கருணாகரனுக்கு உடல்நிலை அவ்வளவாகச் சரியில்லை. வயதும் அதிகம் என்று சொல்வதற்கில்லை தான். அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், உடல் உபாதைகள் சற்று அதிகமாக இருந்தது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.
திடீரென மெலிந்தார். இருமல் எனத் தொடங்கினால் விரைவில் சரியாவதில்லை. திடீரென கால் வீக்கம், வயிறு வீக்கம் என ஏதாவது உடல் உபாதைகள்! மருத்துவர்களும் நம்பிக்கை தரும் விதமாகப் பேசவில்லை. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாகக் கூறினார்கள். மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை டயாலிசிஸ் செய்ய பரிந்துரைத்தார்கள்.
இவ்வாறாக மருத்துவமனை வாசத்துடன் நாட்கள் நகர, இனி தான் அதிக நாட்கள் இருக்கப்போவதில்லை எனக் கருணாகரனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவருக்கு தன் மகன் ஸ்ரீவத்சனோடு பேச வேண்டும் என ஆவலாக இருந்தது. ஆனால், எட்டிக்கூட பார்க்காத மகனை அவரால் எப்படி அணுக முடியும்? இவராக அவனைத் தேடிச் சென்றாலும் தவிர்த்து விடுகிறான். பேரப்பிள்ளை சித்தார்த் பிறந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இன்றுவரை ஆசையாகத் தூக்கிக் கொஞ்ச அவருக்குச் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. ஏன் பேரனைப் பார்த்த பொழுதுகளைக் கூட கைவிரல் எண்ணிக்கைக்குள் அடக்கிவிட முடியும்.
மகனின் ஏக்கம் ஒருபுறமென்றால், மகள் அபூர்வா, மனைவி வளர்மதியின் கவலைகளும் அதிகமாகத் தாக்கியது. தனக்குப் பின்னால், இவர்களுக்கு ஆதரவு தர வேண்டிய மகன் இப்படி விலகல் காட்டுகிறானே என மிகவும் கவலைப் பட்டார். மகளின் திருமணம் சீக்கிரம் நடக்காதா என்று ஆசைப்பட்டார். அதிலும் சக்திவரதனோடு தான் நடக்க வேண்டும் என அவரின் உள்ளம் ஆர்ப்பரித்தது.
சக்தி, அபூர்வாவிடம் இது தொடர்பாகப் பேசியிருக்காவிட்டால், கருணாகரனுக்கு இந்த ஆசையே வந்திருக்காது. எப்பொழுதோ புதைந்த விதைக்குச் சக்தி உயிர்கொடுத்து விட்டிருந்தான். அது அவருள் விருட்சமாய் வளர்ந்து நின்றிருந்தது.
விளைவு, வளர்மதியிடம் அவ்வப்பொழுது, “சக்தி எப்ப வருவான் வளரு?” என ஆவலாக அவரை கேட்க வைத்தது.
கணவரும் மகளும் ஏன்தான் இப்படி இருக்கிறார்களே என வளர்மதிக்குத் துக்கமாக இருந்தது. அவரின் உள்ளுணர்வு இது சரிவராது என அடித்துச் சொன்னது. ஆனாலும் நிரூபிக்க எதுவும் இல்லையே… எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கத் தெளிவான ருசு அவரிடம் இல்லையே!
கணவரிடம் அனுசரணையான குரலில், “கண்டதையும் குழப்பிக்காதீங்க. நீங்க கவலை பட்டுட்டே இருக்க கூடாதுன்னு டாக்டர் செக்கப் போகும்போதெல்லாம் சொல்லறாரே உங்களுக்கு அது புரியாதா?” என்று கண்டிக்க,
“இல்லை வளரு… ஸ்ரீயும் இன்னும் சமாதானம் ஆக மாட்டீங்கறான்… பேசாம அவன்கிட்ட மட்டும் உண்…” எனத் தொடங்கியவர், மனைவியின் தீப்பார்வையில் நிறுத்திக் கொண்டார்.
முகத்தில் இறுக்கம் சூழ, “இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்ங்கிற முடிவை நான் எடுக்கலை. நீங்கதான் எடுத்தீங்க. இப்ப மகன் தான்னு அவன்கிட்ட சொன்னாலும், அது வெளியவே போகாதுன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?அப்படியே வெளிய கசிஞ்சாலும் இதன்மூலம் நீங்க முன்ன பயந்த பாதிப்பு இப்ப வராதுன்னு நிச்சயமா சொல்லுவீங்களா? என்னை விடுங்க. நான் வாழ்ந்து முடிச்சிட்டேன். இனி மத்தவங்க என்னைப்பத்தி என்ன சொன்னாலும், இல்லை என்னை நிரந்தரமா ஒதுக்குனாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா, சங்கீதாவுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாதில்ல… நீங்க தெளிவா யோசிச்சு முடிவெடுங்க.”
நீண்ட பெருமூச்சின் பின், “நீ சொல்லறதும் சரிதான்… ஆனா எனக்கப்பறம் நீ… நீ…”
“ஸ்ஸ்ஸ்… ஏன் ஏதேதோ பேசறீங்க… உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நம்ம ரெண்டு பேரும் சுகமா வாழுவோம். இப்பதான் ஸ்ரீயோட பையனை பார்த்திருக்கோம். இன்னும் சங்கீதா குழந்தைகளைப் பார்த்து ஆசைதீரக் கொஞ்சி மகிழ வேண்டாமா?”
பரவசத்துடன் பேசிய வளர்மதியைக் கருணாகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். அன்பு மட்டுமே நிறைந்த இவளுக்கு ஏன் கடவுள் இவ்வளவு ஓரவஞ்சனை செய்தார் அவரால் கடவுளை நிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
“என்ன அப்படி பார்க்கறீங்க?”
“நீ எனக்கு கிடைச்ச வரம் வளரு…” என்றார் நெகிழ்ந்த குரலில்.
கருணாகரனின் கரங்கள் மெலிதாக நடுங்க, அதனை ஆதரவாய் பற்றியவாறே, “எனக்கும் தானே…” என்றவரின் விழிகள் நனைந்திருந்தது. கரகரத்த குரலில், “நீங்க என் வாழ்க்கையில வரலைன்னா… நான் என்னவாகி இருப்பேனே எனக்குத் தெரியலை… எங்க அம்மா போனபிறகு, யாருமில்லாத நானும் வாழ பிடிக்காம செத்து தான் போயிருப்பேன்” என்று சொல்லி முடித்ததும்,
“என்ன பேச்சு பேசற…” ஆத்திரமாக ஒலித்த கருணாகரனின் குரலில், வளர்மதி வாயை மூடிக்கொண்டார். “சாரிங்க…” எனக் கண்களைத் துடைத்துக்கொள்ள, “இனி இப்படி பேசினா பாரு…” என்றார் கருணாகரன் எச்சரிக்கை குரலில்.
கருணாகரன் எந்தளவு சக்திவரதனை எதிர்பார்த்தாரோ அதைவிடப் பலமடங்கு ஆவலுடன் அபூர்வ சங்கீதா அவனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். படிப்பில் தட்டி முட்டி தேர்ச்சி பெற்றவளுக்கு வேலைக்குச் செல்லும் எண்ணமே இல்லை. அதோட, அது கூட சக்தியின் விருப்பம் என்றுதான் அந்த பேதை மனம் எண்ணியது. அவனிடம் கேட்டு வேலைக்குப் போவதா வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாள்.
பிரீத்தி பேசும்போதெல்லாம் சொல்லி சடைந்தாள். “நம்ம வேலைங்கிறது நமக்கான ஆதாரம் மட்டுமில்லை கீது, அது நமக்கான தன்னம்பிக்கை” என என்ன சொன்னாலும்,
“ஹே எனக்கு படிச்சதே வேப்பங்காய் கசப்பா இருந்தது. எக்ஸாம் பாஸ் பண்ணவே எவ்வளவு திணறி திண்டாடினேன்னு உனக்கே நல்லா தெரியும். இனி வேலை செய்யறதெல்லாம் கண்டிப்பா நம்மால முடியாதுடி. புரிஞ்சுக்க… அங்கேயும் போயி மக்கு மாதிரி இருந்தா ஷேம் ஷேம் ஆயிடும்” என்று சொல்பவளைக் கண்டு, மற்றவளுக்கு கவலையாக இருக்கும்.
பிரீத்திக்கு அபூர்வா சொந்த காலில் நிற்க மறுக்கிறாளே என்ற ஆதங்கம் எழுந்தது. அவள் மீது பரிதாபம் கொள்ளவும் முடியாமல், கோபம் கொள்ளவும் முடியாமல் திணறியவள், மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வதை மட்டும் வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.
“சரி அவர் சொன்னா போறேன் ஓகேவா?” என அபூர்வா இறங்கிவர, சுத்தம் என்றுதான் பிரீத்திக்கு தோன்றியது.
நாட்கள் தான் கரைந்ததே அன்றி சக்திவரதன் வருவதாக காணோம்.
அபூர்வா அவனைத் தொடர்பு கொள்ளவும் தைரியம் இல்லாமல், நிலவரம் என்ன என்றும் தெரியாமல் பரிதவிப்போடு நாட்களைக் கடத்தினாள். ஒருவேளை அவர்கள் வீட்டில் வேண்டாம் என்று மறுத்தால் அந்த நினைவே அவளை நடுங்கச் செய்தது. சக்தியை இரண்டு, மூன்று ஆண்டுகளாக மனதில் சுமப்பவளுக்கு அவனை விட்டுத்தர முடியுமா? அவனின்றி ஒரு வாழ்வை அவளால் யோசிக்க முடியுமா? நெஞ்சம் கனத்து போனது. உள்ளத்தினுள் பேரிரைச்சல் கேட்டது. பயப்பந்து தொண்டையை அடைத்து, விழிகள் தன்போல கலங்கி நீரினை கொட்டத் தொடங்கியது.
ஏங்கி, எதிர்பார்த்து, பரிதவித்துக் கடத்திய நாட்களெல்லாம், ஒருவழியாக சக்திவரதனின் வரவால் முடிவுக்கு வந்தது.
அபூர்வா கல்லூரி படிப்பு முடிந்து ஆறேழு மாதங்கள் ஆகியிருந்தது. இத்தனை நாட்களும் வீட்டில் இருந்தவளின் உடல் நன்கு தேறி, மெருகேறி இருந்திருக்க வேண்டும். ஆனால், பசலையால் முன்னிலும் மெலிந்து காணப்பட்டாள்.
சக்தி வாயிலை எட்டும்போதே வளர்மதி கவனித்துவிட, “வாங்க… வாங்க…” என்றார் பூரிப்பும் உபசரிப்புமாய். பெயருக்குக் கூட சிரிக்க முடியாதவனாய் மெல்லிய தலையசைப்போடு உள்ளே வந்தவன், அங்குச் சத்தம் கேட்டு முன்னறைக்கு வந்திருந்த சங்கீதாவைப் பார்த்தான். அவனது பார்வை ஒரு விநாடிக்கும் அதிகமாய் அவளில் ஆராய்ச்சியாய் படிந்து மீண்டது.
சக்தியை வரவேற்ற வளர்மதி, ஆராய்ச்சியாய் மகளின் மீது படியும் இளையவனின் பார்வையை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார். மகளின் விழிகளில் தெரிந்த பரவசமும், காதலும், பூரிப்பும் சக்தியின் விழிகளில் சின்னஞ்சிறு அளவு கூட வெளிப்படாததைக் கண்டு அவரின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
தவறு செய்கிறோமோ என தாயுள்ளம் பரிதவிக்க, அதை வெளிப்படுத்தும் நிலையில் கணவரின் உடல்நிலையும், மகளின் காதலும் இருக்கவில்லை!
ஒருவேளை நாம் தான் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறோமோ? நாம் பயப்படுமளவு எதுவும் இல்லையோ? என்றவர் மகளின் தோற்றத்தை மேலிருந்து கீழாக தானும் அளவிட்டார். கணவரின் உடல்நிலையே பிரதானமாகத் தெரிந்ததில், மகளின் மெலிவு இப்பொழுதுதான் அன்னையின் கண்ணிலும் தெளிவாக விழுகிறது. ஆக, சக்தி இதைக்குறித்துத் தான் அளவிட்டானா என்கிற ஆசுவாசம் எழ,
இன்னமும் ஒருவார்த்தை பேசியிராதவன், தலையை மட்டும் அசைத்தான். “இருங்க அவங்க அப்பாவை கூட்டிட்டு வரேன்” என்றவர் ஓர் அறையினுள் மறைந்தார்.
வளர்மதி மருந்துகளின் வீரியத்தால் உறக்கத்தின் பிடியிலிருக்கும் கணவனை எழுப்பி, அவரை பதற விடாமல் நிதானமாக விஷயத்தை எடுத்துச் சொல்லி அவரை முகம் கழுவ வைத்துக் கொண்டிருந்தார்.
இருவருக்கும் கிடைத்த தனிமையில் சக்தி ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்த அபூர்வா அவனை நிமிர்ந்து பார்ப்பதும், தலையைக் குனிந்து கொள்வதுமாக இருந்தாள். அவன் கவனம் முற்றிலும் இங்கு இல்லாதபடி எதிரிலிருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அபூர்வா, “டீ குடிங்க…” என்றவள், “டீ குடிப்பீங்க தானே?” என்றும் கேட்க, சிறு பெருமூச்சுடன், “ம்ம்…” என்றவன் தேநீர் கப்பைக் கையில் எடுத்தான்.
அவன் அருந்தி முடித்ததும், “எப்படி இருக்கீங்க?” என்றாள். அவள் முகம் பாராமல் தலையசைத்தான்.
என்னவோ சரியில்லை என்பதாகத் தோன்ற, “என்ன ஆச்சுங்க? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என விசாரித்தாள். அவளை மௌனமாக ஏறிட்டுப் பார்த்தவனின் விழியில் என்ன இருந்தது கலக்கமா, தவிப்பா? ஆனால், ஏன்? ஒருவேளை அவர்கள் வீட்டில் மறுத்து விட்டார்களோ?
அச்சமும் பரிதவிப்புமாக அவள் ஏறிட, அவளது விழிகளின் கலக்கம் அவனைச் சுட்டது. ஆயிரம் தான் தனக்குத்தானே இது சரிதான் என அவன் கற்பித்துக் கொண்டாலும், மனதின் ஏதோ ஓர் மூலையில் இது தவறு என்ற கூக்குரல் கேட்டுக்கொண்டே தான் இருந்தது. அதை முயன்று புறக்கணிப்பவனால், அபூர்வாவின் சின்னஞ்சிறு முகத்தை, அதில் நிரம்பி வழியும் கலக்கத்தை, விழிகளில் தெரியும் பரிதவிப்பைப் புறக்கணிக்க முடியவில்லை! வெகுவாக திணறி போனான்.
சில முடிவுகளை எடுக்கத் திடம் வேண்டும்! அந்த திட்டத்தைக் கருணாகரனும், வளர்மதியும் அவனுக்குத் தந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் மீதிருந்த வெறுப்பு என்றால் அது சரியாக இருக்கும்.
வளர்மதி கணவரை அழைத்து வந்தார். அன்பான குரலில், “எப்படியிருக்க பா?” எனக் கருணாகரன் இளையவனிடம் விசாரிக்க, தலையை மட்டும் உருட்டினான். முகம் வெகு கவனமாய் உணர்வுகள் துடைக்கப்பட்டு நிர்மலமாய் இருந்தது.
சோர்ந்து, வாடிய தோற்றத்துடன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கருணாகரனைப் பார்க்கையில் சக்திக்கு உள்ளுக்குள் எரிந்தது. இவர் செய்த பாவத்திற்கும், துரோகத்திற்கும் இவர் இன்னும் இன்னும் அனுபவிக்க வேண்டும் என அவனது மனம் கூக்குரலிட்டது. உள்ளுக்குள் கனன்ற நெருப்பை வெளியில் காட்டாது காத்தான்.
கடமைக்காக, “உங்க உடம்புக்கு என்ன?” என விசாரித்தான். வளர்மதி அவனிடம் அவருக்கிருக்கும் உடல் உபாதைகள் குறித்துக் கூறினார்.
உணர்வுகளற்ற முகபாவத்துடன் கேட்டுக்கொண்டவன், “உங்களுக்கு இப்ப பரவாயில்லையா?” கவனமாக மாமா என்ற சொல்லை உதிர்க்காமல் நலம் விசாரித்தான்.
அதை அவர் கவனிக்காமல் இயல்பாய் பதில் சொல்ல, கண்டுகொண்ட வளர்மதிக்கு வருத்தமாக இருந்தது.
மீண்டும் சற்று நேரம் பலத்த மௌனம். சக்தி எதையோ சொல்வதற்கு நேரம் பார்க்கிறான் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆழ்ந்த பெருமூச்சுடன் நிமிர்ந்தவன், அமிர்தாவை நோக்கி, அருகில் வரும்படி கண்ணசைவு செய்தான். சொன்ன மறுநொடி அவனருகே வந்து குனிந்த தலையுடன் நின்றாள்.
“அது…” என ஒரு நொடி தயங்கியவன், தொண்டையை செருமி, “நாங்க ரெண்டு பேரும் மனசார விரும்பறோம். கல்யாணம் செய்துக்க ஆசைப்படறோம்” என்று பெரியவர்களிடம் சொல்ல, “சங்கீதா சொன்னாப்பா… நீங்க உங்க வீட்டுல பேசுனீங்களா?” என்றார் கருணாகரன்.
அபூர்வா தன் வீட்டில் இதுகுறித்து பேசியிருப்பாள் என அவன் அனுமானிக்கவில்லை. தன்னை கண்டதும் பூரிப்புடன் வரவேற்ற வளர்மதியின் முகத்திற்கான அர்த்தம் இப்பொழுது அவனுக்கு கிடைத்திருந்தது. தன்மீது ஆழ நம்பிக்கை வைத்திருக்கும் அபூர்வாவை நினைக்கையில் உள்ளுக்குள் என்னவோ குடைய அதைப் புறக்கணிக்க வெகுவாக சிரமப்பட்டான்.