Advertisement

“உன்னோட இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்” என்று குரல் மட்டும் வந்தது.
“ஆனா அங்க யாருமே இல்ல… எனக்கு உதறல் எடுத்துடுச்சு. அந்த பெரியவர் சொன்னதை கேட்டு அப்படியே போகாம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். பயந்துட்டே “யாரு..? ன்னு கேட்டேன் ” என்றான்  ஷ்ரவன்.
“நீ சொல்றதை கேட்டா எனக்கு பயமா இருக்கு ஷ்ரவன்” என்றாள் ஷன்மதி.
“பயப்படாத மதிக்குட்டி. நான் தான் இருக்கேன் இல்ல ” என்று அவளின் தலையை கோதிவிட்டான் ஷ்ரவன்.
“அவளுக்கு பயமே நீ இப்படி இருக்கிறது தான்டா” என்றான் நந்து.
ஷ்ரவன் அவனை முறைக்க, “அண்ணா .. சும்மா இருங்க” என்றாள் ஷன்மதி.
“மேல சொல்லு ஷ்ரவன்” என்றாள் ஷன்மதி.
“நாங்க உன்  முன்னாடி தான்  இருக்கோம். எங்களை தெரியலையா? என்று குரல் மட்டும் மறுபடியும் வந்தது.” என்றான் ஷ்ரவன்.
“அப்புறம் குரலோட கூட ரெண்டு பேர் வந்தார்களா?” என்றான் நந்து.
“இதுக்கு தான் இவன் தனியா பேசிட்டு வரட்டும்னு சொன்னேன். நீ தான் கேக்கலை” என்றான் ஷ்ரவன் ஷன்மதியை பார்த்து.
இவர்களின் சின்ன குறும்பு சண்டைகளை பார்த்து சிரித்தபடி வந்தாள் ஷன்மதி.  
“சரி டா. நான் ஒன்னும் சொல்லலை. நீ கன்டினியூ பண்ணு” என்றான் நந்து.
“சுற்றி முற்றி குரல் வந்த திசைல என் பார்வையை சுழலவிட அங்கு அந்த ஓவியத்தில் இருப்பதை போன்று ரெண்டு பேர் நின்றிருந்தனர். எனக்கு வேர்த்து கொட்டிருச்சு. என்ன பண்றதுன்னு தெரியலை. கடவுளே இது கனவா இருக்கக்கூடாதான்னு கண்ணை மூடி வேண்டிகிட்டேன்” என்றான் ஷ்ரவன்.
“சொல்ற பேச்சை கேக்காம அடங்காம போயிட்டு அப்புறம் கடவுளே என்னை காப்பாத்துனா என்ன அர்த்தம்?” என்றான் நந்து.
“டேய் நீ என்னை காப்பாத்த வந்தியா? இல்லை இப்படி எரிச்சல் மூட்ட வந்தியா?” என்றான் கோபமாய் ஷ்ரவன்.
நந்து எதுவும் பேசாமல் ஷ்ரவனை பார்த்தான். இருவரின் பார்வைகளும் ஒரு சில நொடிகள் தொடர, முதலில் புன்னகைத்தது ஷ்ரவன். நந்துவும் அடுத்து சிரிக்க. ‘இங்க என்ன நடக்குது? இதுங்க இவ்ளோ நேரம் எப்படி சண்டை போட்டுக்கிட்டுச்சுங்க. இப்படி சிரிக்குதுங்க? நான் இங்க தான இருக்கேன். ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா பார்க்காம?’ என்று தன்னையே கேட்டு கொண்டாள் ஷன்மதி.
  “டேய் நீ இன்னும் மாறவே இல்லடா. அதே குறும்புக்கார நந்து தான்டா. என்னை சிரிக்க வைக்கிறதுல உன்னை விட்டா அடிச்சிக்க ஆளில்ல.” என்று நந்துவின் தோள்களில் லேசாக தட்டினான்.
“உனக்காக எதுவானாலும் செய்வேன்டா” என்றான் நந்து சீரியஸாக.
“ஹெலோ நானும் இங்க தான் இருக்கேன்” என்றாள் ஷன்மதி.
“அது ஒண்ணுமில்லை மதிம்மா. நான் எப்போ டென்ஷனா இருந்தாலும் இவன் இப்படி தான் என்னை கடுப்பேத்துறேன்னு ரொம்ப படுத்தி எடுத்துருவான்.” என்றான் ஷ்ரவன்.
“நல்ல பிரெண்ட்ஸ்” எண்று தலையில் அடித்துக்கொண்டாள் ஷன்மதி.
“இப்போ சொல்லு ஷ்ரவன். அதுக்கு அப்புறமென்ன ஆச்சு? யாரு அவங்க?” என்றான் விளையாடாமல் நந்து.
“அது எனக்கும் தெரியலை டா. அப்புறம் தான் தெரிஞ்சிகிட்டேன் ஷன்மதியோட அண்ணன்,  என்னோட இன்னொரு பிம்பம் மாதிரி நின்னிட்டு இருந்தவன் என்னோட தம்பி” என்றான் ஷ்ரவன்.
“என்னது எனக்கு ஏது அண்ணன்?” என்றாள் ஷன்மதி.
“அது அப்போ உன்னோட அண்ணனா இருந்தவன். இன்னொன்னு என்னோட தம்பின்னு சொன்னது என் தம்பி தான். அதாவது என் அப்பா அம்மாகூட இறந்துட்டான்னு நினைச்சவன். உயிர் பிழைச்சிருக்கான். ஆனா எனக்கு எமனா வருவான்னு நினைக்கல” என்றான் ஷ்ரவன்.
“என்னது உன் தம்பியா? அவன் எப்படி இங்க வந்தான்?” என்றான் நந்து.
“என்னை போல அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருந்தவனை இந்த கொல்லிமலைல வாழற யாரோ ஒருத்தர் தன் மகனா வளர்த்துருக்கார். ஆனா என்னோட கெட்ட நேரம் அவன் இங்கயே இருந்ததால அவனுக்கு ஒரு சில சித்தர்களோட தரிசனமும் கொஞ்சம் பூர்வ ஜென்மத்து ஞாபகங்கள் வந்துருக்கு.” என்றான் ஷ்ரவன்.
“அப்போ உங்க தம்பி எங்க இப்போ?” என்றாள்  ஷன்மதி.
“அவன் தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம்” என்றான் மெதுவாய் மிகுந்த வருத்தத்துடன்.
“என்ன சொல்ற ஷ்ரவன்? உன் தம்பி தான் இதுக்கு காரணமா?” என்று தலையை பிடித்துகொண்டாள் ஷன்மதி.
“அங்க இருந்து நான் அப்போ எப்படியோ தப்பிச்சு வந்துட்டேன். ஆனா அதுல உன் அண்ணன் ஒரு சில தவமுனிகளோடு இணைந்து  ஒரு சில கலைகளை கத்துக்கிட்டு இருக்கான். அதோட என் முந்தைய பிறவியில் இருந்த என் விசேஷ சக்திகளை எடுத்து என் தம்பிக்குள் செலுத்தி என்னை கொல்வது தான் அவர்களின் திட்டம். ” என்றான் ஷ்ரவன்.
“அப்படி உங்க மூணு பேருக்கும் என்ன தான் நடந்தது. விடாம துரத்தர அளவுக்கு?” என்றாள் ஷன்மதி.        
தன் கைகளில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தவன் அதை ஷன்மதியின் கைகளில் கட்டினான்.
“இது உனக்கு ரொம்ப நெருக்கமானவங்க உன்னை பத்தி கேட்கும் போது மட்டும் வேற வழியே இல்லைங்கும் போது, கழட்டி இதை அவங்க கைல கட்டுன்னு அந்த பெரியவர் கொடுத்தார். அங்க இருந்து வந்தப்புறம் இந்த ஆறு மாசமா எனக்கு அப்பப்போ ஒரு சில ஞாபங்கங்கள் வந்துகிட்டு என்னைவிடாம துரத்துட்டு  இருந்தது. ஒரு நாள் கோவில்ல கடவுள் போல அந்த பெரியவரை பார்த்தேன். அப்போ அவர் உனக்கு இதுல ரொம்ப பெரிய சோதனைகளா வரும். உன்னோட உயிர்ல  பாதியா இருக்கிறவளோட உதவியால் தான் இதுல இருந்து உன்னால் கடந்து வரமுடியும்னு சொன்னார்” என்றான் ஷ்ரவன்.     
மதி எதுவும் பேசாமல் அமைதியாய்  ஷ்ரவனை பார்த்துக்கொண்டிருக்க. 
“மதி எல்லாத்தையும் என்னால சொல்லமுடியாது. அதனால நீயே தெரிஞ்சிக்கோ” என்று ஷ்ரவன் கூறியநொடி ஷன்மதியின் மனக்கண்ணில் முந்தைய ஜென்மத்து நிழல் ஆட தொடங்கியது.  
******
“அது எப்படி சாத்தியமாகும் நானும் அவனும் ஒரே நேரத்தில் தானே பிறந்தோம் என்னை விட இரு நாழிகை தானே அவன் பெரியவன். பின்பு எப்படி இந்த சில விஷேஷ சக்திகள் அவனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்றான்.” என்று ஆத்திரம் தாளாமல் தன்  முன்னே இருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முஷ்டியால் குத்த கண்ணாடி நூற்று கணக்கான தூண்டுகளாய் சிதறின தரையில்.
“ஆத்திரம் வேண்டாம். கனியழகா!” என்று அவன் தோளில் கரம் வைத்து அவனை ஆசுவாசப்படுத்த முயற்சிக்கும் தன் நண்பனின் கரங்களை வெடுக்கென்று விலக்கிவிட்டான் கனியழகன்.                                
“மதியோடு செயல்படவேண்டும் கனி. இப்படி மதிகெட்டது  போல் நடவாதே” என்று உரிமையாய் கண்டித்தான் அவனின் உயிர்தோழன் மருதன்.
அவனின் கண்டிப்பில் தன்னிலை உணர்ந்தவன் பார்வையால் நண்பனிடம் கெஞ்சல் மொழியில் மன்னிப்பு கோரி பரிபாஷனை செய்தான்.
அவனின் சிறுப்பிள்ளைதனத்தில் குருஞ்சிரிப்பொன்றை  உதிர்த்த மருதன் அவனை ஆரத்தழுவிக்கொண்டான். 
இவர்களின் நட்பு வேண்டுமானால் பெரியதாய் தெரியலாம். ஆனால் இவர்களின் உள்ளங்களில் நஞ்சு மட்டுமே கலந்திருந்தது.
அதிலும் இருவருக்கும் ஒரே ஒத்துமை அவர்களின் பரம எதிரியாக கருதுவது இத்திருநாட்டில் எல்லோரும் போற்றும் கவிதை போன்ற எழிலுடைய கவிந்தமிழனை அழிப்பது மட்டும் தான்….     

Advertisement