Advertisement

Episode 28

“எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்” என்றான் கவிந்தமிழன்.

“எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை… உன் திறமைகள் வேண்டும் எனக்கு” என்றான் கனியழகன்.

“அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன்  இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்…” என்றான் கவிந்தமிழன் சிரித்துக்கொண்டே.

“சிரி… நன்றாக சிரி… இனி உன்னிடம் பேசி பயனில்லை. உன்னை போல் மாறி நான் அரண்மனைக்கு செல்ல போகிறேன். இன்றே உன் மலரிதழை என்னவளாக்க போகிறேன் ” என்றான் ஏளனமாய் கனியழகன்.

அவனை சிறிதும் கோபமில்லாமல் பார்த்து சிரித்தான் கவிந்தமிழன்.

“எங்களின் மணவாழ்க்கையை என்ன நினைத்தாய் நீ? வெறும் சதையால் ஒன்று சேரவில்லை… உள்ளதால் உணர்வால் உயிரால் ஒன்றாய் இணைத்துள்ளோம்… உன் கரம் என் மலரிதழின் மேல் பட்ட அடுத்த நொடி உன் மரணம் நிச்சயம். அதனால் தான் கூறுகிறேன் உன் உயிர் காத்துக்கொள் கனி” என்றான் கவிந்தமிழன்.

“உன்னை இப்பொழுதே கொன்று விடுகிறேன்” என்று அவனை கனி நெருங்க தடுத்தான் மருதன்.

“என்று சதி செய்து என் முதுகில் குத்தி, இங்கு அழைத்து வந்தாயோ அன்றே தோற்றுவிட்டீர் இருவரும். என்னை கொல்லவேண்டுமா? தாராளமாக கொல்.. உயிருக்கு அஞ்சியவன் வீரனாக முடியாது. எனக்கு பின் என் மகன் வருவான்” என்றான் கவிந்தமிழன்.

இருவரும் அதிர்ச்சியாய் கவிந்தமிழனை பார்க்க.

“என்ன அப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு எப்படி தெரியும் என்றா? என் மலர்க்கும் எனக்கும் மட்டும் உள்ள ரகசிய தொடர்பு எங்கள் காதல் புறா. அது வந்ததையும் அறிவேன்… என்னவள் எனக்காக அனுப்பிய செய்தியையும் அறிவேன்.” என்றான் மெல்ல புன்னகைத்து.

சாவின் விளிம்பில் நிற்கும்போதும் அஞ்சாமல் நிற்கிறானே என்று இருவரும் அதிசயமாய் பார்த்தனர்.

“கனி நீ செல். அடுத்த திட்டத்தை செயல்படுத்து. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றான் மருதன்.

“சரி” என்று தலையசைத்து கவிந்தமிழனை முறைத்துவிட்டு சென்றான் கனியழகன்.

கவிந்தமிழனை போல் சிறிதும் வேறுபாடின்றி மாறி சென்றான் கனி.

அவனை கண்டதும் ஆனந்தமாய் அனைவரும் மலரிடம் சொல்ல..

ஆவலோடு ஓடிவந்த மலர் அவனை கண்டதும் அணைத்திட நெருங்க, கவிந்தமிழனின் வார்த்தைகளில் விலகி நின்றான் கனி.

ஏமாற்றம் நிறைந்த சோக விழிகளால் அவனை மலர் நோக்க, அள்ளி அணைத்திட துடிக்கும் கரங்களுக்கு விலங்கு பூட்டிட்டான் கனி.

“வெகுநாள் பயணம், உடல் அசதி களைப்பு தீர குளிக்கவேண்டும்” என்றான் கவிந்தமிழனின் குரலில்.

“வாருங்கள்” என்று அழைத்து சென்று தங்களின் அறையில் விட்டவள்.

“நீங்கள் தயாராகுங்கள் உங்களுக்கு உண்ண உணவு எடுத்து வருகிறேன்” என்று சென்றாள் மலர்.

பின்னர், உணவருந்தி கொண்டே, “எங்கே அண்ணா வந்திருப்பதாக செய்தி கேட்டேன்.” என்றான் கனி (கவி) செந்தமிழ் பற்றி அறிந்து கொள்ள.

“அவர் அண்டை நாடு பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை வந்துவிடுவார்.” என்றாள் மலர்.

உணவிற்கு பின் சிலவற்றை உரையாடியபின் உறங்க தங்களின் அறை நோக்கி சென்றனர்.

கனியழகனுக்கு உள்ளுக்குள் பதட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

ஒளி தரும் நிலவை பார்த்துக்கொண்டு நின்றவளை நெருங்கினான் கனி.

அவனின் நெருங்குதல் தெரிந்தும் அமைதியாய் இருக்க, அவளின் செங்கழுதினில் தன் வெப்ப சுவாசகாற்றை செலுத்தி நிற்க, தன்னவனுக்காக ஏங்கியவளின் காதலும் பற்ற, அவனுக்குள் தஞ்சம் புக, திரும்பி அணைத்த மறுநொடி அவனைவிட்டு விலகினாள்.

அவனின் சுவாசத்தில் வந்திருப்பவனை கண்டுகொண்டவள் வாளினால் அவன் தலைகொய்ய நினைத்தாள்.

‘இவன் என்னவர் அல்ல. எவ்வளவு துணிவிருந்தால் என் மணாளனின் கோலம் கொண்டு என்னை அடைய வந்திருப்பான். இவன் தலையை கொய்யாமல் விடப்போவதில்லை.’ என்றிருக்க.

அவளின் திடீர் விலகலில் அதிர்ச்சியானான்.

‘கண்டுகொண்டாளோ. அப்படி என்றால். இனி இவள் இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தன் இடைவாளின் மேல் கரம் வைத்து, “என்னவாயிற்று அன்பே?” என்றான் ஒன்றும் அறியாதது போல் கனியழகன்.

‘அவசரம் வேண்டாம். தன்னவரும் இல்லை, மாமாவும் இல்லை. இந்நேரம் பொறுமை வேண்டும். அவன் வழியிலேயே இவனை பிடிக்க வேண்டும்’ என்று நினைத்தவள்.

“ஒன்றும் இல்லை. உங்களுக்கு பால் எடுத்து வரசொன்னேன். வரவில்லையோ. நான் எடுத்து வந்து விடுகிறேன்” என்று வேகமாக வெளியேறினாள் மலரிதழ்.

பாலோடு வந்தவள் கரத்தினில் இருந்த பாலை வாங்கிய கனியழகன் மலரிதழின் இதழ் மேல் இருந்த பால் துளிகளை துடைக்க போக, “என்ன?” என்று வேகமாக இதழை துடைத்தாள்.

“நானும் பால் அருந்திவிட்டு வந்தேனா அதான்.” என்று சிரித்தாள். அவளை விழிகளால் விழுங்கியபடி குடித்தது முடித்தான் கனி பாலை.

“எனக்கு உறக்கம் வருகிறது.” என்று மலர் படுத்துக்கொள்ள.

‘இன்று இல்லையென்றால் என்ன? நாளை நீ என்னவள் தான்’ என்று சிரித்தபடி கனியும் மறுபுறம் படுத்துக்கொண்டான்.

சிறிதுநேரத்தில் எழுந்த மலர் அவன் மயங்கியவனை கண்டு வெளியேறினாள்.

“யாரங்கே? உள்ளே இருப்பது நம் மன்னர் அல்ல? கனியழகன். இங்கேயே வைத்து சிறைபிடியுங்கள் அவனை” என்றாள்.

“மிகுந்த எச்சரிக்கை தேவை. எங்கும் அவன் தப்பி செல்லக்கூடாது” என்று அருகில் ஒருந்த அறையில் ஓய்வு எடுக்க சென்றாள்.

‘காலை மாமா வந்தபின் இவனுக்கு தகுந்த தண்டனை உண்டு. எங்கிருக்கிறீர்.? நீர் இல்லாத நேரம் உங்களின் உருவத்தில் இவன் செய்ய இருந்த அநியாயம். கடவுளே என் வயிற்றில் இருக்கும் தங்களின் குழந்தைக்கு எதாவது ஒன்று ஆகியிருந்தால் என்ன செய்வது?’ என்று எண்ணியபடி உறங்கினாள்.

Advertisement