யாருமிங்கு அனாதையில்லை - 8

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 8

சிஸ்டர் ஒருவர் ஒரு சிறுவனை தன் தோளில் சுமந்து வந்து மேடையேற, சூம்பிக் கிடந்த அச் சிறுவனின் இரண்டு கால்களையும் கனத்த இதயத்தோடு பார்த்தார் திவாகர். ஏனோ அச் சிறுவனைக் கண்டதுமே அவரது உள்ளத்தில் ஒரு இனம் புரியாத பாசம் தோன்றியதை அவரால் உணர முடிந்தது.

“சார்....இவர்தான் கோபி...நீங்க பரிசு கொடுக்க வேண்டியது இவருக்குத்தான்!” என்றார் அந்த சிஸ்டர்.

மன நெகிழ்ச்சியுடன் பரிசினைத் தந்து விட்டு, அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தார் திவாகர்.

அவர்கள் மேடையை விட்டுக் கீழிறங்கியதும்,

“அடுத்தபடியாக...வினாடி வினா போட்டியில் முதல் பரிசு...கோபி!” என்று அறிவிப்பாளர் கூற,

மீண்டும் அதே சிறுவனும்...அதே சிஸ்டரும் வந்து பரிசினைப் பெற்றுக் கொண்டனர்.

“அடுத்து....பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசு...கோபி!”

மறுபடியும் அதே சிறுவன். அதே சிஸ்டர்.

தொடர்ந்து, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எல்லாவற்றிலும் அவனே முதல்வனாய் வந்து பரிசுகளை வாரிக் குவித்தான் அந்த கோபி.

கால்கள் சூம்பிப் போயிருந்தாலும், மனம் சூம்பிப் போகாமல் அவன் எல்லாப் போட்டிகளிலும் வாகை சூடி நின்றது திவாகரை நிறையவே நெகிழச் செய்தது.

இறுதியாய் தன் உரையில் அவர் அந்த மாணவனைப் பாராட்டி, அவன் திறமைகளைக் குறிப்பிட்டுப் பேசும் போது, “இந்த மாணவனை மட்டும் சரியான முறையில் வழி நடத்திச் சென்றால் இவன் ஒரு ஐ.ஏ.எஸ்.ஆபீஸராக வருவான்...அந்த அளவிற்கு அவனிடம் அறிவுத் திறன் உள்ளது!” என்று பேசினார்.

கடைசியாய் அங்கிருந்து புறப்படும் முன், ஃபாதர் மோசஸின் அறைக்குச் சென்ற திவாகர், தான் அந்த கோபியிடம் பேச விரும்புவதாகக் கூற,

அவன் அங்கு கொண்டு வரப்பட்டான்.

தனக்கு அருகிலிருந்த சேரில் அவனை அமர வைத்த திவாகர், “தம்பி...உனக்கு என்கிட்ட என்ன வேணும் கேளு!” என்று கேட்டார்.

அவன் எதையோ சொல்ல வந்து விட்டு, பிறகு திரும்பி ஃபாதர் மோசஸைப் பார்த்து விட்டு சொல்லாமல் நிறுத்திக் கொள்ள,

“ம்...தைரியமாச் சொல்லு!” என்றார் திவாகர் புன்சிரிப்புடன்.

“வந்து...வந்து...நீங்க என்னையத் தத்தெடுத்துக்கிட்டு....இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுவீங்களா?”

ஆடிப் போனார் திவாகர்.

அவன் அப்படிக் கேட்டதில் தர்மசங்கடமாகிப் போன ஃபாதர் மோசஸ், “ச்சூ...கோபி...உன்கிட்ட எத்தனை தரம் சொல்லியிருக்கேன்...இப்படி புதுசா வர்றவங்க கிட்டேயெல்லாம்... “என்னைத் தத்தெடுத்துக்குவீங்களா?”ன்னு கேட்கக் கூடாதுன்னு!” கடிந்து கொண்டார்.

“நோ...ஃபாதர்!..அவன் அப்படி கேட்டதற்காக அவனைத் திட்டறதை விட...அவன் ஏன் அப்படிக் கேட்டான்? என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பாருங்க!...நிச்சயம் அவன் கேட்டதுல ஒரு நியாயம் இருக்கும்!” என்றார் திவாகர்.

அப்போது அச்சிறுவனை அங்கு தூக்கி வந்த சிஸ்டர் இடை புகுந்து, “உங்க பேச்சுக்கு நடுவுல குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும்!...நீங்க சொன்ன மாதிரி...இவன் ஏன் புதுசா வர்றவங்க எல்லார்கிட்டேயும் இந்த மாதிரி கேட்கறான்?ங்கற காரணத்தி நான் ஒரு ஆய்வே பண்ணி...கண்டுபிடிச்சுட்டேன் சார்!”

“ஓ...வெரி குட்!...வெரி குட்!” என்றார் திவாகர்.

“இவன் இங்க வந்து சேரும் போது ஒன்றரை வயசோ...ரெண்டு வயசோ இருக்கும்!...வரும் போதே இப்படித்தான் இருந்தான்!...இவன் வயசுக் குழந்தைகளெல்லாம் ஓடியாடி விளையாடிட்டிருக்கறதைப் பார்த்துப் பார்த்து ஏங்குவான்!...அப்பப்ப...இங்க குழந்தையில்லாத பல பணக்காரப் பெற்றோர்கள் வந்து குழந்தைகளைத் தத்தெடுத்திட்டுப் போவாங்க!...இவன் கூட இருந்த.....இவன் கூட விளையாண்ட பல குழந்தைகள் பெரிய பணக்காரர்களால் தத்தெடுக்கப்பட்டுப் போகும் போது..இவன் கண்கள் ரெண்டிலும் ஏக்கம் பொங்கப் பார்ப்பான்!...

“ஓ...காட்!” முகத்தைச் சுளித்து தன் மன வேதனையைக் காட்டினார் திவாகர்.

“தன் கால்கள் இந்த மாதிரி இருப்பதால்தான் தன்னை யாருமே தத்தெடுத்து கொண்டு செல்லவில்லை...என்கிற சோகமான உண்மை இவனுக்குப் புரிய வரும் போது, கிட்டத்தட்ட ஏழெட்டு வயசாயிடுச்சு!...ஆனாலும் ஒரு நம்பிக்கையோட இப்படி வர்றவங்க கிட்டயெல்லாம் “என்னைத் தத்தெடுத்துக்குவீங்களா?”ன்னு பரிதாபமாக் கேட்பான்!...அவர்கள் இவனுடைய கால்களைப் பார்த்து விட்டு...பதிலேதும் சொல்லாமல் நழுவிப் போய் விடுவர்....அதுக்குப் பிறகு இவன் தனியா உட்கார்ந்து குமுறிக் குமுறி அழுவான்!”

கேட்கக், கேட்க இருதயமே நின்று விடும் போலானது திவாகருக்கு. கண்களில் ஈரம் உருவானது.

“அட...என்ன மிஸ்டர் திவாகர்...நீங்களே கண் கலங்கறீங்க!” ஃபாதர் பதற,

“சார்...நான் அன்னிக்கே சொன்னேன் அல்லவா?...நானும் இவனைப் போல் ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவன்!னு...இப்ப இவனுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற இதே ஏக்கம் அப்போ எனக்குள்ளும்..இருந்திச்சு!....தன் ஊனம் காரணமாக இவன் ரிஜக்ட் பண்ணப்பட்ட மாதிரி...என்னோட கருப்பு நிறம் காரணமா நானும் அன்னிக்கு ரிஜக்ட் பண்ணப் பட்டேன்!...ஸோ...எனக்கு இவனோட மனசும்...அந்த மனசோட வேதனையும் நல்லாவே புரியுது!...”என்று சொன்ன திவாகர், தன் இருக்கையில் கொஞ்சம் முன் நகர்ந்து, “ஃபாதர்...நான் உங்க கிட்ட ஒரு ஆப்ளிகேஷன் கேட்கலாமா?”

“ம்...தாராளமா?...” என்றார் ஃபாதர் மோசஸ்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா...இந்த கோபியை நான் தத்தெடுத்துக்கறேன்!”

“இஸிட்?” என்று ஃபாதர் நம்ப முடியாமல் கேட்க,

“யெஸ் ஃபாதர்..நான் “கோபி”ங்கற இந்தச் சின்னப் பையனோட ஏக்கத்துக்காக மட்டும் இவனைத் தத்தெடுக்கலை... “திவாகர்”ங்கற இந்தப் பெரிய பையனோட ஏக்கத்துக்காகவும்தான் கேட்கறேன்!” என்றார் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி,

“நீங்க சொல்றது புரியலையே மிஸ்டர் திவாகர்!”

“ஃபாதர்...அனாதை ஆசிரமத்திலிருந்து நான் படிச்சு முடிச்சு வெளியில் வந்ததும்...எனக்கு போலீஸ்ல உத்தியோகம் வந்திச்சு!...சந்தோஷமாய் சேர்ந்தேன்!...ஒரு தடவை எங்க காவலர் குடியிருப்புல, நண்பர்களோட உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டிருந்தப்ப எனக்கும் ஒரு நண்பருக்கும் வாக்குவாதம் வந்திடுச்சு!...சாதாரணமா பேசிட்டிருந்த அந்த நண்பர் திடீர்ன்னு கோபத்தின் உச்சிக்குப் போய், “அனாதை நாயே!...ஒண்ணு, அப்பன்...ஆத்தா...கிட்ட வளர்ந்திருக்கணும்!...இல்லே...அண்ணன்...தம்பிக கூடவாவது வளர்ந்திருக்கணும்...இப்படி எதுவும் இல்லாம எங்கியோ பொறந்து...அனாதை ஆசிரமத்துல கிடந்த உனக்கெல்லாம் என் கூட வாக்குவாதம் பண்ண என்னடா தகுதியிருக்கு?”ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரிப் பேசிட்டாரு!”

“த்சொ!...த்சொ!” ஃபாதர் மோசஸ் அங்கலாய்த்தார்.

“சொன்னா நம்ப மாட்டீங்க ஃபாதர்!...அதுக்கப்புறம் மூணு நாள் என்னால சரியா சாப்பிடவும் முடியல...சரியா தூங்கவும் முடியல!...மனசுல அவன் சொன்ன வார்த்தைகள் ஈட்டியாய்க் குத்திக்கிட்டே இருந்திச்சு!...அப்பத்தான் யோசிச்சேன்!... “இயற்கையாகவே உறவுகள் அமைந்து..அந்த உறவுகளோட வாழ்ந்து வர்றது இன்பம்தான்!...அப்படி இயற்கையா நமக்கு உறவுகள் அமையாத பட்சத்தில் அதையே நினைச்சு வருந்துவதை விட...நமக்கான உறவுகளை நாமே சிருஷ்டி பண்ணிக்கிட்டா என்ன?”ன்னு தோணிச்சு!”

“ஓ...கிரேட்!”

“அப்படித்தான் “எதிர்கால வாழ்க்கையே இனி நமக்கு இல்லை”ன்னு தனிமையில் தவிச்சிட்டிருந்த ஒரு பெரியவரைத் தத்தெடுத்துக்கிட்டு வந்து எனக்கு அப்பாவாக்கிக் கிட்டேன்!...அதே மாதிரி, உறவுகளையும்...உடைமைகளையும் இழந்து ஊருக்குள் வாழவே பயந்து கிடந்த ஒரு பெண்மணியை அழைச்சிட்டு வந்து எனக்குத் தாயாக்கிக்கிட்டேன்!...ஆக...எனக்கு அப்பா....அம்மா...உரவு கிடைச்சிட்டுது!...இனி அடுத்த தேவை “அண்ணன்-தம்பி” உறவு!...இப்ப இந்த கோபியை எனக்கு தத்துக் குடுத்தீங்கன்னா தம்பி உறவும் கிடைசிடும்!...இனி எஅவனும் என்னைய “அனாதை நாயே!”ன்னு சொல்ல முடியாது!” சோகமும்...சந்தோஷமும்..துக்கமும்...துயரமும்...கலந்த ஒரு கலவைச் சிரிப்பைப் பிரசவித்தார் திவாகர்.

பூரித்துப் போய் அமர்ந்திருந்த ஃபாதர் மோசஸ், “மிஸ்டர் திவாகர்!....இந்த உலகத்துல ஒவ்வொரு மனுஷனும் உங்களை மாதிரியே சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா...இங்க யாருமே அனாதையில்லை!...அனாதை ஆசிரம்ங்களும்...முதியோர் இல்லங்களும் தேவையே இல்லை!...ஜீஸஸ் உங்களை ஆசிர்வதிச்சிட்டார்!...நான் இந்த கோபியை உங்களுக்குத் தத்துக் கொடுப்பதற்கான எல்லா ஃபார்மாலிட்டிஸையும் இன்னிக்கே ஆரம்பிச்சிடறேன்!...கூடிய சீக்கிரம் நீங்க இந்தச் சிறுவனை...இங்கிருந்து கூட்டிக்கிட்டுப் போகலாம்”

“ஃபாதர்... “என்னோட தம்பியை இங்கிருந்து கூட்டிட்டுப் போகலாம்”ன்னு சொல்லுங்க ஃபாதர்!”

ஃபாதர் வாய் விட்டுச் சிரித்தபடி கோபியைப் பார்க்க,

அவன் திவாகரைப் பார்த்து சன்னமான குரலில் “அண்ணா” என்றழைக்க, பாய்ந்து வந்து அவன் கன்னங்களில் முத்த மாரி பொழிந்தார் திவாகர்.

அது போன்ற ஒரு அன்புத் தாக்குதலை சந்தித்தேயிராத கோபி கதறியழுதான்.

தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சிஸ்டரும் அழுது விட்டாள்.

சில நிமிடங்கள் அந்த அறையெங்கும் அன்பும், பாசமும், நேசமும், ஏகமாய்க் கொட்டிக் கிடந்தன.

“ஓ.கே!...ஃபாதர் நான் இப்பக் கிளம்பறேன்...நீங்க மறுபடி போன் பண்ணியதும் வர்றேன்...என் தம்பியை அழைத்துச் செல்ல!” புன்னகையுடன் சொல்லி விட்டு திவாகர் வெளியேறியதும்,

ஃபாதர் எழுந்து நின்று தன் தலைக்கு மேலிருந்த ஏசுவின் படத்தைப் பார்த்துச் சிலிர்த்தார்.
*****
“இப்படித்தான் நான் இந்த வீட்டுக்குள்ளார வந்தேன்!..இங்க வந்ததும் அண்ணா என்னைய ஸ்கூலை விட்டு நிறுத்திட்டு...வீட்டுக்கே ஆசிரியரை வரவழைச்சு பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பன்ணிட்டார்!...அன்னிக்கு அண்ணா அங்க பேசினப்ப சொன்னாரே “இந்தச் சிறுவனை மட்டும் சரியான ம்,உறைல வழி நடத்தினா நிச்சயம் இவன் ஒரு ஐ.ஏ.எஸ்.ஆபீஸரா வருவான்”ன்னு அதையே என் குறிக்கோளா எடுத்துகிட்டு படிச்சிட்டிருக்கேன்!...நீங்க வேணா பாருங்க நான் நிச்சயம் ஐ.ஏ.எஸ்.முடிச்சிட்டு...இதே ஊருக்கு கலெக்டரா வர்றேனா இல்லையான்னு” ஒவ்வொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரும் போது ஏகப்பட்ட நம்பிக்கையை நிரப்பிக் கொண்டு வந்து விழுந்தன.

ஏற்கனவே தன் மனதில் திவாகரை கோபுர உச்சிக்கு உயர்த்தி வைத்திருந்த ஜோதி, கோபி சொன்னதையெல்லாம் கேட்டு முடித்தபின் அவரை இமய உயரத்திற்கு கொண்டு சென்றாள்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு ஊர் திரும்பியிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரிடம் அவர் தாயாரும், தகப்பனும் தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும், ஜாதகக் குறிப்பையும் தர,

“நான் என் மனத்தினுள் ஜோதியை நினைத்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் எனக்காக வேறொரு பெண்ணைப் பார்க்கிறார்களே, இவர்களிடம் என் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டால் என்ன?”என்று யோசித்த திவாகர் அதை செயல் படுத்த முனைந்த போது, அவரது மனசாட்சி அவரைத் தடுத்து நிறுத்தி,

“வேண்டாம் திவாகர்...அந்தப் பெண் மனதில் என்ன இருக்கு?ன்னு தெரிந்து கொள்ளாமல் நீ பாட்டுக்கு இவர்களிடம் உன் காதலைச் சொல்லி...அவர்களும் மகிழ்ச்சியோடு அதை அவளிடம் சொல்லும் போது அவள் மறுத்து விட்டால்?...எல்லோருமே மனம் நொந்து போய் விடுவார்கள் அல்லவா?” என்று சொல்லி அவரை எச்சரித்தது.

அந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட திவாகர், வேறோரு முறையை யோசித்தார். “நான் இந்தப் பெண் பார்க்கும் விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது போல் நடந்து கொண்டால்...அதுவே அவளை உசுப்பி என் மீதான காதலை என்னிடம் தெரிவிக்கச் சொல்லித் தூண்டுமே?”

“கரெக்ட்...அதையும் செய்து பார்த்து விட வேண்டியதுதான்!” தீர்மானித்தபடி திவாகர் தன் போலி ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்தார்.

“ஜோதி பார்த்தாளா?...அவளுக்கும் பிடிச்சிருக்குதானே?” கேட்டபடியே வாங்கினார் திவாகர்.

“ம்..இது நாங்க மூணு பேரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த பொண்ணு!” என்றார் பெரியவர்.

“அப்படின்னா சரி” என்ற திவாகர், “எந்த ஊர்?..என்ன பேர்?” கேட்டார்.

“ம்ம்ம்...முகவரில “தண்ணீர் பந்தல் ரோடு, சந்தைப் பேட்டை”ன்னு போட்டிருக்கு!”

“ஓ.கே!...அது போதும்!...அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அங்கிருக்கா ஒரு லேடி கான்ஸ்டபிளை விட்டு விசாரிச்சிட்டு வரச் சொன்னாப் போச்சு!” சொல்லியவாறே வெளியேறினார் திவாகர்.
****

சந்தைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற திவாகர், எதிரில் வந்த லேடி கான்ஸ்டபிள் அமுதாவிடம், “என்னம்மா...நல்லாயிருக்கியா?...எங்க உங்க இன்ஸ்பெக்டர்?” கேட்டார்.

“ம்ம்...நான் நல்லாயிருக்கேன் சார்!...வந்து...இன்ஸ்பெக்டர் கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வர்றேனுட்டுப் போனார் சார்!”

“ஓ.கே!...பரவாயில்லை!....ம்ம்ம்...”என்று யோசனையுடன் மேவாயைத் தடவிய திவாகர், “வந்து...ஒரு அட்ரஸ் தர்றேன்...அங்க போயி லேசா ஒரு என்கொயரி பண்ணிட்டு வரணும்!” என்றார்.

“ம்...சொல்லுங்க சார்...பண்ணிட்டாப் போச்சு” என்ற லேடி காஸ்டபிள், “என்ன கேஸ் சார்?” கேட்டாள்.

“இது கல்யாண கேஸ்” என்றார் திவாகர் சிரித்தபடி,

“என்னது கல்யாண கேஸா?...புரியலையே சார்!”

“அட...ஒண்ணுமில்லைம்மா....எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அந்த ஏரியாவுல ஒரு வீட்டுல அலையன்ஸ் பார்த்திருக்கார்!....பொண்ணெல்லாம் ஓ.கே!..ஆயிடுச்சு!...அதைப் பொண்ணு வீட்டுல சொல்றதுக்கு முன்னாடி ஒரு தடவை அவங்க ஃபேமிலியைப் பத்தி விசாரிக்கணும்னு சொன்னாரு!...அதான் நானே அவருக்காக நேரில் வந்தேன்!” பொருத்தமான் பொய்யை பொருந்தச் சொன்னார்.

“அதனாலென்ன சார்...விசாரிச்சுட்டாப் போச்சு!...நீங்க அட்ரஸையும்...பேரையும் சொல்லுங்க நானே போய் விசாரிச்சுட்டு வர்றேன்!”

“குட்!...ம்ம்ம்...அந்தப் பொண்ணு பேரு சவிதா!....அட்ரஸ்...தண்ணீர் பந்தல் ரோடு, சந்தைப் பேட்டை!....கூட அப்பாவும்...அம்மாவும் இருக்காங்க!” என்றார்.

“இருங்க....இருங்க...பொண்ணு பேரென்ன சொன்னீங்க?”

“சவிதா!”

“சவிதா.....சந்தைப்பேட்டை ரோடு!” என்று தனக்குள் முணுமுணுப்பாகச் சொல்லிப் பார்த்துக் கொண்ட அந்த லேடி கான்ஸ்டபிள், திட்ர்ரென்று, “அய்யய்யோ...அந்த வீடா சார்?” என்றாள் அலறலுடன்.

“ஏம்மா...ஏம்மா...அலறுறே...அங்கென்ன பேயா இருக்கு?” இன்ஸ்பெக்டர் தமாஷாய்க் கேட்க,

“பேய் இல்ல சார்...ஆனா பேயை விடப் பயங்கரமான ஒரு பிசாசு இருக்கு சார்!”

“என்னம்மா சொல்றே...பிசாசா?”

“ஆமாம் சார்!...ஒரு தடவை ஒரு திருட்டுக் கேஸ் சம்மந்தமா ஒரு பொண்ணை சந்தேகத்தின் பேரில் இங்க கூட்டிட்டு வந்து விசாரிச்சோம்..ராத்திரி ரொம்ப லேட்டாயிட்டதால...நான் அந்தப் பொண்ணை என் வீட்டுல தங்க வெச்சிட்டு மறுநாள் காலைல அவங்க வீட்டுல ஹேண்ட் ஓவர் பண்ணக் கூட்டிட்டுப் போனேன்...அப்ப...” என்று ஆரம்பித்து ஜோதியின் சித்தி அன்று நடுத் தெருவில் நின்று ஆடிய ஆட்டத்தை, பேசிய பேச்சுக்களை, எல்லாம் ஒன்று விடாமல் திவாகரிடம் ஒப்பித்தாள் அந்த லேடி கான்ஸ்டபிள். “சார்!...கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத பொம்பளை சார் அவ!...நீங்க சொல்ற அந்த சவிதாவோட அம்மாக்காரி...மூத்த தாரத்துப் பொண்ணை வீட்டை விட்டே விரட்டப் பாத்தா சார்!...பாவம் சார் அது...பரிதாபக் கதறுச்சு சார்!”

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஜோதியின் தங்கச்சி சவிதாதான் திவாகருக்கு பார்த்த பொண்ணா?
அடேய் திவாகர்
உன்னோட லவ்வை சீக்கிரமா ஜோதிக்கிட்ட சொல்லுடா
 

தரணி

Well-Known Member
ada kanavu nijam polave.....saveetha thaan ponnu..... appo jothi ethuvum solla porathu illa.... divakar ethuku ungaluku intha velai.... amutha unmaiyai sollitanga inime divarkar thaan mudivu pannanum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top