Advertisement

அத்தியாயம் –5
ஷாப்பிங் செய்த அசதியில் வந்த உடனே படுத்துத் தூங்கிய வஞ்சுவிற்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது.  புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை.
ராம்குமார் பற்றிய எண்ணங்கள் ஒரு புறம். அவள் வாங்கிய உடைகள் எப்படி பொருந்துமோ என்ற பரபரப்பு ஒரு புறமாக தூங்க முடியவில்லை.
      எப்போதுமே அவள் அப்படித்தான். தீபாவளிக்கு அல்லது பிறந்தநாளுக்கு என்று புத்தாடை வாங்கினால் அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பாள்.
      சின்ன வயதில் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கிய நாளெல்லாம் உண்டு.
      சாதாரணமான ஒற்றை உடைக்கே அப்படி இருப்பவளுக்கு இப்போது தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றி அமைக்கக் கூடிய உடைகளை ஏகத்துக்கும் வாங்கி இருக்கும் போது எப்படி தூக்கம் வரும்?
            உடைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தவளால் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போக துள்ளி எழுந்தாள்.
அப்போது நேரம் மூன்று மணி தான் என்பதைக்கூட கண்டு கொள்ளாமல் விளக்கைப் போட்டு உடைகள் இருந்த கவர்களை ஒவ்வொன்றாய் எடுத்து பிரித்து வெளியே வைத்து அவற்றை தடவியவளின் கண்களில் பெருமிதம்.
தான் சம்பாதித்த பணத்தில் முதல்முதலாக வாங்கியவை.
பெருமை மின்ன அவற்றை பார்த்துக்கொண்டே இருந்தவள் பின்னால் அரவம் கேட்டு திரும்ப அங்கே அவளுடன் வீட்டை பகிர்ந்து வசிக்கும் சுஜி நின்றிருந்தாள்.
ஐயோ! இவ கிட்ட வசமா சிக்கிட்டேனே! ஓட்டுவாளே!
அவளைப் பார்த்ததும் நாக்கைக் கடித்துக் கொண்டாள் வஞ்சு.
ஆனாலும் மாட்டிக் கொண்டதால் வேறு வழியில்லாமல் ஹி ஹி என்று அசடு வழிந்தாள்.
மற்ற இருவரைப் போல இல்லாமல் இவள் கொஞ்சம் தன்மையாகப் பழகக்கூடியவள்  என்பதால் வஞ்சு இவளிடம் மட்டும் நன்றாக பேசுவாள்.
இவள் உடைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த சுஜி சிரித்து விட்டாள்.
ஏய்! என்னடி ஆச்சு உனக்கு? பாதி ராத்திரில எல்லா ட்ரெஸ்ஸயும் எடுத்துப்  போட்டுட்டு உக்காந்திருக்க? நாளைக்கு ஏதாவது விசேஷமா?
பாத்தா எல்லாம் புதுசு மாதிரி தெரியுது. எப்ப டி இதெல்லாம் வாங்குன? யார் கூட ஷாப்பிங் போன?
வஞ்சு பேசவே இடம் கொடுக்காமல் அவளே பேசிக்கொண்டு போனாள்.
நேற்று வஞ்சு வரும் போது சுஜி ஏற்கனவே தூங்கியிருந்ததால் அவளுக்கு வஞ்சு ராம்குமாருடன் வந்து இறங்கியது தெரியாது.
நேத்து தான் வாங்கினேன் சுஜி. நல்லா இருக்கா?
கவனமாக மற்ற கேள்விகளுக்கு பதில் தராமல் தவிர்த்து விட்டு உடைகளைப் பற்றி மட்டுமே பேசி அவள் கவனத்தை உடைகளின் பக்கம் திருப்ப சுஜியும் அங்கேயே உட்கார்ந்து கொண்டாள்.
நிதானமாக ஒவ்வொரு உடையாக எடுத்துப் பார்த்து ரசித்தபடி இருந்தவளுக்கு திடீரென முளைத்தது சந்தேகம்.
அது சரி! நீ இப்படி எல்லாம் போட மாட்டியே? இப்ப என்ன புதுசா? யார் இதெல்லாம் செலக்ட் பண்ணது?
அவளின் கவனம் முழுக்க உடைகளில் இருக்க வஞ்சுவின் முகத்தைப் பார்க்கவில்லை.
அது…அது…குரு தான் கூட்டிட்டு போனாரு….
டக்கென்று பொய் சொல்லி பழக்கம் இல்லாததால் வஞ்சு உண்மையை உளறி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
 கையில் இருந்த உடையை அப்படியே கீழே வைத்து விட்டு திரும்பிய சுஜி வஞ்சுவை சுவாரசியமாக பார்த்தாள்.
ம்ஹும்…இன்ட்ரஸ்டிங்…..என்ன டி நடக்குது…?
புருவத்தை உயர்த்திக் கேட்டவளிடம் ஆர்வம்.
ராம்குமார் வஞ்சுவின் சீனியர். இப்போது அவள் கூட வேலை பார்க்கிறான். அவளுக்கு பல வகையிலும் உதவி செய்கிறான். என்பது வரை சுஜிக்கு ஏற்கனவே தெரியும்.
அவள் அவனை குரு என்று சொல்வதும் தெரியும். ஆனால் இருவரும் ஷாப்பிங் போவதெல்லாம்….?
அவள் பார்வையிலேயே இந்த கேள்வி தெரிய வஞ்சுவின் முகத்தில் சிவப்பேறியது.
ராம்குமாரிடம் அவளுக்கு ஏற்படும் உணர்வுகளை ஆராய்ந்தாள்.
அது காதலா நட்பா இல்லை நன்றி உணர்ச்சியா? அவளுக்கே தெரியவில்லை.
அவளுடைய பெஸ்டீ லாவண்யா சென்னையில் இருக்க தன் மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் அந்த நேரத்தில் வஞ்சுவுக்கு இருந்தது.
 ராம்குமார் அவளிடம் ஏற்படுத்திய தாக்கம் அவளறியாமலே அவள் வார்த்தைகளில் வந்து விழுந்தது.
ஆனாலும் தனக்கே உறுதியாக தெரியாத உணர்வுகளை சொல்ல தயங்கி ராம்குமார் பற்றி பேசிப்பேசி சமாதானப்படுத்திக் கொண்டாள்.
  வஞ்சு ராம்குமாரின் பரிவு, அவனுடைய உதவும் மனப்பான்மை அவள் வேலையில் சேர்ந்ததில் இருந்து எப்படியெல்லாம் ராம்குமார் அவளுக்கு உதவினான்… இப்படி பொதுவாகத் தான் சொன்னாள்.
பேசப்பேச அவளுக்கே ராம்குமாரின் மேல் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை இன்னதென்று புரியாமல் ஒரு ஈர்ப்பு போல தான் இருந்தது. 
வஞ்சு தன் மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் சொல்ல சுஜிக்கு சுவாரசியமாகப் பொழுது போனது.
வஞ்சுவிற்கு அவள் மனம் புரியாவிட்டாலும் சுஜிக்கு அவள் பேச்சிலேயே மனதினுள் மறைந்திருந்த ஆசை புரிந்தது..
அதெல்லாம் சரி! கேர்ள்ஸ் பேஷன் பத்தி உங்க குருவுக்கு எப்படி அப்டூடேட்டா தெரியுது?
சுவாரஸ்யம் தேடி வந்த சுஜிக்கு வஞ்சுவின் பொதுவான பதில்கள் கொட்டாவியை வர வைக்க வம்புக்கு ஆரம்பித்தாள்.
அது…அது…குருவுக்கு தெரியாத விஷயமே இல்லை.
வஞ்சு சமாளிக்க சுஜி அட மக்கே! என்பது போல பார்த்தாள்.
உன் குரு இது போல மத்த பொண்ணுங்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்ணித் தருவாரோ?
சுஜி வஞ்சுவை கிண்டலாக கேட்டபடி குறும்பாய் சிரித்தாள். ஆனால் வஞ்சுவுக்கு தான் புரியவில்லை.
ம்… என்றபடி யோசித்த வஞ்சு அவங்க யார் கேட்டாலும் ஹெல்ப் பண்ணுவாங்க. ஆனா ட்ரெஸ்லாம் செலெக்ட் பண்ணிப் பார்த்ததில்லையே.. என்று வெள்ளந்தியாய் பதில் சொன்னாள்.
ஏய்! இன்னும் உனக்கு புரியலியா? குருவுக்கு உன் மேல ஐடியா இருக்கு போல?
ட்ரெஸ்லாம் கேர்ள் பிரெண்ட்சுக்கு தான் செலெக்ட் பண்ணுவாங்க. நீ வேணா பாரு. உன் குரு சீக்கிரமே உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவாரு!
அவள் கண்களை சிமிட்டி சொன்னதைக் கேட்டதும் வஞ்சுவின் கண்கள் கனவில் விரிந்தன.
அவளுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளது தான். அதுவே காதலா என்று அனுபவின்மையால் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க இப்போது சஜி சொன்னதைக் கேட்டு வஞ்சுவின் மனம் இன்னும் குழம்பியது.
ஆமா! சுஜி சொன்னது போல அன்னிக்கு கடைக்கு போன போது அந்த கடை சேல்ஸ் பொண்ணுங்க கூட கேட்டாங்களே?
 வஞ்சு யோசனையில் மூழ்க சுஜி அவள் தோளைத் தட்டினாள்.
புரியுதா? எனக்கென்னவோ குரு உனக்கு ரூட் விடற மாதிரி தோணுது…?
வந்த வேலை முடிந்தது என்று சுஜி ஓகே டி! எனக்கு தூக்கம் கண்ணைக் கட்டுது…நான் போய் படுக்கறேன்… என்று எழுந்து போக அவள் போவது கூட தெரியாமல் வஞ்சு தன் சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.
 காலையில் லேசாக வெளிச்சம் வரும்போதே அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் எழுந்தவள் மணி கூட பார்க்காமல் பெட்டியைத் திறந்து உடைகளை ஆராய்ந்தாள்.
வெகு நேரம் இதுவா அதுவா என்று குழம்பியவள் கடைசியில் ராம்குமார் நன்றாக இருக்கிறது என்று சொன்ன நீல நிற பென்சில் பிட் ஜீன்சும் வெளிர் மஞ்சள் நிறத்தில் பெரிய பெரிய ரோஜா பூக்கள் போட்ட டாப்ஸயும் ஒரு வழியாக ஓகே செய்தாள்.
      எல்லோரும் தலைக்கு மேல் போர்வை போர்த்தி உறங்கி  கொண்டிருக்க அப்போது தான் மணி நான்கே ஆவதை கூட உணராமல் குளித்து எடுத்து வைத்த உடைகளை அணிந்து கொண்டாள்.
      அணிந்திருந்த உடை கச்சிதமாகப் பொருந்தி அவள் ஒல்லியான உடல்வாகை அழகாக எடுத்துக் காட்ட அடுத்து அலங்காரம் ஆரம்பம்.
      கடையில் இருந்த மேக்கப் சேல்ஸ் பெண் சொல்லிக்கொடுத்தபடி பிரெஞ்சு ப்ளைட் போட்டுக் கொண்டாள்.
      முதலில் சரியாக வராவிட்டாலும் முயன்று செய்து கொண்டவளுக்கு கண்ணாடியைப் பார்க்கும்போது திருப்தியாக இருந்தது.
      முகத்திற்கு அவள் சொல்லிக் கொடுத்தபடி மெலிதாக பௌண்டேஷன் போட்டு கம்பக்டில் இருந்த பௌடரை போட அவள் நிறத்தை கூட்டிக் காட்டியது.
இமையோரம் காஜலால் மெலிதாக தீட்டி உதட்டுக்கு பொருத்தமான பெப்பி ரெட் லிப்ஸ்டிக் போட்டு அவள் சொன்ன மாதிரியே உதடுகளை சேர்த்து மடித்து அழுத்தினாள்.
நெற்றிக்கு வைத்திருப்பதே தெரியாமல் சின்னதாய் ஒரு கருப்பு போட்டும் வைத்துக் கொண்டாள்.
மேக்கப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு அதில் சிறு சிறு குறைகள் தெரியும் என்றாலும் அந்த குறைகளும் கூட அவளுக்கு அழகாக தான் இருந்தது.
பின்னலில் இருந்து பிசிறாய் முடிக்கற்றை வெளியே வந்து அவள் கழுத்தோரம் உறவாட கண்மை லேசாய் வழிந்து அதுவும் அவள் தோற்றத்தை மேம்படுத்தி தான் காட்டியது.
 கண்ணாடியைப் பார்த்த போது தன் தோற்றத்தில் தெரிந்த அழகான மாற்றம் அப்படி ஒரு உற்சாகத்தைத் தர தன்னைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு பிடித்தது.
இது தான் ராம்குமார் சொன்ன தன்னம்பிக்கையோ?

Advertisement