Ramadan 2021- Day 4

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களிடம் அறவழிபோதம் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் போதனைக்கு செவியேற்று அவர்கள் மீது விசுவாசம் கொண்டு ‘இம்ரான்’ என்பவர் செயலாற்றிக் கொண்டிருந்தார்.

இம்ரான் அல்லாஹ்வின் நல்லடியாராக இருந்தார். அவரது மனைவி ஹன்னாவும் ஒரு நல்லடியாராகவே இருந்தார். இத்தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாகவே மக்கள்பேறு இல்லாதிருந்தது. . நீ எங்களுக்கு ஓர்ஆண் மகவு அருளினேயானால் நான் அந்தக் குழந்தையை முழுக்க முழுக்க உன் இல்லத்தின் சேவைக்கே அர்ப்பணித்து விடுவேன் என்று பைத்துல் முகத்தஸில் இறைவனிடம் வழிப்பட்டு நேர்ச்சை செய்து கொண்டார்.

இம்மாதிரி ஹன்னா நேர்ந்து கொண்ட சிறிது நாட்களிலேயே கருவுற்று விட்டாள். தாம் கருவுற்றதை அறிந்து சந்தோஷப்பட்டு பைத்துல் முகத்தஸுக்கு சென்று யா அல்லாஹ் எனக்கு ஆண் குழந்தையைக் கொடுப்பாயாக! அதை உன் இல்லத்தில் தங்கி சேவை செய்துவர அர்ப்பணித்த விடுவேன் என்று வேண்டிக் கொண்டார்.

இதனை
‘இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும்> நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்”என்று கூறியதையும்
– அல்குர்ஆன் 3:35.

இதன்பின் சில மாதங்களில் இம்ரான் இறந்து விட்டார். அவரது மறைவிற்குப் பிறகு ஹன்னா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அவர் தமக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று நம்பி மிகவும் ஆசையோடு இருந்தார். அதனால் அவருக்கு ஏமாற்றமாக போய்விட்டது. பெண் மகவை பள்ளியில் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டார்களே! தமது நேர்ச்சை என்னாவது? என்று பெரும் துக்கப்பட்டார்கள். இச்சமயத்தில் அன்றிரவு அவரது கனவில் ஓர் அசரீரி குரல் பின்வருமாறு ஒலித்தது.
ஓ ஹன்னாவே! நீ நேர்ந்து கொண்டபடி உனது குழந்தையை மஸ்ஜிதின் பணிக்கு ஒப்படைத்து விடு. அல்லாஹ் உனது காணிக்கையை ஏற்றுக்கொண்டான்’.
இதனைக் கேட்டதும் திடுக்கிட்டு விழித்தெழுந்த ஹன்னா தமது குழந்தைக்கு மர்யம் என்று பெயர் சூட்டினார்கள். மர்யம் என்றால் வணக்கம் புரிபவர் என்ற பொருளும் இறை இல்லத்தில் ஊழியம் புரிபவர் என்ற பொருளும் உண்டு.




3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம்> அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார் “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்”என்று அவள்(பதில்) கூறினாள்.

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

மறுநாள் காலை குழந்தை மர்யமை ஒரு துணியால் போர்த்திக் கொண்டு மஸ்ஜித் நிர்வாகிகளை சந்தித்து தாம் அல்லாஹ்விடம் நேர்ந்து கொண்டதை சொல்லி அதற்காக இதை ஒப்புக் கொள்ளும்படி சொன்னார்கள்.
குழந்தை அழகாக இருந்ததால் பலரும் குழந்தையை வளர்க்க போட்டி போட்டார்கள். ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் வயதில் மூத்தவனாக இருக்கிறபடியால் இக்குழந்தையின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். மேலும் என் மனைவி ஈஷாஉ ஹன்னாவின் சகோதரியாகவும் இருக்கிறார் என்றார்கள்.

அங்கு இவர்களையும் சேர்த்து மொத்தம் 21பேர் இருந்தனர். அவர்களில் எவரும் ஹழ்ரத் ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், ஒவ்வொருவரும் தத்தம் எழுதுகோலின் மீது அவரவர் பெயர்களை எழுதி உர்துன் ஆற்றில் எறிய வேண்டியது. அவ்வாறு எறியப்படும் எழுதுகோலில் எவருடைய எழுதுகோல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாது ஒரே இடத்தில் மிதந்து கொண்டு தங்கிவிடுகிறதோ அந்த எழுதுகோலுக்குரியவர்களிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்து விடுவது என்று முடிவெடுத்தனர்.


ஹழ்ரத் ஜகரிய்யா நபி அவர்களின் எழுதுகோலைத் தவிர மற்றெல்லாவர்களின் எழுதுகோலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அதன்படி குழந்தை மர்யமை அன்னவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் பேணிப்போடு வளர்த்து வந்தார்கள். குழந்தை சற்று பெரியதானதும் தங்கள் வீட்டினருகேயே ஒரு சிறு வீட்டைக் கட்டி அதில் அவர்களை இருக்கச் செய்து உணவுகளை அவர்களுக்கு கொடுத்து வந்தார்கள்


இவ்வாறு சில காலம் சென்றபின் சிறுமி மர்யமின் வீட்டிற்குள் நுழைந்த ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு விதவிதமான கனிவர்க்கங்கள் இருக்கக் கண்டு மிகவும் அதிசயத்துப் போனார்கள். மேலும் அந்தந்த பருவங்களில் விளையும் கனிவர்க்கங்களுக்கு மாற்றமாக புதிய கனிகள் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் யார் உங்களுக்குத் தருகிறார்கள்? என்று மர்யமிடம் கேட்டார்கள் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து வருகின்றன. அவன் தான் நாடியவர்களுக்கு இவ்வாறெல்லாம் உணவளிக்கிறான்’ என்று கூறினாள் சிறுமி மர்யம்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு சென்று வந்துக் கொண்டிருந்தார்கள். இவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்த பனீ இஸ்ரவேலர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஜகரிய்யா நபிக்கு எதிராக ஆபாசமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை அவர்களுக்கெதிராக கிளர்ந்து எழச் செய்தார்கள். அவர்களுக்கு விரோதமாகப் பல கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். ஊர் மக்கள் எல்லாம் அவர்களை ஒழித்துக் கட்ட முடிவு செய்தார்கள்..
 

fathima.ar

Well-Known Member
இந்த குற்றச்சாட்டு ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்று நாளை பார்ப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top