Advertisement

கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.
      அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.
      முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை அணிந்து கண்ணாடியில் பார்க்க கூச்சமாக இருந்தது அவளுக்கு. நல்ல வேலையாக அதில் ஒரு மாட்சிங் ஓவர்கோட்டும் வந்திருக்க அதை அணிந்து கொண்டாள்.
      அவள் கிளம்புவதை கவனித்த சுஜி ஹேய் திஸ் ட்ரெஸ் சூட்ஸ் யூ வெல்டி! (இந்த உடை உனக்கு அருமையா பொருந்துது) என்று பாராட்ட மறுபடி கண்ணாடியில் பார்த்த போது இப்போது நன்றாக இருப்பது போல தான் இருந்தது.
      அவளே கண்ணுக்கு அழகாக மஸ்காரா தீட்டி லேசாக காம்பக்ட் போட்டு விட்டு உதட்டுக்கு பீச் நிற லிப்ஸ்டிக்கையும் போட்டு விட்டாள்.
      அவள் எப்போதும் அணியும் வளையத்தை கழட்டி தூக்கிப் போட்டவள் தன்னிடம் இருந்த நீள முத்து காதணியை அணிவித்தாள். கழுத்திலும் முத்துசரம் ஒன்றை போட்டு விட்டாள்.
      ஒரு கையில் வாட்ச் இருக்க இன்னொரு கை வெறுமையாக இருந்தது. எல்லாம் அணிந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்த வஞ்சுவிற்கு தன்னையே அடையாளம் தெரியவில்லை.
      கையைப் பார்க்க அதில் கருநீல நிற நெயில் பாலிஷ். அவள் இதுவரை போட்டது சிவப்பு நிற பாலிஷ் மட்டும் தான். வந்தனா வந்ததுமே அவளைப் பார்த்து விசிலடிக்க வஞ்சுவிற்கு ராம்குமார் எப்படி தன்னைப் பார்த்து ரியாக்ட் பண்ணுவான் என்று கற்பனை விரிந்தது.
ஆனால் இவர்கள் எல்லாம் வருவதற்காக காத்திருந்த ராம்குமார்  அவளை ஆராய்ச்சிப் பார்வை தான் பார்த்தான்.
ராம்குமார் அன்று வஞ்சு சொன்னதுமே முடிவு செய்திருந்தான். அவளை இந்த கார்பரேட் கல்ச்சரில் பொருந்திப் போக வைக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்வது என்று.
அதனால் வந்தனாவிடம் சொல்லி வைத்திருந்தான். அதனால் தான் வந்தனா அவளுக்கு இந்த உடையை தேர்ந்தெடுத்து கொடுத்தாள். அவன் கேட்காமலே சுஜி மேக்கப்பில் உதவ அவன் எதிர்பார்த்த மாற்றத்தோடு வஞ்சு இன்று இங்கே வந்திருந்தாள்.
அவள் தோற்றம் திருப்தியை தர ஆர்வமாக தன்னைப் பார்த்தவளைப் பார்த்து பெரிதாக புன்னகை செய்தான்.
எல்லோரும் பேசி சிரித்தபடி உள்ளே செல்ல இன்று வஞ்சுவிடம் எந்த தயக்கமும் இல்லை. அது தான் கூடவே ராம்குமார் வருகிறானே!
எல்லோருமாக அவர்கள் புக் செய்திருந்த மேஜையில் சென்று அமர்ந்தனர்.
வஞ்சுவை கவனமாக ராம்குமார் தன் பக்கத்தில் அமர்த்திக்கொள்ள அவளுக்கும் சந்தோஷமே. ரஞ்சித்தின் பார்வையில் மட்டுமே விஷமம் இருந்தது.
மற்றவர்கள் மேலோட்டமாக ராம்குமாரை கலாய்த்தாலும் அவன் உதவும் குணம் தெரிந்ததால் அதோடு விட்டு விட்டனர்.
ஆதியும் ரஃபீக்கும் எப்போதுமே பீர் அருந்துவார்கள். அவர்கள் அதை சொல்ல சோனல் மட்டும் வைன் ஆர்டர் செய்தாள். மற்றவர்கள் எல்லோரும் ஆரஞ்சு ஜூஸ் ஆர்டர் செய்தனர்.
வஞ்சு அவர்கள் மூவரும் மது அருந்துவதை பே என்று பார்க்க ராம்குமார் அதை கவனித்து விட்டு அவள் கையை மெதுவாக அழுத்தினான்.
பார்ட்டி என்றால் இதெல்லாம் சகஜம் வஞ்சு. இப்படி அவங்கள வெறிச்சுப் பார்க்கறது தப்பு…
ராம்குமார் மெல்லிய குரலில் சொல்ல வஞ்சு பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.
ரஞ்சித் வஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே  ராம்குமாரிடம் நக்கலாக இன்னிக்கு நீ நல்லவனா? கெட்டவனாடா? என்று கேட்க எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.
வஞ்சு ஒன்றும் புரியாமல் விழிக்க ராம்குமார் சிரித்துக்கொண்டே இப்ப நல்லவன். சாப்பிட்ட பிறகு கெட்டவன்டா என்று பதில் சொன்னான்.
வஞ்சுவுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் யாரும் அவளுக்கு விளக்கமும் சொல்லவில்லை.
அதற்குள் புப்பே ஆரம்பிக்க எல்லோரும் எழுந்தனர். ராம்குமார் வஞ்சுவை பார்த்து தன் பின்னால் வரும்படி தலையசைத்தான்.
வஞ்சு ஆட்டுக்குட்டி போல அவன் பின்னால் செல்ல அவளை நேரே சூப் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.
இங்கயும் சாப்பாடு நல்லா தான் இருக்கும். அது நாம சாப்பிடற முறையைப் பொறுத்தது. முதல்ல எதையும் வாரி தட்டில் வெச்சிக்கக் கூடாது. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் பண்ணனும். அப்புறம் ஏது பிடிக்குதோ அதை இன்னும் கொஞ்சம் மறுபடி போகும் போது எடுத்துக்கலாம்.
முதலில் சூப்ல ஆரம்பிக்கணும். போகப்போக எல்லாம் சொல்றேன்…
என்று தனக்கும் அவளுக்கும் சிக்கன் சூப் எடுத்துக் கொண்ட ராம்குமார் அவளை மறுபடி டேபிளுக்கே அழைத்து வந்தான். அன்று அவள் சிக்கனை ரசித்து சாப்பிட்டதால் அவனே சூப்பை முடிவு செய்தான்.
கூட ஒரு சிறு தட்டில் பப்பட் எடுத்துக்கொண்டு தங்கள் இடத்திற்கு வந்தனர்.
சூப்பும் அந்த பௌலில் பாதி அளவே இருக்க அதில் பொறுமையாக தங்கள் மேஜையில் இருந்த மிளகுத்தூள் உப்பு இரண்டையும் தூவினான்.
அதை அவள் பக்கம் நகர்த்த வஞ்சு பௌலை அப்படியே எடுத்து குடிக்கப் போனாள்.
அவசரமாக அவளைத் தடுத்த ராம்குமார் இதை இந்த ஸ்பூனால தான் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணும். இப்படி சொட்டு எடுத்து வாயில் வெச்சு பாக்கணும். உப்பு மிளகுத்தூள் பத்தலைன்னா போட்டு மறுபடி டெஸ்ட் பாக்கணும்.
எவ்வளவு வேணுமோ போட்டுக்கிட்டு மெதுவா ஸ்பூனால எடுத்து சிப் பண்ணனும். பார்ட்டிக்கு வந்தா வந்த வேலை முடிஞ்சதுன்னு வேக வேகமா சாப்பிடக்கூடாது.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக் கொண்டு எல்லோரோடயும் பேசணும். புரியுதா?
ராம்குமார் சொல்வதன் நோக்கம் வஞ்சுவிற்கு புரிந்தது. தன்னைக் குத்திக் காட்டாமல் திருத்த முயல்கிறான் என்றும் புரிந்தது.
தலையாட்டி ராம்குமார் செய்தது போலவே தானும் ஸ்பூனால எடுத்து சூப்பை சிறிது சிறிதாக பருகினாள்.
அதற்குள் எல்லோரும் சூப்போடு வந்துவிட அன்று போலவே பேச்சு அவரவர் பார்த்த வெப் சீரிஸ், விளையாடிய புது கேம், புதிதாக வந்த பாப் ஆல்பம் என்று பேச்சு ஓடியது.
வஞ்சுவிற்கு இப்போதும் எதுவும் புரியவில்லை என்றாலும் ராம்குமார் அதைப்பற்றி சிறு விளக்கம் சொல்லி அவளை தங்கள் பேச்சில் இணைத்துக்கொண்டான்.
அதில் கொஞ்ச நேரத்தில் வஞ்சு பேச்சில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்.
அதே போல உணவையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எப்படி எதோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதோடு ஸ்பூன் போர்க் வைத்து எப்படி சாப்பிட வேண்டும் என்று டேபில் மேனர்ஸ் எல்லாம் சொல்லிக்கொடுக்க ஆரம்பத்தில் தடுமாறினாலும் வஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக தேறினாள்.
மற்றவர்கள் எல்லாம் இதை கவனித்தும் கவனியாதது போல இருந்து விட அதுவே வஞ்சுவிற்கு இதமாக இருந்தது.
எல்லோரும் பேசி சிரித்து சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆகி விட வஞ்சு இப்போது கிளம்ப வேண்டியது தான் என்று நினைத்தவள் இப்ப கிளம்பலாமா? என்று ராம்குமாரிடம் கிசுகிசுத்தாள்.
ராம்குமார் இரு! இன்னும் எவ்வளவு இருக்கு? எப்ப போலாம் என்று நான் சொல்றேன்… என்றவன் மீண்டும் மற்றவர்களோடு பேச ஆரம்பித்தான்.
வஞ்சுவிற்கு தான் சாப்பிட்ட பிறகும் ஏன் இன்னும் இங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை.
அரை மணி நேரத்தில் அந்த பப்பில் ஒரு ஓரமாக இருந்த மேடையில் டிஜே வந்து ஸ்டீரியோ சிஸ்டம் பொறுப்பேற்க வந்தான்.
அதுவரை இதமாக கேட்டுக்கொண்டு இருந்த ஆங்கில இசை அதிரடியாக ஆரம்பித்தது.
அதற்காகவே அங்கே இருந்த எல்லோரும் காத்திருந்ததுபோல் எழுந்திருக்க இவர்கள் மேஜையிலும் எல்லோரும் எழுந்தனர்.
நடுவே ஒரு பெரிய இடம் காலியாக இருக்க ஒவ்வொருவராய் அந்த டிஜேவிடம் போய் எதோ சொல்ல பாட்டு அதிரடியாக ஒலிக்க ஆரம்பித்தது.
எல்லோரும் அங்கே ஆட ஆரம்பிக்க ராம்குமார் அதை ஒரு திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த வஞ்சுவின் கையைப் பிடித்து எழுப்பினான்.
வஞ்சு திகைத்து பார்க்க ராம்குமார் வா! என்று சொன்னவன் தயங்கித் தயங்கி பின்னால் வந்தவளை இழுத்துக்கொண்டு போய் ஆடுபவர்களோடு நிறுத்தினான்.
ஆடு! என்று சொன்னதோடு அவன் இடையை அசைக்க அவனையும் மற்றவர்களையும் திகைப்போடு பார்த்த வஞ்சு நானா? இங்கயா? என்று கேட்க அந்த சத்தத்தில் இருவரும் கத்த வேண்டி இருந்தது.
ஆமா! நீ தான் பெரிய டான்சர் ஆச்சே? அதே மாதிரி இங்கயும் கையைக்கால ஆட்டு! இடுப்பை வளை! டான்ஸ் எவ்வளவு பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் தெரியுமா?
என்றவன் அவளை இந்தப்பக்கம் திருப்பிக்காட்ட அங்கே வந்தனாவும் மணிமேகலையும் கூட ஆடிக்கொண்டு இருந்தனர்.
ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து இடையில் கை போட்டு ஆட அது வரைக்கும் வஞ்சுவுக்கு ஆறுதல். இந்தப்பக்கம் ரஞ்சித் ஆதி ரஃபீக் எல்லோரும் கூட்டமாக முகம் கொள்ளா சிரிப்போடு ஆட வஞ்சுவிற்கு இது ஒன்றும் தப்பில்லை என்று தோன்றியது.
அவர்கள் ஊரில் திருவிழாவில் ஆடுவது போல தான் இதுவும் என்று தோன்ற ராம்குமாரிடம் இருந்து விலகியவள் வந்தனா மணிமேகலையோடு இணைந்து கொண்டாள்.
உண்மையில் அந்த அதிரும் இசைக்கு அரைமணிநேரம் ஆடிய போது உடம்புக்கும் மனதிற்கும் அவ்வளவு உற்சாகம் கிடைத்தது.
யாருமே மற்றவர்களை கவனித்த மாதிரி தெரியவில்லை. தங்களுக்குள் ரசித்து ஆடுவது போல இருக்க வந்சுவையும் அந்த சந்தோசம் தொற்றிக்கொண்டது.
அரைமணி நேரம் ஆடி சந்தோஷமாக களைத்து மூச்சிரைக்க தங்கள் மேஜைக்கு வந்து அமர்ந்தாள். அப்போது ராம்குமாரும் ஆடி முடித்து வர அவன் கையில் ஆதி ரஃபீக் குடித்த அதே பீர் இருந்தது.
வஞ்சு திகைத்து ராம்குமாரைப்  பார்க்க ராம்குமார் அதே புன்னகை தான் இப்போதும் செய்தான்.
 

Advertisement