யாருமிங்கு அனாதையில்லை - 12

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை! - 12”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 12

கண்ணீர் வடிக்கும் பாறையை அதிசயமாகப் பார்த்தாள் ஜோதி.

காதல் எப்பேர்ப்பட்ட இரும்பையும் எளிதாய் உருக்கி விடும் அக்கினி உஷ்ணம்! என்கிற உண்மையை நேரில் கண்டு நெகிழ்ந்து போனாள்.

“வீட்டுல...அம்மா...அப்பா...ஒத்துக்குவாங்களா?” தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே கேட்டாள் ஜோதி.

“ம்ம்..அதை நான் பார்த்துக்கறேன்...நீ சவிதாவோட சம்மதத்தையும் கேட்டுடு” என்றபடி திவாகர் எழ,

“அங்கும் நீங்கதான் உதவணும்!”

“என்ன சொல்றே?”

“இந்த முடிவு நீங்களா எடுத்த முடிவா இருக்கட்டும்!...ஏன்னா நான்தான் என் வாழ்க்கையை அவளுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பது தெரிந்தால் அவள் ஒரு போதும் இதுக்குச் சம்மதிக்க மாட்டாள்!...அப்படியே அரை மனதோடு சம்மதித்தாலும் வாழ் நாள் முழுதும் அவ மனசை இது உறுத்திக்கிட்டே இருக்கும்!”

சட்டென்று திரும்பி அவள் தோள்களில் தன் இரண்டு கைகளையும் வைத்த திவாகர், “ஜோதி நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன்...ஆன உன்னை மாதிரி ஒரு பெண்ணை என் வாழ்க்கையிலேயே நான் சந்தித்ததில்லை!..உன்னோட தியாகம் கூட அவளுக்குத் தெரியக் கூடாதுன்னு நினைக்கறே பாரு?...ரியலி யூ ஆர் கிரேட்!...” சொல்லி அவளுக்கு போலீஸ் முறையில் ஒரு சல்யூட் அடித்து விட்டுத் திரும்பினார் திவாகர்.

அடுத்த ஐந்தாம் அவரது பைக், ஜோதியைச் சுமந்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டது. வரும் வழியில் ஜோதியை அவர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, ஸ்டேஷனை நோக்கி அவசர அவசரமாகப் பறந்தது அவரது பைக்.

இரவு.

திவாகரின் அந்த முடிவை அவரது தாயாரும், தந்தையும் பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்ள,

நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்த்த, சவிதாவின் கழுத்தில் மங்கல நாண் சூட்டினார் திவாகர்.

ஒரு வாரத்திற்குப் பின்,

“ஏங்க..நான் ஒண்ணு கேட்பேன்...நீங்க கோவிச்சுக்க கூடாது!” கொஞ்சலாய்க் கெஞ்சினாள் சவிதா. அவள் கழுத்தில் புதுத்தாலி மினுமினுத்தது.

“ம்...கேளு!” என்றார் திவாகர் கால்களை ஷூவிற்குள் நுழைத்துக் கொண்டே,

“ம்ம்..வந்து...நீங்க கண்டிப்பா சென்னை போய்த்தான் ஆகணுமா?”

திரும்பி, தலையைச் சாய்த்தபடி அவளைப் பார்த்த திவாகர், “என்னம்மா கேள்வி இது?...நான் எதுக்காக இப்ப சென்னை போறேன்?...உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவதற்கான ஏற்பாடுகளைப் பண்ணத்தானே போறேன்?...அது அவசியம்தானே?”

“ம்ஹூம்...அவசியமே இல்லை!” என்று சொன்னவளை விநோதமாகப் பார்த்தார் திவாகர்.

“ஆமாங்க...என் முகத்திலும்...கழுத்திலும்...இருக்கற இந்தத் தழும்புகள் மத்தவங்களைப் பொறுத்த வரையில் வெறும் தழும்புகள் மட்டுமே!...ஆனா என்னைப் பொறுத்தவரையில் அவைகள் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்!...வரங்கள்!” என்றாள்.

“புரியலையே!”

“இவைகள்தான் உங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த தூதுவர்கள்!...இதெல்லாம் எனக்கு இல்லேன்னா நீங்களும் நானும் ஒண்ணு சேருவோமா?...” கேட்டாள்.

“அடிப்பாவி...உன்னையும் என்னையும் சேர்த்து வைத்தது உன் அக்காவின் தியாகமடி!...உண்மையைச் சொல்வதென்றால் அவள்தாண்டி உன்னோட பொக்கிஷம்!” என்று வாய் வரை வந்து வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டார் திவாகர்.

“சரிம்மா..அதுக்காக நீ பிளாஸ்டிக் சர்ஜரி வேண்டாம்!ன்னு சொல்றது...சரியா?”

“ஆமாங்க!...என் முகம் ஊரார்க்கு வேணா அவலட்சணமானதா இருக்கலாம்...ஆனா எம் புருஷன் இது வரையில் அப்படி நினைக்கலை!...இனிமேலும் அப்படி நினைக்கப் போவதில்லை!...அப்புறம் எதுக்குங்க அந்த பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம்?...வேண்டாங்க..நான் இப்படியே இருந்திட்டுப் போறேன்!...ஒரு வேளை கண்டிப்பா நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தே ஆக வேண்டும்னு நீங்க விரும்பினா...நான் ஓ.கே!”

சட்டென்று அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்ட திவாகர், “எம் பொண்டாடி எப்படியிருந்தாலும் எனக்கு அழகுதாண்டி செல்லம்!” என்றார் நெகிழ்வுடன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவளை மெல்ல விலக்கிய திவாகர், “ஏன் சவிதா...உங்க அக்காவும் இங்கே வந்து நம்மோடவே இருக்கலாமே?..எதுக்கு அவங்க மட்டும் அங்கே தனியா இருக்கணும்?” கேட்டார்.

“நானும்...அதைத்தாங்க சொன்னேன்...அவதான் கேட்கவே மாட்டேங்கறா!” என்றாள் சவிதா சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு,

“எதுக்காகச் சொல்றேன்னா!...பாவம்!...வாழ்க்கையின் சந்தோஷப் பக்கங்களை ஒரு முறை கூடப் படிக்கக் கொடுத்து வைக்காதவள் அவள்!...அதனால இங்க வந்து நம்ம எல்லோர் கூடவும் கலகலப்பாகப் பேசி பழகிட்டிருந்தாலே போதும்!..எல்லாமே சுவாரஸியமாகிவிடும்!..எல்லா நிமிடங்களும் சந்தோஷமாகிவிடும்!”

“ப்ச்...அவளுக்கு அங்க இருந்தால்தான் வேலைக்குப் போக வர சௌகரியமமாய் இருக்குமாம்!”

“என்னது?...வேலைக்குப் போறாளா ஜோதி?” ஆச்சரியமாய்க் கேட்டார் திவாகர்.

“இப்பப் போகலை...இனிமேல் போகப் போறா!”

“எங்கே?”

“அதே நகைக் கடைக்கு!”

மனம் நொந்து போனார் திவாகர். “இந்த பூமியில் தியாகிகள் என்பவர்கள், தியாக செய்ய மட்டுமே அவதரித்தவர்களா?....அந்தத் தியாகத்தின் பலன்களை எட்டி நின்று கூடப் பார்க்க அருகதை இல்லாதவர்களா?”

தான் ஏற்கனவே பணி செய்து கொண்டிருந்த அதே கே.பி.எஸ்.ஜுவல்லரிக்கு மீண்டும் பணி புரிய வந்த ஜோதி, அங்கு நிறைய மாற்றங்களை உணர்ந்தாள்.

அப்போது நிர்வாகத்திலிருந்த பெரிய முதலாளி நாகராஜன் மூப்பின் காரணமாக, கடைப் பொறுப்பைத் தன் மகன் உதயகுமார் வசம் ஒப்படைத்து விட்டு, விலகியிருந்தார்.

இளைய முதலாளி வயதில்தான் இளையவராயிருந்தாரே தவிர, நிர்வாகத் திறமையில் மூத்தவர்களுக்கெல்லாம் மூத்தவராயிருந்தார்.

போட்டி ஜுவல்லரிகள் ஏராளமாய் உருவாகி, பல கவர்ச்சி விளம்பரங்களுடன் களமிறங்கி, வலுவான தொழிற் போட்டியை ஏற்படுத்தியிருக்க, அதைச் சமாளிக்கும் விதத்தில் உதயகுமாரும், தங்கள் ஜுவல்லரியை நவீனப் படுத்தி, கண்ணாடிக் கதவுகள், கண்ணைக் கவரும் உள் அலங்காரங்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முயன்றார்.

அத்தோடு மட்டுமல்லாது, முன்பிருந்த கேஷியர்...மேனேஜர்...இதர ஸ்டாப்புகள் எல்லோரையும் அவர்களது பொறுப்பின்மை காரணமாக வீட்டிற்கு அனுப்பி விட்டு, திறமை மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்கும் புதிய நபர்களை அப்பாயிண்ட் செய்து, அவர்களது திறமைக்கும்...உழைப்பிற்கும் மதிப்புக் கொடுக்கும் விதமாய் கை மற்றும் மனம் நிறையும்படியாய் ஊதியங்களை வழங்கினார்.

ஜோதி இருந்த முந்தைய காலத்தில் பணிக்கு வரும் பெண்கள், வரும் போதே சலித்துக் கொண்டுதான் வருவர், வந்த இடத்திலும் காலையிலிருந்து மாலை வரை சகித்துக் கொண்டுதானிருப்பர். பணி முடிந்ததும் “விட்டால் போதும்டா சாமி!” என்கிற மனப்பான்மையோடுதான் ஓடுவர். ஆனால், இப்போது பணிக்கு வருபவர்கள் உற்சாகத்தோடு வந்து, ஊக்கத்தோடு பணி புரிந்தனர். காரணம்?...இளைய முதலாளி உதயகுமார் அறிமுகப்படுத்தியிருந்த “இன்சென்டிவ் ஸ்கீம்”. வியாபாரம் உயர உயர பணியாளர்களின் ஊக்க போனஸும் உயர்ந்து கொண்டே இருந்ததில், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இன்னும் இது போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் இறுக்கமான சூழ்நிலையை இனிப்பான சூழ்நிலையாக்கி இருந்தார் உதயகுமார்.

ஆரம்பத்தில் ஜோதிக்கு அந்த மாற்றங்கள் சற்று மிகையானதாகவே தெரிந்தாலும், போகப் போக, அந்த மாற்றங்களின் விளைவாய் பெரும் வியாபாரச் செழிப்பு அங்கு ஏற்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டதும், அவளுக்கு சின்ன முதலாளி உதயகுமார் மீது ஒரு அபரிமிதமான மரியாதையே ஏற்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அப்போதெல்லாம் முதலாளியும், மேனேஜரும் பணியாளர்களை அதட்டி, மிரட்டி, சில சமயங்களில் மரியாதையே இல்லாமல் பேசி அவர்களது மனங்களையெல்லாம் காயப் படுத்திக் கொண்டேயிருப்பர். ஆனால், இன்று அது அடியோடு ஒழிக்கப்பட்டிருந்தது. முதலாளியும், மேனேஜரும் சக ஊழியர்களிடம் மரியாதையுடனும், நாகரீகத்துடனும், பேசிப் பழகுவது பணியிடத்தை ஒரு கோயிலாகவே மாற்றியிருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்த ஜோதிக்கு மனதில் பல்வேறு விதமாக எண்ணங்கள் ஓடின. “உலகத்துல எந்தவொரு துன்பமும்...எந்தவொரு வேதனையும்...ஒரு காலம் வரைக்கும்தான் நீடிக்கும், அதற்குப் பிறகு நிச்சயம் ஒரு நல்ல ஒளி எல்லோருக்கும் தெரியும்!”ன்னு அன்னிக்கு கோவில்ல ஒரு பெரியவர் சொன்னார்...அது இந்த ஜுவல்லரியில் பணி புரியும் பணியாளர்களைப் பொறுத்த வரையில் சத்தியமான உண்மை!...”

திடீரென்று இன்னொரு கேள்வியும் அவளுள் எழுந்தது, “எனக்கு மட்டும் ஏன்...அந்த ஒளி தெரியவே மாட்டேன் என்கிறது?”

“தெரியும்...தெரியும்..” என்று யாரோ சொல்வது காதில் விழ, சுய நினைவுக்கு வந்து, நிமிர்ந்து பார்த்தாள்.

சின்ன முதலாளி உதயகுமார், யாரோ ஒரு கஸ்டமரிடம் எதற்கோ அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

மெல்ல புன்னகைத்துக் கொண்ட ஜோதிக்கு, அது தனக்கே சொன்னது போலிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவளைக் கடந்து தன் அறையை நோக்கி நடந்து சென்ற உதயகுமார், அவளிட்த்தில் நின்று, “ம்ம்ம்...ஜோதி...கொஞ்சம் என் ரூமுக்கு வாம்மா!” என்று சொல்லி விட்டு நகர,

ஆடிப் போனாள். அரண்டு போனாள்.

கை, கால்களெல்லாம் “வெட...வெட”வென நடுங்க, “அய்யய்யோ...நான் எந்த தப்புமே செய்யலையே...அப்புறம் எதுக்கு சின்ன முதலாளி என்னைய ரூமுக்கு வரச் சொல்லுறார்?”

தொண்டையெல்லாம் வறண்டு போய், நீர் கேட்க, அறையின் மூலையிலிருந்த வாட்டர் ஃபில்டர் அருகில் சென்று, ஜில் வாட்டர் ஒரு டம்ளர் பிடித்துப் பருகி விட்டு நடந்தாள்.

“ப்ரொப்ரைட்டர்” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த கதவை நாசூக்காகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே, தன் இருக்கையில் அமர்ந்து, கம்ப்யூட்டர் மானிட்டரில் ஒரு புது நெக்லஸ் டிஸைனை ஆராய்ந்து கொண்டிருந்த உதயகுமார், ஜோதி வந்து நின்றதும், கண்களை மானிட்டரிலிருந்து நகர்த்தி, “ம்ம்..உன்னை எதற்கு வரச் சொன்னேன்?” என்று அவளிடமே கேட்டார்.

தர்ம சங்கடமாகிப் போன ஜோதி, “பேந்த...பேந்த” விழித்தாள்.

பிறகு அவரே, “ஆங்...ஞாபகம் வந்திடுச்சு!...ஞாபகம் வந்திடுச்சு!” என்ற் சொல்லி விட்டு, கொஞ்சம் தன் இருக்கையை நகர்த்திக் கொண்டு, கம்ப்யூட்டரின் மானிட்டரை அவள் பக்கமாய்த் திருப்பி, அந்த மானிட்டரிலிருந்த நெக்லஸின் டிசைன்களை அவளிடமே காட்டி, “இது எப்படியிருக்குன்னு சொல்லு ஜோதி!” கேட்டார்.
ஜோதிக்கு அது பெருமையாகவும், அதே நேரம் கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. எத்தனையோ அனுபவம் வாய்ந்த டிஸைனர்ஸ் அங்கிருக்கும் போது, என்னை அழைத்துக் கேட்பானேன்?..இதுக்குப் பின்னாடி என்ன சூட்சுமம் இருக்கோ தெரியலையே!”

அவள் அமைதியாகவே நிற்பதைக் கண்ட உதயகுமார், “ம்...சொல்லும்மா!” என்றார் மறுபடியும்.

“வந்து நல்லாயிருக்கு சார்!” என்றாள்

“ப்ச்...இங்க பாரு ஜோதி...நீ என்ன நெனக்கறே?...எதுக்குத் தயங்கறே?ன்னு எனக்குத் தெரியும்!, “என்னடா நம்ம ஜுவல்லரில நல்ல டிஸைனர்ஸ் நெறைய பேரு இருக்கும் போது...இவர் எதுக்கு நம்மைக் கூப்பிட்டுக் கேட்கறார்?”ன்னு யோசிக்கறே?...சரிதானே” தலையை ஒரு பக்கமய்ச் சாய்த்துக் கொண்டு உதயகுமார் கேட்க,

ஜோதி, நிதானமாய் தலையை மேலும், கீழும் ஆட்டினாள்.

மெல்ல முறுவலித்தவர், “ஜோதி...நான் இங்க எல்லா விஷயங்களையும் கரெக்டா பண்ணினேன்!....ஒரு விஷயத்துல மட்டும் ஏனோ கொஞ்சம் ஏமாந்திட்டேன்!”

ஜோதி “என்ன?” என்று கேட்க நினைத்து, கேட்காமல் நின்றாள்.

“என்ன?”ன்னுதான் கேட்கறது!” உதயகுமார் எடுத்துத் தர,

“என்ன?” பதட்டமாய்க் கேட்டார்.

“நல்ல டிஸைனர்ஸ் இருந்தாத்தான் வெரைட்டி டிஸைன்ஸ் தயாரிக்க முடியும்னு நெனச்சு...நல்ல திறமையான ஆர்ன்மெண்ட் டிஸைனர்ஸை அப்பாயிண்ட் பண்ணினேன்!...அவங்களும் எந்தக் குறையுமில்லாம...நிறைவாகவே டிஸைன் பண்றாங்க..பட்!...அதெல்லாமே ஒருவித புரஃபஷனல் டிஸைனா....ரொட்டீன் ஃபார்மெட்லதான் இருக்கு!...ஏன்னா...அவங்க கிட்டே வேலைத் திறமை இருக்கு...ஆனா ரசனை இல்லை!...கடமையுணர்வு இருக்கு...ஆனா கிரியேட்டிவிட்டி இல்லை!...காரணம்?...அவங்க எல்லாருமே ஜெண்ட்ஸ்!...ஜெண்ட்ஸ்க கிட்டே அதை நாம எதிர்பார்க்க முடியாது!...இதுவே லேடி டிஸைனர்ஸ் இருந்தா...இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்!” உதயகுமார் பேசிக் கொண்டே போக,

அவர் சொல்வது லேசாய்ப் புரிய ஆரம்பித்ததும், தன்னையுமறியாமல் தலையாட்டினாள் ஜோதி. அவளிடமிருந்து பயம் லேசாய் விலகியிருக்க, “நீங்க சொல்றது உண்மைதான் சார்..பொதுவாகவே...நகைகள்...பெண்கள் சமாச்சாரம்!...அதோட தயாரிப்பிலும் அவங்களோட பங்கு இருந்தாத்தான் ஒரு ரசனையோட தயாரிக்க முடியும்!” தைரியமாகச் சொன்னாள்.

“வெரி குட்...ஜோதி!...இப்பச் சொல்லு...இந்த நெக்லஸோட டிஸைன் எப்படியிருக்கு?”

மானிட்டரையே வெறித்துப் பார்த்த ஜோதி, “ம்ம்ம்ம்...மேல் லைன்ல பச்சைக்கல் ஓ.கே!...கீழ் லைன்ல சிகப்புக் கல் வேண்டாம் சார்!....அதுக்குப் பதிலா...வெள்ளைக்கல்லே போட்டுடலாம்!”

அவள் சொல்லச் சொல்ல, அதற்கேற்றாற் போல் நிறங்களை மாற்றிய உதயகுமார், “ம்...அப்புறம்?” என்றார்.

“நெக்லஸின் பட்டையைக் கொஞ்சம் குறைச்சு...நீளத்தை கொஞ்சம் அதிகப்படுத்தலாம்!”

படுத்தினார் உதயகுமார். “தென்?”

அடுத்து, அதே போல் மேலும் இரண்டு மூன்று மாற்றங்களைச் சொல்லி விட்டு, ஜோதி அங்கிருந்த சென்றதும், மானிட்டரில் அந்த நெக்லஸ் டிசைனை முழுமைப் படுத்திப் பார்த்த உதயகுமார் மிரண்டு போனார். அற்புதமாகியிருந்தது அந்த டிஸைன்.

“வாவ்!...உண்மையிலேயே...லேடீஸ்...லேடீஸ்தான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, மெயிலில் அந்த டிஸைனை தயாரிப்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த வாரத்தின் இறுதியில், அந்தப் புது டிஸைன் நெக்லஸ் வந்திறங்கியது.

ஷோ-கேஸில் அது வைக்கப்பட்டதும், ஜுவல்லரிக்கே தனி அழகு வந்தது.

அன்று வந்திருந்த கஸ்டமர்கள் அனைவரும் அதைப் பார்த்து...அசந்து...அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு சென்றனர்.

இரண்டாம் நாள் அந்த டிஸைன் நெக்லஸ் மொத்தமும் விற்பனையாகி விட, உதயகுமார் வியப்பிலாழ்ந்தார். “ச்சே!...இந்த விஷயம் ஏன் இத்தனை நாள் என் புத்திக்கு எட்டாமப் போச்சு?” தன்னைத்தானே திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவர், அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு,

“யெஸ்...கம் இன்” என்றார்.

மேனேஜர் பத்மநாபன்.

“சொல்லுங்க மிஸ்டர் பத்மநாபன்”

“சார்...ஒரு கஸ்டமர் வந்திருக்காங்க!...அவருக்கு அந்த லேட்டஸ்ட் டிஸைன் நெக்லஸ்தான் வேணும்னு கேட்கறாங்க!...ஆக்சுவலா...நம்ம கிட்ட இப்ப அந்த டிஸைன் ஸ்டாக் இல்லை!..வந்ததெல்லாமே நேத்திக்கே வித்துப் போயிடுச்சு!”

“சரி...அந்த டிஸைன் ஸ்டாக் இல்லே!ன்னு சொல்லி...வேற டிஸைன்களைக் காட்ட வேண்டியதுதானே?” உதயகுமார் எரிச்சலுடன் சொல்ல,

“சொன்னோம் சார்!...பட் அவங்க உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க!” என்றார்.
“என்னையா?...எதுக்கு?” ஒரு நிமிடம் யோசித்த உதயகுமார், “ஓ.கே!...வரச் சொல்லுங்க!” என்றார்.

மேனேஜர் அழைத்து வந்த அந்தப் பெண்மணி, பார்வைக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியை போல் இருந்தாள். ஏற்கனவே ஏகப்பட்ட நகைகளை அணிந்திருந்த அவள் ஒரு நகைப் பிரியை என்பது அவளைப் பார்த்தவுடனே தெரிந்தது.

“உட்காருங்க மேடம்!” என்றார் உதயகுமார்.

உட்கார்ந்தவள். “சார்...நேத்திக்கு வந்தப்ப ஒரு புது டிஸைன் நெக்லஸை அந்த ஷோ-கேஸ்ல பார்த்தேன்..அது எனக்கு அவசியம் வேணும்...கிடைக்குமா?”

“மேனேஜர் சொல்லியிருப்பாரே” என்றார் உதயகுமார்.

“ம்...சொன்னார் ஸ்டாக் இல்லைன்னு...இட்ஸ் ஓ.கே!...எப்ப வரும்னு சொல்லுங்க?”

“ஆர்டர் போடணும் மேடம்!...போட்டதுக்கப்புறம்..எப்படியும் ஒரு வாரம்...பத்து நாள்...ஆயிடும் மேடம்!”

“பரவாயில்லை...நான் வெய்ட் பண்றேன்...உடனே ஆர்டர் போடுங்க!...ஒன் வீக் கழிச்சு வந்து வாங்கிக்கறேன்!”

உதயகுமார் எதற்கோ தயங்க,

அதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண், “ஒன் மினிட்!” என்று சொல்லி விட்டு, தன் பேக்கிலிருந்து செக் புக்கை எடுத்து, “சொல்லுங்க ஃபுல் அமௌண்ட்டுக்கும் இப்பவே செக் குடுத்துடறேன்!” என்றாள்.

மலைத்துப் போன உதயகுமார், தன் மேனேஜரைப் பார்க்க, அவர் மனதிற்குள்ளாகவே கணக்குப் போட்டு, “ஒரு லட்சத்துப் பத்தாயிரம்” என்றார்.

(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
என்ன இது திவாகர் சவிதா கல்யாணம் நடந்துடுச்சு.... அப்போ ஜோதிக்கு உதயா குமார் மூலமா தான் ஒளி கிடைக்குமோ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top