம் வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.
இதே எண்ணம் தான் மகளின் கம்பீரத்தில் மயங்கி இருந்த தேவசேனாவின் தந்தை ராஜநாதனுக்கும்.
தேவசேனா தங்கை மதியோடு இறங்கி வர “வா தேவா, ட்ரைனிங் எல்லாம் எப்படி போச்சு?” என்றுக் கேட்டார்  ராஜநாதன். 
“ம் பைன் பா, இன்னைக்கே ட்யூட்டில ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்துருக்கு” என்று அவள் சொல்ல “சரி டா” என்றவர் இன்னும் சில குடும்ப விசயங்களும், அவளது வேலை பற்றிய விசயங்களும் பேசிவிட்டு “வாடா சாப்பிடலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது “மூணு பேரும் சாப்ட வாங்க “ என்று அழைத்தார் வசந்தா உணவை டேபிளில் எடுத்து வைத்தபடி.
மூவரும் சென்று சாப்பிட அமர தேவசேனாவின் தட்டில் உணவு குறைய குறைய அள்ளி வைத்துக் கொண்டே இருந்தார் வசந்தா. சாப்பிட்டுக் கொண்டே மதிவதனாவிடம் திரும்பிய தேவா “மதி உன்னோட பிளஸ் டூ ரிசல்ட் வந்துருச்சு தான….. எந்த காலேஜ் சேரப் போற? என்ன படிக்கப் போற?” என்றுக் கேள்விகளை அடுக்க 
“நா இன்னும் அதப் பத்தி எல்லாம் யோசிக்கலக்கா” என்றாள் மதி சிணுங்கலாக 
“சரி சீக்கிரம் யோசிச்சு சொல்லு” என்றபடி எழுந்து போய்க் கை கழுவி விட்டு வந்தவள் சென்று சோபாவில் அமர, சாப்பிட்டு முடித்த மற்றவர்களும் அங்கு வந்து அமர்ந்தனர்.
எல்லோரும் வந்துவிட்டதைப் பார்த்தவள் “சரி நான் போயிட்டு வர்றேன்” என்றவளுக்கு மற்றவர்கள் வாழ்த்தி விடை கொடுக்க முதல் நாள் வேளைக்கு புறப்பட்டவளின் கார் சீறிக் கொண்டு வந்து நின்றது டெபுட்டி கமிசனர் அலுவலகத்தில் தான்.
காரை விட்டு இறங்கி  வந்த தேவசேனாவை வரவேற்கும் விதமாக வாயிலில் இவளுக்காக காத்துக் கொண்டு நின்று இருந்த எல்லோரும்  சல்யூட் வைக்க, இன்ஸ்பெக்டர் வளவனும், மற்ற காவலர்களும் பூங்கொத்தைக் கொடுத்து அவளை வரவேற்றனர். 
எல்லாவற்றிற்கும் சிறு தலை ஆசைப்பை மட்டும் பதில் அளித்தவள் அவளுக்கே உரித்தான வேக நடைகளுடன் அவளது கேபினுக்கு விரைந்து டிசிபி சீட்டில் சென்று கம்பீரமாக அமர்ந்தாள்.
இவளுக்கு பின்னாலயே வந்திருந்த வளவனைப் பார்த்து “பெண்டிங் பைல்ஸ், இப்போ உள்ள ரெகார்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க” என்று ஆணையிட்டாள்.
வளவனும் எல்லாவற்றையும் சில நிமிடங்களில் எடுத்து வர ஒவ்வொன்றையும் எடுத்து உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள். 
இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.. ஆனாலும் இவள் முடித்தார் போல் தெரியவில்லை… எல்லோரும் இவளது ஆணையோடு மதிய உணவிற்கு சென்று விட இவள் ஏதோ ஒரு முக்கிய பைலை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நேரம் செல்போன் அடிக்க, யாரென்று எடுத்துப் பார்த்தாள், அவளது தாய் வசந்தா தான்.
அழைப்பை ஏற்று “ சொல்லுங்கம்மா” என்றிட 
“மாணிக்கத்திடம் சாப்பாடு கொடுத்து விட்டுருக்கேன், காலையிளையும் சரியாவே சாப்டாம போயிட்ட” என்று அவர் குறை பட்டுக் கொள்ளவும் “என்னது நா காலையில சரியா சாப்டலையா?” என்று ஆச்சரியப் பட்டுப் போனவள் வெளியில் எதுவும் சொல்லாமல் “சரிம்மா நீங்க சாப்ட்டிங்களா?” என்றுக் கேட்க 
“ம் இப்போதான்டா”
“சரிமா நா அப்புறம் பேசுறேன்” என்று அவள் போனை வைத்த நொடி மாணிக்கம் வந்தார்.
இவள் சாப்பிட்டு முடிக்க வளவன் வரவும், ஒவ்வொரு பைலை பற்றிய கேள்விகளைக் கேட்டு அவரிடம் இருந்து விளக்கம் பெற என இன்னும் சில விசயங்கள் நகரவே வேலை செய்யும் நேரம் முடிவடைந்து விட்டது… 
கிளம்பி வீட்டிற்கு வந்தவள் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, சாப்பிட்டுவிட்டு, தந்தை தங்கை, தாய் என மூவரிடமும் சற்று நேரம் அளவளாவிவிட்டு தூங்க சென்றாள். 
நேற்று இரவு முழுக்க தூங்காமல் வந்த பயணக் களைப்பு, இன்று முழுக்கவும் இருந்த வேலைகள் என எல்லாம் சேர பெட்டில் விழுந்தவள் அப்படியே தூங்கிப் போய்விட்டாள்.
காலையில் மணி ஐந்துக்கே எழுந்தவள் தந்தையுடன் சேர்ந்து வாக்கிங் போகலாம் என்று வர, ராஜநாதன் இவளுக்கு முன்னே தயாராகி நின்றுக் கொண்டிருந்தார்.
ட்ரைனிங் பீரியடில் அவள் மிகவும் மிஸ் செய்த ஒன்று இப்படி தினமும் காலையில் தந்தையுடன் வாக்கிங்  போவது.. இப்பொழுது தனக்கு முன் ரெடியாகி நின்று இருந்த தந்தையைப் பார்த்தவள் மலர்ந்த சிரிப்புடன் “வாங்கப்பா போகலாம்” என்றபடி அவர்தான் நடந்தாள்.
அவர்கள் வாக்கிங் போய் வரும் பொழுதே மணி ஏழாகி இருந்தது.. இவர்களுக்கு காப்பி கொண்டு வந்த கொடுத்த வசந்தா வேறு வேலை பார்க்க போய்விட காப்பியைக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்தவள் முடித்ததும் “நான் போய் ரெடியாகுறேன்ப்ப, இன்னைக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் வொர்க் இருக்கு” என்று சொல்ல அவரும் “சரிடா” என்றுவிட தேவசேனா தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த வசந்தா “என்னங்க.. இன்னக்கி சாயங்காலம் அண்ணன் வீட்டு ரிஷப்சன் இருக்குல, அதுக்கு நம்ம தேவாவையும், மதியையும் கூட அழைச்சுட்டு வர சொன்னாங்க அண்ணியும் அண்ணனும்” என்று சொல்ல 
“அடடே ஆமால.. ரிஷப்சன நா மறந்தே போயிட்டேன்…” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஏதோ ஞாபகம் வந்தவர் போல் “ஆமா இதெல்லாம் எப்போ பேசுனிங்க?” என்றுக் கேட்டார்.
“நேத்து கோயிலுக்குப் போயிருந்தப்போ அங்க பாத்து சொன்னாருங்க.. உங்ககிட்ட கூட போன்ல பேசுனதா சொன்னாரு” 
“ஆமா ஆமா.. அதான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே பத்திரிகை வச்சுட்டாங்களே.. அப்போய் எல்லாரும் வந்துருங்கண்ணான்னு தெய்வநாயகி என்கிட்டே சொல்லுச்சு… நீ அப்போ வீட்ல இல்லைல, அதான் கேட்டேன்”
“கோவில்ல பாத்தப்போ, நம்ம தேவா வந்துட்டான்னு சொன்னேன், அப்போ தான் தேவாவையும் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க” என்று வசந்தா ஏதோ போல் சொல்ல 
“ஒ” என்றவர் “போகலாம்” என்றார்.
தேவா தயாராகி சாப்பிட கீழே வந்த பொழுது வசந்தா விசயத்தை சொல்ல “சரிம்மா.. டைம் இருந்தா வேலைய முடிச்சுட்டு அப்டியே கெளம்பி அங்க வந்துடுறேன், நீங்க மூணு பேரும் எனக்காக வெயிட்  பண்ண வேண்டாம்” என்று அவள் அசைட்டையாக சொல்ல 
இதைக் கேட்டு முகம் சுழித்த வசந்தா “என்ன யூனிபார்ம்லையேவா ரிஷப்ஷனுக்கு வர போற?” என்றுக் கேட்க, நாதனும், மதியும் எதுவும் பேசாமல் இவர்கள் பேசுவதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தனர்.
“ஏம்மா இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்? இதுக்கு இருக்கும் மரியாதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்றாள் பட்டென்று
தேவாவிற்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவள் என்றுமே சேலையோ, தாவணியோ, ஏன் சுடிதார் கூட அணிந்தது இல்லை.. எப்பொழுதும் ஆண்பிள்ளை போல் பேன்ட், ஷர்ட் தான்.
ஆனால் வசந்தாவுக்கோ தேவா பெரிய மனுஷி ஆன நாளில் இருந்து ஒரு நாலாவது தேவாவிற்கு தாவணியோ, இல்லை சேலையோ கட்ட வைத்து அவளின் இடுப்புக்குக் கீழ் வரை கருத்து அடர்ந்து இருந்த கூந்தலில் சரசமாக மல்லிகைப் பூ வைத்து தனது மகளின் தெய்வீக அழகைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.
அதற்காக எல்லா பங்க்ஷனிலும் கலந்துக் கொள்ளும் பெண்களை சுட்டிக் காட்டி, கெஞ்சி என இவரும் தனது ஆசையை நிறைவேற்ற எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்… ம்ஹூம் இன்று வரை அவருக்கு அந்த கண் கொள்ளா காட்சியை அவரது மகள் அளிக்கவேயில்லை. சரி இந்த ரிஷப்சனிலாவது  தனது ஆசை நிறைவேறுமா என்று கஜினி முகமது போல் தளராத மனதுடன் கேட்டார் வசந்தா.
“நான் ஸ்ட்ரைட்டா ஆபிஸ்ல இருந்து தான் வரப் போறேன்” என்று தேவா அழுத்தமாகக் கூறிவிட வசந்தாவின் முகம் வாடிவிட்டது… அதை நாதன் கவனித்தார், ஆனால் யார் கவனிக்க வேண்டுமோ அவள் கவனிக்கவில்லை.  

Advertisement