அத்தியாயம் – 1

“மகமாயி சமயபுரத்தாளே…” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒளிபரப்ப, வேகமாய் சசி வந்து “ஏங்க கோவில்ல பூஜை ஆரம்பிச்சுடுச்சு போல. ஒரு பத்து ரூபா குடுங்க. தட்டுல போடணும்…” என்று மகாதேவனிடம் நிற்க,

“வீட்டு செலவுக்குன்னு உன்கிட்ட குடுக்கிற பணமெல்லாம் என்னதான் செய்ற நீ?” என்று கேட்டபடியே மனைவி கேட்ட பத்து ரூபாயை கொடுத்தவர்,

“ஜீவா வர்றேன்னு சொல்லிருக்கா…” என்றும் சொல்ல, லேசாய் அதிர்ந்து பார்த்தார் சசி.

“என்ன சசி?!” என,

“இன்னிக்கா வர்றா?” என்று கேட்க,

“ம்ம் கார் அனுப்பிடுங்கன்னு நாலு மணி போல சொன்னா. எப்படியும் கிளம்பிருப்பா…” என்று சொல்ல,

“அப்போவே சொன்னாளா? அப்போ ஏன் நீங்க சொல்லவே இல்லை..” என்று சசி படபடக்க,

“இப்போதானே நானும் வீட்டுக்கு வந்தேன்…” என்றவர் “பிள்ளைங்களுக்கு பரிட்சை நேத்தே முடிஞ்சிருச்சு போல. அதான் லீவுக்கு வர்றா…” என்றும் சொல்ல,

 “ஏங்க இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுவுமா அவங்க வீட்ல இருந்து கிளம்பி வருவாளாம்மா?” என்று சசி லேசாய் குரலை உயர்த்தினார்.

“அந்த இதுல்லாம் நான் பார்க்கல.. கார் அனுப்புங்கன்னு சொன்னா. அனுப்பிட்டேன். நம்ம பெருமாள் தான் கூப்பிட போறான்…” என்றவர் நகர்ந்துவிட, சசிக்கு மனது ஒருமாதிரி இருந்தது.

‘என்ன இவ…’ என்று எண்ணியவர் மகளுக்கு அழைத்துப் பார்க்க “சொல்லும்மா…” என்றாள் ஒரு அமைதியான குரலில்.

“நீ வர்றேன்னு அப்பா சொன்னார் ஜீவா…” என்று கேட்க,

“ம்ம்… நானும் பிள்ளைகளும் வர்றோம் ம்மா…“ என,

“ஏன் டி  அறிவிருக்கா? இன்னிக்கு வெள்ளிக்கிழமை. வாழ போன வீட்ல இருந்து கிளம்பி வரலாமா நீ? எப்படி உங்க மாமியார் விட்டாங்க…” என்று பேச,

‘வாழ போன வீடு…’ என்று முனுமுனுத்தவள் “இன்னும் பத்து நிமிசத்துல வந்திடுவேன்…” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

மகளது குரலே என்னவோ இருக்கிறது என்பதனைச் சொல்ல, சசிக்கு ஒருமாதிரி படபடப்பாய் வந்தது. இதுபோல அவ்வப்போது அவள் வருவது தான். ஏதேனும் விடுமுறை வருகிறது என்றால், மகாதேவனுக்கு அழைத்து கார் அனுப்புங்கள் என்பாள். இது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் இன்று என்னவோ மனம் பிசைந்தது.

ஜீவாவை திருமணம் செய்து கொடுத்தது விழுப்புரத்தில். பிறந்த வீடோ விழுப்புரத்தில் இருந்து ஒரு அரைமணி நேரம் பயணம் செய்து போகும் அளவில் உள்ள ஒரு சிறிய டவுன் பகுதி.  மகாதேவனுக்கு சொந்தமாய் கொஞ்சம் விவசாய நிலமும், காலியிடங்களும் இருக்க, காலியிடங்களை எல்லாம் விற்று மொத்த பணத்தையும் வங்கியில் போட்டு வைத்துக்கொண்டார்.

விவசாயம், அவர்களின் குடும்ப தொழில். அதுபோக சொந்தமாய் ஒரு தேநீர் கடையும் உண்டு. சொந்த வீடே இரண்டு இருக்கிறது. சொந்தமாய் ஒரு காரும். ஆக, வசதியான வாழ்வு தான்.

ஜீவா ஒரே பெண். மகாதேவனுக்கு மட்டும் அவள் ஒரே பெண்ணல்ல. அவர்களின் குடும்பத்திற்கே ஒரே பெண். மகாதேவனுக்கு ஒரு தம்பியும், ஒரு அக்காளும் உண்டு. அக்கா குடும்பத்தில் இரு ஆண்பிள்ளைகளும், தம்பி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளையும் இருக்க, மகாதேவனுக்கும் சசிக்கும் மிக தாமதமாய் தான் ஜீவா பிறந்தாள்.

குடும்பத்தின் கடைக்குட்டி, ஒரே பெண் வேறு  அதனாலே அவளுக்கு செல்லமும் ஜாஸ்தி. பிறந்ததில் இருந்து அவள் கண்டது எல்லாம் சந்தோசம், உற்சாகம் இவைதான்.   அவளது சொல்லுக்கு அவர்கள் குடும்பத்தில் எவ்வித மறுப்பும் எதுவும் இருக்காது.

‘ஜீவா சொல்லுச்சு…’ என்று சொன்னால் போதும், யாரும் அடுத்த கேள்வி கூட கேட்டிட மாட்டார்கள்.

மகாதேவனின் அக்கா மணியம்மாள் கணவரை சிறு வயதிலேயே இழந்துவிட, பிள்ளைகளோடு பிறந்தகம் பக்கத்திலேயே சொந்தமாய் வீடு வாங்கி குடியேறிவிட்டார்.  தம்பி மகளை மருமகளாய் கொண்டு போகவேண்டும் என்று ஆசை. ஆனால் அவரின் மகன்கள் இருவருக்கும், ஜீவாவிற்கும் வயது வித்தியாசயம் ஜாஸ்தி. அத்தனை ஏன் மகாதேவனின் தம்பி சகாதவேனுக்கு திருமணம் முடிந்து, அவருக்கு மகன் பிறந்து ஒன்பது ஆண்டுகள் கழித்துத்தான் ஜீவா பிறந்ததே.

அக்காவின் ஆசையை அறிந்தவரோ “வேணாம்க்கா.. வயசு வித்தியாசம் ஜாஸ்தியா இருக்கு…” என்று தன்மையாகவே மறுத்துவிட்டார்.

தம்பியின் பேச்சு வருத்தத்தை கொடுத்தாலும், அதில் இருக்கும் உண்மையை உணர்ந்துகொண்டார் மணியம்மாள். அதையும் மீறி அவரின் மகன்களே “ஜீவா நாங்க எல்லாம் தூக்கி வளர்த்த பொண்ணும்மா…” என்றுவிட்டனர்.

இப்படி மூன்று குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடும் ஜீவாவிற்கு, கல்லூரி இறுதியாண்டு  முடியும் போதிலிருந்தே மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிட்டார் மகாதேவன்.

“மேல படிக்கிறேனே பா…” என்று ஒரு வார்த்தை சொல்லிப்பார்த்தாள்.

எப்போதுமே அவளின் பேச்சிற்கு சரி என்று மட்டுமே சொல்லும் அப்பா, அன்றைய தினம், மகள் இப்படி சொல்லவும் “இப்படி உக்காரு ஜீவா…” என்று அருகே அமர்த்தியவர்,

“அப்பாவுக்கும் வயசு ஆகுதுடா.. நீ பிறக்கும்போதே எனக்கு நாப்பது.. கை கால் வெடுப்பா இருக்கும்போதே, உனக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறேன்…” என்று சொல்ல, அப்பாவின் சொல்லுக்காக திருமணத்திற்கு சரி என்றாள் ஜீவா.   

கனியமுதன் – ஜீவாவிற்காக மகாதேவன் பார்த்த மாப்பிள்ளை.

பெயரைக் கேட்டதுமே அவளுக்கு என்னவோ ஒரு புன்னகை முகத்தினில் வந்துபோனது. அவர்கள் வீட்டில் ரசித்து ரசித்து பெயர் வைத்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டாள்.

இளங்கலை முடித்து, அந்த இருபத்தியிரண்டு வயதிற்கே உரிய திருமண கனவுகள் ஜீவாவிற்கும் நிறையவே இருந்தது.

அதிலும் அப்பா சொன்ன “ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கக் குடும்பம் இவங்களது. தனியார் கம்பனி வேலையில இருக்கும்போதே, படிச்சு பரீட்சை எழுதி அரசாங்க உத்தியோகம் வாங்கிருக்கப்டி. கவர்மென்ட் வேலை கிடைச்ச பிறகு தான் கல்யாணம் பண்ணனும்னு உறுதியா இருந்ததுனால தான் அவங்க தம்பி பூங்குன்றனுக்கு, சொந்த மாமா மகளையே முதல்ல கட்டி வச்சிருக்காங்க..” என்று சொல்ல,

வாழ்வில் முன்னேறிட வேண்டும் என்று கனியமுதனுக்கு இருந்த உறுதி, ஜீவாவிற்கு நிரம்பவே பிடித்தது. அதிலும் அவனது புகைப்படத்தைக் காட்டுகையில், சந்தோசமாகவே அப்பாவிடம் “சரிப்பா…” என்றாள்.

ஆனால் அவளின் சித்தப்பா சகாதேவனோ “என்ன அண்ணா சொந்த வீடு தவிர்த்து எதுவும் இல்லை. அதுகூட அவங்க தம்பிக்கும் பங்கு போடணும்.. நம்ம என்ன குறையாவா செய்யப் போறோம்.. இன்னும் கொஞ்சம் நல்ல வசதியான இடமா பார்க்கலாம் தானே…” என்று சொல்ல,

“அட ஏற்கனவே இருக்கிறவனுக்கு கொண்டு போய் கொட்டுறதைவிட, முன்னேற துடிக்கிறவங்களை கை தூக்கி விடுறதுல என்ன தப்பு சகா. மாப்பிள்ளை பத்தி விசாரிச்சேன். ஒரு கெட்ட பழக்கும் இல்லை. சிக்கனமா இருப்பாராம். ஆபிஸ்ல கூட சொன்னாங்க. தேவையில்லாம பேச்சுக்கள் கூட அதிகமா வாய்ல இருந்து வராதாம். பொறுப்பான மனுஷன் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க..” என்று மகாதேவன் பேச,

சசியோ “நீங்க சொல்றது எல்லாம் இருக்கட்டும். உங்க மகளே வாய் ஓயாமா பேசுவா. மாப்பிள்ளை தேவைக்கு பேசுவார்னு சொல்றீங்க. ஒத்துவருமா?” என்றார்.

“அட என்ன சசி.. இப்போ நீயும் நானும் வாழலியா? ஜீவா நம்ம வளர்ப்பு. சூழல் புரிஞ்சு நடந்துப்பா. அதுவுமில்லாம, அவங்க வீட்லயும் பெரியவங்க இருக்காங்க. பார்த்துக்க மாட்டாங்களா?” என்றிட, அனைவருக்கும் புரிந்துபோனது மகாதேவன் முடிவே செய்துவிட்டார் என்று.

அதன் பின் என்ன பெண்பார்க்கும் படலம் தான்.

ஜீவாவை பெண் பார்க்க வந்திருந்தது மொத்தமே ஐந்து பேர் தான். கனியமுதனின் அப்பா விஜயகுமார், அம்மா சுகந்தி. அதுபோக அவனின் தாய்மாமா அத்தை, பின் இந்த வரன் கொண்டுவந்த தரகர்.

மொத்தமே ஐந்து பேர் இருக்க, இங்கே ஜீவாவின் வீட்டிலோ முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.

“மாப்பிள்ளை வரலிங்களா?” என்று கேட்க,

“பூ வைக்கும் போது வர்றேன்னு சொல்லிட்டான். எங்க பேச்சை,  எங்க மகன் மீரமாட்டான்…” என்று விஜயகுமார் பேச, பெரியவர்கள் ஒப்புக்கொண்டாலும், ஜீவாவிற்கு சின்னதாய் ஒரு ஏமாற்றம்.

அவன் வருவான் என்றுதானே இந்த அலங்காரம் எல்லாம் என்று எண்ணியவளுக்கு, இதோ இப்போதும் கூட ஒரு பெரும்மூச்சு தான்.

அவளது மடியில் நிலன், நிலா இரு பக்கமும் உறங்கிக்கொண்டு வர, சிந்தனைகள் பலவாறாய் இருந்தது ஜீவாவிற்கு. பார்வை என்னவோ பிள்ளைகள் மீதிருக்க, தன் மனதின் எண்ணவோட்டங்கள் சரிதானா என்றுகூட அவளுக்கு விளங்கவில்லை.

ஒரு வேகத்தில் இதோ கிளம்பிவிட்டாள். இனி அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி அவள் முன்னே பூதாகரமாய் நிற்கிறது.

நிலன், நிலா இரட்டைப் பிள்ளைகள்.

ஜீவாவிற்கும்  கனியமுதனுக்கும் திருமணம் முடிந்து, அவளது இருபத்திமூன்றாவது வயதில் பிறந்த இரட்டையர்கள்.

இதோ இப்போது அவளுக்கு இருபத்தியொன்பது. திருமணம் முடிந்தும் ஏழாண்டுகள். பிள்ளைகளுக்கு ஆறு வயது. ஓரளவு அனைத்தையும் புரிந்துகொள்ள  தொடங்கியிருக்கிறார்கள்.

வீட்டிற்கு கிளம்பும் போதே “ம்மா.. அப்பா வரலியா நம்மளோட?” என்று கேட்டுக்கொண்டே இருக்க,

“இல்ல வரல…” என்றாள்.

“ஏன் வரல? இப்போ போனா நம்ம எப்போ வருவோம்…” என்று நிலன் கேட்க,

“ஏன்டா இப்போதானே கிளம்புறோம்… உடனே என்னவாம்?” என்றாள்.

“சும்மாதான்மா…” என்றவன் அமைதியாகிவிட்டான்.

நிலாவோ “ம்மா டாடிக்கு கால் பண்ணி சொல்லவா?” என்று கேட்க,

“நானே சொல்லிட்டேன்… அமைதியா கார்ல ஏறுங்க…” என்று இருவரையும் கிளப்பிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு.

நிலாவிடம் சொன்னதுபோல, கனியமுதனுக்கு “கிளம்புகிறேன்…” என்று ஒரு மெசேஜ் மட்டும் தான் தட்டிவிட்டாள்.

அதற்கு கூட அவனிடம் பதில் இல்லை.

வீடு வந்து சேர்ந்தும் கூட, அவன் தான் அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டானா என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்தாள். பார்த்துவிட்டான் தான். ஆனால் பதில் இல்லை.

“ம்ம்ச்…” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு ஜீவாவிடம்.

“என்ன ஜீவா பேசிட்டே இருக்கேன்.. நீ போன் பார்த்துட்டு இருக்க…” என்று சசி கேட்க,

“என்னம்மா?” என்றாள் சலிப்பாய்.

“உன் மாமனார் மாமியாரும் ஊர்ல இல்ல. இந்த நேரத்துல நீ மாப்பிள்ளையை மட்டும் விட்டுட்டு இங்க வந்திருக்க? என்னவோ சரியா படல..” என்று மகளை கேட்க,

“அட என்ன அக்கா நீங்க. இப்போதான் வந்திருக்கா, அவளை போய் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு…” என்று ஜீவாவிற்கு சப்போர்ட்டாய் சித்தி பிரேமா பேச,

“அதுக்கில்ல பிரேமா, வீட்ல பெரியவங்க இல்லாதப்போ இப்படி…” எனும்போதே,

“ம்மா…” என்றாள் ஜீவா.

“என்ன டி?” என,

“இப்போ நான் வந்தது பிடிக்கலையா?” என்று கேட்க,

“அடிப்பாவி..!” என்று வாயில் போட்டுக்கொண்டவர் “பாத்தியா பிரேமா என்ன கேள்வி கேட்கிறான்னு. இவ வந்தது எனக்கு பிடிக்காம இருக்குமா? நான் என்ன அர்த்ததுல கேட்டா, இவ இப்படிச் சொல்றா…” என்று பேச,

தேவன் சகோதரர்கள் இருவருமே “அட கொஞ்சம் சும்மா இருங்க.. பசங்களுக்கு பசிக்கப் போகுது. டிபன் ரெடி பண்ணுங்க. ஜீவா மாப்பிள்ளைக்கு வந்துட்டன்னு சொல்லிட்டியா?” என்று கேட்க,

மனியம்மாளோ “என்ன ஜீவா வந்ததுல இருந்து அமைதியாவே இருக்க?” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல அத்தை.. தலை வலி.. ம்மா தோசை ஊத்தி பசங்களுக்கு குடு.. நான் கொஞ்சம் படுக்கிறேன்…” என்றவள் அறைக்குள் வந்துவிட்டாள்.

வீடு வந்ததற்கே இப்படி கேள்விகள். இதில் அவள் மனதினில் இருப்பதை எல்லாம் சொன்னால்?!

நினைத்துப் பார்க்கவே அவளுக்கு முடியவில்லை.

‘நிறைய சமாளிக்கணும் ஜீவா நீ…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், மீண்டும் கணவன் ஏதேனும் பதில் அனுப்பி இருக்கிறானா என்று பார்க்க, ஒன்றும் வந்தபாடில்லை.

மீண்டும் பெருமூச்சு விட்டவள் ‘நான் ஒரு முட்டாள்.. பதில் வராதுன்னு தெரிஞ்சே  பார்த்துட்டு இருக்கேன்…’ என்று தனது நெற்றியில் தட்டிக்கொண்டவள், கட்டிலில் சாய்ந்து கண்களை மூட,

அங்கே விழுப்புரத்தில் வீடு வந்து சேர்ந்த கனியமுதனோ கல்லென இறுகிய முகத்துடன் தான் உள்ளே நுழைந்திருந்தான்.

அவனது முகம் சும்மாவே இறுகி இருப்பது போலத்தான் இருக்கும். இப்போதோ, ஜீவாவின் மெசேஜ் பார்த்து இன்னும் கல்லென சமைந்து இருக்க, சோபாவின் மீது அவனது அலுவலகப் பையை தூக்கி வீசியவன்

“போ டி போ.. போ.. நல்லா போ.. உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது. உங்கப்பாவும், அம்மாவும் எத்தனை நாளைக்கு வச்சு உன்னை கொண்டாடுறாங்கன்னு பாக்குறேன். திரும்ப என்கிட்டே தானே வரணும். வா.. அப்போ இருக்கு உனக்கு…” என்று பல்லைக் கடித்தவனுக்கு, அவனது அம்மா சுகந்தியிடம் இருந்து அழைப்பு வர,

“ம்ம் சொல்லும்மா…” என்றான்.

“என்னடா வீட்டுக்கு வந்துட்டியா? பிள்ளைங்க என்ன செய்றாங்க?” என்று கேட்க,

“பிள்ளைங்க எல்லாம் ஜீவா வீட்டுக்கு போயிட்டாங்க…” என்று எந்த உணர்வும் வெளிக்காட்டாது மகன் பேச,

“ஏன் டா லீவுக்கு அனுப்பிட்டியா? ஆனா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிருக்க…”  என்று கேட்க,

“ம்ம்ச்.. போகணும்னு சொன்னா.. அவ்வளோதான்…” என்றவன் “வேறென்ன?” என்று கேட்க,

“ஒ.. ஒண்ணுமில்ல டா…” என்ற சுகந்திக்கு வயிற்றில் பிசைந்தது.

என்னவோ நடந்தேறி இருக்கிறது. இல்லையெனில் மருமகள் என்றுமில்லாத திருநாளாய் கிளம்பிச் செல்லமாட்டாள். அதுவும் தங்களிடம் கூட ஒருவார்த்தை கூறாமல் கிளம்பிச் செல்வது என்றால் என்னவோ நடந்திருக்கிறது என்று தோன்ற

“ஏங்க கிளம்புங்க.. விழுப்புரம் போகலாம்…” என்றார் கணவரிடம்.

“என்ன சுகந்தி.. சின்னவன் வீட்டுக்கு போகணும்னு படுத்தி என்னை கூட்டிட்டு வந்த. இங்க வந்து முழுசா நாலு நாள் ஆகலை.. போகலாம்னு சொல்ற…” என்று விஜயகுமார் கேட்க,

“ஜீவா பிள்ளைகளை கூட்டிட்டு பிறந்த வீட்டுக்கு போயிட்டாளாம்…” என்று சொல்ல,

“என்னது!?” என்று கேட்டுக்கொண்டிருந்த விஜயகுமார் மட்டுமில்லை, அவரின் இளையமகன் பூங்குன்றன் அவனின் மனைவி திவ்யா என்று அனைவருமே தான் அதிர்ந்து பார்த்தனர்.