ஒரு காவ(த)லனின் கதை 3

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஒரு_காவ(த)லனின்_கதை_3
Episode_3

மாதம் ஒருமுறை இங்கு வருவது அத்விக்கின் வழக்கம். போனில் அம்மாவிடம் அவரது நல விசாரிப்புகள் தவிர அதிகம் பேசாமல் பார்த்துக்கொள்வான். வீட்டினர் பேச்சு குரல் கேட்டால் உடனே அணைத்தும் விடுவான். அதிலும் அன்று "யாரிடம் மா பேசிக்கொண்டு இருக்கிறாய்?" என்ற அத்ரிஷின் கேள்விக்கு "அத்வி தான்டா" என பேச்சு சுவாரஸ்யத்தில் அம்மா கூறி முடிக்கும் முன்னே "என்னம்மா!! அண்ணனா அண்ணனாம்மா?" என்று அழுகையுடனே ஒலித்தது எதிரொலி. பதற்றத்தில் எதையும் கூறிவிடும் முன்னே 'அத்வி பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தேன்' என்று தம்பியிடம் சமாளியுங்கள் என போனை வைத்தான்.

எதற்காக இந்த ஒளிவு மறைவு... யாருக்காக இத்தனை ஓட்டம்... நினைக்க நினைக்க பன்மடங்காகப் பெருகி இருந்த வெறுப்பு வருத்தமாய் மாறி இருப்பதே நிஜம். எந்த வீட்டில் அப்பா மகன் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். வாக்குவாதத்தின் போது விசிறி அடிக்கிற வார்த்தைகள் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனை பேரின் வாழ்க்கையை சுழற்றிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. அப்படிப்பட்ட கூர்மையான வார்த்தைகளுக்கு பின்பும் சிலர் அதே பாதையில் தங்களை தக்கவைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் இந்த மறப்போம் மன்னிப்போம் பாலிசி போல. அதிலும் சிலர் அனைத்தையும் துடைத்துவிட்டு போகும் ரகம். உண்மையில் இவர்களுக்கு அவ்வளவு எளிதில் பிபி சுகர் மாத்திரைகளை தொட நேராது. கண்டிப்பாக அத்விக் இந்த கடைசி வட்டாரத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். எள் என்றால் கோபம். கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. அந்த மாதிரியான கோபமே இன்றைய அத்விக் ஐபிஎஸ் அவதாரம். இந்த அவதாரத்தில் கோபத்தை அவ்வபோது நிதானம் மிஞ்சி வருகிறது. அதற்கான முக்கிய பங்கினை யோகா கைப்பற்றுகிறது. இப்போதெல்லாம் அம்மா பேசும் சமயங்களில் ஒருமுறையாவது வீட்டிற்கு சென்று வரலாமா என்று மேலோங்கும் எண்ணங்களை தன்மானம் மறுக்கிறது. ஆரம்பகாலத்தில் தான் பேசுவது வீட்டினர் யாருக்காவது தெரிந்தால் தொடர்பு கொள்ள மாட்டேன் என்ற மிரட்டல்களை ஆவது அம்மாவிடமிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் இரு முட்டை கண்கள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறது. ஆம் அத்ரிஷிற்கு ரகசியம் என்பது யாதெனில் தனக்குத் தெரிந்து இருக்கிறதோ இல்லையோ அவளுக்கு அனைத்தும் சென்றிருக்க வேண்டும். அப்படி அவளுக்கு ஏதாவது தெரிந்தால் அப்பா காதிற்கு அச்செய்தி போவது மட்டுமில்லாமல் பெல்ட் அடியும் நிச்சயம்.

கல்லூரியில் முதலாமாண்டு ராகிங் என்ற பெயரில் சிகரெட் புகையை வட்டவட்டமாக விட சொன்ன போது 'எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது' என்று சொன்னது எவ்வளவு அவமானமாக இருந்தது. அன்றிரவு எப்படியாவது நன்கு பழகி அடுத்த நாள் சீனியர்களிடம் கெத்து காட்டிவிடலாம் என்ற பயிற்சியில் மண்ணை வாரி இரைத்ததுமில்லாமல் அப்பாவின் பெல்ட் பிய்ந்ததற்கான காரணமும் அந்த குட்டி சாத்தான் தான். அவளைப் பற்றி நினைத்தால் தலைவலி தான் மிஞ்சும். ஏன் தான் இங்கு வந்ததற்கு அஸ்திவாரம் இட்டவளே அவள்தானே. தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு முழு ராஜ்யத்தையும் கைப்பற்றி இருப்பாள் அடங்காபிடாரி.

எப்படித்தான் ஒரு சமத்துப் பையனாகிய விக்னவிற்கு இப்பேர்பட்ட ராட்சசி தங்கையாக பிறந்தாளோ! என்று வியக்காத நாட்கள் இல்லை. மிஸ் யூ பேட்லி டா விக்கி... எனக்காக எத்தனையோ முறை நான் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டவன். வீட்டில் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றாலும் முதலில் வந்து நிற்பவன்.
பத்தாவது ஹிஸ்டரி பொதுத் தேர்வின் போது அப்பத்தாவிற்கு உடம்பு முடியாமல் ஐசியூவில் இருந்த சமயத்தில் எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி விட்டவன் அடுத்த நாள் தேர்வையும் தவறாமல் எழுதினான். இதில் எனக்கு ஏற்பட்ட கொடுமை என்னவென்றால் அந்தப் பரீட்சையில் என்னைவிட 32 மதிப்பெண்கள் அவன் அதிகம் பெற்றிருந்தது தான். அந்த ஹிஸ்டரி எக்ஸாம் என் ஹிஸ்டரியையும் புரட்டிப்போட்டது.

"என்னடா இது... பார்டரில் பாஸ் பண்ணி இருக்க அதுவும் திருத்தியவன் யாரோ உன் மேல இறக்கப்பட்டு ரெண்டு மூணு மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருப்பான்" என்று அப்பா எகிறியதற்கு "பாஸ் பண்ற அளவுக்கு மார்க் எடுத்து இருந்தாதான் அந்த ரெண்டு மூணு கிரேஸ் மார்க் கிடைக்கும்" என்று பன்மடங்காக குதித்தது நினைவில் ஆடியது. மேலும் "நானும் மனுஷன் தான். அன்று நைட் 11 மணி வரை அப்பத்தா கூட தான் இருந்தேன். வீட்டிற்கு சென்று படிப்பிலும் முழு கவனத்தை செலுத்த முடியலை. இரண்டு மணி நேரம் புரட்டியதற்கு இதுவே பெருசு" என்று சேர்த்து கூறியது அப்பாவின் ரத்த அழுத்தத்தை கூட்டிவிட்டது.

"ஹோ துரை சார் அன்றுதான் ஹிஸ்டரி புக்கை பார்த்தாரோ! இந்த ஒரு வருடமும் என்ன சார் பண்ணீங்க? அன்று இரவு முழுவதும் ஹாஸ்பிடல இருந்து விக்னவ் எப்படிடா ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினான்? புள்ளனா அதுபுள்ள. எனக்கும் வந்து பொறந்திருக்கே" என்று வசை பாடினார் ஜெகன்.

"ஏன் பிறந்தேனா...." தன் வாக்கியத்தை முடிக்க விடாமல் தன்னைப் பற்றி இழுத்த பிருந்தா அத்தை "அண்ணா அமைதியா இரு.. அதுதான் மீதி எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணி இருக்கான்ல விடு" என்று அவரை போக சொல்லிவிட்டு தன்னையும் அவரோட அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்பாவின் திட்டிற்கு பரிசாக அன்று மாலை மாயாஜால். "என்னால் தானடா உனக்கு இவ்வளவு திட்டும்" என்று அழுத விக்னவை இன்று நினைத்தாலும் புல்லரிக்கும். "டேய் திட்டு வாங்கிய தடிமாடே எனக்கு என்னவென்று கொட்டிக் கொண்டிருக்கிறான் நீ ஏன்டா அழுகிற" என்று சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமானாள் விக்னவின் பாசமலர்.

" ஏன்டி என் பேரனையா தடிமாடுனு சொல்ற.. வயசுல மூத்தவன் மரியாதையா அத்தான்னு கூப்பிடு என்றால் கேட்கிறாயா" என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்த மரகதத்திடம் "ஏய் கிழவி நீ சும்மா இரு உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும். உன்னை யாரு வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்தவர்கள் கொண்டுவந்த ஸ்வீட் பாக்ஸை ஆட்டைய போட சொன்னது. ஒன்னு ரெண்டு சாப்பிட்டாலே ஒத்துக்காது இதுல முழு பாக்ஸையும் காலி பண்ணி இருக்க. உனக்கு என்ன வயசாகுது தெரியுமா தெரியாதா ரொம்ப யூத்னு நெனப்பு என்னேரமும் அத்தையும் அம்மாவும் உன்னை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா ஒழுங்கா என்கூட மல்லு கட்டுவாவது கட்டுப்பாடோட இரு இல்லாவிட்டால் நானே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவேன்" என்று மூக்கை விடைத்துக்கொண்டு ஆத்திரமாய் பாய்ந்தாள்.

" வாய் ரொம்ப நீளுது அம்மாச்சியிடம் சாரி சொல்லுடி" என்று அவள் அம்மா பிருந்தா சொல்லியதை செவ்வனே செய்து கொண்டிருந்தான் விக்னவ். "அவள் பேசியதை மனசுல வச்சுக்காத அம்மாச்சி. அன்று எல்லோரையும்விட அவதான் ரொம்ப பயந்துட்டா. ஓவர் அழுகை. சாப்பிடக் கூட இல்லை. இனி இப்படி பேச மாட்டாள் நீயும் ஸ்வீட் சாப்பிடாத சரியா" என்று விக்னவ் கெஞ்சி கொஞ்சியதை ஒருவித வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்த அத்தையையும் அம்மாவையும் "ஓவர் செல்லம் உடம்புக்கு ஆகாது" என்று மொழிந்து விட்டு எழுந்து சென்றாள்.

" யானை இல்லாத இடத்தில் மணியோசைக்கு என்ன வேலை" என்பதற்கு ஏற்ப அத்ரிஷும் கிளம்பியிருந்தான்.

"ஏன்டா என் பேத்தியை யானைங்கிற?" என்று அத்விக்கிடம் அடுத்து பாய்ந்த மரகதத்திடம் "நானே உன் மேல கொலைவெறியில் இருக்கேன். அவ கொட்டிவிட்டு போய்ட்டா நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை அமைதியா இருந்துக்கோ" என்று அத்விக் எச்சரிக்க கப்சிப் ஆகி விட்டார்.

அரை மணி நேரம் ஆகியும் வந்து சேர்ந்திராத இளைய பேரனையும் பேத்தியையும் பார்த்து வருமாறு சொன்ன மரகதத்திடம் "சமாதானம் செய்ய அத்ரிஷ் போனான் தானே கூட்டி வருவான்" என்றான் விக்னவ்.

"இவ்வளவு நேரம் என்னத்த சொல்லிடா சமாதானம் செய்வான்"

"என்னத்த சொல்லி என்று கேட்காத அப்பத்தா என்னத்த கொடுத்துனு கேளு. அல்ரெடி பர்கரும் கோக்கும் ஃபஸ்ட் இன்னிங்ஸ்ல உள்ள போயிருக்கும் இப்போ இந்த கையில பீட்சாவும் அந்த கையில மாஸாவுமா உன் பேத்தி காட்சியளிப்பா பாரு" என்று அத்விக் கூறி முடிப்பதற்குள் அந்த காட்சி அவர்களுக்கு தென்பட்டதால் குபீரென சிரிப்பலை எழுந்தது. அந்த சிரிப்பு இப்போதும் அவன் உதடுகளில் உறைய தன் குடும்பத்தினரின் உவகை அன்று போல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் அவர்களை எவ்வழியிலும் எவனையும் நெருங்கி விடமாட்டேன் என்று சூளுரை போல வாய்விட்டே கூறினான்.

அத்விக் தன் இரு வருட சர்வீஸில் இதுபோன்ற இன்னும் பிற மிரட்டல்களை பார்த்திராதவன் அல்ல. ஆயினும் இந்த தனபால் கண்டிப்பாக ஏதேனும் செய்வானென்று உள்மனம் உணர்த்தியது. அதுவும் குடும்பத்திற்கு விருந்து என பல்லைக் காட்டிக்கொண்டு அழைத்த போது அந்த பற்களை அடித்து நொறுக்க ஆயத்தமானவன் கைகளை கட்டுப்படுத்தி அவனுக்கு பிரியாவிடை அளித்தான். இருந்தாலும் அவன் கிளறி விட்டு சென்ற குடும்த்தினரின் நினைவுகளுக்காக தற்போதைய ஜூஹா பீச் விஜயம்.
எப்பி சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top