சஞ்சு சமாதானமாகிக் கிளம்பிய பின் , என்ன அப்பா இவர் ? படிக்கத்தானே கேட்கிறாள்? அதற்கு எத்தனை பேச்சு என்று மனதிற்குள் பொங்கினாள் .அந்தக் கோபத்தோடு விவேக்கிற்கு போன் போட , சரியாக அதே நேரம் வண்டியில் ஏறி இருந்தான் விவேக் , உடனே போனை எடுக்க ,
கீத்து போனில் பொங்கு பொங்கு என்று பொங்க , தலையும் காலும் புரியாமல் , “எனக்கு ஒன்றும் புரியவில்லை , பொறுமையாகச் சொல்…”
குருவைப் பற்றி பேசியதை விடுத்து , நடந்தவற்றை விளக்கி , படிப்புக்குத் தானே குரு ? ஏன் இப்படி செய்கிறார் ? சஞ்சு ரொம்ப கலங்கி விட்டாள். ஆன்ட்டியை நினைத்து ஒரே அழுகை…” எனக் கோபத்தில் ஆரம்பித்து, இறுதியில் குரல் உடைய சொன்னாள் .
அனைத்தையும் கேட்டவனுக்கு மனம் வாடியது , தங்கை போன் செய்த காரணம் புரிந்தது .போனில் அமைதி நிலவ , இரண்டு மூன்று முறை குரு… குரு… என்று கத்தினாள் .
சுய உணர்வு பெற்றவன் , “என்னவென்று பார்க்கிறேன் கீத்து.” என்று அவள் பக்கம் பக்கமாய் பேசியிருக்க , அவன் இரண்டு வார்த்தையில் முடித்தான் .
விவேக் பேசிய விதத்தில், அவன் யோசிக்கிறான், கட்டாயம் செய்வான் என்று தோன்ற , “அப்புறம் முக்கியமான விஷயம் குரு , நீங்கள் அவளுக்காக நிற்க வேண்டும் என்று நினைக்கிறாள்…” என்று தயங்க,
“அப்படித் தானே இருக்கிறேன்…”
“இல்லை குரு , நீங்கள் அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறாள். உங்கள் செயல்கள் அவளுக்குப் புரியவில்லை . தனக்கென்று யாருமில்லை , அம்மா இருந்தால் இப்படி நடக்கவிட்டிருக்கமாட்டார்கள் என்று யோசிக்கிறாள் . பார்த்துக்கோங்க…” என்று கோடிட்டு காட்டி விட்டு, போனை வைத்தாள் .
வீட்டுக்கு வந்தவன் , தங்கை தூங்கியிருக்கமாட்டாள் என்று தோன்ற ,அவள் அறைக்குச் சென்றான் , அவள் விசும்பியபடி படுத்திருக்க , கட்டிலில் அமர்ந்து தலையைத் தடவ, “அண்ணா….” என்று கட்டிக் கொண்டாள் .
“என்னடா சஞ்சு ?”
“அண்ணா…” என்று அனைத்தையும் கொட்டினாள் .
“எது வேண்டுமென்றாலும், இனி என்னிடம் கேள்” என்றான் அழுத்தமாக. மேலும், “தேவையென்றால் என்றால் அப்புறம் அப்பாவிடம் சொல்லிக் கொள்ளலாம் . இதற்கு நான் தருகிறேன் , நீ கலந்து கொள்”
“ம்ம்…” என்றாள் யோசனையோடு , பின், “அண்ணா…..” என்று இழுக்க ,
“என்னடா சஞ்சும்மா ?”
“ நீ ஏன் செய்ய வேண்டும்? இது அப்பாவின் கடமை தானே ?”
“நீ சொல்வது சரி தான். ஆனால் நம்மால் செய்யக் கூடிய காரியத்திற்கு , எதற்கு அவர் வாயில் விழுந்து எழ வேண்டும்.”
சஞ்சு யோசனையோடு பார்க்க ,
“நானும் அம்மாவும் இப்படித்தான் முதலிலேயே பேசி , எப்படி, எதை , எங்கு பேச வேண்டும் என்று முடிவு பண்ணிச் செய்வோம்.”
சஞ்சு புரியாமல் பார்க்க,
“நீ எதையாவது தடலாடியாகக் கேட்பாய் , அதற்குச் சம்மதம் வாங்க , நாங்கள் பல கட்டத் திட்டங்கள் போடுவோம்” என்று சொன்னவன் , “எதை செய்தாலும் பிளான் பண்ணிச் செய்ய வேண்டும் சஞ்சும்மா…” என்று வடிவேலு பாணியில் சொல்ல , சஞ்சு சிரித்தாள்.
“இது அழகு!” என்று இரு கைகளாலும் கன்னத்தை ஆட்டினான் . அப்புறம், “இப்போது இருக்கும் சூழ்நிலையில் எதையும் தடலாடியாகப் பண்ணமுடியாது . நான் நன்றாக காலை ஊன்றிக் கொள்கிறேன் . அதற்கு அப்புறம் அவரைப் பார்த்துக் கொள்ளலாம்…” என்று தைரியமூட்டினான் .
“அண்ணா, உனக்கு கஷ்டம் இல்லையே ?” என்று தயங்க,
“வேலைக்குப் போய் விட்டு , அம்மாக்கு நிறைய செய்ய வேண்டும். பட்ஜெட் இல்லாமல் , அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன் . ஆனால் அது முடியவில்லை. இப்போது அதை உனக்காவது செய்கிறேன் சஞ்சும்மா…” என்று கண்கலங்க ,
சூழ் நிலை மாற்றும் பொருட்டு , “சொல்லி விட்டாய் அல்லவா , இனி பார்…” என்று சஞ்சு சிரிக்க ,
“கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனே…” என்று அவனும் தலை சாய்த்துச் சிரிக்க , இருவர் மனநிலையும் மாறியது .
“ஆனாலும் உன் தோழி ரொம்பத்தான் பொங்குகிறாள்…” என்று கடகடவென சிரித்தான் .
“ஏன் உங்களுக்காகவும் தான் பொங்கினாள்…” என்று விவரத்தைக் கூற ,
விவேக்கிற்கு ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்டது. அம்மாவிற்குப் பிறகு ஒரு ஜீவன் தனக்காக யோசிக்கிறது என்பது பெரும் நிறைவைத் தர,சந்தோஷமாக சஞ்சுவிடம் சிறிது நேரம் பேசி விட்டு நகர்ந்தான் .
சஞ்சுவுக்கும் அண்ணன் தனக்காகச் செய்கிறான் என்று தனித் தெம்பைத் தர, நிம்மதியானாள். பின் தன் தோழிக்கு நடந்த விவரத்தைத் தெரிவித்து , நன்றி சொன்னாள் சஞ்சு .
“நல்லவன்டா நீ…” என்று மனம் மகிழ்ந்தாள் கீத்து . அப்போது விவேக் அழைத்து , “நன்றி… நன்றி கீத்து…” என்று உணர்ச்சி வசப்பட்டான் .
“ஏன் இந்தத் திடீர் நன்றி நவிழல்?”
“எனக்காக நீ பேசினாய்…. என்று சஞ்சு சொன்னாள். அம்மாவிற்குப் பிறகு எனக்காக யோசித்தது நீ தான் கீத்து. அதான்…” என்று நெகிழ்ந்தான் .
“விடுங்க குரு , நீங்க தான். என் நண்பேன்டா..! “ என்று சந்தானம் பாணியில் சொல்ல ,
விவேக் நகைத்தான் .
கதைத் திரி 14
அத்தியாயம் 33
அண்ணன் தனக்காக இருக்கிறான் என்பது புதுத் தெம்பையும் , தைரியத்தையும் கொடுத்தது. சஞ்சுவும், தன் தேவைகளை அண்ணனிடம் கேட்டுப் பெற்று கொண்டாள் .
சஞ்சு முடிந்த வரை அப்பாவின் கண்ணில் படாமல் தன் வேலைகளை அமைத்துக் கொண்டாள் . அதையும் மீறி வீட்டில் இருக்கும் நேரத்தில் அப்பா வேலை சொன்னால் பெரிதாக எந்த மறுப்பும் சொல்லாமல் செய்து கொடுத்தாள் . ஒருவழியாக வீட்டின் போக்கைப் புரிந்து கொண்டாள். பெரிய பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றது .
முதலில் இதைப் பெரிதாகக் கவனிக்காத விஜயன் , பின்பு கண்டு கொண்டார் . ஒரு நாள் வசமாக சஞ்சு சிக்க , “பெண்ணா லட்சணமாக வீட்டில் இருக்காமல் மாலையில் எங்கே ஊர் சுற்றுகிறாய் ?” என்றார் கடுமையாக .
சஞ்சு வெலவெலத்து நின்றிருந்தாள் .
அப்போது உள்ளே நுழைந்த விவேக் , “ஏன் அப்பா? இப்படி? அவளே அம்மா இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள் . வீட்டில் இருந்தால் அதே யோசிக்கிறாள் என்பதால் தான் வெளியே கொஞ்ச நேரம் சென்று வரச் சொன்னேன் .”
“விடுங்கள் அப்பா , நீங்க அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் டிவியில் ஐக்கியமாகி விடுகிறீர்கள் , நான் வரவே பத்து மணியாகி விடுகிறது . அவளுக்கும் பொழுது போகாது , படிக்கும் வேலை இருந்தால் பார்க்கப் போகிறாள் இல்லையென்றால் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வரட்டுமே…”
“வீட்டு வேலையை யார் பார்ப்பது ?” என்றார் கடுப்பாக.
“சமையலை சாரதா ஆன்ட்டி பார்த்துக் கொள்கிறார்கள் . நான் லேட்டாகப் போவதால் , நான் இருக்கும் காலை நேரத்தில் செல்வி அக்கா வந்து வீட்டு வேலையை முடித்து விடுகிறார்கள் . நானும் , சஞ்சுவும் சனி , ஞாயிறுகளில் எங்கள் துணியைத் துவைத்து விடுகிறோம் . சஞ்சு தான் உங்களுக்குத் துவைத்துக் கொடுக்கிறாள் . பலசரக்கு மொத்தமாக வாங்கி விடுகிறாம். மெனுவிற்கு ஏற்றார் போல சாரதா ஆன்ட்டியே காய்கறி வாங்கி வந்து விடுகிறார்கள் , அப்புறம் வேற என்ன வேலை இருக்கிறது? எனறான் குத்தலாக .
“மனுசன் வேலையில் இருந்து களைத்து வந்தால் காபிப் போட்டுத் தரக் கூட ஆள் இல்லை..” என்றார் வேகமாக .
“உங்களுக்குக்காகக் காத்திருந்தால், வெளியே போக முடியாது, அப்புறம் ஏழு மணிக்கு சாரதா ஆன்ட்டி வந்து விடுவார்கள். அப்புறம் இரவு வேலைகள் வந்து விடும்.அப்புறம் எங்கே போவது? அவளுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேண்டாமா ? ” என்று ஆணி அடித்தார் போல் பேசினான் . ஆனால் குரலை ஏற்றாமல், முகத்தில் கோபத்தைக் காட்டாமல் பேசினான் .
விஜயன் அமைதியாக , அவனையே பார்க்க , “நீங்கள் ஃப்ரீயாக தானே இருக்கிறீர்கள் , ஓரு காபி தானே நீங்களே போட்டுக் கொள்ளலாமே…?”
அவர்கள் செய்யும் வேலையைப் பட்டியலிட்டுப் பேசியதால் , பதில் ஏதும் பேச முடியாமல் , ஒரு காபிக்கு ஆசைப்பட்டால் , மற்ற வேலைகளை தன் மீது சுமற்றி விடுவார்களோ என்று யோசித்து விறுவிறு என்று உள்ளே சென்று கதவடைத்தார் .
அண்ணன் தனக்காக பேசினான் என்பது பெரு மகிழ்ச்சி தர , அருகில் வந்து “நன்றி அண்ணா..” என்று கட்டிக் கொண்டாள் , அவனும், “தைரியமாக இருடா..” எனப் புன்னகைத்தான் .
மேலும் விஜயன் , விவேக்கிடம் கொஞ்சம் அடக்கித்
தான் வாசித்தார் . அவன் தன்னை நம்பி இல்லை என்பதை உணர்ந்தே இருந்தார் . அதனால்தான், சஞ்சுவிடம் மட்டுமே, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார் .
விவேக்கும் அதைப் புரிந்தே தான் இருந்தான் , ஆனாலும் கூடு கலையக்க கூடாது என்பதற்காக அமைதியாகப் போனான் .
மறுநாள் மாலை சந்திப்பின் போது , “எங்க அண்ணன் கலக்கிட்டான் தெரியுமா?” என்று சஞ்சு புகழ் பாட ,
இனி தன் தோழி பற்றி கவலையில்லை என்று நிம்மதியானாள் கீத்து .இரவு விவேக்கிற்குப் போன் செய்து , “நன்றி குரு” என்றாள் கீத்து.
“எதற்கு கீத்து ?” என்றான் புரியாமல்.
“சஞ்சுவிற்காகப் பேசியதற்குத் தான்…”
“அவள் என் தங்கை கீத்து..” என்றான் அழுத்தமாக,
“இருந்தாலும் இத்தனை நாள் ஒன்றும் செய்யவில்லையே குரு…” என்று ஆதங்கப்பட ,
“அன்று பேசியிருந்தால் எடுபட்டிருக்காது , மேலும் முடிந்தவரை பிரச்சனைகளைத் தவிர்க்கப் பார்க்கிறேன். அவரைக் கோபம் அடைய செய்தால், நான் இல்லாத வேளையில் சஞ்சு தான் கஷ்டப்படுவாள்” என்றான் தெளிவாக.
கீத்துவிற்கும் சூழல் புரிந்தது , “ஸாரி குரு” என்று போனை வைக்க முனைய ,
“பரவாயில்லை விடு.. நீ எங்களுக்காக யோசிப்பதே , மிகப் பெரிய விஷயம்..”
“ குரு…. நண்பேண்டா….” என்று பேசிச் சிரிக்க வைத்தாள்.
அத்தியாயம் 34
மேலும் ஒரு வருடம் போக , சஞ்சு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றாள். ஆர்வத்துடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று , ஆசிரியர்களின் பிரியமான மாணவியானாள் .
தோழிகள் இருவரும் அவரவர் கல்லூரி வாழ்க்கையில் பிஸியாக , அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. எந்த வேலை இருந்தாலும் சனி , ஞாயிறுகளில் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர் . அவரவர் கல்லூரி கதைகளைப் பேசி மகிழ்ந்தார்கள் .
அன்றைய சந்திப்பின் போது , தேர்வு முடிவுகள் வந்திருக்க , “ இப்போது அம்மா இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள் இல்லையா கீத்து ?” என்று வருந்த ,
“இப்பவும் ஆன்ட்டி உன் கூடத் தான் இருக்காங்க , உன்னைத் தான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் . அவங்க ஆசைப்பட்ட மாதிரி , நீ ஜெயிக்கனும். அப்பதான் இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவார்கள்…” என்று சஞ்சுவை தூண்டனாள் கீத்து .
“கண்டிப்பாக” என்றாள் உறுதியாக . பின் வேறு கதை பேசிவிட்டு, இருவரும் கலைத்தனர்.
திடீரென கீத்தவிற்கு நான்காவது செமஸ்டர் விடுமுறையில் இன்டென்சிப் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வர , குறைந்த காலத்தில் எப்படி கம்பெனியை அணுகி , இதைச் செயல்படுத்துவது என்று புரியாமல் திகைத்தாள் .பின், நம் குருநாதர் இருக்கும் போது பயமேன் என விவேக்கிற்குப் போனைப் போட்டாள் .
அவன் போனை எடுக்க , “குரு…” என்று இழுக்க ,
எதற்கோ அடிப்போடுகிறாள் என்று புரிந்தவன் , “சொல்லுங்க சிஷ்யை , என்ன காத்து ? இந்தப் பக்கமாக வீசுகிறது…” என்று கேலி செய்தான்.
“குரு…” என்று சிணுங்க ,
“சரி,சரி , சொல்” என்று சிரித்தான் .
“உங்களிடம் இன்டென்சிப்….” என்று ஆரம்பிக்க ,
“கீத்து எனக்கு கால் வருகிறது , நாளைக்கு சனிக்கிழமை தானே, வீட்டில் தான் இருப்பேன் , அப்போது பேசலாம்” என்று போனை வேகமாக தூண்டித்தான் .
“நேற்று என் பேச்சைக் கூட முழுதாகக் கேட்காமல் வைத்த விட்டார்..” என்று புகார் வாசிக்க ,
“அலுவலக நேரத்தில் போன் செய்தது உன் தப்பு” என்று அவள் பாலை அவளுக்கே திருப்பிப் போட ,
காண்டான கீத்து , “தங்கைக்கு ஒரு கீதம் அப்புறம் பாடு , இப்போது கூப்பிடு…”
கீத்துவை முறைத்தபடி , “அண்ணா..” என்று அழைக்க , அவன் வெளியே வருவதைப் பார்த்த உடனே பவ்ய மோடுக்கு மாற , சஞ்சு ஆவென்று வாய் பிளந்தாள் .
உன்னைக் கண்டு கொண்டேன் என்ற பார்வையோடு , “என்ன விசயம் கீத்து?”
“என் விளங்காத கல்லூரியில் இருக்கும் விளங்காத ஆசிரியர்கள் சேர்ந்து எந்த முன்னறிவிப்பும் இன்றி இன்டன்சிப்பை அறிவித்து விட்டார்கள்…” என்றாள் கடுப்புடன் .
அவள் கதையைக் கேட்டவுடன் , “அடி ஆத்தி பயந்து வருது..” என்று அலற ,
கீத்துவும் புரியாமல் , “என்ன குரு ?” என்று கேட்க ,
“இல்லை , உன் கல்லூரி ஆசிரியர்களின் நிலையே இப்படி? என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்…?” என்று பயந்தவன் போல் உறைக்க ,
அலர்டா இருடா ஆறுமுகம் , இல்லை குரு கலட்டிவிட்டு விடும் என்று உடனே உஷாரான கீத்து, “உங்களையெல்லாம் அப்படிக் சொல்வேனா ? நீங்க வேற லெவல் குருநாதா….” என்று படபடக்க ,
“இது என்ன வடிவேலு பாணி குருநாதாவா ?” என்று கண்ணில் குறும்பு மின்ன கேட்க ,
“குரு…” என்று சிணுங்கினாள் .அனைத்தையும் வேடிக்கை பார்த்த சஞ்சு , “கீத்து கொஞ்ச நேரத்திற்கு முன்னாள் பண்ணிய அலும்பென்ன? இப்போது இருக்கும் நிலை என்ன ?” என்று நெஞ்சைப் பிடித்து நின்றாள் சஞ்சு.
“ஜோக்ஸ் அபார்ட் , ரவி தான் எனக்கு அவங்க கம்பெனியில் இறுதியாண்டு பிராஜக்ட் வாங்கிக் கொடுத்தார் , அவர் கிட்ட கேள் கீத்து.”
“அவர் கம்பெனிக்கு மூன்று மாதம் முன்னாடியே தெரிவிக்க வேண்டுமாம்…” என்று பாவம் போல் முகத்தை வைக்க ,
“ரமேஷ் அங்கிள் கிட்ட கேட்டியா?” என்று சஞ்சு கேட்க,
“கேட்டாச்சு .., கேட்டாச்சு…” வடிவேலு பாணியில் பதில் அளிக்க ,
“என்ன சொன்னார்?”
“முயற்சி செய்கிறேன்…” என்றார் ,
விவேக் சிரித்தபடி , “என் கிட்ட என்ன எதிர்பார்க்கிறாய் ?” என்று புரியாமல் கேட்க ,
“இது நல்ல புள்ளைக்கு அழகு…” என்றபடி , “குருநாதா , உங்க கம்பெனி இல்லை உங்க நண்பர்கள் கம்பெனியில்…” என்று இழுக்க ,
“சொந்தச் செலவில் சூன்யம் வைக்கச் சொல்கிறாயா? நான் மாட்டேன் பா..” என்றான் விவேக் .
கீத்து தன் தோழியிடம் சரண் புக , “அண்ணா, உனக்குத் தான் தெரியுமே , கீத்து செம ஸமார்ட் , உன் கம்பெனியில் கேள்….” என்று தன் தோழிக்குச் சிபாரிசுக்கு வர ,
“அறிவாளியெல்லாம் சரிதான் சஞ்சும்மா , இந்த வாயிருக்கே வாய்…” என்று இழுக்க ,
சஞ்சு பாவமாய் பார்க்க ,
“குரு சத்தியமாகச் சமர்த்தாக இருப்பேன்…” என்று தன் தோழி தலை மீது அடிக்கப் போக ,
வேகமாக சஞ்சுவைப் பிடித்து இழுத்தவன் , “எனக்கு ஒரே தங்கச்சி , விட்டு விடும்மா…” என்று சொல்ல ,
“அப்ப உங்க மீது குருநாதா…” என்று கேட்க , அவன் பெரிய கும்பிடாகப் போட , இடமே கலகலத்தது .
“சரி , நான் முயற்சி செய்கிறேன் , அந்த ஆன்லைன் கோர்ஸ் முடித்து விட்டாயா ?”
“டன் குருநாதா” என்று கட்டை விரலைக் காண்பிக்க ,
“சரி , பார்க்கிறேன்…” என்றவன் , “வேலை இருக்கு…” என்று வெளியே கிளம்பிச் சென்றான் .
இனி விவேக் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தில் சஞ்சுவோடு அரட்டையைத் தொடர்ந்தாள் .