Advertisement

அத்தியாயம் –9
மூன்று நாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணி. ராம்குமார் சென்னையில் தங்கள் வீட்டில் தன் அறையில் படுத்திருந்தான். கையில் மொபைல் போன்.
அரை மணி நேரமே பார்த்த ரஞ்சனியை தனக்கு பிடித்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.
 வந்த அன்றே அவன் அம்மா பானு ஆர்வமாக அவனுக்குப் பார்த்திருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி இருந்தார்.
      பொண்ணு பேரு ரஞ்சனி! அந்த பொண்ணும் ஐடி கம்பனில தான் வேலை பாக்குது பா. பெங்களுருல தான் வேலை பாக்குதாம்.வசதியான குடும்பம்.
பொண்ண நேர்லயே போன வாரம் கோயில்ல பார்த்தேன். லட்சணமா இருக்கு. உனக்கும் பொருத்தமா இருக்கும்.
அப்பா எனக்கு அக்காவுக்கு எல்லோருக்கும் ஓகே தான். நீயும் பார்த்துட்டு சரின்னு சொன்னா இந்த வாரத்துலயே போய் பேசி முடிச்சிடலாம். என்ன பா சொல்ற?
உடனே முடிவு சொல்ல சொல்லி அம்மா ப்ரெஷர் கொடுக்க அவனை காப்பாற்றி விட்டது அவன் அப்பா மூர்த்தி தான்.
ஏம்மா வந்தவுடனே அவனை பதில் சொல்லுன்னு மல்லு கட்டறே? அவன் இந்த வாரம் முழுக்க இங்க தான் இருக்கப் போறான்.
மெதுவா நாளைக்கு கேட்டுக்கலாம். அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி களைச்சுப் போய் வந்திருக்க புள்ளக்கி மொத சாப்பிட எதாச்சும் குடு.
அவர் சொன்னதற்காக பானு அப்போதைக்கு விட்டு விட்டாலும் மறுநாள் காலையில் ராம்குமார் எழுந்து வரும் போதே தயாராக காத்திருந்தார்.
என்னப்பா? நா குடுத்த போட்டோவைப் பாத்தியா? உனக்கு பிடிச்சிருக்கா? ஆக்சுவலா நேர்ல் பொண்ணு இன்னுமே லட்சணமா இருக்குது. பதவிசா பேசுச்சு. அவங்க வீட்டுலயும் எல்லாம் நல்ல மாதிரியா தான் தெரியிறாங்க.
நீ உன் முடிவ சொல்லிட்டேனா பேசி முடிச்சிடலாம். இப்ப நிச்சயம் வெச்சா தையில முதல் முஹூர்த்தம் பார்த்து கல்யாணம் வெச்சிடலாம். இப்பவே புக் பண்ணி வெச்சா தான் நல்ல மண்டபம் கிடைக்கும்.
பொண்ணு பாக்க உங்க அக்காவையும் மாமாவையும் வர சொல்லிடறேன். நாளைக்கு போலாமா? இல்ல இன்னிக்கி சாயங்காலம் போலாமா?
பானு மூச்சு விடாமல் பேச ராம்குமாருக்கு தான் உடனே சம்மதிக்க முடியாமல் எதோ நெருடியது.
எதோ என்ன வஞ்சுவின் முகம் தான். அன்று அவள் பப்பில் பார்த்த பார்வை அவன் மனதைத் துளைத்தது.
என்னை உனக்கு பிடிக்கலியா? வேண்டாம் என்று சொல்லிடுவியா?
அவள் அழவில்லையே தவிர அவள் கண்களில் அவ்வளவு தவிப்பு.
இப்போதும் அதை நினைக்கும் போது அவளின் இந்த எதிர்பார்ப்புக்கு தான் எந்த விதத்திலாவது காரணமா என்று யோசித்தான்.
தான் அவளை காதலிக்கிறோமா என்று முதல் முறையாக யோசித்தான். ஆனால் அப்படியும் அவனுக்குத் தோன்றவில்லை.
அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்கணும் என்று எப்போதோ முடிவு செய்தது தானே?
அப்ப இப்ப அம்மா கேக்கும்போது சரின்னு சொல்ல வேண்டியது தானேடா என்று மனம் இடிக்க ஆவலாக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் தயக்கமாக என்றாலும் தலையாட்டி சம்மதம் சொன்னான்.
அம்மா ஏற்கனவே எல்லாம் பேசி வைத்திருந்தாரோ என்று அன்று மாலை ரஞ்சனி வீட்டுக்குப் போகும் போது தோன்றியது. இல்லாவிட்டால் இவ்வளவு வேகமாக எல்லாம் செய்ய முடியுமா?
காஞ்சிபுரத்தில் இருக்கும் அவன் ஒரே அக்கா புவனா கணவர் ராம்சுந்தர் மகள் தீபா குட்டியுடன் அன்று மதிய உணவுக்கே வந்திறங்கினாள்.
வாங்க அக்கா! வாங்க மாமா! தீபு குட்டி! என்று அவர்களை வரவேற்ற ராம்குமாரை சந்தோஷமாக இருவரும் அணைத்துக் கொண்டனர்
என்ன மாப்ள! நீயும் ஒரு வழியா சம்சார கடலில் குதிக்க முடிவு பண்ணிட்டியா?  நான் படற அவஸ்தைய பார்த்தும் உனக்கு எப்படி தைரியம் வந்துச்சு?
எப்போதுமே அவனிடம் நட்போடு பழகும் ராம்சுந்தர் இன்றும் அவனை வைத்துக் கொண்டே மனைவியை சீண்ட ராம்குமார் அக்காவுக்கு தான் வழக்கம் போல பரிந்து பேசினான்.
அப்ப ஓகே மாமா! அக்காவும் தீபு குட்டியும் இங்கேயே நா ஊருக்கு போற வரை இருக்கட்டும். நீங்க மட்டும் நைட் கிளம்புங்க…
அப்படி சொல்லுடா தம்பி! நானே அந்த பிளான்ல தான் வந்திருக்கேன். நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க மாமா! நா பாப்பா கூட இங்க இருக்கேன். தம்பி கூட இருந்து ரொம்ப நாளாச்சு!
புவனா ராம்குமாரின் தோளில் சாய்ந்து கொண்டு ராம்சுந்தரை முறைத்தாள். அவர்கள் பேசப்பேச ராம்சுந்தர் தன் காதைப் பிடித்தான்.
அம்மா! தாயே! உங்க ஸ்ட்ராங் கூட்டணி பத்தி தெரியாம அவசரப்பட்டு வாய விட்டேன். சொன்னதெல்லாம் வாபஸ்….
எல்லாம் சும்மா தான். ராம்சுந்தரால் ஒரு நாள் கூட மனைவியையோ மகளையோ விட்டு இருக்க முடியாது. எப்போது வந்தாலும் கூடவே வந்து இருந்து கூட்டிப் போய் விடுவான்.
அவன் மட்டும் அல்ல புவனாவும் கூட அப்படித்தான். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ராம்குமாருக்கு இப்படி ஒரு லைப் பார்ட்னர் அமைய வேண்டும் என்று ஆசை வரும்.
புவனா இங்கே எதுவும் தெரியாமல் செல்லமாக வளர்ந்தவள் ராம்சுந்தருக்காக தன்னை முழுவதும் மாற்றிக்கொண்டாள்.
அவர்கள் இருப்பது கிராமம் என்பதோடு கூட்டுக்குடும்பம். வாழ்க்கை முறையே வேறு. ஆனால் சிறு சுணக்கம் இல்லாமல் புவனா அங்கே பொருந்திப் போக ராம்சுந்தருக்கு புவனா மேல் அப்படி ஒரு பிடித்தம்.
அதனால் அவனுமே அவளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்வான்.
அவளுக்கு தன் ஒரே தம்பி மேல் பிரியம் அதிகம் என்பதாலேயே ராம்குமாரிடம் அவனும் நெருக்கம் காட்டினாலும் ராம்குமாரின் குணம் பிடித்துப் போய் இப்போது இருவரும் நெருங்கி விட்டனர்.
வேகமாக வாசலுக்கு விரைந்த பானு என்ன தம்பி? மாமாவ உள்ள கூப்பிடாமல் வாசலிலேயே நிக்க வெச்சு பேசிட்டு இருக்கே? உள்ள கூப்பிடு! வாங்க தம்பி! வா புவி! வாடா தீபு கண்ணா! என்று முறையாக வரவேற்றார்.
மாலையில் எல்லோரும் பெண் பார்க்கப் போக தனியாக என்று இல்லாமல் எல்லோர் எதிரிலேயும் ராம்குமார் ரஞ்சனி இருவரும் பொதுவாக பேசிக்கொண்டனர்.
எந்த கம்பனி? என்ன ப்ராஜெக்ட்? என்ன வேலை? ஆப் ஷோர் உண்டா? என்று பொதுவான பேச்சுக்கள் தான்.
பானு சம்மதத்திற்காக மகனின் முகத்தைப் பார்க்க ரஞ்சனியின் அப்பாவே அவனை காப்பாற்றி விட்டார்.
ரெண்டு பேரும் இப்ப தானே பாத்துக்கிட்டாங்க! அவங்கள அவசரப்படுத்த வேண்டாம். கொஞ்சம் யோசிக்கட்டும். நீங்க உங்க மகனை கேளுங்க. நானும் என் மகளை கேட்டு சொல்றேன்! அப்புறம் பேசிக்கலாம்
என்று சொல்லி விட ஒரு விடுதலை உணர்வோடு ராம்குமார் கிளம்பினான்.
இந்த இரண்டு நாட்களும் அக்கா குடும்பத்தோடு பொழுது போக இன்று மாலை தான் அவர்கள் கிளம்பி இருந்தனர்.
அம்மா மறுபடி அவன் கல்யாணத்தைப் பற்றி ஆரம்பிக்க ராம்குமார் நைட் யோசிச்சிட்டு சொல்றேன்மா என்று தப்பித்து தன் அறைக்கு வந்தான்.
அப்போது தான் முகநூல் நோடிபிகேஷன் டோன் வர திறந்தான்.
வஞ்சுவிவி ஹாஸ் போஸ்டட் எ நியூ அப்டேட் என்ற நோடிபிகேஷன் மேலேயே இருந்தது.
தன்னிச்சையாக மனியைப்பார்க்க மணி பத்து.
ஓ சின்ன பக்கெட்டோட கவிதை நேரமா?
சிறு புன்னகையுடன் வஞ்சுவின் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
     
விடுவிக்க முயன்றும்
தோற்றுப் போகிறேன்! உன்
பார்வைப் பிடியில் இருந்து
என் மனதை!
 
      இன்று வந்த போஸ்ட்! அவள் பக்கத்தில்! அந்த கவிதைக்கு கீழே தூரத்தில் போகும் ஒரு ஆடவனை கண் நிறைய ஏக்கத்தோடு பார்த்தபடி பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்.
அதுவரை கவிதை என்று படித்தவனுக்கு அது காதல் என்று இப்போது தான் புரிந்தது.
      இதையே தானே அன்று பப்பில் சொன்னாள்.
குரு! எனக்கும் உங்களுக்கும் எந்த விதத்திலும் செட் ஆகாதுன்னு என் மனசுக்கு எத்தனயோ முறை சொல்லிப் பார்த்துட்டேன். ஆனா உங்கள பாக்கும்போது எல்லாம் மறந்துடுது! நா என்ன செய்யட்டும்?
 
அன்று வஞ்சு சொன்ன போது பாவமாக இருந்தது. ஆனால் இப்போது உள்ளுக்குள் என்னவோ உணர்ந்தான். ஆனால் அது என்னவென்று புரியாமல் யோசித்தபடி இன்னும் ஸ்க்ரோல் செய்ய நேற்று போட்ட போஸ்ட்.
     
தொலைவேன் என்று தெரியும்! ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன்
என்று நினைக்கவில்லை!
 
இந்த மூன்று நாட்களாக அக்கா குடும்பத்தோடு ஊரை சுற்றியதில் அவன் முக நூல் பக்கமே வரவில்லை. யோசனையோடு இன்னும் கீழே போக வரிசையாக கவிதைகள். எல்லாம் காதல் கவிதைகள்.
 
                  மொழியில் சொல்ல துணிவில்லாமல்
விழியில் சொல்கிறேன் என் மனதை! நீயோ
ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்து செல்கிறாய்!
மொழி புரியவில்லையா அல்லது
என் மனது புரியவில்லையா?
 
      விரலால் போஸ்டை தள்ளிக்கொண்டே போக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தினமும் போஸ்ட் போட்டிருக்கிறாள். அதுவும் இந்த  ஒரு வருடமாக தினமும்!
      வேலையில் சேர்ந்த நாள் என்று போஸ்ட் போட்டதற்கு அடுத்து அவள் போட்ட கவிதையை படித்தவனுக்கு இப்போது அதன் உள்ளே ஒளிந்திருந்த அர்த்தம் புரிந்தது. அதாவது இப்போது தான் புரிந்தது.
      தன்னை உருகி உருகி காதலிக்க ஒரு ஆளா? அதுவும் இப்படி வருஷக்கணக்காவா? ராம்குமார் கர்வமாக உணர்ந்தான்.
      அவனுடைய பொறுமையான குணத்தால் கவரப்பட்டு அவன் அக்கறையை காதலாக நினைத்துக் கொண்டு ஏற்கனவே சில பெண்கள் அவன் படிக்கும் போதும் சரி இங்கே வேலைக்கு வந்த போதும் சரி அவனிடம் காதலை சொல்லியிருக்கிறார்கள்.
      இவர்கள் க்ரூப்பிலேயே வந்தனா கூட முதலில் அவனிடம் காதல் சொல்லியிருக்கிறாள்.
அவளிடம் ராம்குமார் தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று எடுத்து சொல்லி விரும்பாத திருமணம் இருவருக்கும் கசப்பில் முடியும் என்று புரிய வைத்தான்.
      வந்தனா அப்போது என்ன நினைத்தாளோ அவனுக்குத் தெரியாது. ஆனால் அவன் எல்லோரிடமும் அக்கறையோடு நடந்து கொள்வதை பார்த்து அவன் எல்லோரிடமும் இப்படித்தான் என்று கஷ்டப்பட்டு அவன் மறுப்பை ஜீரணித்தாள்.
அவன் உதவி எப்போதும் தேவை என்று அதனால் இன்னும் அவன் நட்பில் இருந்தாள்.
      அவ்வபோது எந்த பெண்ணுக்காவது அவன் அக்கறையோடு உதவும் போது அடுத்த பலியாடு என்று அவனுக்கு மட்டும் புரியும்படி கிண்டல் செய்வாள். அதோடு சரி. 
      வஞ்சு வந்த போதும் கூட அப்படித்தான். கிண்டல் செய்யும் சாக்கில் தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக் கொண்டாள்.
வஞ்சு அவன் பின்னால் நாய் குட்டியாக சுற்றினாலும் ராம்குமார் அவளிடமும் தன்னிடம் போலவே அக்கறை மட்டுமே காட்டிப் பழகுவதில் ஒரு சிறு திருப்தி.
      அதே நேரம் இவன் பெரிய மன்மதனா என்று ஆங்காரமும் தோன்றாமல் இல்லை. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
       ராம்குமார் வஞ்சுவைப் பற்றி அதுவரை காதல் என்ற கோணத்தில் எல்லாம் யோசித்ததே இல்லை. அதற்காக சகோதரியாக நினைத்தான் என்று சொல்ல முடியாது.
      கல்லூரியில் அப்பாவியாக சிறு பெண்ணாக பார்த்தவளாக தான் அவன் வஞ்சுவை பார்த்தான்.
      அவர்களின் கல்லூரி சூழலில் பொருந்த முடியாமல் மிரண்டு கண்ணில் நீரோடு பரிதாபமாக நின்றவளின் மேல் அவனுக்கு இரக்கம் மட்டுமே இருந்தது.
      கொஞ்சம் கொஞ்சமாக அவன் சொன்ன ஆலோசனைகளை பிடித்துக்கொண்டு முன்னேறியவளை தட்டிக்கொடுக்க தோன்றியது, மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் அக்கறை கூட இருந்தது,
இதுவரை அவனிடம் காதல் சொன்ன பெண்கள் உன்னை பிடிச்சிருக்கு என்று நேரே வந்து சொல்வார்கள். அவன் கவனத்தை கவர தங்களை கவனமாக அலங்கரித்துக்கொண்டு வருவார்கள்.
      அதோடு சரி! இப்படி வெறித்தனமான காதல் எல்லாம் இல்லை.
      அப்போது தான் வஞ்சு தன்னோடு இருக்கும் நேரம் எல்லாம் அவன் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை நினைத்தான். அப்போதெல்லாம் அது அவன் பேச்சில் கவனம் என்று நினைத்தான்.
      இப்போது தான் அது காதலியின் பார்வை என்று புரிந்தது.
      இப்படிக்கூட தத்தியா இருப்பியாடா நீ? எல்லோரும் சொல்லிக்கூட உனக்கு தெரியலையா?
      சிறு புன்னகையுடன் செல்லை கீழே வைத்தவன் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.
      கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு விட்டத்தைப் பார்க்க எண்ணம் என்னவோ மூன்று நாட்களுக்கு முன் நடந்ததை மறுபடி ரீவைண்ட் செய்தது.
       அந்த நேரத்தில் ராம்குமாரை வஞ்சுவின் வார்த்தைகள் அதிகம் தொடவில்லை.
பழக்கம் இல்லை என்ற போதும் ஒரு மாதிரி தீவிரத்துடன் அவள் குடித்த அதிர்ச்சி தான் அவன் எண்ணத்தை அப்போது அதிகம் ஆக்கிரமித்தது.
      தான் குடிச்சா ஸ்ட்ரெஸ் குறையும் என்று விளையாட்டாக சொன்னதை அவள் சீரியசாக எடுத்துக் கொண்டு விட்டாளோ என்று பதட்டம்.
அவன் சொன்னதை எல்லாம் அடி பிசகாமல் செய்பவள் இதையும் செய்ததற்கு தான் தான் காரணமோ என்று குற்றவுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு.
கேட்கும்போதே பழக்கம் இல்லாததால் அவளுக்கு கண்கள் செருக அப்படியே அந்த மேஜையில் தலை வைத்து படுத்து விட்டாள். அதில் இன்னும் பயந்து போனவன்
       வஞ்சு! என்ன செய்யுது? எழுந்திரு! கிளம்பலாம்!
என்று அவளை தோளைப்பற்றி எழுப்ப வஞ்சு கண்ணே திறக்கவில்லை.
      அப்படியே தூங்கியிருந்தாள்.
ராம்குமாருக்கு இருந்த பதட்டத்தில் அது புரியவே சில நிமிடங்கள் ஆனது. மயங்கி விட்டாளோ? இல்லை வேறு என்னமும் செய்கிறதோ என்று பயந்து போயிருந்தான்.
      பயத்தில் மேஜை மேல் இருந்த பிஸ்லரி பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க குரு! மழையில் இந்த பப்பில் கூட ஒழுகுதா? என்று சம்மந்தமே இல்லாமல் உளறினாள்.
      ஆமா ஒழுகுது! நீ எந்திரி! போவோம்! என்று ராம்குமார் அவள் தோளை உலுப்ப வஞ்சு இந்த உலகத்திலேயே இல்லை.
      குரு! உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஊட்டியில் நாம டூர் போன போது ஒரு நாள் அவுட்டிங் போனோம். அப்ப நா ஸ்வெட்டர் கொண்டு வரலன்னு நீங்க அங்க வாங்கிக் குடுத்தீங்க. நா கூட அன்னிக்கி அதை ரூம்லயே வெச்சிட்டு வந்திட்டேன்.
      எல்லோரும் முன்னால போய்ட்டாங்க. நா வேடிக்கை பாத்துட்டே வந்தேன்னு நீங்க மட்டும் தான் கூட பொறுமையா கம்பனி குடுத்தீங்க. நாம போகும் போது மழை லேசா பெய ஆரம்பிச்சிது…..
      நா குளிர்ல நடுங்கறத பாத்துட்டு நீங்க உங்க ஸ்வெட்டர கூட கழட்டி எனக்கு போட்டு விட்டீங்க. ஞாபகம் இருக்கா? பிரவுன் கலர் ஸ்வெட்டர்.? நா அப்ப என்ன நினச்சேன் தெரியுமா?
      இதுக்கு பதிலா என்னை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுத்தா எப்படி இருக்கும்னு…!
வஞ்சு சொல்லி விட்டு சிரிக்க ராம்குமார் அவள் குடித்து விட்டு எதோ உளறுகிறாள் என்று அப்போது அதை பொருட்டாகவே நினைக்கவில்லை.
இன்னும் ஏதாவது சீன் ஆவதற்குள் கிளம்பி விட வேண்டும் என்று தான் பரபரத்தான்.
இப்போது புதிதாக வந்த ஞானோதயத்தில் எல்லாம் புரிய அவன் வருங்கால மனைவி யாரென்ற முடிவை தெளிவாகவே எடுத்தான்.
கண்களை மூட இந்த ஒரு வருடமாக வஞ்சுவோடு அவன் இருந்த தருணங்கள் மனக்கண்ணில் மறுபடி ஓடியது.

Advertisement