Advertisement

14
“ஹலோ! நான் அகல்யா பேசுறேன்” என்றாள் மெதுவாக.
சில நிமிடம் அமைதியாக இருந்த எதிர்முனை, “அம்மாடி அகல்யா. எப்படிடா இருக்க? இப்போ தான் இந்த அம்மா ஞாபகம் வந்ததா?” என்றார் கேவியபடி.
“நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் கண்ணீருடன் இவளும் அன்னையின் குரலில் தெரிந்த ஆனந்தத்தை கண்டுகொண்டு.       
“எனக்கென்ன இருக்கேன் நல்லா தான்.” என்றார் வேதனையாய்.
கேள்விகேட்கும் படி சைகை செய்தாள் ஷன்மதி.
“ஹ்ம்ம்.. நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும். எனக்கு அப்பா ஏற்பாடு பண்ண கல்யாண மண்டபத்துக்கு அண்ணன் எப்படி வந்தார்? உண்மைய சொல்லுங்க? அண்ணனும் அப்பாகூட சேர்ந்து இதை ஏற்பாடு பண்ணாரா?“ என்றாள் அகல்யா பதட்டமாய்.
நந்துவையும் பதட்டம் தொற்றிக்கொள்ள போனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
சில நொடி மௌனங்களுக்கு பின், “சத்தியமா உங்க அண்ணனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லம்மா. அவனை கூப்பிட்டதே எனக்கு முதல்ல தெரியாது. உங்கப்பா தான் மாப்பிள்ளையையும் ஷ்ரவனையும் பிரிக்க ஏதோ திட்டம் போட்டு எனக்கும் உங்க அப்பாக்கும் தான் கோவில்ல கல்யாணம். பையன்ற பேருக்காகவாது யாரும் என்னை அசிங்கபடுதாம இருக்க முன்னாடி வந்து நில்லுன்னு வர சொல்லிருக்கார்.
அதனால தான் அவனும் வந்துருக்கான். ஆனா, மாப்பிள்ளை தான் பதட்டத்துல ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டார்.” என்றார் அழுதபடி.
நந்தனுக்கு பேரதிர்ச்சியை தந்த இந்த செய்தியால் பொத்தென்று தரையில் அமர்ந்தான்.
‘தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். தன் நண்பன் அப்பொழுதும் உண்மையை எடுத்துகூற வந்தும் கேட்காமல் வந்துவிட்டோமே’ என்று கண்கள் கலங்கினான்.
“அதுக்கப்புறம் உன்னை நிறைய தேடினோம். கண்டுபிடிக்க முடியலை. உங்கப்பா உன் மேல இருந்த கோவத்துல அன்னைக்கு எதோ பேசிட்டு வந்துட்டாரே ஒழிய நீ இல்லாம ரொம்ப தவிச்சி போய்ட்டாரு. அப்போ வந்து தாங்கினது உங்க அண்ணன் தான். ஆனா…” என்று சொல்ல வருவதற்குள் என்ன சொல்ல போகிறார் என்பதை அறிந்த ஷன்மதி வேகமாக போனை துண்டித்தாள்.
“கேட்டிங்களா? உங்க அம்மா என்ன சொன்னாங்க? யாரு மேல தப்பு. என் புருஷன் மேலயா? “ என்றாள் அகல்யாவை பார்த்து.
“என்னை மன்னிச்சிருங்க அண்ணி. அப்பவும் நான் இவருக்கு சொன்னேன்.  என்னைக்கும் அண்ணன் அப்படி பண்ண மாட்டார்ன்னு” என்று அழுதாள்.
“நீங்களும் அவரும் பிரெண்ட்ஸா இருந்திருக்கிங்க. அவர் அப்படி பண்ணிருப்பாரான்னு ஏன் ஒரு நிமிஷம் கூட பொறுமையா யோசிச்சு பார்க்கலை. அவ்ளோ தானா நீங்க உங்க பிரெண்ட் மேல வச்ச நம்பிக்கை.” என்றாள் நந்துவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
என்ன பதில்கூறுவது என்று தெரியாமல் அவளின் கண்களை பார்க்க முடியாமல் தலை தாழ்த்தினான் நந்து.       
“மன்னிப்பு கேட்டாகூட நான் பண்ண தப்பு சரி ஆகாது. நான் ஷ்ரவனை பார்க்கணும். எங்கம்மா அவன் வெளிய இருக்கானா?” என்றான் பார்வையை வெளியே சுழலவிட்டபடி.
ஒரு நொடி எதுவும் பேசாமல் இருந்தவள்.
“திடிர்னு அவரை பத்தி உங்களுக்கென்ன கவலை. என் புருஷன் மேல எந்த தப்பும் இல்லைன்னு நிருபிச்சிட்டேன். அதுபோதும் எனக்கு. நான் போறேன்.” என்று வெளியே செல்ல திரும்பினாள்.
“நான் பண்ணது தப்பு தான். இந்த அண்ணனை மன்னிக்க மாட்டியாம்மா.“ என்றான் நந்து குரல் தழுதழுத்து.
பட்டென்று நின்றவள் திரும்பி நந்துவை பார்க்க.
“நாங்க எப்பவுமே பேசிப்போம். எனக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்ல அதனால உன்னோட மனைவி தான் எனக்கு தங்கச்சின்னு. அப்போ நீ தான் என் தங்கச்சி. நான் எவ்வளோ கோபப்பட்டாலும் அவனால என் மேல கோபமா இருக்கமுடியாது. எங்கம்மா அவன்?” என்றான் கவலையாய் நந்து.
என்ன சொல்வது என்று தெரியாமல் “அண்ணா” என்று மெதுவாய் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் ஷன்மதி.
“அண்ணி! என்னாச்சு ஏன் அழறிங்க?” என்று ஷன்மதியை திருப்பியவள் அப்பொழுதான் கவனித்தாள். தாலி இருக்க வேண்டிய மதியின் கழுத்து வெற்றிடமாய் இருப்பதை.
“அண்ணி உங்க கழுத்துல தாலி எங்க?” என்றாள் அதிர்ச்சியாய்.
அகல்யாவை கட்டிக்கொண்டு நீண்ட நேரம் அழுத ஷனம்தி.
“மதி.. நான் இங்க தான் இருக்கேன். அழாதடா ப்ளீஸ். எனக்கு கஷ்டமா இருக்கு. நான் உன்கூட இருக்கணும்னா நீ அழக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல” என்றான் ஷ்ரவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“இல்ல நான் அழலை” என்று கண்களை துடைத்தவள் அங்கிருந்த இருவரையும் பார்த்து.
“அதை கட்டினவர் இப்போ இந்த உலகத்துலயே இல்லாததால அதை கழட்டிட்டாங்க” என்றாள் அழுதபடி.
“அண்ணி என்ன சொல்றிங்க?” என்று கத்தினாள் அகல்யா.
“ஆமா அகல்யா. உங்கண்ணன் என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டார்.” என்றாள் பாரம் தாங்கிய மனதோடு.
“இல்ல… இப்படி நடந்துருக்காது…. அவன் நல்லா தான் இருப்பான்.“ என்ற நந்து ஷன்மதியை முறைத்து.
“நீ யாரு? எதுக்கு அவனோட மனைவின்னு பொய் சொல்லிட்டு இங்க வந்துருக்க? என் ஷ்ரவனுக்கு எதுவும் ஆகிருக்காது. அவன் நல்லவன்” என்று புலம்பியபடி தரையில் அமர்ந்தான் நந்து.
“நீ அவன் மனைவி இல்ல…. நீ பொய் சொல்ற ..” என்றான் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.          
.  .
   .

Advertisement