Advertisement

கிளாஸ்ஐ கீழே வைத்தவள் அவர்களை பரிதாபமாக பார்க்க எல்லோரும் அவளை மாற்றி மாற்றி செய்த கிண்டலில் கண்ணில் துளிர்த்த நீரை துடைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.
     அதற்குள் அவர்களின் கிளையன்ட் கம்பனியில் இருந்து வந்து விட சம்பிரதாய பேச்சுக்குப் பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
     அவள் செய்த வேலைக்கு கிளையன்ட் கம்பனி பிரதிநிதி ரவியைப் பாராட்ட வஞ்சுவிற்கு அதற்கு மேல் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.
     ஆனாலும் நடுவில் போவது தவறு என்று அவளுக்கும் தோன்ற சாப்பிடவும் அதற்கு மேல் பிடிக்காமல் போக அழுத்தமும் பசியும் சேர்ந்து தலை வலிக்க ஆரம்பித்தது.
     பத்து மணி வரை பொறுத்துப் பார்த்தும் யாரும் கிளம்பாமல் அங்கேயே கொட்டமடிக்க வஞ்சுவிற்கு அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்கவே இல்லை.
     அதிலும் பெரிய தலைகள் எல்லாம் தலையைக் காட்டி விட்டு போயிருக்க கிட்டத்தட்ட எல்லோருமே பார்ட்டி மூடில் சரக்கை உள்ளே இறக்க ஆரம்பிக்க பெண்களோ அப்போதும் அவர்களோடு  பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்.
     யாரும் வரம்பு மீறவில்லை என்றாலும் தோளில் தட்டுவதும் சத்தமாக சிரிப்பதும் என்று போகப்போக வஞசுவால் சகிக்க முடியவில்லை.
     பிரீத்தியிடம் மெதுவாகப் போய் “போலாமா ப்ரீத்தி? என்று கேட்டாள்.
     “ஆர் யூ கிரேசி? நாங்க யாரும் மிட்நைட்டுக்கு முன்னால கிளம்பின சரித்திரமே இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்தில் டிஸ்கோத்தே வேற ஆரம்பிக்கும். அதெல்லாம் என்ஜாய் பண்ணாம வீட்டுக்குப் போலாமா என்று கேக்கற? 
     என்றவள் வஞ்சுவின் முகத்தைக்கூட பார்க்காமல் அந்த பக்கம் திரும்பிக் கொண்டாள்.
      வஞ்சுவிற்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் முட்டிக்கொண்டு வர தலையைக்குனிந்து கொண்டு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
     தனியாகக் கிளம்பவும் பயமாக இருந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டு செல்லை வெறிக்க ராம்குமாரிடம் இருந்து வாட்சப் மெசேஜ் அந்த நேரத்தில் டொக்கென்று வந்தது. வஞ்சு ஆர்வமாக அதை திறந்தாள்.
     “ஹாய் பார்ட்டி எப்படி போகுது? என்ஜாயிங்?
     நேரில் கேட்டிருந்தால் நிச்சயம் அழுதிருப்பாள். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
    இங்கே எதுவும் சரியில்லை. எதுவும் பிடிக்கல. எனக்கு வீட்டுக்கு போகணும் என்று போட்டு கண்ணீர் ஸ்மைலி போட்டாள்.
என்ன ஆச்சு?
 ராம்குமார் கேள்விக்கு வஞ்சுவிடம் இருந்து பதிலில்லை. அவளுக்கு அவன் கேட்டதில் கண்ணீர் வர அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் முயற்சியில் மும்முரமாக இருந்தவளுக்கு மெசெஜை படிக்க முடியாமல் கண்ணீர் மறைத்தது.
இரண்டு நிமிடங்கள் காத்திருந்த ராம்குமார் அவளின் பதிலை நினைத்து பதறிப்போனான்.
அவன் மனம் எதெதையோ கற்பனை செய்தது. அவன் போன பார்டியில் ஒரு முறை ஓவராக குடித்து விட்டு அவன் ப்ரொஜெக்டில் இருந்தவன் இதே போல வந்திருந்த பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டான்.
அவள் கையைப் பிடித்து இழுத்து கூட ஆடு என்று வற்புறுத்தி அவளுக்கு முத்தம் கொடுக்கப் போக ஒரே ரகளை ஆகி விட்டது.
அது போல எதுவும் வஞ்சுவை யாரும் செய்து விட்டார்களா? இவள் அதற்கு பயந்து தான் அழுது கொண்டு இருக்கிறாளா? ஏற்கனவே பயந்தவளை தான் தான் ஏதும் வம்பில் மாட்டி விட்டோமா என்று நினைத்து விட்டான்.
ஒரு நிமிடம் பொறுமையாக இருந்தவன் அவளிடம் இருந்து பதிலேதும் வராமல் போக போனில் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
வஞ்சு அப்போதும் அழுகையை அடக்க முயன்று முடியாமல் கைக்குட்டையை வைத்து வாயை அடைத்துக்கொண்டு இருந்தவளுக்கு அவன் அழைத்ததும் இன்னும் அழுகை வந்தது.
அழைப்பை எடுக்க ராம்குமார் குரல் பதட்டமாக வஞ்சு! என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா? உனக்கு ஏதும் ஆகலியே?”” கேட்க அதற்கு பதில் சொல்லக்கூட வஞ்சுவால் முடியவில்லை.
அழுகை அதிகமாகி விசும்பி விட ராம்குமாரின் பதட்டம் இன்னும் அதிகம் ஆனது.
நீ எதுக்கும் கவலைப்படாதே. இதோ டென் மினிட்ஸ்ல நான் அங்க வரேன். ஓகேயா?
என்றவன் பேசிக்கொண்டே பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
எதோ ஒரு கேமில் லயித்திருந்த ரஞ்சித் எங்க கிளம்பிட்ட மச்சி? என்று கேட்க வஞ்சுவுக்கு எதோ ப்ராப்லம் போல டா. போன்ல ஏது கேட்டாலும் அழுவுறா! நா போய் பாத்துட்டு வரேன்.
என்றபடி கிளம்பியவனை ரஞ்சித் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.
டேய்! அவ்வளவு பெரிய ஸ்டார் ஹோட்டலில் யாரும் அந்த ரெட்டை ஜடையை எதுவும் செய்து விடப் போவதில்லை. அங்க எல்லாரும் தண்ணி அடிக்கிறதையும் மட்டை ஆகறதையும் எல்லாம் ஒண்ணா டான்ஸ் ஆடறதையும் பார்த்து மெரண்டு போயிருப்பா. புதுசு இல்ல? பேசாம நெட்ப்ளிக்ஸ்ல சீரிஸ பாத்துட்டு இருடா! எட் ஷீரன் பாப் ஒண்ணு புதுசு வந்திருக்கு. லிங்க் அனுப்பி விடறேன். பாரு! செமையா இருக்கு!
      அவனை கடுப்பாக பார்த்த ராம்குமார் டேய் அவ அப்படியெல்லாம் இல்ல. இப்ப நா சொல்லி சொல்லி எவ்வளவோ மாறிட்டா. இது எதோ நிஜமாவே பிரச்சனை போல இருக்கு. நா போய் பாத்துட்டு வரேன்… என்று கிளம்பி விட்டான்.
      அந்த பொண்ணுக்கு ஏதும் ஆச்சோ இல்லியோ? ஆனா இந்த பயலுக்கு என்னவோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது…. என்று சிரித்தபடி கேமில் ஆழ்ந்து விட்டான்.
      ராம்குமார் உண்மையில் அந்த ஹோட்டலுக்கு பைக்கில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு வேகம்.
      மனக்கண்ணில் வஞ்சுவின் அழுத முகம் மட்டுமே தெரிய அவன் கற்பனை பயங்கரமாக போனது.
      பாவம் ஏற்கனவே பயந்த பொண்ணு. என்ன செஞ்சு வெச்சானுங்களோ தெரியலியே?
      பொதுவாக இது போன்ற பார்ட்டிகளில் நிறைய பசங்க அதுவும் ஓசியில் கிடைக்கிறது என்று தண்ணீரில் மூழ்குவது உண்டு தான். ஆனால் வரம்போடு தான் கூட இருக்கும் பெண்களிடம் நடந்து கொள்வார்கள்.
இன்னும் சொல்லப் போனால் பேச்சு ஓவர் கனிவாக போகுமே தவிர  மட்டமாக நடந்துகொள்ள மாட்டார்கள். சில பெண்களும் பீர்,ஒயின் என்று குடிப்பார்கள் தான்.
ஆனால் கார்பரேட் கல்ச்சரில் இதெல்லாம் சகஜம் தான். அதுவும் ஆப் ஷோர் போகும் போது இதெல்லாம் சகஜம் என்று தான் வஞ்சுவை இந்த பார்ட்டிக்கு போகவே சொன்னான்.
போன முதல் நாளே அவளுக்கு என்ன ஆச்சோ? சும்மா இல்லாமல் தான் வேறு போக மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டோமே என்று ராம்குமாருக்கு குற்றவுணர்வாக இருந்தது.
அவன் ஹோட்டல் உள்ளே நுழைய அங்கே முன்னாலேயே இருந்த தோட்டத்தில் அம்போ என்று வஞ்சு உட்கார்ந்திருந்தாள்.
கண்ணை தன் இரு கையாலும் துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்தவன் அவள் அருகே சென்று வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்தினான்.
சைட் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தியவன் அவசரமாக அவளிடம் ஓடினான்.
வஞ்சு! என்னமா ஆச்சு?
அவனைப் பார்த்ததும் எழுந்த வஞ்சு வேகமாக எட்டு வைத்தவள் குரு! என்று அழுதபடி நெருங்க ராம்குமார் மேலே பேசாமல் இரு கைகளால் அவள் தோளைப் பிடிக்கப் போக வஞ்சு அவன் மார்பில் சாய்ந்து அழ எல்லாம் மறந்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.
என்ன ஆச்சு வஞ்சு?  ஏன் எங்க உக்காந்திருக்கே? என்ன நடந்துச்சு? யாராவது உன் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணாங்களா? யாரும் கேக்கலியா? அப்படி எதுவும்னா முன்னாலேயே என்னை கூப்பிட வேண்டியது தானே? சொல்லு?
ராம்குமார் என்னெனவோ நினைத்து கேட்க வஞ்சு சில நிமிடங்கள் அழுது முடித்தவள் அதெல்லாம் இல்ல குரு! கிளம்பும்போதே சுஜி நா பார்ட்டிக்கு போட்டிருந்த ட்ரெஸ் பார்த்து நக்கலா சிரிச்சா. அப்பவே கஷ்டமா இருந்துச்சு.
இந்த ப்ரீத்தி வேற என்னவோ வெள்ளைக்காரி மாதிரி குட்டி ஸ்கர்ட் போட்டு வந்தா. அங்க போய் அங்க போய் … மூக்கை உறிஞ்சிக்கொண்டு என்னை கண்டுக்கவே இல்ல. அவ மட்டும் இல்ல. யாருமே என்னை கண்டுக்கவேயில்லை தெரியுமா?
அப்புறம் தாகமா இருக்குன்னு தண்ணின்னு தெரியாம தான் குடிச்சேன். அதுக்கு என்னவோ டக் டக்..என்னவோ குடிச்சேன்னு எல்லாரும் ஒரே சிரிப்பு. கிண்டல் பண்றாங்க.
அதுக்கு மேல அந்த குரங்கு ரவி நான் செஞ்ச வேலை எல்லாம் அவனே செஞ்சேன்னு சொன்னானா? எனக்கு சரி கடுப்பு. பசியில தலைய வேற வலிச்சிதா? சாப்பிடவும் இல்லியா? வீட்டுக்கு போலாமான்னு கேட்டா இந்த ப்ரீத்தி கூட்டிட்டு போ மாட்டேன்ன்னு சொல்லிட்டா….எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?
வஞ்சு பேசியபடியே ராம்குமாரைப் பார்க்க அவன் அப்படியே திகைத்துப்போய் நின்றிருந்தான்.

Advertisement