யாருமிங்கு அனாதையில்லை - 11

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 11


அந்த இடத்தின் சூழ்நிலையைத் தெளிவாய் ஆராய்ந்து விட்டு, திவாகரே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, தன்னுடைய உத்தியோக செல்வாக்கைப் பயன்படுத்தி, துரிதமாக காரியங்களை ஆற்றி, அன்று இரவே இரண்டு சவங்களையும் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அந்தப் பரபரப்பான நேரத்திலும் ஜோதியை அழைத்துக் கொண்டு, அவள் தங்கை அட்மிட் செய்யப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு விரைந்தார். அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சவிதா இன்னும் மயக்கத்திலிருந்து மீளாமலே இருந்தாள்.

அவளைத் தொலைவிலிருந்து பார்க்க, ஜோதிக்கு மட்டுமே அனுமதி கிடைக்க, அவள் மட்டும் சென்று சிறிய கண்ணாடிக் கதவு வழியே தீக்காயங்களுடன் கிடந்த தன் தங்கையைப் பார்த்து விட்டு வந்தாள்.

அங்கும் திவாகர் தன் உத்தியோக செல்வாக்கைப் பயன்படுத்தி, முறையான...விரைவான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். தங்கைக்கு உதவியாக ஜோதி அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வர, தன் தாயாரையும் அழைத்து வந்து அவளுடன் இருக்கச் செய்தார்.

இரவு அங்கிருந்து கிளம்பும் முன் ஜோதியை அழைத்து, “ஜோதி...நாளைக்கு காலைல அநேகமா பதினோரு மணிவாக்குல ரெண்டு பாடிகளையும் குடுத்துடுவாங்க!...எனக்கென்னமோ நாளைக்கே அடக்கம் பண்ணிடறது நல்லதுன்னு தோணுது!..நீ என்ன சொல்றே?” கேட்டார்.

தளர்ந்த நிலையிலிருந்த ஜோதி, “நீங்க பாத்து எது செஞ்சாலும் சரிங்க!” என்றாள் அழுகையுடன்.

“அப்ப நானே நாளைக்குக் காலைல இங்க வந்து உன்னையும், அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்...என்ன?”

அவள் சரியென்று தலையாட்ட, கிளம்பினார் திவாகர்.
****

மறுநாள் காலை பதினோரு மணி வாக்கில் வெண்ணிறத் துணியால் கட்டப்பட்டு வந்திறங்கிய இரண்டு சவங்களையும் பார்த்து ஜோதி கதறிய கதறல் அந்த ஏரியாவையே உலுக்கியெடுத்தது.

காயம் பட்ட மனங்கள் மட்டுமே, பிற மனங்களின் ரணங்களைத் தெளிவாக உணர்ந்து கொண்டு வேதனிக்கும், என்பதை மெய்ப்பிக்கும் விதத்தில் திவாகரின் தாயாரும், தந்தையும் ஜோதிக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பிற்காக கண்ணீர் வடித்தனர்.

ஒரு இன்ஸ்பெக்டராய் இருந்த போதும், எந்த வித இறுமாப்பும் இல்லாது, தானே முன்னின்று ஜோதியின் பெற்றோரின் அந்திமக் காரியங்களை சிறிதும் தடுமாற்றமில்லாமல் செய்து முடித்த திவாகர் ஊரே புகழ்ந்தது.

“ஆண்டவன் அக்கிரமம் செய்வதற்கென்று லட்சம் பேரைப் படைச்சிருந்தாலும், நல்லது செய்யறதுக்குன்னு இந்த இன்ஸ்பெக்டரை மாதிரி நாலஞ்சு ஜீவன்களையும் படைச்சுத்தான் வெச்சிருக்கான்யா”

“இந்தப் பொண்ணு கொடுத்து வெச்சவ...அதனாலதான் அவளுக்கு வந்த சாவைத் தள்ளி விட்டுட்டு அதிர்ஷ்ட தேவதை இவளை அரவணைச்சுக்கிட்டா!”

ஜோதியின் குடும்பத்திற்கு குறைவான உறவுக்காரர்களே இருந்த காரணத்தினாலோ என்னவோ, மறுநாளே வீடு வெறிச்சோடிப் போனது. அந்தக் குறை ஜோதியின் மனதைப் பாதிக்கக் கூடாது...அதற்காக அவள் மனம் வேதனைப் படக் கூடாது! என்று நினைத்த திவாகரின் பெற்றோர்கள் ஜோதிக்குத் துணையாக அவளுடனேயே தங்கினர்.

கோபி ஜோதியை விட்டு இம்மி கூடப் பிரியாமல் கூடவே இருந்தான். அவனும் வேதனையான வாழ்க்கை அனுபவங்களை கடந்து வந்தவன் தானே?

****
“சோகங்களும், துயரங்களும், வேதனைகளும், கவலைகளும், மனித வாழ்க்கையின் அன்றாடக் கர்மங்களாய் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான் இயற்கையின் நியதியா?” என்று கேட்டு மனித இனம் எத்துனைதான் கூக்குரலிட்டாலும், கூப்பாடெழுப்பினாலும், இயற்கை தன் இயல்பை இம்மியளவும் மாற்றிக் கொள்வதில்லை. ஓடும் மணித்துளிகள் ஓடிக் கொண்டேயிருக்கும், உருளும் நாட்கள் உருண்டு கொண்டேயிருக்கும், மாறும் தட்பவெட்பங்கள் மாறிக் கொண்டேதானிருக்கும். இவற்றையெல்லாம் உணரும் போதுதான் மனிதமனம் மெய்ஞ்ஞானத்தையும் உணரும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து, வீட்டோடு இருந்த சவிதாவைப் பார்க்கும் போதெல்லாம் குமுறிக் குமுறி அழுவாள் ஜோதி. ஒரு காலத்தில், தன்னை விட அழகில்...நிறத்தில்...கவர்ச்சியில்...ஜொலித்த தன் தங்கை சவிதாவைப் பார்த்துப் பார்த்துப் பெருமிதம் கொள்வாள் ஜோதி. ஆனால், இன்றோ தீக்காயங்கள் கொடுத்த சீதனமாய் அவள் முகமெங்கும் தழும்புகள். மேனியெங்கும் தீ வடுக்கள். அழகு...இன்று அகோரமாகியிருந்தது. நிறம்...இன்று நிர்மூலமாகியிருந்தது. கவர்ச்சி...இன்று கர்ணகடூரமாகியிருந்தது.

காலம் மூன்று மாதங்களைத் தொலைத்து விட்டிருக்க, திவாகரின் தாயார் மெல்ல ஆரம்பித்தாள். “அம்மா...ஜோதி... பெரிவங்க எப்பவுமே ஒண்ணு சொல்லுவாங்க! அதாவது...ஒரு கெட்ட காரியமொண்ணு நிகழ்ந்து போச்சுன்னா...அடுத்து ஒரு நல்ல காரியத்த நாமே நிகழ்த்தினா..அந்தக் கெட்ட காரியம் தந்த சோகங்கள் மறைஞ்சு போயிடும்”ன்னு...அதனால...”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஜோதி அவளையே ஊடுருவிப் பார்க்க,

“அதனால...வெறும் பேச்சு வார்த்தையோட நின்னு போயிட்ட உங்க கல்யாணத்தை இப்ப சூட்டோட சூடா நடத்திட்டா...இந்தக் குடும்பத்துல மறுபடியும் பழைய கலகலப்பு திரும்பிடும்!...என்னம்மா நான் சொல்றது?”

ஜோதி பதிலேதும் பேசாமல் தரையையே நிலைக் குத்திப் பார்த்தபடி அமர்ந்திருக்க,

திவாகரின் தந்தை மெல்லக் கனைத்தார். தலையைத் தூக்கி அவரைப் பார்த்தாள் ஜோதி.

“ஆமாம்மா..அவங்க சொல்றதும் சரிதான்!...ஏன்னா...எனக்குத் தெரிஞ்ச அளவுல நீயும் உன் வாழ்க்கைல தொடர்ந்து போராட்டங்களைத்தான் பார்த்திட்டு வந்திருக்கே...அதெல்லாம் போதும்மா....இனியாவது நீ சந்தோஷமான வாழ்க்கை வாழணும்மா!...எங்களுக்கெல்லாம் ஒரு ஒளிமயமான வாழ்க்கையைக் காட்டுன திவாகர் உனக்கும் ஒரு ஒளிமயமான வாழ்க்கையைக் காட்டுவாரும்மா!” என்றார்.

அப்போதும் ஜோதியிடமிருந்து எந்தவித ரீயாக்‌ஷனும் வராமல் போக, இருவரும் தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்ற பின், நீண்ட நேரம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த ஜோதி, சட்டென்று ஏதோ தீர்மானம் செய்தவளைப் போல், எழுந்து உள் அறையை நோக்கி நடந்தாள்.

அங்கே, இருட்டில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சவிதா. அவளருகே சென்று அவள் தோளைத் தொட்டாள் ஜோதி.

நிதானமாய்த் திரும்பி, “என்னக்கா?” என்றாள் சவிதா.

“எதைம்மா...இவ்வளவு சீரியசா வேடிக்கை பார்த்திட்டிருக்கே?” யதார்த்தமாய்க் கேட்டாள்.

“ஹூம்...இந்தத் தெருவுல...சின்னக் குழந்தையிலிருந்து சந்தோஷமா ஓடியாடி விளையாண்டிருக்கேன்!...இதே மண்ணுல மகிழ்ச்சியோட புரண்டிருக்கேன்!...ஆனா...இன்னிக்கு என்னால இதே தெருவுல வெளிய தலைகாட்ட முடியலை!...எல்லோரும் என்னோட கோரமான முகத்தைப் பார்த்து ஒண்ணு பரிதாபப்படறாங்க!..இல்லேன்னா...கேலி பண்றாங்க!...சில குழந்தைகள் என்னோட முகத்தைப் பார்த்து பயந்து அலறி ஓடியிருக்கின்றன!” சொல்லி விட்டு விரக்தியாய்ச் சிரித்தாள் சவிதா.

அந்தச் சிரிப்பினுள் புதைந்திருக்கும் வேதனையைப் புரிந்து கொண்ட ஜோதி, “ப்ச்!...நீ ஏன் அதையே நெனச்சுக் கவலைப்பட்டு இருக்கே?...அதான் திவாகர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு பண்ணிட்டிருக்காரில்ல?...”

தன்னை ஆறுதல் படுத்தும் விதமாய்ப் பேசிய அக்காவைக் கூர்ந்து பார்த்து விட்டு, “சில சமயம் எல்லோருக்குமே பாரமாய் இருக்கற இந்த வாழ்க்கை தேவையா?ன்னு கூடத் தோணுது அக்கா!”

“ஏய்..ச்சூ...எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பேசுறே?...உன்னைய யாருமே இங்க பாரமாய் நினைக்கலை!” என்றாள் ஜோதி.

“ஹூம்...நான் இப்படி இருக்கறதை நெனச்சுத்தான் நீ உன்னோட கல்யாணத்தைக் கூட தள்ளிப் போட்டுட்டு இருக்கேன்னு எனக்குப் புரியாமல் இல்லைக்கா” சொல்லும் போது சவிதாவின் விழியோரம் தெரிந்த ஈரம் ஜோதியை கலங்கடித்து விட,

சட்டென்று அவளை இறுக அணைத்துக் கொண்டாள் ஜோதி.

சில நிமிடங்களுக்குப் பிறகு. தன் அக்காவின் அணைப்பிலிருந்து விலகிய சவிதா, “அக்கா...உண்மையைச் சொல்லு...நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா நான் என்ன பண்ணுவேன்?ங்கற கவலையினால்தானே நீ உன்னோட கல்யாணத்தை இழுத்தடிக்கறே?”

“இல்லம்மா...அப்படியில்லை!...நீ இன்னும் முழுமையா குணமடைந்த பிறகு அதைப் பத்தி யோசிக்கலாம்னுதான்...”

“வேண்டாம்க்கா...நீ என்னைப் பத்திக் கவலைப்பட்டு உனக்கு கிடைக்கற நல்ல வாழ்க்கையை இழந்துடாதேக்கா!...எனக்கு என்னவோ ஆயிட்டுப் போகுது...நீ நல்லா இருக்கா!” ஈர விழிகளுடன் சொன்னாள் சவிதா.

“இல்லம்மா...எனக்கு என்னோட வாழ்க்கையை விட உன்னோட வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம்!...உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்!...அமையணும்!...அமைய வைப்பேன்!..” ஒரு தீர்மானமான உறுதியோடு சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினாள் ஜோதி.

காலை பதினொன்றரை மணியிருக்கும்,

போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்தாள் ஜோதி.

ஒரு நிலத் தகராறு கேஸ் விஷயமாக பக்கத்து கிராமம் வரை போய் விட்டு, வியர்வை வழிய வந்தார் திவாகர்.

வந்தவர் அங்கு அமர்ந்திருந்த ஜோதியைப் பார்த்ததும், “ஜோதி...நீ எப்படி...இங்கே?”

“வந்து...உங்களுக்கு சிரமமில்லேன்னா...கொஞ்சம் என் கூட வெளிய வர முடியுமா?” ஜோதி சன்னக் குரலில் கேட்டாள்.

“என்ன ஜோதி...ஏதாவது பிரச்சினையா?”

“இல்லை...இல்லை...பிரச்சினை எதுவும் இல்லை!..உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!”

“ஓ.கே!...எனக்கும் கொஞ்சம் வெளி வேலை இருக்கு!...வா...ரெண்டு பேருமே சேர்ந்து போவோம்?” என்றவர், திடீரென்று ஞாபகம் வந்தவராய், “ஆமாம்...சவிதா நல்லாயிருக்காளா?” கேட்டார்.

“ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொன்னவளை ஊடுருவிப் பார்த்த திவாகர், அவள் மனதினுள் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு விஷயம் அவளை மிகவும் பாதித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட திவாகர்,

“ம்ம்...கான்ஸ்டபிள்...நான் வெளிய போறேன்...ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்!” என்று சொல்லி விட்டு விடுவிடென்று வெளியே சென்றார் திவாகர்.

அவர் பின்னாலேயே ஒடிய ஜோதி, திவாகர் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

அந்த பைக் மித வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னொரு நாள் தற்கொலைக்காக ரயில்வே தண்டவாளத்தில் ஓடிய போது திவாகர் அவளைக் காப்பாற்றி...இதே பைக்கில்...இதே போல் அழைத்துச் சென்றது ஞாபகத்தில வர, ஏனோ அவள் மனம் பாரமானது.

இருபது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, திவாகரின் பைக் ஒரு அட்வகேட் ஆபீஸ் முன் நிற்க, குழம்பினாள் ஜோதி.

“இறங்கும்மா!” என்றார் திவாகர்.

அவள் இறங்கியதும் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அட்வகேட் ஆபீஸினுள் நுழைந்தார் திவாகர்.

கருப்புக் கோட்டுடன் எதிரில் வந்த அட்வகேட் ஒருவர், “ஹலோ இன்ஸ்பெக்டர்!...என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்?” கெட்டு விட்டு, பின்னால் வந்து கொண்டிருந்த ஜோதியைப் பார்த்தார்.

“ஒண்ணுமில்லை சிவஞானம்...ஒரு சின்ன டிஸ்கஷன்...அங்க ஸ்டேஷன்ல வெச்சு பண்ண முடியாது...அதான் இங்க உங்க டிஸ்கஷன் ரூம்ல வெச்சுப் பண்ணலாம்னு...”

“இட்ஸ் ஓ.கே!...தாராளமா!” என்ற அந்த வக்கீல் சிவஞானம் தன் உதவியாளனை அழைத்து, “சுரேஷ்...சாருக்கு டிஸ்கஷன் ரூமை ஓப்பன் பண்ணி விடு” என்றார்.

டிஸ்கஷன் ரூமிற்குள் சென்றதும், “ம்...சொல்லு ஜோதி!...என்ன பேசணும்?” கேட்டார் திவாகர்.

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் குனிந்தபடியே அமர்ந்திருந்த ஜோதி, மெல்ல ஆரம்பித்தாள். “நான்...உங்ககிட்ட சொல்லப் போற விஷயம்..உங்களைக் கொஞ்சம் அதிர்ச்சியடைய வைக்கலாம்!...ஏன்...என் மேல் கோபப்படக் கூட வைக்கலாம்!...அதுக்காக முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக்கறேன்!”

“ம்...என்ன ஜோதி பீடிகை ரொம்ப பலமாயிருக்கு?”

“விஷயம்..அவ்வளவு முக்கியம்...அதான் இந்தப் பீடிகை!”

“ஓ.கே!... விஷயத்தைச் சொல்லு!”

அப்போது அறைக்குள் நுழைந்த அட்வகேட்டின் உதவியாளர் “சார்!...காபி...ஆர்...டீ?” என்று கேட்க,

“ம்ம்ம்...இப்போதைக்கு எதும் வேண்டாம்...ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல லன்ச் சாப்பிடணும்..அதான்!”

“ஓ.கே!” அந்த உதவியாளர் சென்றதும், ஜோதி பேச்சைத் தொடர்ந்தாள்.

“நான் இது வரைக்கும் உங்ககிட்ட எனக்காக எதுவும் கேட்டதில்லை!...இப்ப முதன் முறையா ஒண்ணே ஒண்ணு கேட்கப் போறேன்!..யாருக்கும்...எப்போதும்...“இல்லை” என்று சொல்லும் வழக்கமில்லாத திவாகர் எனக்கும் “இல்லை” என்று சொல்ல மாட்டார் என்கிற நம்பிக்கையில் கேட்கிறேன்!...நீங்க...நீங்க...எங்க குடும்பத்திற்கு மாப்பிள்ளை ஆகணும்!”

“ஓ...“நம்ம கல்யாணத்துக்கு சீக்கிரமே ஏற்பாடு பண்ணுங்க!”ன்னு சொல்றே?...அப்படித்தானே?” திவாகர் சிரித்த முகத்துடன் சொல்ல,

இட, வலமாகத் தலையாட்டினாள் ஜோதி.

திவாகர் நெற்றியை சுருக்கிக் கொண்டு பார்க்க,
“நான் எங்க குடும்பத்துக்கு மாப்பிள்ளை ஆகணும்னு சொன்னது..என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அல்ல!...என் தங்கை சவிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு!”

“ஜோ...தீ?..எ...என்ன சொல்றே நீ?”

“ஆமாங்க...உங்களை மாதிரி உயர்ந்த உள்ளம் படைச்ச ஒருவராலதான் அவளை...அந்த அவலட்சணத்தை ஏத்துக்க முடியும்!...எங்கோ தவிச்சிட்டிருந்த ஏழைப் பெரியவருக்கு அப்பா ஸ்தானம் குடுத்தீங்க!...அதே மாதிரி வாழ்க்கையே இனி இல்லைன்னு நெனச்சிட்டிருந்த ஒரு பெண்மணியை அழைச்சிட்டு வந்து அதுக்கு அம்மா ஸ்தானம் குடுத்தீங்க...ஊனமுற்ற சிறுவனைக் கூட்டிட்டு வந்து தம்பி ஆக்கிக்கிட்டீங்க!..அதே மாதிரி இந்தப் பரிதாப ஜீவனையும் ஏத்துக்கிட்டு அவளுக்கும் ஒரு வாழ்வு குடுங்க!...எனக்காக....என் மேல் நீங்க வெச்சிருக்கற உண்மையான காதலுக்காக நீங்க இதைச் செய்யணும்!” சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதாள் ஜோதி.

வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார் திவாகர். ஆனால் அவரது உள்ளம் ஜோதியை எண்ணி எண்ணி மாய்ந்தது. “ச்சே...என்ன ஒரு தியாக உள்ளம் இவளுக்கு!...வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே இன்பங்களையும், சந்தோஷங்களையும் தொலைச்சிட்டு...துன்பங்களையே தொடர்ந்து அனுபவிச்சிட்டு வந்த ஜீவன்...தனக்குக் கிடைச்ச ஒரு இனிமையான வாழ்க்கையையும் இன்னொரு ஜீவனுக்கு தாரை வார்க்கத் துடிக்குதே!..ஆண்டவா...இன்னும் இந்த உலகத்துக்கு நல்லவங்களையும் படைச்சு அனுப்பிட்டுத்தான் இருக்கியா நீ?”

திவாகர் பதிலேதும் பேசாதிருப்பதைக் கண்டு குழப்பமுற்ற ஜோதி, “நான் எதுவும் தப்பா சொல்லிடலையே!” என்றாள் தணிந்த குரலில்.

“இல்லை ஜோதி...நீ சரியாத்தான் சொல்லியிருக்கே!...நான் சின்ன வயசுல அனாதை விடுதில இருந்தப்ப அங்க எனக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக் குடுத்த பாடம் என்னன்னா?... “பிறர் நலத்துக்காக உன்னால் முடிந்த அளவிற்கு தியாகம் செய்!...கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் முதலில் உதவி செய்!...எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷப்படுத்து!...இதையெல்லாம் நீ செய்தால்தான் உன் வாழ்க்கை உண்மையான வாழ்க்கை!”ன்னு என்னோட மனசைப் பண்படுத்தி வெச்சிருக்காங்க!..என்னை மாதிரியே நீயும் “பண்பட்ட மனசுக்காரி!”ங்கறதை உன்னோட இந்த தியாகத்துல இருந்தே புரிஞ்சுக்கிட்டேன்!...”

“அப்ப...உங்க பதில்?”

“இப்ப நீ ஒரு வார்த்தை சொன்னியே “என் மேல் வெச்சிருக்கற உண்மையான காதலுக்காக நீங்க இதைச் செய்யணும்!” னு...அந்த வார்த்தைக்காக நான் ஒத்துக்கறேன்!...” சொல்லி விட்டு “வெடுக்!” கென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்ட திவாகரை கூர்ந்து பார்த்த ஜோதி ஒரு கணம் ஆடிப்போனாள்.

அவர் கண்களில் கண்ணீர்த் திவலைகள்.

(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
இது என்ன முட்டாள் தனம் ஜோதி.... ..ஜோதியைவிட சவீ அழகு ல நிறத்தில் கம்மினு தானே முன்ன சவீ அம்மா சொல்லுவாங்க.... ட்ரேட்டமெண்ட் எடுத்த பிறகு சவீ சரி ஆக வாய்ப்பு இருக்கும் போது ஏன் இப்படி திவாகரை நெருக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top