யாருமிங்கு அனாதையில்லை - 13

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 13
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 13
அவர் சொல்லச் சொல்லவே தொகையை எழுதி “படக்”கென்று கிழித்து மேனேஜரின் கையில் கொடுத்தாள் அவள்.

வாங்கிக் கொண்டார் அவர்.

“ஓ.கே.சார்...நான் ஒன் வீக் கழிச்சு வர்றேன்” என்று சொல்லி விட்டு எழுந்து வெளியேறினாள் அப்பெண்.

அவள் சென்ற பின்னும் நீண்ட நேரம் பிரமை விலகாமல் அமர்ந்திருந்தார் உதயகுமார். “இது வரையில் இந்த ஜுவல்லரியில் ஒரு டைரக்ட் கஸ்டமர் வந்து...ஃபுல் அமௌண்டையும் அட்வான்ஸா குடுத்து...ஒரு குறிப்பிட்ட டிஸைன் நெக்லஸுக்காக ஒரு வாரம் வெய்ட் பண்ணினதா சரித்திரமே இல்லை...இப்போ புதுச் சரித்திரம் உருவாகியிருக்கு!...யாராலே?...யாராலே?..ஜோதியாலே!”
அவர் மனதினுள் ஜோதி சிம்மாசனம் கொண்டாள்.

அதற்குப் பின் வந்த நாட்களில், டிஸைன் அப்ரூவல் என்பது ஜோதியின் தலையாய பணியாகி விட, அவள் நீண்ட நேரம் உதயகுமாரின் அறையிலேயே, அவருடனேயே, நீண்ட நேரங்களைச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இருவரும் அதே அறையில் ஒன்றாக உணவருந்தினர்.

இருவரும் ஒரே காரில் ஒன்றாக வெளியே சென்றனர்.

விளைவாய் அந்த ஜுவல்லரி தனது போட்டி ஜுவல்லரிக்காரர்களையெல்லாம் முறியடித்து விட்டு, வியாபாரத்தில் முந்தியது. கே.பி.எஸ்.ஜுவல்லரியின் நகை டிஸைன்கள் கொடி கட்டிப் பறந்தன. அது வரையில் ரீடெய்ல் பிசினஸ் மட்டுமே செய்து வந்த கே.பி.எஸ்.ஜுவல்லரி, டிஸைன் புகழால் ஹோல் சேல் பிசினஸிலும் கால் பதித்தது.

தரைத் தளத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த ஜுவல்லரி, அடுத்த மாதமே தன்னுடன் ஒரு முதல் தளத்தைக் கூட்டிக் கொண்டது.

வியாபாரம் வளர்ந்து கொண்டிருந்த அதே நேரம், உதயகுமாரின் மனதில் ஜோதி மீதான காதலும், அவரையுமறியாமல் வளர்ந்து கொண்டிருந்தது.

சில நேரங்களில், “இவள் காலடி எடுத்து வைத்த பிறகுதான் இந்த ஜுவல்லரியும்...இதன் பிசினஸ்ஸும் அபரிமிதமாய் வளர்ந்தது. அதே மாதிரி இவள் மட்டும் என் இல்லத்திலும் காலடி எடுத்து வைத்து என் வாழ்க்கைத் துணையா நுழைந்தால்....?’ உதயகுமாரின் மனம் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தது.

அதே நேரம், அதைப் பற்றி ஜோதியிடம் நேரடியாகப் பேசவும் தயக்கமாயிருந்தது.

யோசித்தார். “எப்படி என் காதலை அவளுக்குத் தெரிவிப்பது?..அப்படி நான் தெரிவித்தாலும் அவள் அதை ஏற்றுக் கொள்வாளா?”

அன்று ஜுவல்லரிக்கு உதயகுமாரின் தந்தையும் பெரிய முதலாளியுமான நாகராஜன், தனது மனைவியுடன் வந்திருந்தார்.

தன்னுடைய காலகட்டத்தில் இருந்ததை விட அந்த ஜுவல்லரி பல மடங்கு விரிவடைந்திருந்ததைப் பார்த்துப் பெருமிதம் கொண்டார். மகனின் திறமையான நிர்வாகம் அவரை மகிழ்ச்சியடையச் செய்தது.

அவரைக் கண்டதும் பழைய விசுவாசத்தில் ஜோதி இரு கை கூப்பி வணங்க,

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளைக் கூர்ந்து பார்த்த நாகராஜன், “நீ...நீ...ஜோதிதானே?” கேட்டார்.
அவள் “ஆமாம்” என்று தலையாட்டினாள்.

தன்னுடைய காலத்தில் அவள் மீது சுமத்தப்பட்ட அபாண்டமும், பிற்பாடு அது “இல்லை” என்று நிரூபிக்கப்பட்டதும் அவர் ஞாபகத்தில் வந்து போக, “நல்லா இருக்கியாம்மா?” என்று கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன் முதலாளி...நீங்க எப்படி இருக்கீங்க முதலாளி?” பணிவுடன் திருப்பிக் கேட்டாள் ஜோதி.

“ம்...எனக்கென்னம்மா...நான் ரொம்பவே நல்லா இருக்கேன்!” என்று சொல்லி விட்டு நகர்ந்தவர், இரண்டடி சென்று விட்டுத் திரும்பி வந்து, சன்னமான குரலில், “மன்னிச்சிடும்மா!” என்று கூறி விட்டுச் சென்றார்.

அவர் அப்படிச் சொல்லி விட்டுச் சென்றதும் ஜோதிக்கு அவர் மீது ஒரு உயர்ந்த அபிப்ராயம் ஏற்பட்ட்து. “ச்சே...இத்தனை வருடங்களுக்குப் பிறகும்..அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு...கொஞ்சமும் நெருடலில்லாமல் என்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கிறார்ன்னா...உண்மையிலேயே இவர் பெரிய மனிதர்தான்!”

உதயகுமாரின் அறைக்குள் சென்றதும், அங்கே, அவர் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த புது நகைகளின் டிஸைன்களைப் பார்த்த அவரது தந்தை, “பரவாயில்லையே...நல்ல டிஸைனர்களைத்தான் பிடிச்சிருக்கே!...எல்லா டிஸைன்களுமே பிரமாதமாயிருக்கு!” என்றார் ஆச்சரியத்துடன்.

“அப்பா...இன்னொரு விஷயத்தைச் சொன்னா நீங்க அசந்தே போயிடுவீங்க!” உதயகுமார் பீடிகை போட,

“என்னப்பா...அப்படியொரு விஷயம்?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு மகனைப் பார்த்தார் அவர்.

‘உண்மையில் இந்த டிஸைன்களையெல்லாம் கம்ப்யூட்டரில் போட்டது என்னவோ நம்ம டிஸைனர்கள்தான்...ஆனா...ஐடியா குடுத்தது.....” நிறுத்தினார் உதயகுமார்.

“யாரு?” ஆர்வமாய்க் கேட்டார் நாகராஜன்.

“ஜோதி!”

வெளியே கையைக் காட்டி, “அந்தப் பெண்ணா?” ஆச்சரியம் தாளமாட்டாமல் கேட்டார்.

“ஆமாம் டாடி!...ஆக்சுவலா ஒரு நாள் நாந்தான் கேஷுவலா அந்த ஜோதிகிட்ட ஒரு நெக்லஸ் டிஸைனைக் காட்டி எப்படி இருக்கு?ன்னு கேட்டேன்!...அதுக்கு அவ அதுல நாலைந்து மாற்றங்களைச் சொல்லி... “இந்த மாதிரி செஞ்சு பாருங்க...அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும்!”ன்னு சொன்னாள்...நானும் சரின்னு அதே மாதிரி செஞ்சு பார்த்தேன்!...அந்த டிஸைன் பிச்சுக்கிட்டுப் போச்சு!...இதுல பெரிய அதிசயம் என்ன?ன்னா...முதல் முதலா நம்ம கடைல ஒரு டைரக்ட் கஸ்டமர் ஃபுல் பேமெண்டையும் அட்வான்ஸாக் குடுத்து ஆர்டர் பண்ணிட்டுப் போனது அந்த டிஸைனுக்காகத்தான்!”

“ஓ...பரவாயில்லையே!” நாகராஜன் விழிகளை விரித்தார்.

“அதுக்கப்புறம்...ஒவ்வொரு மு றையும் அவங்களையே டிஸைன் அப்ரூவல் பண்ண வெச்சேன்!...இப்ப நம்ம கே.பி.எஸ்.ஜுவல்லரி... “டிஸைன்ல நெம்பர் ஒன்!”னுன்னு பேர் வாங்கியிருக்கு!...நம்ம ஜுவல்லரியோட டிஸைன்களுக்கு “பேட்டர்ன் ரைட்ஸ்” வாங்க ஏற்பாடு நடந்திட்டிருக்கு!”

அதைக் கேட்டு தந்தை மகிழ்ந்திருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதியின் மீது தனக்குள்ள பிரியத்தைச் சொல்லி, அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்று விடலாமா? என்று யோசித்த உதயகுமார், ஜோதியின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல், அதை அவரிடம் சொல்வது அவ்வளவு சரியில்லை! என்பதைச் சட்டென்று புரிந்து கொண்டு, அந்த எண்ணத்தை உடனே கைவிட்டார்.

சிறிது நேரத்தில் தாயும், தந்தையும் அங்கிருந்து சென்ற பின், ஜோதியை அழைத்து, தந்தையிடம் அவளைப் பற்றிக் கூறியதையும், அதற்கு அவர் வெகுவாய்ச் சந்தோஷப்பட்டதையும் சொல்லி, ஜோதியை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த உதயகுமார், அந்த மகிழ்ச்சியான நேரத்தில் தன் மனதை மெல்ல அவளுக்குத் திறந்து காட்ட ஆரம்பித்தார்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டவர், பேச்சைத் துவக்கும் முன், மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து, அதிலிருந்த நீரைப் பருகி விட்டுத் துவக்கினார்.

“ம்...ஜோதி...இப்ப வெளிய கூட்டம் ரஷ்ஷா இருக்கா?...இல்லை ஃப்ரீயா இருக்கா?” கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதில் குழப்பமாகிப் போன ஜோதி, அவரை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டாள், “ஏன்?...எதுக்குக் கேட்கறீங்க?...கம்ப்யூட்டர்ல ஏதாச்சும் புதிய டிஸைன் பார்க்கணுமா?”

“இல்லை...உன் கிட்ட கொஞ்சம் பர்ஸனலா பேசணும்!” என்றார் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு.

அவள் இறுகிப் போன முகத்துடன் அவரைப் பார்க்க,

“அவசரமில்லை...உனக்கு அங்க ஏதாச்சும் அவசர வேலை இருந்தா...போய் முடிச்சிட்டு அப்புறமா வந்தாக் கூடப் போதும்!”

“பரவாயில்லை...நீங்க இப்பவே பேசுங்க!...அப்படியொண்ணும் அவசரமான வேலை இப்ப வெளிய இல்லை!” என்றாள்.

“வந்து...வந்து...ஜோதி...உனக்கே தெரியும்...நீ இங்க வந்த பிறகுதான்...நீ டிஸைன்களை உருவாக்கித் தந்த பிறகுதான்...நம்ம கே.பி.எஸ்.ஜுவல்லரியோட பேர் நல்ல அளவுக்கு உயர்ந்திருக்குன்னு!”

அவள், நிதானமாய்த் தலையாட்டி அதை ஆமோதிக்க,

“அது எனக்கு இமயமலை உயரத்துக்கு மகிழ்ச்சியையும்...சந்தோஷத்தையும் தந்திருக்கு!.. இந்த மகிழ்ச்சியும்...இந்த சந்தோஷமும்..என் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இருக்கணும்னா....” சொல்லி விட்டு நிறுத்தினார் உதயகுமார்.

“இருக்கணும்னா?”

“நீ இருக்கணும்!...நீ என் கூட இருக்கணும்!...என் வாழ்க்கை முழுவதும் நீ என் கூட இருக்கணும்!...துணைவியா...என் வாழ்க்கைத் துணைவியா!” ஒரு வழியாய் சொல்லி முடித்தே விட்டார் உதயகுமார்.

அதுவரையில் கீழே குனிந்து அமர்ந்திருந்த ஜோதி, “விருட்”டென்று தலையைத் தூக்கி உதயகுமாரை ஊடுருவிப் பார்க்க,

அந்தப் பார்வையில் இருப்பது “சந்தோஷமா?...சந்தேகமா?” என்று புரியாமல் அவர், மிரட்சியுடன் அவளையே கூர்ந்து பார்த்தார்.

ஒரு நெடிய அமைதிக்குப் பின், ஒரு நீண்ட பெருமூச்சினை வெளியிட்ட ஜோதி, “சார்...நீங்க ஒரு வசதியான வீட்டுல பொறந்து...செல்வச் செழிப்பிலேயே வாழ்ந்து வந்தவர்...உலகத்துல என்னென்ன வசதிகளும்...வாய்ப்புக்களும் இருக்கின்றதோ...அவை அத்தனையையும் நீங்க பார்த்திட்டு...அனுபவிச்சிட்டு வந்தவர்!...பசியையோ...வறுமையின் கோர முகத்தையோ...ஏழ்மையின் ஏளன நிலையையோ...நீங்க கொஞ்சம் கூட அறியாதவர்!...ஆனா நான்?...ஏழைக் குடும்பத்தில் பிறந்து...வறுமையில் உழன்று...வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வேதனையையும், விரக்தியையும் மட்டுமே பார்த்திட்டு வந்தவ!...எனக்கும் உங்க்ளுக்கும் ஏணி வெச்சாக் கூட எட்டாது!...நீங்க மேலே நிமிர்ந்து நிற்கிற கோபுரம்!...நான்?..கீழா தூண் இடுக்குல போற போக்குல ஜனங்க கொட்டி வெச்சிட்டுப் போற உபரி விபூதி!...நீங்க என்கே?...நான் எங்கே?” வெறுமையான சிரிப்பு அவள் வேதனை உள்ளத்தை வெளிப்படையாக்கியது.

“ஜோதி....உனக்கு ஒண்ணு தெரியுமா?...ஒரு அதிர்ஷ்டக் காற்று வீசும் போது...கீழே தூண் இடுக்குல சிந்திக் கிடக்குற அந்த விபூதி காற்றுல பரந்து..கோபுரத்தின் உச்சிக்குப் போய், அங்கிருக்கற கலசத்தின் மீது அமரக் கூட வாய்ப்புண்டு!...அப்படி அமர்ந்திட்டா...அது உபரி விபூதியல்ல!...கலசப் பிரசாதம்!...”

உதயகுமாரின் பதிலில் வாயடைத்துப் போன ஜோதி, மேற் கொண்டு பேச முடியாமல் அமைதி காத்து நிற்க,

“ஜோதி...நான் உன்கிட்ட உடனே பதிலை எதிர்பார்க்கலை!..டேக் யுவர் ஓன் டைம்!...நல்லா யோசிச்சிட்டு...அப்புறமா வந்து சொல்லு!...ஈவினிங் வரை டைமிருக்கு!”
வேகமாய்த் திரும்பி, “விடு...விடு”வென்று வெளியேறினாள் அவள்.

****
அன்று மாலை வரை ஜோதி வருவாள், தனக்கு ஒரு நல்ல பதிலைத் தருவாள், என்று நம்பிக்கையோடு தன் அறையில் காத்திருந்த உதயகுமாரை அதிர்வூட்டும் விதமாய் அன்று வழக்கத்தை விட சற்று முன்னதாகவே வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் ஜோதி.

அப்ஸெட்டாகிப் போன உதயகுமார், இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்குச் செல்லும் எண்ணமே இல்லாமல், தன் அறையில்...தன் இருகையிலேயே...சோகமாய் அமர்ந்திருந்தார்.

காதல் சோகம், எப்பேர்ப்பட்ட மனிதரையும் உருக்கி விடும், என்பதற்கு உதாரணமானார் உதயகுமார்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” மேனேஜரின் குரல் அவரைச் சுய நினைவிற்குக் கொண்டு வர,

“யெஸ்..மிஸ்டர்.பத்மநாபன்?” என்றார்.

“வந்து...மணி பத்தாகுது!..ஜுவல்லரியைப் பூட்டணும்!”

ஓ...ஸாரி!” என்றபடி எழுந்து அறையை விட்டு வெளியேறினார்.

வெளியே வந்தவர், அப்போது ஜுவல்லரியில் எல்லோரும் போய் விட்டிருக்க, மேனேஜர் பத்மநாபன் மட்டும் தனக்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டதும், மிகவும் தர்ம சங்கடத்திற்குள்ளானார்.

தன்னைத் தானே நொந்து கொண்டு அவசர, அவசரமாக வெளியேறி தன் காரில் ஏறி, ஸ்டார்ட் செய்து கிளம்பினார்.
ஏனோ அவர் மனம் மிகவும் கனத்துப் போயிருந்தது.

“ஏன் ஜோதி என்னை அவாய்ட் பண்றா?..நான் பணக்கார வீட்டுப் பையன் என்பதால் என்னோட உண்மைக் காதலைக் கூட விளையாட்டுக் காதல் என்று எண்ணி விட்டாளா?...ஏன்...பணக்கார வீட்டுப் பசங்க மனதிலும் உண்மைக் காதல் ஏற்படக் கூடாதா?..”

அழ வேண்டும் போலிருந்தது அவருக்கு.

அது இயற்கைதானே?..ஒரு ஆண், ஒரு பெண்ணை நாடிச் சென்று, தன் நேசத்தை கூறும் போது, பெண்ணானவள் ஒன்று...அவன் நேசத்தை ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்ல வேண்டும்!...அல்லது...அதில் தனக்கு உடன்பாடில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டும் இல்லாமல் ஜோதியைப் போல் தன் வழியே சென்று விட்டால் அந்த ஆணின் மனநிலை எவ்வளவு துயரப்படும்?

“என்ன நினைத்து விட்டாள் என்னைப் பற்றி?...இவர் ஒரு “ஹை-சொஸைட்டி ரோக்” என்று எண்ணி விட்டாளா?....அல்லது முதலாளி என்கிற சிம்மாசனத்தை வைத்துக் கொண்டு, அவளுடைய பெண்மையை மலிவாக விலை பேசும் மூன்றாந்தர மனிதன் என்று எண்ணி விட்டாளா?

உதயகுமாரின் இடது நெஞ்சோரம் “சுரீர்”என்று ஒரு சின்ன வலி எட்டிப் பார்த்து விட்டுச் சென்றது.

மறுநாள் காலை, வழக்கத்தை விட சற்று முன்னதாகவே ஜுவல்லரிக்கு வந்து, ஜோதிக்காகக் காத்திருந்தார் உதயகுமார். பத்து மணிக்கு மேலாகியும் அவள் வராது போக, மேனேஜரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

அவரோ, “தெரியலையே சார்...அந்தப் பொண்ணு எப்பவும் இந்த மாதிரியெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் லீவு போடாது சார்!” என்று குழப்பமாகிச் சொல்ல,

அவரை அனுப்பி விட்டு, தனிமையில் அமர்ந்து யோசித்தார் உதயகுமார். “நிச்சயம்....அவள் இன்று வராமல் போனதற்கு காரணம்...நான் நேற்று அவளிடம் சொன்ன அந்த விஷயம்தான்!...சே...அவசரப்பட்டுட்டேன்!...கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணியிருக்கலாம்!”

தொடர்ந்து ஒரு வாரம் ஜோதி பணிக்கு வராதிருந்ததில் உதயகுமார் மிகவும் நொந்து போனார். தன்னால் ஒரு ஏழைப்பெண் வேலையை விட்டே போய் விட்டாள், என்கிற குற்ற உணர்வு அவரைக் கொன்றது.

பல நேரங்களில் அலுவலகப் பணியில் ஆர்வமே காட்டாமல், நிலை குலைந்து போனவராய் தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தார் அவர்.

****
அதே நேரம், ஜோதியும் தன் வீட்டில் தனிமைச் சிறையில் தன்னை முடக்கிக் கொண்டு, எதிலுமே ஆர்வம் இல்லாதவளாய்க் கிடந்தாள்.

“அக்கா...ஜோதிக்கா!” வாசலில் குரல் கேட்க, அது தன் தங்கை சவிதாவின் குரல்தான் என்பதைப் புரிந்து கொண்ட ஜோதி, முக மலர்ச்சியுடன் எழுந்து வாசலுக்கு ஓடோடி வந்தாள்.

“என்னக்கா...உடம்பு சரியில்லயா?” வந்ததும் வராததுமாய் அவளைப் பார்த்துக் கேட்டாள் சவிதா.

“இல்லையே நான் நல்லாத்தானே இருக்கேன்?” என்றாள் ஜோதி போலியாய் இயல்பு காட்டி.

“அக்கா...என் கிட்டே பொய் சொல்லாதே!...நீ பத்து நாளா வேலைக்குப் போகலைன்னு எனக்கு தகவல் வந்திடுச்சு!...சொல்லு என்னாச்சு உனக்கு?” அக்காவின் தோள்களை இரண்டு கைகளாலும் பற்றி உலுக்கினாள் தங்கை.

பதிலேதும் பேசாமல் ஜோதி இறுக்க முகத்துடன் நிற்க, அவள் கண்களை ஊடுருவிப் பார்த்த சவிதா, “அக்கா...உன் கண்களில் ஏனோ பழைய ஜீவன் இல்லை!...புது மிரட்சிதான் தெரியுது!...சொல்லுக்கா...சொல்லுக்கா!...என்ன உன் பிரச்சினை” சவிதாவின் குரல் கரகரத்ததில் அவள் அக்காவிற்காக அழத் தயாராகிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட ஜோதி, தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை தங்கையிடம் கொட்டினாள்.

சொல்லி முடித்ததும், இறுதியாய், “ஏற்கனவே ஒரு முறை..அந்த ஜுவல்லரியிலிருந்து திருட்டுப் பட்டத்தைச் சுமந்து கொண்டு வெளியே வந்தேன்!...இப்ப வேறொரு பட்டத்தை சுமந்து கொண்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தினால்தான் அதற்கு முன்பே வெளியே வந்து விட்டேன்!...ராஜினாமா கடிதம் கூட எழுதி தயாரா வெச்சிருக்கேன்!...அதைக் கொண்டு போய்க் குடுக்க வேண்டியதுதான் பாக்கி!”

அக்கா சொல்வதிலிருந்த யதார்த்த உண்மையை நிதானமாக யோசித்துப் பார்த்த சவிதா, “அக்கா...என்னைப் பொறுத்தவரையில் என் தாயை விட அதிகமா நான் உன்னைத்தான் நேசித்திருக்கேன்..ஏன்னா...நீ நெறைஞ்ச மனசுக்காரி....உனக்கு தெரிஞ்ச அளவு நல்லது...கெட்டது என் தாய்க்குக் கூடத் தெரியாது!...அதனால..உனக்கு அங்க போக விருப்பமில்லையா?...நோ ப்ராப்ளம்!...விட்டுடு!...அதுக்காக அதையே நெனச்சிட்டு உடம்பையும்...மனசையும் கெடுத்துக்காதே!..என்ன?”

தன் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பேசிய தங்கையை வெடுக்கென இழுத்துக் கட்டிக் கொண்டாள் ஜோதி.

(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
ஜோதி யோசனை சரி ஆனா உதயாகுமரை இன்னும் சரியா புரிஞ்சிக்கமா இப்படி பேசுறது சரியா
 

banumathi jayaraman

Well-Known Member
ஜோதி யோசனை சரி ஆனா உதயாகுமரை இன்னும் சரியா புரிஞ்சிக்கமா இப்படி பேசுறது சரியா
ஏற்கனவே திருடின்னு பேர் வந்தது
இப்போ பணக்கார பையனை வளைச்சுட்டாள்ன்னு சொல்லிட்டாங்கன்னா?
சூடு கண்ட பூனையில்லையா?
அதான் ஜோதி பயப்படுறாள்
 

தரணி

Well-Known Member
ஏற்கனவே திருடின்னு பேர் வந்தது
இப்போ பணக்கார பையனை வளைச்சுட்டாள்ன்னு சொல்லிட்டாங்கன்னா?
சூடு கண்ட பூனையில்லையா?
அதான் ஜோதி பயப்படுறாள்
சரி தான் பானு மா... ஆனா அந்த பெரியவர் மன்னிப்பு கேட்ட போது நல்லவுங்கன்னு தானே நினைச்சா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top