பழியுணர்ச்சியும் ஆத்திரமும் எத்தனை பெரிய ஆட்களையும் நொடியில் முட்டாளாக்கிவிடும்.
உலகறிவு அதிகம் இல்லாத ஸ்ரீமதியும் அவ்வாறே மாட்டிக் கொண்டாள்.
அவளுக்கு சிறு வயதிலிருந்தே தன் மனவுணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டிக்கொள்ள உற்ற துணை இல்லை. அன்னை, உடன்பிறந்தோர் என யாரும் இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள் அவள்.
ஹாஸ்டல் சேர்ந்தாலும் வார்டன், பள்ளித் தோழிகள், ஹாஸ்டல் தோழிகள் என சிறிய வட்டம் தான். அவர்களோடு விளையாடுவாள், படிப்பாளே தவிர மனபாரத்தை எல்லாம் அவர்களிடம் சொல்ல தோன்றியதில்லை.
என்னவென்று சொல்லுவாள் உங்களுக்கு விடுமுறையை கழிக்கவாவது வீடென்று இருக்கிறது. எனக்கு அது கூட இல்லை என்றா அவளால் சொல்ல முடியும்? ஒன்று உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் இல்லையா சொந்த வீட்டில் உறவினளாக இருக்க வேண்டும்.
தன் நிலையை தன்னாலேயே ஏற்க முடியாத காரணத்தால் அதை நினைக்கவே மறுப்பவள் எப்படி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வாள்?
அதன் தொடர்ச்சி தான் அவள் தனக்குள் பல விஷயங்களை மௌன குமிழ்களுக்குள் மறைத்து வைத்தாளோ என்னவோ… அவள் காதல் தொடங்கி, திலீப் விஷயம் வரை…
இப்பொழுதும் பிரச்சினையை யாரிடமும் கொண்டு சேர்க்காமல் தானே அதனைச் சமாளிக்கும் முடிவை எடுத்தவள் திலீப்பை தேடி மீண்டும் சென்றாள்.
ஸ்ரீமதியை திலீப் மீண்டும் எதிர்பார்க்கவில்லை போலும். கண்கள் மின்ன, “தேவதையின் தரிசனம் மறுபடியும் கிடைக்கும்ன்னு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா எதிர்பார்க்கலை” என்றான் மட்ட புத்தியுடன்.
விருப்பமில்லை என்றபோதும் சிரிக்கும் நிலையில் அவள். கடினப்பட்டு புன்னகையைக் கொண்டு வந்தாள்.
“பாருங்க அண்ணா. இது ஸ்கூல்… இங்கே பிளீஸ் இதுபோல பேசாதீங்க…” என்றாள் இதுவரை அவனிடம் பேசியிராத தன்மையான குரலில்.
“நீ சொல்லி நான் மறுப்பேனா ஏஞ்சல். ஆனா பதிலுக்கு நீ என்ன செய்வ?” என மெல்ல அவளின் கரம் பற்றினான்.
தீச்சுட்டாற்போல கையை விலக்கியவள், “என்ன செய்யணும்…” என்றாள் அவனுக்கு இசைந்து. அவளுக்கு அவனிடம் தான் கொஞ்சம் சரிந்து போயிருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். உடனே மொத்தமாகச் சாய்ந்தது போல ரியாக்ட் செய்தால் கண்டிப்பாகச் சந்தேகம் வரும். ஆதலால் சிறிய தடுமாற்றம் அரும்பி இருப்பது போலப் போலியாகக் காட்டிக்கொண்டாள்.
“இந்த அண்ணா… அண்ணான்னு சொல்லற பாத்தியா… ஸ்ஸ்ஸ்… எனக்கு அதைக் காது கொடுத்து கேட்க முடியலை…” என்று காதை குடைய, “ஹ்ம்ம்…” என்றாள் பட்டும் படாமல்.
“எனக்கு உன்னோட டைம் ஸ்பெண்ட் செய்யணும் ஸ்ரீ… ஜஸ்ட் ஒரு ட்ரைவ் போகலாம். உன்னோட கொஞ்ச நேரம்… ஐ பீல் ரிலாக்ஸ்… பிளீஸ்…” தன் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினான்.
அவள் யோசிப்பது போல பாவ்லா காட்ட, “ஹே… சரி அப்படி வேணாட்டி ஹௌ எபோட் டிரைவிங் ஆன் யுவர் ஓன்… நீ ட்ரைவ் பண்ணு நான் உன்கூட வரேன். ஜஸ்ட் உன் வீடு வரைக்கும்ன்னா கூட எனக்கு ஓகே. யூ கேன் பிலீவ் மீ… உன் விருப்பம் இல்லாம நான் இன்ச் கூட மூவ் பண்ண மாட்டேன்” விஷமமாகக் கண்சிமிட்டிச் சொன்னான்.
ஸ்ரீமதி அவனறியாமல் பற்களை கடித்தாள். அந்த நொடிகளைக் கடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தும் அவளுக்கான சந்தர்ப்பம் வேண்டுமே தன் பகையைத் தீர்த்துக்கொள்ள, அவனைப் பழி தீர்க்க…
உள்ளுக்குள் எறிந்த குரூர நெருப்போடு, “எனக்கு டிரைவிங் தெரியாதே…” என்று பேச்சை வளர்த்தாள்.
இந்த பதிலைத் தான் அவனும் எதிர்பார்த்தான். இதை சாக்கிட்டு காரை ஓட்டி பழக்க அழைத்துச் செல்வது தான் பெரும்பாலான பெண்களிடத்தில் அவனின் முதல்படி. ஆனால், ஸ்ரீமதி தன் கேள்விக்குப் பதில் சொல்வாளா இல்லை வழக்கம்போல முகத்தை திருப்பிக்கொண்டு போய் விடுவாளா என்று தான் அவனுக்குச் சந்தேகமே!
இப்பொழுது ஸ்ரீமதி பதில் சொன்னதில் திலீப்புக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எத்தனை பெண்களை மடக்கியிருப்பான். யாரும் இந்தளவு அவனை அலைக்கழித்ததில்லை. இவள் தான் நிறைய நாட்கள் பிடியில் சிக்காமல் நழுவிய மீன். இன்று அவளே வலையில் விழ உற்சாகத்தில் வானத்தில் பறந்தான்.
அதை முகத்திலும் குரலிலும் காட்டியவாறு, “வாட்… இன்னும் டிரைவிங் தெரியாதா? ஸ்கூல் பொண்ணா நீ… இன்னும் இப்படிச் சொல்ல. இங்கே உனக்கு இருக்கும் பொசிஷனுக்கு நீ ஆட்டோ, டேக்ஸின்னு போனா நல்லாவா இருக்கு… இன்னைக்கே நாம டிரைவிங் கத்துக்க தொடங்கறோம்” என்று உல்லாச குரலில் வற்புறுத்தினான்.
ஸ்ரீமதி இப்படி அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைத் தானே வைத்திருந்தாள். ஆக, தயக்கம் போல முகத்தை வைத்துக் கொண்டாலும், மென்குரலில், “எனக்கும் கத்துக்கணும்ன்னு ஆசை தான். ஆனா நீங்க எப்படி? உங்க பொசிஷன் என்ன? எனக்கு போயி நீங்க டிரைவிங் சொல்லி தரதா?” என்றாள்.
“ஷிட்… வாட் ரப்பிஷ்… உனக்குச் சொல்லித்தர எனக்கு வாய்ப்பு கிடைச்சா அது வரம் ஏஞ்சல்…” என்றவனின் பார்வை அவள் அங்கம் முழுவதும் மேய்வதை உணர்ந்த ஸ்ரீமதி கூசிப் போனாள்.
அப்பொழுதிருந்து மாலை வரை வெகுநேரமாக யோசித்து அவள் தனக்குள் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டாள். அவனோடு நெருக்கம் காட்டி அவனை அழிக்க வேண்டும் என எண்ணியிருந்தவளுக்கு இத்தனை சுலபமாக வழி கிடைக்கும் என நினைத்தே பார்க்கவில்லை.
அவனுக்கு ஏற்படுத்தும் விபத்து தனக்கும் சேர்த்துத் தான் என்ற தயக்கமே அவளிடம் இல்லை. தான் அழிவது பற்றி அவளுக்குக் கவலையில்லை. அவன் அழிய வேண்டும் என்பதில் மட்டும் மனம் உறுதியாய் இருந்தது.
பழிவாங்கும் ஆத்திரத்தில் அறிவை இழந்தாள் ஸ்ரீமதி.
ஸ்ரீமதி திட்டப்படியே திலீப்போடு மாலையில் கார் ஓட்டி பழகுவதற்காகச் சென்றாள். அவன் செல்லும் வழி முழுவதும் ஏதேதோ பேசிக்கொண்டும் வழிந்து கொண்டும் வந்தான். எதுவும் அவள் செவியில் ஏறவில்லை. பிரகதீஸ், பொற்செழியன் முகம் மட்டுமே அவளின் மனக்கண்ணில்.
திலீப் அவளைத் தனியாக ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அவனுக்கு முதலில் அவளை இம்பிரஸ் செய்வது தான் நோக்கமாக இருந்தது போலும். ஆக, கார் ஓட்டி பழக்கி விடுவது போல ஆரம்பத்தில் நல்லபடியாகத் தான் நடந்து கொண்டான்.
அதைப் புரிந்துகொண்ட ஸ்ரீமதியும் தெளிவாக அவன் சொன்ன விபரங்களைக் கேட்டுக் கொண்டாள். அவன் சொல்லித்தருவது போலச் செய்து மெது மெதுவாக வாகனத்தையும் இயக்கவும் செய்தாள்.
நன்றாக ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டவள், தோதானா இடத்தையும் அவ்வப்பொழுது நோட்டம் விட்டபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
வரிசையாகப் பெரிது பெரிதாக மரங்கள் ஓங்கி வளர்ந்து இருக்க, அதில் ஒரு பெரிய மரத்தைத் தான் அவள் குறிவைத்தாள்.
திலீப் ஸ்ரீமதியின் மேனியில் தன் பார்வையை மூழ்கடித்து, எங்கு அவளைத் தீண்ட என யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவளின் கால்கள் ஏக்ஷிலேட்டரில் பதிந்து ஸ்டியரிங்கை அந்த மரங்களை நோக்கி மெல்ல ஒடித்துத் திருப்பியது. ஏக்ஷிலேட்டரை ஒரு அழுத்து அழுத்த காரின் இடது புறம் மரத்தில் தேய்த்துக்கொண்டு போய் முன்புறமிருந்த மற்றொரு மரத்தில் மோதி நின்றது.
திலீப் தன் கட்டுப்பாட்டுக்குள் காரை எடுக்க நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்க, அவனின் தலை இடதுபுற கண்ணாடியில் அதிவேகமாக மோதி திரும்பி, முன்புறம் அதைவிட வேகத்தில் இடித்ததில் அங்கேயே மயங்கிச் சரிந்திருந்தான்.
“ம்ம்மா… ம்மா…” மழலை குரல் ஒன்று அவளின் மனதில் ஏதோ ஓர் மூலையில் கேட்டது. தன்னையறியாமல் ஒரு மென்சிரிப்பு. “செழியா…” என்று அழைத்தது அவளின் அன்னை மனம். இதழ்கள் புன்னகையைப் பூசியிருந்தது.
உடலெல்லாம் பாரமாக இருப்பது போல கடும் வலி. திரும்பிப் படுக்கலாம் என முயற்சித்தால் இம்மி கூட நகர முடியவில்லை.
“தேங்க் காட்… ஷீ ஈஸ் ரெஸ்பாண்டிங்… டாக்டர்… டாக்டர்…” வேகவேகக் காலடி ஓசைகள், ஏதேதோ பேச்சு குரல்கள், தன்னைச்சுற்றி கூட்டம் ஒன்று கூடிவிட்டதை உணர முடிந்தவளால் விழிகளை என்ன முயன்றும் திறக்க முடியவில்லை.
கண்களைச் சுருக்கினாள். நுனி விரல்களை அசைக்கிறாள். அதைத்தாண்டி வேறு எதுவும் அவளால் முடியவில்லை.
“தம்பி… நம்ம ஸ்ரீ பொண்ணுக்கு நினைவு திரும்புது… ஆண்டவன் நம்மளை கை விடலை” அழுகையும் தவிப்புமாகச் சொன்ன குரல் ஜெயாம்மாவுடையது ஆயிற்றே! யாரிடம் பேசுகிறார். ஐயோ ஏன் என்னால் உடலில் எந்த பாகத்தையும் அசைக்க முடியவில்லை.
கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறக்க முயற்சி செய்தாள். இமைகளைத் திறக்க முடியாமல் கனத்தது.
“டோன்ட் ஸ்ட்ரைன் மேடம். மெதுவா கண்ணைத் திறக்க முயற்சி செய்யுங்க. உங்களால முடியும். கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணுங்க…” அறிமுகமற்ற குரல் ஒன்று மெல்ல கன்னம் தட்டி சொன்னது.
மீண்டும் தன் கனத்த இமைகளை மெது மெதுவாகத் திறக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் ஸ்ரீமதி.
“ஓகே மேடம். ரிலாக்ஸ். இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. உங்களால முடியும் போது முயற்சி செய்யலாம்” அனுமதி வழங்கும் இந்த குரல் யாருடையது என அவளுக்கு புரியவில்லை. ஆனால் மீண்டும் நித்திரைக்கு ஏங்கியது அவளின் உடல். மெல்ல தளர்ந்து படுத்து உறங்கிப் போனாள்.
இதமான நிம்மதியான உறக்கத்திற்குப் பின்னர், யாரோ கால்களை இதமாகப் பிடித்து விடுவது புரிந்தது. அவளின் இதழ்கள் கணவனின் கரத்தின் ஸ்பரிசத்தில் தாமரையாய் மலர்ந்தது.
இன்னும் வாகாக அவனுக்குக் கால்களை நகர்த்தி வைத்தாள்.
அவனோ அவளின் காலை விட்டுவிட்டு, “நர்ஸ் நர்ஸ்…” என வெளியே ஓடினான்.
மீண்டும் கூட்டம். இம்முறை, “ஸ்ரீ… ஸ்ரீ…” என்ற பிரகதீஸின் தவிப்பான குரலும் சேர்ந்து ஒலித்தது. ஐயோ என்னவாயிற்று ஏன் இப்படித் தவிக்கிறான் அவளுக்கு மனம் அடித்துக் கொண்டது. அவன் முகம் காணும் ஆவலில் மெல்ல மெல்ல விழிகளைப் பிரித்தாள். இதழ்கள் மெலிதாக அசைய, “பிரகா…” என்றாள்.
“ஸ்ரீ… ஸ்ரீ… ஏன்டி இப்படி செஞ்ச… எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? இப்ப உனக்கு எப்படி இருக்கு?” பதறித் துடித்தான் கணவன்.
“எனக்கு என்ன?” என்றவளுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை.
“மிஸ்டர் பிரகதீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. அவங்கவகிட்ட நிதானமா பேசணும்ன்னு சொன்னேன் தானே” கண்டிப்புடன் ஒரு குரல்.
“சாரி டாக்டர்…”
“ஷீ ஈஸ் ஆல்ரைட். இனி பயப்படத் தேவையில்லை” என அவனின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது இந்த சொற்களைக் கேட்க. ஆண் என்ற கர்வம் மறந்து முகம் மூடி அழுதே விட்டான்.
‘இதென்ன இவன் தலைமுடி, மீசை எல்லாம் இப்படி இருக்கிறது. உடல் வேறு மெலிந்து தெரிகிறான்’ மசமசத்த உணர்வுகள் அவளுக்குள் உலா வர, அதற்குள் அவளுக்கு மயக்கமோ உறக்கமோ கண்களைச் சுழற்றியது. அப்படியே மீண்டும் உறங்கிப் போனாள்.
விபத்தில் திலீப் இறந்திருக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீமதி மீள மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. இத்தனை நாட்களும் சுயநினைவின்றி மருத்துவமனையில் தான் இருந்தாள்.
அடுத்து வந்த நாட்களில் மெல்ல மெல்ல ஸ்ரீமதி சுயநினைவுக்கு வந்து, குணமும் ஆகத் தொடங்கினாள். அன்று ஆத்திரத்தில் தான் செய்த காரியம் எவ்வளவு பெரிய பிழை என்று இப்பொழுது புரிந்தது.
தன் மடியில் தவழும் பொற்செழியனும், தன்னை முறைத்துப் பார்க்கும் கணவனையும் பார்க்கும் போதெல்லாம் தன் பிழை பூதாகரமாகத் தெரியும்.
ஒருமுறை தனிமையில் கணவனை இறுக அணைத்து, “சாரிங்க…” என்றாள். “மண்ணாங்கட்டி…” என சீறிவிட்டுப் போனான் அவன். அவன் கோபத்தைக் காட்டிலும் தன் அணைப்பிற்கு எதிரொலி இல்லை என்பதில் அவள் முகம் சுண்டிப் போனது.
ஜெயாம்மா தான் ஸ்ரீமதியை காண வரும்போதெல்லாம் செழியனையும் அழைத்து வந்தார். தாத்தாவை பற்றி விசாரித்தால் உடம்பு சரியில்லை என்று முடித்துக் கொண்டார். முறைக்கும் கணவனிடமே கேட்டாள். “முதல்ல குணமாகி வீட்டுக்கு வாடி இம்சை…” என அதற்கும் திட்டினான்.
“ஏதோ தெரியாம பண்ணிட்டேங்க… ரொம்ப சாரி… பிளீஸ் நான் பாவம் இல்லையா? எமனையே மீட் பண்ணிட்டு வந்திருக்கேன். இந்த சத்தியவான் இந்த சாவித்திரியை மீட்டுக் கூட்டி வந்திருக்காரு…” என தங்கள் இருவரையும் சுட்டிக்காட்டிச் சொல்லியவள், “ஆனா பேசத் தான் மாட்டீங்கறாரு…” என்றாள் சோகமாக.
“எனக்கு வர ஆத்திரத்துக்கு… ஹ்ம்ம்..” என்ற பெருமூச்சுடன், “உன் உடம்பு குணமாகட்டும் பேசிக்கிறேன்” என்றான் அவன்.
“எப்படி பேசுவீங்க…” வேண்டுமென்றே அவனை உரசினாள்.
“தள்ளி போடி செம கோபத்துல இருக்கேன்”
“பிளீஸ் பிளீஸ்…” தாடையைப் பற்றிக் கெஞ்சினாள்.
“இனிமே எதையாவது என்கிட்ட மறைச்சு பாரு…”
“இல்லை இல்லை நான் சமத்து… இனி திருந்திட்டேன். நீங்க நம்பலாம்…” என வேகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
ஒரு மாதம் மருத்துவமனை வாசத்தில் இருந்தபோது அவனைக் காண அவளின் தாய்வீட்டு உறவுகள் மட்டும் தான் வந்தார்கள். ஆனால், பிறந்தவீடு, புகுந்த வீட்டு உறவுகள் எல்லாம் பெயருக்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை. அவர்களைப் பற்றி தெரியும் என்பதால் அவளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தாத்தா வராதது தான் அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
கேட்டாலும் யாரும் சரியாகப் பதில் சொல்வதில்லை என்பதிலேயே தாத்தாவின் கோபத்தின் அளவு அவளுக்கு விளங்கிற்று.
தாத்தா ஏன் வரவில்லை என்பதற்கான விடை அவள் வீடு திரும்பியதும் தான் கிடைத்தது. அவர்கள் திரும்பியது ஒரு பழைய வீட்டிற்கு. அதனை சமீபத்தில் தான் புதுப்பித்திருந்தார்கள் போலும்.
இது ஸ்ரீமதிக்காக அவளின் தாத்தா தர்மராஜன் எழுதி வைத்ததாம். இப்படி ஒரு சொத்தை பேத்திக்காக அவர் விட்டுச் சென்றதே அவளுக்கு இப்பொழுது தான் தெரியும்.
இந்த வீட்டிலேயே ஒரு அறையில் ஜெயாம்மா செழியனோட தங்கியிருந்தார். பிரகதீஸ்வரன் பெற்றவர்களோடு சண்டையிட்டு வந்திருக்கிறான் என்று புரிந்தது.
தாத்தாவை தான் தேடினாள். “தாத்தாவுக்கு இன்னும் என்ன கோபங்க? அவர் எங்கன்னு சொல்லுங்க நான் பேசிக்கிறேன் அவர்கிட்ட” வீடு முழுக்க தேடிக் கிடைக்காத ஆதங்கத்தில் கேட்க, ஒரு அறையைச் சுட்டிக் காட்டினான் கணவன்.
“ஓ… இங்கே பார்க்காம விட்டுட்டேனா?” எனச் சலித்தபடி கதவைத் திறந்தவள், தன்னை புறக்கணித்து அமர்ந்திருந்த தாத்தாவைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிப் போனாள்.
மணிவண்ணன் தாத்தா அத்தனை எளிதாக சமாதானம் ஆகவில்லை. பிரம்பொன்றை வைத்து அவளை அடி பின்னினார். “ஆ… தாத்தா… தெரியாம பண்ணிட்டேன். விட்டுடுங்க… வயசான காலத்துல ஸ்கூல் டீச்சர் வேலை எல்லாம் உங்களுக்கு எதுக்கு?” அவரின் அடியில் மான்குட்டியாய் துள்ளியபடி கெஞ்சிக் கதறினாள்.
அந்த அறையின் வாயிலில் கையை கட்டி நின்றபடி பிரகதீஸ்வரன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ… புருஷா பிளீஸ் காப்பாத்துங்க…” என அவன் பின்னால் வந்து மறைந்து நின்றாள்.
“எல்லாம் நீ கொடுக்கும் இடம் தான்டா… உண்மையை உன்கிட்ட மறைக்கிறான்னு தெரிஞ்சப்பவே இவ காதை பிடிச்சு திருகியிருந்தா இவ புத்தி இப்படி புல் மேய போயிருக்குமா?” என அவளின் காதை பற்றித் திருகினார்.
“ஆ… ஆ… ஆஆஆ…” என துள்ளினாள். விளையாடிக் கொண்டிருந்த செழியனும் கைத்தட்டி சிரித்து ஆர்ப்பரித்தான்.
குணமான பிறகும் ஸ்ரீமதி பள்ளிக்குத் தான் சென்று கொண்டிருக்கிறாள். செழியனின் அம்மா, அப்பா பங்கு சேர்களை அவள் தான் கவனித்துக் கொள்கிறாள். பொற்செழியனை முறைப்படி இருவரும் தத்து எடுத்துக்கொண்டபடியால், அவனது கார்டியனாக இருக்கிறாள்.
தம்பதிகள் இருவரும் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு உறவுகளை மொத்தமாகப் புறக்கணித்து விட்டிருந்தார்கள்.
அந்த சின்னஞ்சிறு குடும்பத்தின் வாழ்க்கை பாதை புதியதொரு பரிமாணத்தில் அழகாகப் பயணிக்கத் தொடங்கியது.
இந்த இனிய பயணம் நெடுங்காலம் தொடர அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.