Advertisement

வெண்முத்துகளின் சிதறல் போல் சிரிப்பொலி தன் செவிகளில் தேனாய் வந்து பாய்ந்ததும், ‘யார் இந்த மோகினி?’ என்று விழிதிறந்து நோக்கியவன். அங்கே பட்டு மஞ்சத்தில் தான் மட்டும் படுத்திருக்க அறை முழுவதும் குளிர்தென்றல் நிறைந்திருக்க, ‘எங்கே போனாள்?’ என்று யோசித்தவன்.
“என்ன ஒரு மனம் மயக்கும் சிரிப்பு? எங்கே அந்த மாயக்காரி என் சிந்தையினை கொள்ளை கொண்டு சென்ற மதனமோகினி’ என்று சிந்தித்தபடியே சாளரத்தின் வழியே கிழே நோக்கிய தமிழ்செருக்கன் யாருமற்று நிசப்தமாய் இருந்த இடத்தினை நோட்டமிட்டு உள்ளே வந்தான்.
“வணக்கம் இளவரசே!”
“ஹம் ..” என்று தலையாட்டலில் ஓர் வீரத்திமிர் தெரிய “என்ன செய்தி?” என்றான் மிடுக்கோடு.
“நாளை மறுநாள் நடக்கவிருக்கும் திருவிழாவிற்காக தங்களின் மாமா ஊரில் எல்லா ஏற்பாகளும் முடித்து உங்களுக்காக காத்திருப்பதாக செய்தி அனுப்பியுள்ளார் வீரச்செங்குட்டுவ மன்னர்”
“ஒஹ் அப்படியா? நான் அதை பார்த்துக்கொள்கிறேன். சரி நீ செல்” என்று உள்ளே திரும்பியவன், ஆழ்ந்த சிந்தனையில் தன் மனம் லையித்திருப்பதை உணர்ந்தவன்.
பறந்தோடிய வெண் புரவி தன் அரண்மனையின் முன் நிற்க, அதிலிருந்து ஆறடி உயரமும், ஆண்மகனின் வீரத்தை சொல்லாமல் சொல்லும் பறந்து விரிந்த நெஞ்சும், எதிர் நிற்கும் எவரையும் நேருக்கு நேர் நோக்கும் திண்ணிய விழிகளும், கம்பீரத்தை பறைச்சாற்றும் மீசையும்,கனிவான பேச்சுகளை சொல்ல துடிக்கும் இதழ்களும், ஒருங்கே பிரம்மன் படைத்த ஓர் உருவமாய் வந்து கொண்டிருக்கும் தன் குமாரனை விழி மூடாமல் நோக்கி கொண்டிருந்தாள் காதம்பரி.
நேரே தன் தாயாரிடம் வந்து அவரின் பொற்ப்பாதங்களை தொட்டு வணங்கியவனை “இவ்வையகமே போற்றட்டும் உன் புகழை! நீடுடி நின் குலத்தோடு வாழ்க” என்று ஆசி வழங்கினார்.
“உன் மாமன் திருவிழாவிற்கு உன்னை அழைத்திருப்பதால் இந்த முறையாவது சென்று பார்க்கலாம் அல்லவா?” என்றவருக்கு பதிலேதும் கூறாமல் தமிழ்செருக்கனின் இதழ்கள் புன்முறுவல் பூக்க.
“உன் தந்தை நம்மை விட்டு சென்று ஈரைந்து வருடங்கள் கடந்து போய்விட்டது கண்ணா. அன்று சிறுபிள்ளையாய் ஏறிய அரியணையின் தாக்கம் நாடும் நாட்டு மக்களின் நலத்திட்டங்கள் என அங்கே செல்லவே உனக்கு நேரம் கிட்டவில்லை. இந்த முறையாவது சென்று வா” என்று கூறினார்.
“பார்க்கலாம் அம்மா. அதற்கான நேரம் அமைகிறதா என்று?” என்று சிரிக்க.
“உன்னை நம்பிஅங்கே ஓர் உயிர் இருக்கிறதப்பா.. நினைவிருக்கிறதா? இந்த பத்து வருடங்களும் நீ அவளை காண செல்லவில்லையே?“ என்று வருத்தமாக கூறவும்.
கலகலவென வாய்விட்டு சிரித்தவன்.
“எங்கள் இருவிழிகளும் நோக்கி தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை அன்னையே. எனக்கானவள் அவள் தான் என்று அவள் பிறந்த அன்றே முடிவாகிவிட்டது. அதோடு எங்களின் நினைவினில் ஒருவரோடு ஒருவர் அன்றாடம் பேசிக்கொண்டு தானே இருக்கிறோம். எங்களை நினைத்து நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்” என்று கூற, “இருந்தாலும் இந்த முறை கட்டாயம் நீ சென்று வர வேண்டும் இது என் அன்பு கட்டளை” என்று கூறினார்.
“உத்தரவு அன்னையே அப்படியே செய்கிறேன்” என்றான்.       
**********
“டேய் எழுந்திரிடா!” குரல் கேட்டு கண்விழித்தவன், “என்ன மாம்? நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க விடமாட்டிங்களா?” என்று மறுபடி போர்வையை இழுத்து பாதம் வரை போர்த்திக்கொண்டு உறங்க போனவனை, “ஏன்டா கழுத வயசாகுது இன்னும் காலைல நான் தான் எழுப்பனுமா? மணி ஏழாகுது?” என்று திட்டிக்கொண்டு இருக்க..
“என்ன மாம்? மணி ஏழாச்சா? நான் நேத்தே சொன்னேன்ல ஒரு மீட்டிங் ஏழரை மணிக்குன்னு. இப்படி பண்ணிட்டியே மா? எங்க உன் லவ்வர காணோம்?” என்று வேண்டுமென்றே தன் தாயை காலையிலேயே வம்பிழுத்தான்.
“என்னது லவ்வரா???” என்று அதிர்ச்சியாய் சுந்தரி கேட்க.
“ஆமா.. எதுக்கு இப்ப வாயபிளக்கிற? மிஸ்டர்.கண்ணன் தான உங்க லவர்? நாங்க தான் உன் பிள்ளைகள். ஆனா, அவர் தான எப்பவும் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கார்” என்று முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு கேட்க.
“அட படவா! அப்பாவையே என் லவர்ன்னு சொல்றியா?” என்று அடிப்பதற்க்கு கை ஒங்க, காணாமல் போனான்.
“அம்மா! போம்மா.. இப்போ என் கனவுல ஒரு ராஜகுமாரி வந்தா. அவளோட அந்த சிரிப்பு சத்தம் எவ்வளவு அருமையாய் இருந்தது தெரியுமா?” என்று சொல்லும் மகனிடம்.  .
“அய்யய்யோ முகம் பார்க்கலையா? பேசாம போய் திரும்பி தூங்குடா. அவள் முகம் ஞாபகம் வந்தா சொல்லு” என்றவரிடம் “போங்கம்மா” என்று சிரித்தான்.
அம்மா கிண்டல் செய்தாலும் அவனுக்குள் அந்த இடத்திற்கும் இவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தோன்றியது. ‘ச்சே அப்படிலாம் ஒன்னும் இருக்காது’ என்று அதோடு மூட்டைகட்டினான் அந்த எண்ணத்தை.
“வயசு இருபத்திஏழு ஆயிட்டு. நான் தான் இங்க கத்திகிட்டே இருக்கனும். எவ்ளோ பொண்ணு பார்த்தாலும் இது நல்லா இல்ல அது நல்ல இல்லன்னு சொல்லிட்ற. நீயாவது ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தியா அதுவும் இல்ல? எப்போ தாண்டா உன்னை குடும்பமா பார்க்கறது?” என்று சற்று குரலில் சுரத்து இல்லாமல் கூறினார்.
‘இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்” என்று பிடிகொடுக்காமல் நழுவி குளியலரை சென்றான்.
“அப்பா எங்க?” என்று கேட்டான்.
“அப்பா அவங்க பிரெண்ட் ஏதோ அவசரமா வர சொன்னார்னு போயிருக்கார்”என்றார்.
“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என்கிட்டே வாயடிகிட்டு இருந்த புள்ளையா இவன்”என்று குளித்துவிட்டு காக்கி சீருடையில் கம்பீரமாய் இறங்கிய தன் மகனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் சுந்தரி.
“என்னம்மா? இன்னைக்கு தான் என்னை பார்க்கிற மாதிரி பார்க்கிறிங்க. அண்ணன் எப்போ வரேன்னு சொன்னானா?” என்று வாயில் இரண்டு இட்லிகளை முழுங்கியபடி கேட்டான்.
“அவன் குழந்தை பிறந்தப்புறம் தான் வருவேன்னு சொல்லிட்டான்.”
“ம்.. சரிம்மா நான் வரேன்” என்று கிளம்பியவன் வாசலில் வருவபவரை பார்த்து அப்படியே நின்றான்.
“அப்பா… யாருப்பா இந்த பொண்ணு?” என்று கேள்வி கேட்க.
அவனுக்கு பதில் கூறாமல் தன் மனைவியை நோக்கி அவளை காண்பித்தார்.
“இதோ வந்துடறேன்” என்று உள்ளே ஓடியவர், கையில் முதலுதவி  பெட்டியோடு வந்து அந்த பெண்ணிற்கு சிகிச்சை செய்தார்.
“நான் என் நண்பனை பார்த்துட்டு வந்துட்டு இருந்தேன். இங்க பக்கத்துக்கு தெருவுல வண்டி திருப்பும் போது என் வண்டி முன்னால வந்து மயங்கி விழுந்துட்டாப்பா. எழுப்பி பார்த்தேன் மயக்கம் கலையல. அதான் நம்ம வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன். உங்க அம்மா தான் இப்போ செக் பண்ணிட்டு சொல்லணும் என்னனு?” என்றார்.   
“செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு அப்புறம் எங்கம்மாவ கூப்பிடுங்க ஹெல்ப்கு..” என்றான்.
“டேய் நான் என்ன வேனும்னேவா இடிச்சேன். திடிர்னு அந்த பொண்ணு வந்து விழுந்துட்டா நான் என்ன செய்ய? ஆனாலும் உங்கம்மா டாக்டர்ன்னு இவ்ளோ கொழுப்பு ஆகாதுடா உங்க ரெண்டு பேருக்கும்” என்று கூறினார். .      
“ஹ்க்கும்… அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகட்டும் உங்களை தூக்கி உள்ள வச்சிடறேன் இருங்க” என்று கூற. “அடப்பாவி நான் உங்கப்பன்டா” என்றார்.
“அதெல்லாம் என் கடமைக்கு முன்னாடி செல்லாது” என்றான்.
“அய்யோ கொஞ்சம் ரெண்டு பேரும் சண்டை போடாம அமைதியா இருக்கீங்களா?” என்று சுந்தரி இருவரையும் பார்த்து முறைக்க.
“சுந்தரி நான் உனக்காக உன் புருஷன்கிட்டே சண்டை போட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்னையே திட்ற? இதுக்குதான் நல்லதுக்கே காலம் இல்ல” என்று அமைதியானான்.
“ஒன்னும் இல்ல சாதாரண மயக்கம் தான். ஆனா நீங்க தப்பிச்சிங்க இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிருந்தா அவ்ளோ தான். இவள் மாசமா இருக்கா. நல்ல வேலை ரெண்டு பேரும் நல்லாருக்காங்க” என்றார்.
கண்விழித்த பெண்ணிடம் “நீ யாரும்மா? எப்படி வண்டி முன்னாடி வந்து விழுந்த?” என்று சுந்தரி கேள்விகளை அடுக்கி கொண்டே போக, “மா இப்போ தான முழிச்சிருக்காங்க கொஞ்சம் தெளிவாகட்டும் அப்புறம் கேக்கலாம். ஏதாவது சாப்பிடக்கொடுங்க” என்றான்.
“இல்ல. எனக்கு எதுவும் வேண்டாம். ரொம்ப நன்றிம்மா. களைப்பா இருந்தது. ஓரமா உட்காரலாம்னு நினைக்கும் போதே மயக்கம் வந்திட்டு.” என்றாள்.
அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த பெரியவரை அவள் பார்க்க. “என்னம்மா அப்படி பார்க்கிற என் வண்டி முன்னாடி தான் விழுந்துட்ட. நான் தான் என் வீட்டுக்கு கொண்டு வந்துருக்கேன். இவங்க என் மனைவி சுந்தரி. பேமஸ் கைனகாலஜிஸ்ட்.” என்று கூறினார்.
“ரொம்ப நன்றி சார்” என்றாள்.
ஜூசை பருகியவள். “நான் கிளம்பிறேன்” என்றாள்.
அவளை உற்று பார்த்து கொண்டிருந்த சுந்தரி அழுது அழுது விழிகள் சிவந்திருப்பதை கவனித்து “கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம் மா. ரொம்ப வீக்கா இருக்க.” என்றாள்.    
“உன் பேர் என்னம்மா?”
“ஸ்ருஷ்டிமீரா” என்று கூறிய நொடி திரும்பி பார்த்தன இரு விழிகள்.
“உங்க வீடு எங்கன்னு சொன்னிங்கன்னா? நான் போற வழில உங்க வீட்ல டிராப் பண்ணிருவேன்” என்றான் சுந்தரியின் மகன் க்ரிஷ்வந்த்.
ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, அவளின் விழிகள் மட்டும் கண்ணீருக்கு தாரை வார்க்கபட்டிருந்தன.
“அழாதம்மா. உனக்கு உறவுன்னு யாரும் இல்லையா?” என்று சுந்தரி கேட்க.
“இல்லம்மா. நான் ஒரு அனாதை” என்றாள்.
“உன் வீட்டுகாரர்” என்று மெதுவாய் கேட்க.
“என்ன பொருத்தவரைக்கும் அவர் இறந்து மூணு நாள் ஆகுது” என்றாள்.
“என்னம்மா சொல்ற?” என்று பதறியபடி கேட்கும் சுந்தரியை பாசமாய் பார்த்தவள்.
“பயப்படாதிங்கம்மா. என் வாழ்க்கைல புருஷன்ற காரக்ட்டர் தான் செத்துட்டார். ஆனா அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான். இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காதிங்க மா” என்றாள்.
“நீ வேணா இங்கயே கொஞ்ச நாள் தங்கிக்கோம்மா “ என்றவுடன் உடன் இருவரும் அதிர்ச்சியாய் சுந்தரியை நோக்க.
“இல்லம்மா நான் என்னைக்கும் யாருக்குமே பாரமா இருக்க கூடாதுன்னு எங்கப்பா சொல்லிருக்கார். எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யமுடியுமா?’ என்றாள்.
“என்னம்மா?”
“எனக்கு ஒரு ரெண்டு நாள் மட்டும் தங்கற மாதிரி நல்ல ஹாஸ்டல் இருந்தா சொல்லுங்க. அதுக்குள்ள நல்ல வீடா வாடகைக்கு பார்த்து போய்டுவேன்” என்றாள் மீரா.
சில நொடி யோசித்துவிட்டு, “உனக்கு சம்மதம்னா இங்கயே எங்க வீடு கெஸ்ட்ஹவுஸ் சும்மா தான் இருக்கு நீ அங்க ரெண்ட்கு இருக்கலாம்” என்றார்.
சிறிதுநேரம் யோசித்து விட்டு “ரொம்ப நன்றிம்மா. நான் நாளைக்கே வந்துடறேன்” என்றாள்.      

Advertisement