Advertisement

முதல் முறையாக சந்தோஷமாக ஒரு செல்பி எடுத்தாள்.
எடுத்ததும் அதை யாருக்கு அனுப்புவது என்று யோசனை கூட வரவில்லை.
உடனே லாவண்யாவிற்கும் ராம்குமாருக்கும் ஒரு குட் மார்னிங் மெசேஜோடு வாட்சப்பில் அனுப்பியவளுக்கு அப்போது மணி ஐந்து என்பது கூட தோன்றவில்லை.
ராம்குமாரிடம் குரு! நீங்க சொன்னது அத்தனையும் நிஜம் என்று சொல்ல வேண்டும் போல மனம் பரபரத்தது.
அவன் மெசேஜ் அனுப்பினால் நன்றி சொல்லலாம் என்று ராம்குமாருக்கு அனுப்பிய மெசேஜில் கிரே டிக் ப்ளு டிக் ஆக மாறுகிறதா என்று அதையே பார்த்தபடி இருந்தவள் இரண்டு நிமிடங்கள் ஆகியும் மாறாமல் போகவே பொறுமை இழந்து முகநூலில் இதை ப்ரோபைல் பிக் ஆக வைத்தாள்.
       மீண்டும் வாட்சப் வந்து அவன் பார்த்தானா என்று பார்த்தவளுக்கு ஏமாற்றம். தான் எடுத்த மற்றொரு செல்பியை வாட்சப்பில் டிபியாக மாற்றியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
      வீடே அமைதியாக் இருக்க அவளுக்கு ஆபிஸ் போனால் நன்றாக இருக்கும் போல முதல் முறையாக தோன்றியது.
      முயன்று அப்படியும் இப்படியுமாக நேரத்தை நெட்டித் தள்ளியவள் ஏழு மணிக்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல் கிளம்பி விட்டாள்.
      மனநிறைவோடு வழியில் தென்பட்ட ஒரு கோயிலுக்கு போய் அங்கே அமர்ந்து பொழுதைக் கழித்தவளுக்கு அங்கு போவோர் வருவோர் எல்லாம் அவளையே பார்ப்பது போல தோன்றியது.
      அவர்களின் பார்வையில் ஒரு பாராட்டு இருப்பது போல தோன்ற சந்தோஷமாய் உணரும்போதே ராம்குமாரின் மீண்டும் நினைவு.
      மொபைல் எடுத்து பார்த்தவளுக்கு இப்போதும் ஏமாற்றமே! அதற்கு மேல் பொறுக்க முடியாமல் லாவண்யாவுக்கு அழைத்து விட்டாள்.
      தூங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி தான் அனுப்பிய போட்டோவை பார்க்காததற்கு திட்டி, தன் புதிய தோற்றத்தைப் பற்றி அவளிடம் கேட்டு மீண்டும் கோயிலில் முழு செல்பி எடுத்து அனுப்பி என்று அவளை ஒரு வழி பண்ணி விட்டு தான் போனை வைத்தாள்.
      அதன் பிறகு காலை உணவையும் முடித்து அலுவலகத்திற்குள் காலை வைத்த போது ஒரு பரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது.
      கண்கள் ரம்குமாரைத் தேட அவளை ஏமாற்றாமல் அவன் தன் இடத்தில் அமர்ந்திருந்தான்.
      நடையில் ஒரு துள்ளலோடு அவன் அருகே போய் குட் மார்னிங் குரு! என்று அவன் தன்னை நன்றாக பார்க்கும்படி எதிரே நின்றாள்.
      தன் சிஸ்டமில் எதோ பார்த்துக் கொண்டிருந்த ராம்குமார் அவள் குரல் கேட்டு நிமிர்ந்தான்.
      ஓ! ஹாய்! குட் மார்னிங்! என்றதோடு அவன் பேசுவதை நிறுத்தி விட வஞ்சுவிற்கு பெரும் ஏமாற்றம்.
தன் புது அவதாரத்தைப் பற்றி சொல்லுவான் என்று ஆவலோடு வந்தவளால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
      நீங்க செலக்ட் பண்ண ட்ரெஸ் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே!
      குரலிலேயே வருத்தம் தெரிந்தது.
      ஏன் நல்லா இருக்கே! நான் அப்பவே நீ அனுப்பின வாட்சப் மெசேஜ்கு பதில் போட்டேனே?
      ராம்குமார் சொன்ன பதிலைக் கேட்டு வஞ்சுவுக்கு சப்பென்று ஆனது. ஏதேதோ எதிர்பார்த்து காலையில் இருந்து அவள் வந்தது என்ன? இப்படி இரண்டு வார்த்தைகளில் முடித்து விட்டான்.
ராம்குமார் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு அவன் மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்து விட அவளுக்கு போய் வருவது போல கை காட்டி வேகமாக போனான்.
      எவ்வளவோ ஆவலோடு கிளம்பி வந்தவள் அவனிடம் எதிர்பார்த்து வந்த விளைவுஇல்லாமல் முகம் வாடி மெல்ல நடந்து தன் இடத்துக்குப் போனாள்.
      வழியில் ரவி சொன்ன ஹாய் வஞ்சு! யூ லுக் ப்ரெட்டி யார்! என்றதோ ப்ரீத்தி சொன்ன சூப்பர் ட்ரெஸ் வஞ்சு என்றதோ மற்றவர்களின் பார்வையில் தெரிந்த பாராட்டோ எதுவும் அவளைத் தொடவில்லை.
      ஒட்ட வைத்த புன்னகையுடன் தன் இடத்திற்கு போய் அமர்ந்து ஒரு எதிர்பார்ப்போடு வாட்சப் ஐ திறந்து ராம்குமார் என்ன சொல்லியிருக்கிறான் என்று பார்த்தாள்.
      இரண்டே வரிகள் தான்.
      குட் மார்னிங் வஞ்சு! லூகிங் ப்ரெஷ்!
      அதைப்பார்த்து தான் கட்டிய மண் கோட்டை இடிந்து விழுந்தது போல உணர்ந்தவளாய் அப்படியே அதைப்பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள்.
      எத்தனை முறை பார்த்தாலும் இரண்டு வரிகள் தான் தெரிந்தது.
      அதில் நட்பைத் தவிர எப்படியும் அவளைப் பற்றி அவனுக்கு வேறு எண்ணம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது.
      தான்தான் ஒரு வேளை தவறான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டோமோ என்று நினைத்தவளுக்கு மேலே யோசிக்க நேரம் இல்லாமல் வேலைகள் குவிய அது கூட அந்த நேரம் ஒரு வரமாய் தெரிந்தது.
      இந்த சூழலை அணுகுவதற்கு தேவையான பக்குவமோ அனுபவமோ இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாவிட்டாலும் அவனை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று மட்டும் நினைத்தாள்.
      ராம்குமார் எந்த விகல்பமும் இல்லாமல் வழக்கம் போல அவளை டீக்கு அழைத்துப்போக வரவும் மறுக்காமல் அவனோடு போனாள்.
அவன் வழக்கம் போலவே இயல்பாக அவள் கையைப் பிடித்துக் கொண்டு பல விஷயங்களைப் பேசிக்கொண்டு வர வஞ்சுவிடம் வார்த்தைகளுக்கே பஞ்சமாகிப்போனது.
      இப்போது கொஞ்ச நாட்களாக எல்லோரோடும் பேச ஆரம்பித்து விட்டதால் வஞ்சுவின் புது தோற்றத்தைப் பார்த்து அவர்களிடம் இருந்து பல விமர்சனங்கள்.
      டேய் மச்சி! இது யாருடா ப்யூட்டி? நம்ம ரெட்டை சடையைக் காணோம்? என்று ரஞ்சித் கிண்டல் செய்ய மணிமேகலை அவள் அருகில் வந்து இந்த டிரெஸ்ஸிங் உனக்கு நல்லா சூட் ஆகுது வஞ்சு! என்று பாராட்டினாள்.
      மற்றவர்களும் கூட பாராட்ட ராம்குமார் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
      வஞ்சு கண்ணுக்கு எட்டாத ஒரு புன்னகையோடு நன்றி சொன்னாள்.
      மச்சி! நாம டூர் போயி நாளாச்சி! இப்ப இண்டிபெண்டென்ஸ் டே லீவு வரும். இல்ல? வீக்கெண்ட் சேர்த்தா நாலு நாள் லீவு வரும். போவோம்டா! என்று ரஞ்சித் ஆரம்பித்தான்.
      ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல அங்கே ஒரே சிரிப்பும் கிண்டலும் கலாட்டாவுமாக திட்டம் போட்டனர். வஞ்சுவிற்கு அவர்கள் பேசிய எதுவும் மனதில் பதியவில்லை.
      அவள் பார்வை மொத்தமும் ராம்குமாரின் மேல் மட்டுமே இருந்தது.
      அவனை கிண்டல் செய்த மோனல் காதைத் திருகியும் மணிமேகலை முதுகில் தட்டியும் சிரித்து பேசியவனிடம் எந்த கல்மிஷமோ வேறுபாடோ இல்லை.
      அதைப் பார்க்க பார்க்க வஞ்சுவிற்கு தன் எண்ணம் தான் தவறு என்று தோன்ற ஆரம்பித்தது.
      அவன் எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுகிறான். தான் தான் அவனை தப்பாக புரிந்து கொண்டோம் என்று தோன்ற ஏமாற்றத்தை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.
      திரும்பி வரும்போதும் அவள் கையைப்பிடித்த ராம்குமார் என்ன ஆச்சு வஞ்சு? ஏன் டல்லா இருக்கே? உடம்பு சரியில்லையா? என்று அக்கறையோடு கேட்க அதிலேயே வஞ்சுவிற்கு அவளையும் மீறி கண்ணீர் எட்டிப்பார்க்க இல்லை என்பது போல மறுத்துத் தலையாட்டினாள்.
      ராம்குமார் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்து ஹே! வேற ஏதும் ஆபிஸ்ல பிரச்சனையா? ஏன் அழுவுறே? என்று கேட்க வஞ்சு உண்மைக் காரணத்தை எப்படி சொல்லுவாள்?
கண்ணைத் துடைத்து தன்னை சமாளித்துக்கொண்டு
 
அதெல்லாம் ஒண்ணும் இல்ல குரு! இங்க எல்லாம் இப்ப நல்லா தான் பேசறாங்க.
ஆனா பார்ட்டிக்கு போறத நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு. நான் இதுவரை இந்த மாதிரி ஓட்டலுக்கெல்லாம் போனதே இல்ல. அதான் என்று வாய்க்கு வந்த காரணத்தை சொன்னாள்.
ராம்குமார் அவள் கவலையைக் கேட்டு அவள் தலையை பிடித்து ஆட்டி சிரித்தான்.
தேவையில்லாம இந்த மண்டைக்குள்ள நிறைய ஓடுது போல? இதுக்கெல்லாமா பயப்படுவாங்க? நல்லா ஜம்முனு ட்ரெஸ் பண்ணிக்கோ.
அங்க இருக்கவங்க கூட எல்லாம் ஜாலியாக சிரிச்சு பேசு.பில்லு கம்பனி தானே கட்டுது. நல்லா மூக்கு புடிக்க சாப்புடு. தட்ஸ் ஆல்!
அன்னிக்கி பார்ட்டி வேர்னு ஒரு ஆரஞ்சு கலர் லேஹெங்கா வாங்குனியே? அதைப் போடு! அந்த ஓடேல் என்விரோன்மேண்டுக்கு நல்லா செட் ஆகும்! என்று யோசனையும் சொன்னான்.
அதற்குள் அவர்கள் இடம் வந்து விட நின்று அவள் கையைப் பிடித்து அழுத்தி
 இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதுக்குள்ளே ரெடி ஆகு. இப்போவே ஓகே தான். வேணும்னா கான்பிடன்ஸ் பூஸ்ட் பண்ண ஒரு பேசியல் பண்ணிக்கோ! நல்லா ரிலாக்ஸ்டாக இருக்கும்.சரியா?
என்று சொன்னபோது அதில் நட்பு மட்டுமே இருப்பது அவளுக்கே தெரிந்தது.
அன்றைய இரவில் லாவண்யா அவள் புது தோற்றத்தைப் பற்றி ஆபிசில் எல்லோரும் என்ன சொன்னார்கள் என்று கேட்க அழைக்க அவளிடம் கூட வஞ்சு சரியாக பேசவில்லை. பேசும் மனநிலையில் இல்லை.
தலைவலி என்று சொல்லி போனை வைத்து விட்டாள். முகநூலில் நுழைந்து மீண்டும் ராம்குமாரின் அக்கௌன்ட் போய் அவன் படங்களை பார்த்தபடி இருந்து விட்டு
நீ என்னிடம் உணர்வது
நட்பாக இருந்தாலும்
நான் உன்னிடம் உணர்வது
அதற்கும் மேலே!
என்று போட அவள் எதிர்பார்த்தது போலவே கொஞ்ச நேரத்தில் ராம்குமாரிடம் இருந்து ஒரு லைக் மற்றும் ஒரு லவ் ஸ்மைலியும் வந்தது.
ஜென்டில்மேன் படத்தில் ஒரு டயலாக் வரும்!
சொல்ல ஆள் இல்லாம அசடு முறுக்குட்ட தன் மனசை சொல்லி இருக்கு.
அது போல சொல்ல ஆளில்லாமல் வஞ்சு முகநூலில் தன் மனதை பதிய வைக்க ஆரம்பித்தாள்.

Advertisement