யாருமிங்கு அனாதையில்லை - 9

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 9

இப்போது அந்த லேடி கான்ஸ்டபிள் சொல்லும் நிகழ்வும், ஜோதி ஏற்கனவே தன்னிடம் சொல்லியிருந்த நிகழ்வும் ஒன்றோடொன்று ஒத்துப் போக, இவள் பேச்சில் குறிப்பிடப்படும் அந்த மூத்த தாரத்துப் பெந்தான் ஜோதி என்பதையும், தற்போது தனக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெண் அந்த சித்திக்காரியின் பெண்தான், என்பதையும் தெளிவாய்ப் புரிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “கடைசில என்னதான் பண்ணினீங்க?...அந்தப் பொம்பளையைச் சமாதானப்படுத்தி...மூத்த தாரத்துப் பொண்ணை வீட்டுக்குள்ளார சேர்த்து விட்டீங்களா?...இல்லையா?” என்று தெரியாதது போல் கேட்டார்.

“ப்ச்!...தெரியலையே சார்!...நாந்தான் பாதியிலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி வந்துட்டேனே?”
“ஏம்மா...அப்படிப் பண்ணுனீங்க?”

“பின்னே என்ன சார்?...அந்தப் பொம்பளை கொஞ்சம் கூட இறங்காம பிடிச்ச பிடியிலேயே நிக்கறா...அதான் பார்த்தேன், “சரி...நாம இங்க இருந்தா இவ நிச்சயமா இந்தப் பொண்ணை உள்ளார கூப்பிட்டுக்க மாட்டா...என் கூடவே திருப்பியனுப்பத்தான் பாப்பா!...அதனால நாம இடத்தைக் காலி பண்ணிட்டா...கொஞ்ச நேரத்துல தன்னால உள்ளார கூப்பிட்டுக்குவா!”ன்னு நெனச்சு வண்டிய எடுத்துக்கிட்டு வந்துட்டேன் சார்!”

“சரி...மறுநாள் போயி...என்னாச்சு?...ஏதாச்சு?ன்னு விசாரிச்சிருக்கலாமே?”

“தேவையே இல்லை சார்!...ஏன்னா அதுக்கப்புறம் ரெண்டு மூணு நாள்ல எந்தவொரு அசம்பாவிதச் சம்பவமும் நடந்ததா தகவலே இல்லை!..ஸோ..எல்லாம் சுமுகமாத் தீர்ந்து போயிடுச்சுன்னு நாங்களே முடிவு பண்ணிக்கிட்டோம் சார்!”

“அது தப்பும்மா!...எப்பவுமே பாசிட்டிவ்வா திங்க் பண்றது சரிதான்!...ஆனா சில நேரங்கள்ல.... சில சூழ்நிலைகள்ல....நம்ம மாதிரி காவல்துறைல இருக்கறவங்க மொதல்ல நெகட்டிவ்வாத்தான் திங்க் பண்ணனும்!...அதுதான் யதார்த்தத்தோட ஒத்துப் போகும்!...இதுதான் போலீஸ் லாஜிக்!” என்றார் திவாகர்.

“ஓ.கே.சார்!”

எழுந்த திவாகர், “சரிம்மா...கடைசில இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?...அந்தப் பொண்ணை “ஓ.கே” பண்ணச் சொல்லிடலாமா?...இல்லை.. “வேண்டவே வேண்டாம்!”ன்னு சொல்லிடச் சொல்லவா?” போகிற போக்கில் கேட்டார்.

“ம்ம்ம்...ரெண்டையுமே சொல்லச் சொல்லிடுங்க சார்!” என்றாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

கடுப்பானார் திவாகர், “ப்ச்...என்னம்மா குழப்பறே?...எப்படிம்மா ரெண்டு பதிலையும் சொல்ல முடியும்?...ஒண்ணு “யெஸ்”ன்னு சொல்லணும்!...இல்லேன்னா “நோ”ன்னு சொல்லணும்!... “யெஸ்..நோ”ன்னு எப்படிம்மா சொல்ல முடியும்?”

“ஆமாம் சார்!...மூத்த தாரத்தோட பொண்ணுன்னா “யெஸ்”ன்னு சொல்லச் சொல்லுங்க!...சித்திக்காரியோட பொண்ணுன்னா “நோ”ன்னு சொல்லச் சொல்லிடுங்க!...”என்று அறிவார்த்தமாய்ச் சொல்லி விட்டு ஆனந்தமாய்ச் சிரித்தாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

“ஓ..நீங்க அப்படிச் சொல்றீங்களா?...சரி...சரி!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்ட திவாகர், வாசல் வரை சென்று விட்டு, ஏதோ ஞாபகம் வந்தவராய்த் திரும்பி வந்து, “ஆமாம்...நகைக்கடைல பணம் திருட்டுப் போச்சுன்னு அந்த மூணு பொண்ணுகளையும் கூட்டிட்டு வந்து விசாரிச்சீங்களே?...அந்த கேஸ் என்னாச்சு?...திருடினவங்களைக் கண்டுபிடிச்சாச்சா?” கேட்டார்.

“ஆளையும் பிடிச்சாச்சு...ஆனா பணத்தை மீட்டாச்சு!”

“வெரி குட்!...வெரி குட்!”

“ஆக்சுவலா...அந்தக் கேஷியர் மேசையோட கீழ் டிராயர் திறந்திருக்குன்னு நெனச்சிட்டு பணக்கட்டை அதுல போட்டிருக்காரு...அது தரைல விழுந்து கிடந்திருக்கு!...மதியம் கடையைப் பெருக்க வந்த பொம்பளையொருத்தி அதைப் பார்த்திட்டு யாருக்கும் தெரியாம சேலைக்குள்ளார வெச்சு மறைச்சு எடுத்திட்டுப் போயிட்டா!”

“சரி...இது காமிராவுல கவர் ஆகியிருக்குமல்ல?...மொதவே போட்டுப் பார்த்திருக்கலாமே?”

“அங்கதான் சார் பிரச்சினையே...அவ கீழ குனிஞ்சு கூட்டுற மாதிரி மேசைக்கு அடில மறைஞ்சுக்கிட்டு அந்தப் பணக்கட்டை சேலைக்குள்ளார வெச்சிருக்கா...அதனால அது காமிரா ஆங்கிளுக்குள்ளார வரலை!...கடைசில ஒரு சந்தேகத்தின் பேர்ல அவளை மெரட்டிக் கேட்டதுல அவளே உளறிட்டா!”

“ஓ.கே!ம்மா...உங்க இன்ஸ்பெக்டர் வந்தா நான் வந்திட்டுப் போனேன்னு சொல்லிடு!”

பைக்கில் ஏறிப் பறந்தார் திவாகர்.

வீட்டின் பின் புறமிருந்த முல்லைக் கொடியினருகே நின்று முல்லை மொட்டுக்களை பறித்துக் கொண்டிருந்த ஜோதியிடம் வந்த திவாகர், “ம்ம்...ஜோதி...கொஞ்சம் வெளிய போகணும்...என் கூட வர முடியுமா?” கேட்டார்.

இதற்கு முன்பு எப்போதும் இது போலக் கேட்டேயிராத திவாகர் இன்று அப்படிக் கேட்டதும், முகத்தில் பெரிய கேள்விக்குறியுடன் அவரைக் கூர்ந்து நோக்கினாள் ஜோதி.

“என்ன பார்க்கறே?...நீங்கெல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி வெச்சிருந்தீங்கல்ல?..அந்தப் பொண்ணோட ஃபேமிலியைப் பத்தித் தெளிவா விசாரிச்சிட்டேன்!...அதான் இன்னிக்கு...அந்த வீட்டுக்கே நேர்ல போயி...அந்த வீட்டுப் பெரியவங்களைப் பார்த்திட்டு வரலாம்னு இருக்கேன்!”

“சரி...அதுக்கு...நான் வேணுமா?” ஜோதி சன்னக் குரலில் கேட்க,

“நீ இல்லாம எப்படிம்மா?..வாம்மா!”

அவள் மறுபடியும் தயங்க,

“ஓ.கே!...நான் கூப்பிட்டதும் நீ சந்தோஷமா வருவே!ன்னு நெனச்சேன்!...ஆனா நீ தயங்கறதைப் பார்த்தா நான் உன்னைய தொந்தரவு பண்ற மாதிரி எனக்குத் தோணுது...பரவாயில்லை....நானும் போகலை!” என்று சொல்லி விட்டு திவாகர் அங்கிருந்து அகல,

“நீ...நீங்க ஏன் போகாம இருக்கணும்!...நீங்க போயிட்டு வாங்க!” என்றாள் ஜோதி.

“என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த வீட்டுல இருக்கற எல்லோரையுமே சந்தோஷப்படுத்தற விஷயங்களை மட்டுமே செய்யணும்ங்கறது என்னோட எண்ணம்!...இப்ப நீ மறுக்கறதைப் பார்க்கும் போது...இதுல உனக்கு விருப்பமில்லைன்னு தெரியுது!...அப்புறம் ஏன் நான் அதைச் செய்யணும்!” திவாகரும் பிடிவாதமக நின்றார்.

ஆழ் மனசு அழுது புலம்ப,

உள் மனசு உறைந்து நிற்க,

வாய் மட்டும் “சரி...கிளம்புங்க போகலாம்!” என்றது.

அப்போது வாசலில் கார் ஹார்ன் சப்தம் கேட்க, “டாக்ஸி சொல்லியிருந்தேன்...வந்திடுச்சு போலிருக்கு...எல்லோரும் கிளம்புங்க...கிளம்புங்க..” என்று உற்சாகமாய்க் கூவியபடியே திவாகர் முன் சென்றார்.

சோகத்தின் பிம்பமாய் தொடர்ந்தாள் ஜோதி.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், அங்கிருந்தோர் அனைவரியும் ஏற்றிக் கொண்டு அந்தக் கார் பெண் வீட்டை நோக்கிப் பறந்தது.

ஒரு நெடிய பயணத்திற்குப் பிறகு, கார் ஓரிடத்தில் நிற்க, எல்லோரும் நிதானமாய் இறங்க ஆரம்பித்தனர். ஜோதியும் இறங்க முனைந்த போது, திவாகர் அவளைத் தடுத்தார், “ஜோதி...நீ...இங்கியே காருக்குள்ளாரவே இரு...நான் கூப்பிட்டப்புறம் நீ வந்தாப் போதும்!” என்று சொல்லி அவளை மட்டும் காருக்குள்ளேயே இருக்கச் செய்து விட்டு, மற்ற அனைவரையும் அழைத்துக் கொண்டு பெண் வீட்டிற்குள் நுழைந்தார் திவாகர்.

அவர்கள் சென்ற பின் தனிமையில் இருந்த ஜோதி யோசித்தாள். “ஏன் என்னை மட்டும் வர வேண்டாமென்று கூறித் தடுத்து விட்டார்?”

அவள் பார்வை அப்போதுதான் காரின் ஜன்னலுக்கு வெளியே சென்று அந்த இடத்தை ஆராய்ந்தது. “அட..இது நம்ம ஏரியாவாச்சே?” சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவர்கள் நுழைந்த வீட்டை மறுபடியும் பார்த்தவள் மொத்தமாய் அதிர்ந்து போனாள். “இவங்கெல்லாம் நம்ம வீட்டுக்குள்ளார போறாங்கன்னா...?...அப்ப...அப்ப...இந்த திவாகருக்கு இவங்க செலக்ட் பண்ணின பொண்ணு என் தங்கை சவிதாவா?”

“கடவுளே....நீ சோதிப்பதற்கென்றே என்னைப் படைத்தாயா?...இல்லை மொத்த சோதனைகளையும் ஒருத்தருக்குக் கொடுத்தால் அவர் எந்த அளவிற்கு அவற்றைத் தாங்குவார் என்பதை அறிந்து கொள்வதற்காகப் படைத்தாயா?”

வெளிக் காட்டிக் கொள்ள முடியாத அழுகையை மௌனமாய் மென்றாள்.

அதே நேரம் வீட்டினுள்,

திவாகரையும் அவரது குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்று அமரச் செய்தனர் ஜோதியின் சித்தியும், அப்பாவும்.

“நீங்க இன்னிக்கு பெண் பார்க்க வரப் போறதா நேத்திக்கு ராத்திரிதான் சொன்னார் புரோக்கர்...அதனால எங்களால எந்த வித முன்னேற்பாடுகளையும் சிறப்பா செய்ய முடியலே...ஆனாலும் ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு செஞ்சிருக்கோம்...இதுல ஏதாவது குத்தங்குறை இருந்தா பெரிய மனசு பண்ணி நீங்கதான் மன்னிக்கணும்!” ஜோதியின் சித்த தேனொழுகப் பேசினாள்.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை!...இது வெறும் பெண் பார்க்கும் நிகழ்ச்சிதானே...இதுக்கு எதுக்கு தடபுடல் ஏற்பாடுகள்?” திவாகரின் தாயார் பதில் சொன்னாள்.

எதையும், எப்போதும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பேசும் வழக்கமுள்ள திவாகர், “இங்க பாருங்க...உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்...இருந்தாலும் நான் என் வாயால சொல்லிடறேன்!...நான் போலீஸ் இன்ஸ்பெக்டர்!...இவங்க என் தாயாற்...இவங்க என் தகப்பனார்!...இது என் தம்பி!...ஆனா...எல்லோருமே என்னைய மாதிரி அனாதைகள்தான்!...என் வீடே அனாதைகள் வாழும் ஆனந்தக் கூடுதான்!” என்று வெளிப்படையாகச் சொல்ல,

“எல்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும்!...உங்களைப் போன்ற ஒரு நல்ல போலீஸ்காரர் எங்களுக்கு மாப்பிள்ளையா வர நாங்கதான் கொடுத்து வெச்சிருக்கணும்!...” சித்திக்காரி எப்படியாவது திவாகரை வளைத்துப் போட்டு தன் மகளுக்கு கட்டி வைத்து விட வேண்டும், என்கிற குறிக்கோளில் உருகி...உருகிப் பேசினாள்.

“எல்லோரும் பேசிட்டே இருந்தா எப்படி?...டிபன் சாப்பிட்டுடலாமே!” ஜோதியின் தந்தை முதன் முதலாய்ப் பேசினார்.

“ம்ம்ம்...மொதல்ல நாங்க பொண்ணைப் பார்க்கணும்...அப்புறம்தான் டிபன்...கிபனெல்லாம்!” திவாகரின் தாயார் திட்டவட்டமாய்ச் சொல்ல,

அலங்கரிக்கப்பட்ட சவிதா, அன்ன நடை நடந்து வந்தாள்.

அவள் திரும்பிச் சென்ற பின்,

“ம்ம்ம்...பொண்ணை வரச் சொல்லுங்க!” என்றார் திவாகர், வேண்டுமென்றே,

குழப்பத்தில் ஆழ்ந்தனர் ஜோதியின் தந்தையும், சித்தியும்.

தலையைப் பிய்த்துக் கொண்டனர் திவாகரின் தாயாரும், தந்தையும்.

மெல்ல எழுந்து திவாகரின் அருகில் வந்த அவரின் தாயார், “என்னப்பா...இப்பத்தானே பொண்ணு வந்திட்டுப் போச்சு?...மறுபடியும் “பொண்ணை வரச் சொல்லிக் கேட்கறியே!...ஏம்பா...பொண்ணை சரியாப் பாக்கலையா?...இல்லை...இன்னொரு தரம் பார்க்கணும்னு ஆசையாயிருக்கா?” என்று அவர் காதருகே நின்று கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

“அம்மா...நான் வரச் சொன்னது பொண்ணை!...அதாவது இந்த வீட்டின் மூத்த பொண்ணை...”

“அப்ப...இப்ப வந்திட்டுப் போனது?” திவாகரின் தாயார் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

“அது...இவங்களோட ரெண்டாவது பொண்ணு!...இவங்களுக்கு மூத்த பொண்ணு ஒண்ணு இருக்கு...அதுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை!” திவாகர் தெளிவாக விளக்கிச் சொன்னார்.

அதைக் கேட்டதும் கடுப்பாகிப் போன, திவாகரின் தாயார், ஜோதியின் சித்தியைப் பார்த்து, “ஏம்மா...அப்படியா?...மூத்த பொண்ணை விட்டுட்டா...இளையவளுக்குக் கல்யாணம் பேசறீங்க?” கேட்டாள்.

“அது...வந்து...அந்த மூத்த பொண்ணு...அது சரியில்லைங்க!..எங்கியோ...ஓடிப் போயிடுச்சு!” சித்திக்காரி கதை கட்டினாள்.

“அதுவா ஓடிப் போச்சா?...இல்லை நீங்க ஓடிப் போக வெச்சீங்களா?” இன்ஸ்பெக்டர் திவாகர் தன் தொழில் முறையில் காட்டார்.

ஜோதியின் சித்தி திரு...திரு”வென்று விழித்தாள்.

“த பாருங்கம்மா!...மூத்த பொண்ணு இருக்கும் போது இளையவளுக்குக் கல்யாணம் பண்றது தப்பு!...அதனால உங்க மூத்த பொண்ணை வரட்டும் அதைக் கட்டிக்கறேன் நான்!” என்றார் திவாகர்.

ஜோதியின் தந்தை மெல்லத் தலை நிமிர்ந்து, “சார்...அவ இப்ப உயிரோட இருக்காளா?...இல்லையா?ன்னே எங்களுக்குத் தெரியாது!” என்று சன்னக் குரலில் சொல்ல.

குறுஞ்சிரிப்பு சிரித்த திவாகர், “எங்களுக்குத் தெரியும்!...அவ உயிரோடதான் இருக்கா!” என்றார் ஆணித்தரமாய்.

“எங்கே?...எங்கே?” ஜோதியின் தந்தையின் கண்களில் மகளைக் காணும் ஆவல் மின்னியது.

“கொஞ்சம் இருங்க!” என்று சொல்லி விட்டு எழுந்து வெளியே சென்ற திவாகர், காரில் அமர்ந்திருந்த ஜோதியிடம் சென்று, அவள் மறுக்க...மறுக்க அவளைக் கட்டாயப் படுத்தி வீட்டிற்குள் அழைந்து வந்து, அவர்கள் முன் நிறுத்தினார்.

ஜோதியைக் கண்டவுடன் “குபுக்”கென்று பொங்கி குலுங்கிக் குலுங்கி அழுதார் அவளுடைய தந்தை.

சித்திக்காரியோ “படக்”கென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். “ச்சை!...இந்தச் சனியன் இன்னும் சாகாம உசுரோடதான் இருக்கா?...இதை தொலைச்சுக் கட்டிட்டு..இதுக்கு வர்ற நல்ல வரனை என் மகளுக்கு கோர்த்து விடலாம்ன்னு பாத்தா...சனியன் மறுபடியும் வந்து நிக்குது!” உள்ளுக்குள் பொறுமினாள்.

“அம்மா...கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பறீங்களா?” நக்கலாய்க் கேட்டார் திவாகர்.

“நான் இந்தப் பக்கமே திரும்பி இருக்கேன்...நீங்க சொல்ல வேண்டியதை அப்படியே சொல்லுங்க..நான் கேட்டுக்கறேன்!” சித்திக்காரி அதே திமிருடன் பிடிவாதமாக இருந்தாள்.

“அதுவும் சரிதான்!...நீங்க அப்படியே இருங்க...ஆனா...நான் கேட்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்”

எரிச்சலாகிப் போன சித்திக்காரி, “இன்ஸ்பெக்டரு அய்யா பொண்ணு பாக்க வந்தாரா?...இல்லை...போலீஸ் விசாரணை பண்ண வந்தாரா?” என்று இடக்காகக் கேட்க,

“ம்..மொதல்ல பொண்ணுப் பாக்கத்தான் வந்தேன்!...வந்த எடத்துல அது போலீஸ் விசாரணையா மாறிடுச்சு!”

விருட்டென்று திரும்பி அவரை முறைத்த சித்திக்காரி, “இந்த வழ..வழ..கொழ...கொழ..பேச்செல்லாம் வேண்டாம்!...என்னோட மக சவிதாவைத்தானே பொண்ணு பாக்க வந்தீங்க?...அப்புறம் ஏன் தடம் மாறுறீங்க?”

“அம்மாடி...நான் மாறலை!...நீங்கதான் ஆளையே மாத்திட்டீங்க1”

சித்திக்காரி விழிக்க,

“பின்னே?..மூத்தவளைத் துரத்தி விட்டுட்டு இளையவளை மூத்தவளாக்கி சபையில் கொண்டாந்து நிறுத்தியிருக்கீங்களே!”

அப்போது, உள் அறையிலிருந்து வேக, வேகமாய் வந்த சவிதா, ஜோதியின் சித்தியைப் பார்த்து, அம்மா...கொஞ்சம் வாய் பேசாம இருக்கியா?” என்று அதட்டினாள்.

யாருக்காக தன் இத்தனை கபட நாடகம் ஆடுகிறோமோ?...அவளே தன்னை வந்து அதட்ட, வாயடைத்துப் போனாள் சித்திக்காரி.

ஜோதியிடம் வந்து அவள் தோளைத் தொட்ட சவிதா, “அக்கா...சத்தியமாச் சொல்றேன்னக்கா...எனக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைக்கா!...அம்மாதான் என்னைக் கட்டாயப் படுத்தி இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்க வெச்சுது!... “அக்கா இருக்கும் போது நான் அவளுக்கும் முன்னாடி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!”னு உறுதியா நின்னேன்!... “அவ இருக்கத்தானே நீ இப்படி பேசறே?..அவளே இல்லாத மாதிரி அவளைத் தொலைச்சுத் தலை முழுகிடறேன்!...அப்புறம் எப்படிப் பேசுவேன்னு பார்க்கறேன்”னு சொல்லித்தான் உன்னைய விரட்டி விட்டுச்சு!”

பாய்ந்து சென்று தன் தங்கையைக் கட்டிக் கொண்டு கதறினாள் ஜோதி.

இரு சகோதரிகளிடமும் தெரிந்த பாசப் பிணைப்பு அங்கிருந்தோரையெல்லாம் நெகிழச் செய்தது.

ஜோதியின் தந்தை கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அக்காவின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சவிதா, இன்ஸ்பெக்டர் திவாகரைப் பார்த்து, “சார்!...எங்க அக்க ரொம்ப நல்லவ சார்!...அவளை நீங்க ஏத்துக்கங்க சார்!...நான் இன்னமும் நிறையப் படிக்கணும் சார்!...அதுக்கப்புறம்தான் என் கல்யாணத்தைப் பத்தியே நான் யோசிக்கப் போறேன் சார்!” என்றாள்.
(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

Janavi

Well-Known Member
Oh...இப்பவாவது அப்பாவும், தங்கையும் பேசினார்களே....Super. Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top