சங்கீத சக்தி – 2

சக்திவரதன் தன்னிடம் வந்து பேசியதை தன் தாய் வளர்மதியிடம் அன்றே சொல்லி விட்டிருந்தாள் அபூர்வ சங்கீதா.

வளர்மதியால் நம்பவே இயலவில்லை. “அந்த பையனா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவருக்கு மிகவும் யோசனை! ‘இது எப்படி சாத்தியம்’ என்று என்ன யோசித்தும் அவருக்கு விளங்கவே இல்லை.

அவர் பார்வைக்கு அவர்களது மகள் பேரழகு தான்! ஆனால், அவளை விட அழகி யாருமே இல்லை என்று சொல்லுவதற்கில்லையே! அவளோடு பழகி பார்த்துப் பிடித்து விட்டது போல என எண்ணுவதற்கும் வழியின்றி இருவருக்குள்ளும் எந்தவித பழக்கமும் இல்லை. சக்தி இத்தனை காலமும் கல்லூரி, வேலை என வெளியூரில் இருந்தவன், சமீபத்தில் தான் தந்தையின் மியூசிக் ட்ரூப் தொழிலைத் தானே எடுத்து நடத்தப் போகிறேன் என சொல்லி சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். வந்தவன் இப்படிச் சொல்வது எதனால் என அவருக்குப் புரிபடவே இல்லை. அதிலும் குடும்பத்திற்குள் இருக்கும் பூசல்கள் தெரிந்தும் அவன் சொல்வதென்றால்… யோசிக்க யோசிக்க எதுவுமே விளங்கவில்லை.

ஆனால், மகளின் முகத்தில் தோன்றும் ஜாலங்கள் அவளது விருப்பத்தைக் கோடிட்டு காட்டியிருக்கவே, அவளிடம் எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளவும் முடியாமல், அதேசமயம் முழு நம்பிக்கையை அவளுக்குத் தரும் தைரியமும் இல்லாமல், “என்னால நம்பவே முடியலை தங்கம். இப்ப அவங்க வீட்டுல இந்த விஷயத்துக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே… அதோட நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பெருசா பேச்சுவார்த்தையும் இல்லை. எதுக்கும் நான் உங்க அப்பா கிட்ட இது விஷயமா பேசி பார்க்கிறேன். ஆனா, இப்ப நீ ரொம்ப சின்ன பொண்ணு இதைப்பத்தி எதுவும் யோசிக்க வேண்டாம் சரியா…” என்று கன்னம் தட்டி சொல்ல,

“சரிம்மா…” என்றவளின் மனக்கண்ணில், “உனக்கு ஓட்டு போடற வயசு வந்துடுச்சு தானே…” என உறுதிப் படுத்திக்கொண்டு, தன் விருப்பத்தைப் பகிர்ந்து கொண்ட சக்திவரதனின் முகமே மின்னி மறைந்தது. கன அக்கறையாக அவன் கேட்ட விதம், அந்த பதின்பருவ மங்கையின் நெஞ்சை மொத்தமாக அள்ளிக் கொண்டது.

சக்தியின் நினைவில் உடலோடு ஒரு சிலிர்ப்பு ஓடிய அதே நேரம், ‘அவங்க வீட்டுல ஒத்துக்காட்டி…’ என்ற அச்சமும் அவளுள் எழத்தான் செய்தது.

பூரிப்பில் பூவாய் மலர்ந்து, நொடியில் வாடிவிட்ட மகளின் முகத்தைப் பார்க்க அன்னைக்கு தொண்டையை அடைத்தது. அந்த பையனுக்கு விருப்பம் இருந்தால், முறைப்படி நடத்திக் கொள்வதை விட்டுவிட்டு, இப்படி இவளின் மனதைக் கலைக்க வேண்டுமா என்று மனம் அங்கலாய்த்த போதே, மகளின் செயல்களும் அன்னையாக அவருக்கு அதிருப்தியையும் பதற்றத்தையும் தந்தது.

இவளும் தான் கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? அவன் சொன்னால், அதன் சாதக பாதகங்களை யோசித்து, இது சரிவருமா என்று யோசிக்கும் பக்குவம் கூடவா இருக்காது. என் மகளை இப்படியா வளர்த்திருக்கிறேன். அன்னையாக தன் கடமையைச் சரியாக செய்யவில்லையோ என்று தாயுள்ளம் பதறியது.

வளர்மதியும் விஷயத்தைத் தள்ளிப் போடவில்லை. கருணாகரனிடம் அப்பொழுதே சொல்லிவிட, அவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தைகள் நடந்ததோ! ஆனால், இறுதி முடிவு இதற்கு சம்மதம் என்றுதான் வந்தது. அதற்குப் பெருமளவு காரணம் குடும்பத் தலைவரே!

ஆம், வளர்மதிக்கு இது சரி வருமா என குழப்பம். எதற்கு இந்த ஊருக்குள்ளேயே… இந்த சொந்தபந்த வட்டத்திற்குள்ளேயே… பிள்ளைக்கு அசலூரில் இன்னும் நல்ல இடமாக பார்த்து அமைத்துக் கொடுக்கலாமே என்றுதான் ஆசை, எண்ணம், எதிர்பார்ப்பு எல்லாம். ஆனால், அதற்குள்ளாக சக்திவரதன் மீது சாய்ந்து விட்டிருந்த மகளின் மனம், கணவரின் ஆசை என எல்லாம் அவரை கட்டிப்போட, தன் விருப்பத்தை அவர் வலியுறுத்திக் கூற முடியாமல் போய்விட்டது.

பெற்றோரின் சம்மதம் கிடைத்த பிறகும் அபூர்வாவிடம் தெளிவில்லை. மீண்டும் சக்தியைச் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருந்தாள். அது அத்தனை எளிதில் சாத்தியப்படவும் இல்லை.

இந்நிலையில் தான், சில மாதங்கள் கடந்த நிலையில், சக்தி வரதனை அவள் ஒரு நாள் காண நேர்ந்தது. ஆசையும் ஆர்வமுமாக அவனருகே சென்றவளிடம், சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு, “என்ன?” என்றான் ஒட்டாத குரலில். எரிச்சலும் நிறைந்திருந்ததோ?

என்னவோ அவன் நின்று நிதானமாய் பேசும் நிலையில் இல்லை என்று புரிந்து கொண்டவள், அவசரமாகத் தான் கேட்க நினைத்ததை கேட்கத் தொடங்கினாள். “இல்லை… அன்னைக்கு பேசுனீங்களே… அது… அது… வந்து… உங்க வீட்டுல இதுக்கு சம்மதிப்பாங்களா?” என்றாள் அச்சமும், தவிப்புமாக.

அவனோ விட்டேறியாக, “அது எனக்கு அனாவசியம். நான் என் முடிவுல உறுதியா தான் இருப்பேன்… அதோட இப்படி வழியில எல்லாம் நின்னு பேசறது, எனக்கு போன் பண்ணறது இதெல்லாம் கூடாது. புரியுதா? படிக்கிற வயசுல அது மட்டும் தான் கவனம் இருக்கணும்” என்று சொல்ல, அவளது முகம் சுண்டிப் போனது.

அவளா வந்து காதல், கல்யாணம் என்று பேசியது? தொடங்கியது அவன் தானே? இப்பொழுது இத்தனை நாட்களில் அவனைப் பார்க்கத் தேடி இருக்கிறாளா? இல்லை கைப்பேசி எண்ணை கண்டறிந்து அவனிடம் காதலில் கசிந்துருகி பினாத்தி இருக்கிறாளா? ஏதோ மனதில் சட்டமாய் வந்து அமர்ந்து விட்டானே… அதனால் எந்தளவு இது ஒத்துவரும் என்று உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்டால்… இப்படிப் பேசுகிறானே… என அவளின் முகமே விழுந்து விட்டது.

அதைக் கண்டுகொண்டவனோ, “ம்ப்ச்…” என சலிப்பு காட்டினான். அவள் அவனை அண்ணார்ந்து பார்க்க, “யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இப்ப இருந்தே எங்க வீட்டுல சண்டை போட முடியுமா? முதல்ல உன் படிப்பை முடிக்கிற வழியை பாரு… மத்ததெல்லாம் அப்பறம் பார்க்கலாம். இப்ப கிளம்பு…” என்று சற்று கண்டிப்பு குரலில் சொன்னவன், பின்வரும் நாட்களில் அவளோடு நின்று பேசியதோ, அவளைத் தெரிந்தவள் போலக் காட்டிக்கொண்டதோ இல்லை.

ஆனால், அவனின் அந்த குணத்தால் இன்னும் இன்னும் அவன்மேல் பித்தாகிப் போனாள் மங்கையவள். எத்தனை ஒழுக்கம்! எத்தனை நல்லவன்! வேறு யாரும் என் மனதைக் கலைத்து விடக்கூடாது என்பதற்காகவே உரிய வயது வந்ததும், என் மனதில் அச்சாரமிட்டிருக்கிறான். இல்லாவிட்டால், நேரடியாகத் திருமண பேச்சு தான் பேசியிருப்பான் போலும்! இந்த காலத்தில் இப்படியும் ஒருவனா? நான் மிகவும் பாக்கியம் செய்தவள் என உவகை கொண்டது பெண்ணுள்ளம்.

கல்லூரி இறுதியாண்டு என்றதும் தான் அவளுக்கே சிலபல ஆசைகள்! எப்படியும் படிப்பு முடிந்தவுடன் கட்டிக்கொள்வான். அப்பொழுது கள்ளத்தனத்தோடு யாரும் அறியாமல் காதலிக்கவா முடியும்? அது கணவன், மனைவி என்கிற பிணைப்பு! அதற்கும் திருமணத்திற்கு முன்பு நேசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதே! ஆக, இப்பொழுதெல்லாம் அவனைக் காணும் போதெல்லாம் கண்ணில் நிறைத்துக் கொள்கிறாள் தன்னவனை. அவளது கனவுகளைக் களவாடும் உரிமையை முழுவதும் அவனுக்கே பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாள்.

அவனது ஆழ்ந்த பார்வைகளையும் இப்பொழுதெல்லாம் அவளால் உணர முடிகிறது. இமை சிமிட்டாமல், கருவிழிகள் அசையாமல் என்று பார்ப்பவனின் பார்வையில் என்ன இருந்தது என அவளுக்கு விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அந்த ஆழ்ந்த பார்வையில் கொஞ்சம் காதலை, ரசனையைக் கலந்தால்… எப்படி இருக்கும் என்ற ஆவலில் தான் இன்று இத்தனை மெனக்கெட்டுக் கிளம்பி வந்திருந்தாள்.

ஆனால், எங்கே?

நண்பர்கள் பட்டாளத்தின் துளைத்தெடுக்கும் பார்வையாலும், சீண்டி சிவக்க வைக்கும் பேச்சுகளாலும் தன்னவனின் பார்வையில் மையலைக் காண வேண்டும் என்ற அபூர்வாவின் கனவு, கனவாகவே போய்விட்டிருந்தது.

அதுவும் ஒரு விதத்தில் நல்லது தானோ! சக்திவரதன் அவள் விரும்பியது போல மையலாக பார்க்காமல், சிறியதாய் ஓர் ஆராய்ச்சி பார்வையோடு அவள் புறம் திரும்பவே இல்லை என அவள் கண்டுகொண்டு மிகவும் மனம் வருந்துவதிலிருந்து தப்பிவிட்டாளே! ஆனால், அதைக் கண்டுபிடிக்காமல் விட்டது உண்மையில் நல்லது தானா?

இதையெதையும் அபூர்வா அறிந்துகொள்ள வில்லை! அப்படி ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்குவப்பட்ட வயதும் அவளுக்கில்லை. உண்மையில் அவளுக்குச் சக்தியின் காதலை சந்தேகிக்கவே தோன்றியதில்லை! அவளுக்கும் அவன்மீது உயிர் நேசம் வளர்ந்து கொண்டே வந்தது. அந்த காதல் அவளை முட்டாளடிக்கும் நாளுக்காகக் காத்து கிடந்தது.

நாட்கள் அதன் போக்கில் நகர, அவளின் கல்லூரிக்காலம் முடியும் தருணமும் வந்து சேர்ந்தது.

“அவசரக்குடுக்கை… எங்க எல்லாருக்கும் முன்ன உனக்குத் தான் கல்யாணம் வரும்…” என அவளின் நண்பர்கள் பட்டாளம் அவளை சிவக்க வைத்தது.

“சும்மா இருங்கடி… அவர் இன்னும் வீட்டுல பேசினாரா என்னன்னு தெரியலை. அவங்க வீட்டுல பேசி, அவங்களை ஒத்துக்க வெச்சு…” என சொல்பவளுக்குக் கொஞ்சம் மலைப்பாகத் தான் இருந்தது.

“ஏன் அது வரை காத்துட்டு இருக்க முடியாதோ?” என சீண்டியவள் பிரீத்தி.

“அச்சோ! உங்களோட…” என வெட்கம் கொண்டவள், அவர்களோடு பேசி வெல்ல முடியாது என பின்வாங்கிக் கொண்டாள்.

“சும்மா இருங்கடி. பேருக்கு தான் காதலிக்கிறா… மத்தபடி அந்த அண்ணா கூட போன், மீட்டிங், சேட்டிங் எதுவுமே இல்லை… பாவம் காதல் பட்டினிடி இது… எவ்வளவு பசிக்கும்” என அவளைத் தோளோடு அணைத்து அவளுக்கு ஆதரவு தருபவள் போல வாரி விட்டாள் உத்ரா.

வெட்கத்தில் சிவக்கும் முகத்தை மறைக்கத் தெரியாமல் திணறினாள் அபூர்வா.

“என்னமோ… நீங்க எல்லாம் பல காலம் கல்யாணம் செய்யாம சுத்த போற மாதிரி… ஒன்னு, ரெண்டு வருஷத்துல மொத்த டிக்கட்டும் கல்யாண பத்திரிக்கையோட வந்துடுவீங்க… ஆனா மச்சான் பிறந்தா பொண்ணுங்களா பிறக்கணும் டா… வேலைக்கு போனா என்ன போகாட்டி என்ன? நம்ம பொழைப்பை பாரு… இப்ப வேலைக்குன்னு ஓடுனா இனி எப்ப நிப்போமோ?” என பெருமூச்சோடு கமலேஷ் அங்கலாய்க்க,

“ஆமாம் மச்சான்…” என இசைப்பாட்டு பாடினான் ஹரிராம்.

“ஹே… என்ன இந்த காலத்துல நாங்களும் தான் வேலைக்கு போகறோம்” என உத்ரா சண்டைக்கு நிற்க,

“ஆமாம் ஆமாம் போறீங்க போறீங்க… யாரு இப்ப இல்லைன்னு சொன்னா.. ஆனா, போயே ஆகணும்ன்னு உங்களுக்கு எந்த கட்டாயமும் இல்லையே! எங்க பொழப்பு அப்படியா?” என ஹரி பெருமூச்சு விட,

“ச்சு… சும்மா இருங்கடா. எப்ப பாரு புலம்பிட்டு… நாமளே இன்னையோட சொந்த ஊரைப் பார்த்து பெட்டியைக் கட்ட போறோம்… வேற பேசறதை விட்டுட்டு இப்ப தான் புலம்புவானுங்க. இப்ப நம்ம இசையின் இளவரசி நமக்காக ஒரு பாட்டு பாடட்டும்… அபூ உன் தேன் குரலை கொஞ்சம் சொட்டுடி… இனி எப்ப நீ காக்கா மாதிரி கரையுறதை கேட்க போறோமோ…” என பிரீத்தி ஆவலாகக் கேட்க,

இந்த காக்கா என்ற அடைமொழி அபூர்வாவிற்குப் பழக்கம் தான்! காகம் கரைந்து கொண்டிருப்பது போல… அவளும் பாடலின் துணையின்றி இருக்க மாட்டாள். எப்பொழுதும் அவளோடே இசை இருக்கும்… குளிக்கும்போது முணுமுணுப்பாய், டிராவல் சமயத்தில் ஹம்மிங்காய், தனிமையில் சற்று குரல் உயர்த்தி, பாடலில் மூழ்கும்போது கூட சேர்ந்து இசைப்பாட்டு பாடியபடி, போட்டி நடக்கும்போது மேடையேறி, நண்பர் கூட்டம் ஆசைப்பட்ட போது அமுதமாய் பொழிந்து என அவள் வாழ்வில் அனுதினமும் பாடல்களால் நிறைந்தது.

“என்ன பாடலாம்டி…” என அபூர்வா கேட்க,

“ஆமாம்… படிப்புல தான் கோட்டை. உருப்படியா செய்யறது பாடறது மட்டும் தான்! அதுக்கும் எங்ககிட்டயே கேளு… என்ன பாடலாம்ன்னு” என பிரீத்தி பொரிந்தாள்.

அதற்காக அபூர்வா படிப்பில் முழு மட்டம் எல்லாம் இல்லை. சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் ரகம் தான். இப்பொழுது தோழி இப்படிக் கேட்டதும் மெல்லிய முறைப்பும், பிறை வடிவில் புன்னகை சிந்திய இதழ்களுமாகப் பாடத்தொடங்கினாள்.

“தீவானா… தீவானா…

தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னைக் கேலி பேசுதே…

ஹய்யோ! இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ…”

அவள் பாடலில் உருகியபோதும், அவள் பாடிய வரிகளுக்கும் சேர்த்து அவளைக் கேலி செய்தே ஒரு வழியாக்கினர் நண்பர்கள் பட்டாளம்!