Advertisement

அத்தியாயம்-7
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னவோ எதோ என்று பறந்தடித்துக்கொண்டு தான் வந்திருக்க சாவகாசமாக கதை சொன்னவளை கடுப்பாக பார்த்தான்.
அசந்தர்ப்பமாக ரஞ்சித் சொன்னது வேறு நினைவு வர தன்னை ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு அலைக்கழித்த வஞ்சுவை திட்டவும் மனசு வரவில்லை. 
ஒரு வேளை நான் தான் ஓவராக ரியாக்ட் செய்து விட்டேனா? ரஞ்சித் சொன்னது போல அத்தனை பேர் இருக்கும் போது யார் அவளை என்ன செய்து விடப் போகிறார்கள்?
எதுவாக இருந்தாலும் அதைப் பேச இது நேரமில்லை என்று உணர்ந்தவன் ஒரு பெருமூச்சோடு இன்னும் கண்ணை துடைத்துக்கொண்டிருந்த வஞ்சுவை விலக்கி நிறுத்தினான்.
அவள் சாப்பிடவில்லை என்றது நினைவு வர இன்னும் பசிக்குதா வஞ்சு? என்று கேட்க அவள் ஆமாம் என்பது போல பாவமாக தலையாட்டினாள்.
      படிப்பில் சூரப்புலியாக வேலையில் திறமைசாலியாக இருந்தால் மட்டும் இந்த துறையில் குப்பை கொட்ட முடியாது என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை என்பதை உணர்ந்தான்.
      சரி போவோமா?
ராம்குமார் கேட்கவும் எந்த கேள்வியும் கேட்காமல் வஞ்சு அவன் பின்னால் சென்றாள்.
      பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்தவள் அன்று போலவே தன் பேகை இருவருக்கும் நடுவில் வைக்க ராம்குமார் சிரித்துக்கொண்டான்.
      சின்ன பாக்கெட் இதில் எல்லாம் விவரம் தான். என்ன அழுதா மட்டும் எல்லாம் மறந்துரும்…
      சற்றுமுன் புலியை பார்த்தது போல தன்னை பாய்ந்து அணைத்துக் கொண்டவள் இப்போது தெளிவாக அமர்ந்திருப்பதை கவனித்து தான் தான் அவசரப்பட்டு விட்டோம் என்று புரிந்து கொண்டான்.
      அஞ்சு அப்பாவியே தவிர அசடு இல்லை என்று இந்த சில மாதங்கள் பழக்கத்தில் புரிந்து கொண்டிருந்தான்.
      இந்த சூழலில் நீடிக்க அவளுக்கு கொஞ்சம் எடுத்து சொன்னாலே புரிந்து கொள்ளுவாள் என்று தோன்றியது.
      அந்த ரோட்டோர கடையில் வஞ்சு பரோட்டா சிக்கன் குருமாவை குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்ட வேகமே அவள் பசியை காட்ட இப்போது தன் அட்வைஸ்கான நேரம் இல்லை என்று சிறு புன்னகையுடன் அவள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தான்.
      அந்த பெரிய நட்சத்திர ஓட்டலில் பொருந்த முடியாமல் இப்போது தான் அழுது புலம்பியவள் இங்கே எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
      முழுதாக இரண்டு பரோட்டாக்களை உள்ளே தள்ளிய பிறகு பசி கொஞ்சம் குறைய வஞ்சு அப்போது தான் தட்டை விட்டு நிமிர்ந்தாள்.
விரல்களில் ஓட்டி இருந்த கிரேவியை ரசித்து நாவால் சப்புக்கொட்டிக் கொண்டே 
       நீங்க சாப்பிட்டீங்களா?
எதிரில் எதையும் சாப்பிடாமல் கை கட்டி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவனை சாவகாசமாக கேட்டாள் வஞ்சு.
  ராம்குமார் அவள் அக்கறையில் சத்தமாக சிரித்தான்.
      ரொம்ப சீக்கிரம் கேட்டிட்டே போ! நான் எப்பவோ சாப்பிட்டாச்சு. உனக்கு இன்னும் ரெண்டு பரோட்டா சொல்லவா? சாப்பிடறியா?
இயல்பாக வயிற்றில் கை வைத்து வயிறு ஃபுல். இப்ப தான் கண்ணு பளிச்சின்னு தெரியுது. அந்த ஓட்டல் பேரு தான் பெத்த பேரே தவிர ஒரு ஐட்டமும் நல்லாவே இல்ல. உப்பில்ல ஒரைப்பும் இல்ல….
      அழுது அவசரமாக வர வைத்து விட்டு அந்த இரவு நேரத்தில் நிதானமாக பேசிக் கொண்டிருந்தாள் வஞ்சு.
      ராம்குமார் அவள் முகத்தில் தெரிந்த நிறைவைப் பார்த்தான். அவன் அவசரத்தில் ஸ்வெட் பேன்ட் டீசர்டில் வந்திருக்க அவள் அணிந்திருந்த நாகரீக உடைகள் தான் அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தவில்லை.
      அதைப் பற்றி எந்த கவலையும் வஞ்சு பட்டதாகவும் தெரியவில்லை.
      ராம்குமார் சற்று யோசனையோடு அவளைப் பார்த்தான். அவள் இந்த கார்பரேட் சூழலில் பொருந்த திணறுவது நன்றாகத் தெரிந்தது. அவளுக்கு இந்த இடம் பொருந்திய அளவுக்கு அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் பொருந்தவில்லை என்றும் புரிந்தது.
      இது ஒரு வகையில் அவர்களின் வேலைக்கு கிடைக்கும் கூடுதல் ஆதாயம். அடிக்கடி நல்ல உணவு, இன்ப சுற்றுலா, சினிமா டிக்கட் என கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் வேலை செய்து சூடாகிப் போகும் மூளையை குளிர வைத்து குளிர வைத்து வேலை வாங்குவது. இந்த கம்பனிகளின் இயல்பு.
      இதுவும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். ஆனால் இந்த இளைப்பாறுதல் இல்லை என்றால் இந்த துறையில் நீடித்து வேலை செய்ய முடியாது.
      மன அழுத்தம் கூடி விடும். இன்னும் சில கம்பனியில் ஜிம் கூட உண்டு. உடல் எடை கூடாமல் என்பதை விட நோய் வந்து விடுப்பு எடுத்தால் வேலை நடக்காது அல்லவா?
      ஆரம்பத்தில் இதெல்லாம் தெரியாது. ஆனால் சில வருடங்கள் போன பிறகு தான் இதெல்லாம் புரிய வரும். கூடவே இருக்கும் டீம் மேட்ஸ் குறைவாக வேலை செய்து தன்னை விட அதிகமாக சம்பள உயர்வு பெறுவது, ஹெச்ஆருக்கு சோப் அடித்து பிழைக்கும் நபர்களை சமாளிப்பது என்று இதில் உள்ளே எத்தனையோ உண்டு.
      வெளியே எல்லோருக்கும் தெரிவது இருபத்தி ஒன்று இரண்டு வயதிலேயே கை நிறைய காசு. ஏசி அறை உத்தியோகம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இவை தான். இதை நம்பி ஈசலாக வருவோர் ஏராளம்.
      உள்ளே இருக்கும் அவஸ்தைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் கிளையன்ட் வெளிநாட்டில் இருப்பதால் இரவில் வேலை செய்ய வேண்டும்.சில வருடங்களில் எல்லாம் தெரியும்.
ஆனால் அதற்குள் இதை நம்பி வாங்கிய கடன், உட்கார்ந்தே வேலை செய்வது, மன அழுத்தம் இதனால் ஏற்படும் உடல்நலக்குறைவு என்று மீளவும் முடியாமல் இதிலேயே இருக்கவும் முடியாமல் காலத்தை ஓட்டுவர்.
இதில் வேலைக்கு உத்தரவாதம் என்பதே இல்லை என்பது வேறு மேலே எப்போதும் கத்தியாக தொங்கிக்கொண்டே இருக்கும்.
      இதற்கே புலம்புபவள் இதெல்லாம் தாக்குப் பிடிப்பாளா?
      அவன் தான் இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தானே தவிர வஞ்சு வயிறும் நிறைய அவன் வந்ததிலேயே ஆறுதல் கொண்டவளாக சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள்.
      ….அந்த ஹோட்டல்ல என்ன ஒரே இங்க்லீஷ் பாட்டா போடுறாங்க? தமிழ் பாட்டு எல்லாம் போட மாட்டாங்களா? ஒண்ணுமே புரியல. எல்லோரும் மூக்கால பாடுறாங்க. ஆனா இந்த ப்ரீத்தி எப்படி தான் அந்த வார்த்தையெல்லாம் தெரிஞ்சுகிட்டாளோ?
கூடவே பாடுறா?. ஒரு குத்து பாட்டு போட்டா எவ்வளவு குஷாலா இருக்கும்?..
      ராம்குமார் எதுவும் பதில் சொல்ல வேண்டும் என்று கூட அவள் எதிர்பார்க்கவில்லை. கண்கள் விரிய உற்சாகமாக அவளே பேசிக்கொண்டு போனாள்.
      கொஞ்சம் கொஞ்சமாக கடை காலி ஆகி விட்டதை அப்போது தான் கவனித்தவன் மனியைப் பார்க்க மணி பதினொன்றரை.
      அவன் சொல்ல வந்த விஷயங்களை சொல்ல இது நேரமில்லை என்று உணர்ந்தவன் மணி ரொம்ப ஆச்சு. போலாமா? என்று எழுந்திருக்க சந்தோஷமாக தலையசைத்து எழுந்தாள் வஞ்சு.
      மறுபடி பைக் கிளப்ப அதே போல் பையை முன்னால் வைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.
      வீட்டுக்கு வந்தவள் உடையைக் கூட மாற்றவில்லை. முதல் வேலையாக முகநூலைத் திறந்தாள்.
 
அன்பு என்பதும் நட்பு என்பதும்
வெறும் வார்த்தைகளில் இல்லை.
கேட்காமலே வரும் அக்கறையில் இருக்கிறது.
பற்றிய கரங்களுடன் வா
என் கடைசி பயணம் வரை!
 
      காதல் என்று முதலில் எழுதியவள் பிறகு அவளுக்கே வெட்கம் வர காதலை அன்பு என்று மாற்றினாள்.
      இன்று மாலை முதல் அவள் அனுபவித்த மன உளைச்சலை எதுவும் பேசாமலே கூட இருந்தே தன் இருப்பின் மூலமே  போக்கியவனை மனம் நெகிழ நினைத்தபடியே அமர்ந்திருந்தவளை போனின் டொக் என்ற செல் பேசி சத்தம் கலைக்க ராம்குமார் லைக்ஸ் யுவர் போஸ்ட் என்று முகநூல் நோடிபிகேஷன் காட்டியது.
      சியர் அப் ஜூனியர்! என்று கமெண்டும் கூடவே வர மகிழ்ச்சியாகவே உறங்கினாள் வஞ்சு.
      அடுத்த இரண்டு நாட்கள் இருவருக்குமே வேலை அதிகமாக இருக்க இருவரும் பார்த்துக் கொள்ளக் கூட முடியவில்லை.
      அவர்கள் கூட்டத்தில் எல்லோருமே பிசியாக இருந்ததால் அனைவருமே வார இறுதியை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
      இது போல இருக்கும் சமயங்களில் இவர்களே சேர்ந்து எங்காவது அவுட்டிங் செல்வார்கள்.
      அது போல எங்கே போகலாம் என்று கேட்டு ரஞ்சித் அவர்கள் வாட்சப் க்ரூப்பில் ஆரம்பிக்க ஆளாளுக்கு ஆலோசனை.
      அதற்குள் ராம்குமார் அவர்கள் வழக்கமாக போகும் ஒரு பப்பின் பெயரை சொல்லி அவன் முன்பதிவு செய்து விட்டதாகவும் சொன்னான்.
      எல்லோரும் அதற்கு சம்மதிக்க அந்த க்ரூப்பில் ராம்குமாரால் இணைக்கப்பட்ட வஞ்சுவும் உடனே ஒத்துக்கொண்டாள்.
      ராம்குமார் சொல்லும் போது அவளுக்கு எங்கே போவதென்றாலும் ஓகே.
      சொன்னபடி அவர்கள் எல்லோரும் அந்த சனிக்கிழமை ஒரு பப்பில் கூடினார்கள்.
வந்தனா வஞ்சுவை தன் ஹோண்டாவில் கூட்டிக்கொள்ள வஞ்சு உற்சாகமாகவே கிளம்பி இருந்தாள். முதல் நாள் பெண்கள் எல்லோரும் இருக்கும் போது என்ன உடை அணிவது என்று பேசிக்கொண்டனர்.
      அப்போது வந்தனா தான் வஞ்சுவிடம் சொன்னாள்.
      இந்த மாதிரி பார்ட்டிக்கு நாங்க யூசுவலா ஸ்கர்ட் இல்லனா இல்லனா லாங் கௌன் இது மாதிரி தான் போடுவோம். நீயும் அதே போடு வஞ்சு. வழக்கம் போல ப்ரீ ஹேர் தான். எண்ணை வெக்காதே…
      மற்றவர்களும் பேசிக்கொள்ள எல்லோரும் கருநீல நிறத்தில் உடை அணிவது என்று முடிவு செய்து கொண்டனர்.
      வஞ்சு தன்னிடம் அந்த நிறத்தில் அதுவும் கௌன் எல்லாம் அவளிடம் இல்லவே இல்லை என்று சொன்னாள்.

Advertisement