Ramadan 2021 - Day 23 Prophet Muhammad

Advertisement

fathima.ar

Well-Known Member
அடுத்து, மரணத்துக்குப் பின் எழுப்பப்படுவதை அவர்கள் மறுத்து வந்தார்கள். அது அறிவுக்கு எட்டாததாகவும் ஆச்சரியமானதாகவும் அவர்களுக்குத் தென்பட்டது. அவர்களின் இக்கூற்றை பற்றி இதோ அல்குர்ஆன் விவரிக்கிறது:

நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும் போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) (அவ்வாறே) நம்முடைய மூதாதையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்” என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 37:16, 17)

(அன்றி, “இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப்போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீளவைக்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை” என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 50:3)

எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அன்றி, (இம்மனிதர்) “அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ” என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று! எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 34:7, 8)

மரணத்திற்கு பிறகு எழுப்படுவதை பரிகாசம் செய்து அவர்கள் கவிதையும் பாடினர்,

“மரணமா? பிறகு எழுப்புதலா? பிறகு ஒன்று சேர்த்தலா? உம்மு அம்ரே இது என்னே கற்பனை கதை?”

உலகில் நடைபெறும் நிகழ்வுகளை அல்லாஹ் அவர்களது சிந்தனைக்கு உணர்த்தி, அவர்களது கூற்றுக்கு மறுப்புரைத்தான். அதாவது, அநீதமிழைத்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமலும், அநீதத்திற்குள்ளானவன் அதற்குரிய பரிகாரத்தைப் பெறாமலும் மரணித்து விடுகிறான். அவ்வாறே, நன்மை செய்தவன் அதற்குரிய நற்பலனையும், தீமை செய்தவன் அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்காது மரணமடைகின்றான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கையும் அங்கு ஒவ்வொரு செயலுக்குமான தகுந்த கூலியும் என்ற நியதி இல்லாதிருந்தால், இந்த இரு வகையினரும் சமமாகி விடுவார்கள். அதுமட்டுமின்றி பாவியும் அநீதமிழைத்தவனும் நல்லவரை விடவும் அநீதமிழைக்கப்பட்டவனை விடவும் பாக்கியத்திற்குரியவர்களாக ஆகி விடுவார்கள். ஆனால், நீதமானவனான அல்லாஹ் தனது படைப்பினங்களை இத்தகைய முரண்பாட்டில் வைத்துவிடுவான் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பளிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 68:35, 36)

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறை அச்சமுடைய வர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (அல்குர்ஆன் 38:28)

மறுமுறை எழுப்புவது அல்லாஹ்விற்கு முடியுமா? என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இதோ அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.

(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான். (அல்குர்ஆன் 79:27)

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 46:33)

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (அல்குர்ஆன் 56:62)

அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 30:27)

எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104)

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமர் (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு?) எனினும் (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)

இவ்வாறு அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவார்ந்த விளக்கத்தை அல்லாஹ் அளித்தான். எனினும், அந்தக் நிராகரிப்பவர்கள் ஆணவத்தால் சிந்திக்க மறுத்து தங்களது கருத்தையே மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தனர்.
முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது

நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.

குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான்.

இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது.

(இவர்களைத் தவிர) மனிதர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)
 

fathima.ar

Well-Known Member
இறைநம்பிக்கையின் தூண்கள் ஆறு..
1. அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுதல்
2. வானவர்களை நம்பிக்கை கொள்ளுதல்
(Angels of Allah)
3.அல்லாஹ்வினுடைய வேதங்கள்
4. இறைத்தூதர்களையும்
5. இறுதி தீர்ப்பு நாளையும்
6. Belief in qadr விதியின் மீது நம்பிக்கை கொள்ளுதல்..

இந்த ஆறு விஷயங்களையும் பரிபூரணமாக ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.. இறுதி தீர்ப்பு நாள் பற்றி முஹம்மது நபி அரபியர்களுக்கு எச்சரிக்கை செய்யும் போது தான் அவுங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் தோன்றுது அதற்க்கான விளக்கங்கள் தான் மேற்கூறப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள்..
 

I R Caroline

Well-Known Member
Nice sis, படைத்தவரால் அழிக்கவும் முடியும் அழித்ததை திரும்ப ஆக்கவும் முடியும் உண்மைதான். மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம். (அல்குர்ஆன் 56:62) அப்படி மரணித்த பின் நமக்கு மறு ஜென்மம் என்ற ஒன்று இருக்கா?
 

fathima.ar

Well-Known Member
Nice sis, படைத்தவரால் அழிக்கவும் முடியும் அழித்ததை திரும்ப ஆக்கவும் முடியும் உண்மைதான். மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம். (அல்குர்ஆன் 56:62) அப்படி மரணித்த பின் நமக்கு மறு ஜென்மம் என்ற ஒன்று இருக்கா?

அது மறுஜென்மம் இல்லை..
நம்ம நாமாகவே எழுப்ப படுவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top