Advertisement

அவன் சொன்னால் வஞ்சு ஸ்விம் சூட்டில் கூட போவாள் என்பது அவனுக்கு தெரியாதே.
இருந்தாலும் அக்கறை அவனை உந்த ஒரு தயக்கத்தோடு ஆரம்பித்தான்.
வஞ்சு! கண்டிப்பா இந்த மாதிரி அவுட்டிங் போனா தான் உன் பர்சனாலிட்டி டிவலப் ஆகும். ஆனா…. என்று இழுத்தவன் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எப்படி ஆரம்பிக்கனு தெரியல? என்று முடிவை அவளிடமே விட்டு விட்டான்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் வேறு எதோ பேச அவன் எது சொன்னாலும் அவள் நன்மைக்கு தான் என்று  ஆணித்தரமாக நம்புபவள் எப்படி கேட்பாளோ அப்படி அவன் பேச்சில் கவனம் செலுத்தினாள்.
அவளிடம் அவனுக்குத் தயக்கமா? அவனுக்கு இல்லாத உரிமையா?
நீங்க என்ன சொன்னாலும் நான் கேப்பேன். உங்களுக்கு தெரியும் தானே குரு? தாராளமா சொல்லுங்க
அவள் பதில் தயக்கமே இல்லாமல் வந்தது.
அவன் சொல்லப்போவது அவளைப் பற்றிய குறை என்பதால் சுற்றி வளைத்தே பேச்சை ஆரம்பித்தான்.
வந்து… உன் சேலரி உனக்கு போதுமானதா இருக்கா? உங்க வீட்டுல என்ன சொல்றாங்க?
 அவளுக்கு வாங்க வசதியில்லாமல் ஒரு வேளை இப்படி இருக்கிறாளோ என்று ஒரு சந்தேகம். ஏற்கனவே பேச்சுவாக்கில் அவள் வீட்டைப் பற்றி சொல்லி இருக்கிறாள்.
 அவனே கூட நிறைய பேருக்கு பணம் கொடுத்திருக்கிறான். இருந்தாலும் அவள் உடைக்காக கொடுத்தால் வாங்குவாளா என்று அவனுக்கு ஒரு தயக்கம்.
உன் ட்ரெஸ்சிங் தான் உன்னை மத்தவங்க மதிக்காததுக்கு காரணம். என்று முகத்தில் அடித்தது போல எப்படி சொல்வது?
வீட்டின் தேவைக்காக இங்கே சிக்கனமாக இருக்கிறாளோ என்று தோன்ற அதனாலேயே தயங்கி தயங்கி கேட்டான்.
அவன் வருமானத்தைப் பற்றி கேட்டதும் முகமெல்லாம் மலர சந்தோஷமாக சொன்னாள்.
முதல் மாசம் சம்பளம் பிடித்தம் எல்லாம் போக நாப்பதாயிரம் வாங்குனேனா? அதை கொண்டு போய் வீட்டுல குடுத்ததும் அம்மா அப்பாக்கு ஒரே சந்தோசம்.
அம்மா கூட சொன்னாங்க. இத்தனை வருஷம் வேலை செஞ்சு உங்க அப்பாக்கு கூட இவ்வளவு சம்பளம் வந்ததில்லைடி. னு பெருமைபட்டாங்க.
அதோட நான் போகும் போது அவங்களுக்கு டிரஸ் பலகாரம் எல்லாம் வாங்கிட்டு போனேனா…? தம்பிக்கு ஒரே குஷி.
சம்பளம் கூட பதினைஞ்சாயிரம் வாங்கிட்டு அங்கே உனக்கு நிறைய செலவு இருக்கும். மிச்சத்தை நீனே வெச்சிக்கனு நான் எவ்வளவோ சொல்லியும் என் கிட்டே குடுத்துட்டாங்க.
தானே உழைத்து வாங்கிய முதல் சம்பளத்தின் பூரிப்பு அவள் முகத்தில் வெளிச்சமாக தெரிந்தது.
ஐடி கம்பெனியில் அடிச்சு கேட்டாலும் யாரும் சொல்லாத ரகசியம் அவரவர் வாங்கும் சம்பளம்.
அதை வெள்ளந்தியாய் தன்னிடம் சொல்பவளை புன்னகையோடு பார்த்தான்.
அவள் பேச்சில் காசுக்கு பஞ்சமில்லை என்று புரிய ராம்குமார் அவள் மனம் நோகாமல் எப்படி சொல்வது என்று யோசித்து பேச்சை தொடர்ந்தான்.
வஞ்சு! பார்ட்டிக்கி ட்ரெஸ் கோட் இருக்கு. அதுவும் இந்த மாதிரி பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இதெல்லாம் ரொம்ப பாப்பாங்க.
என்றவன் குரலை இன்னும் மிருதுவாக்கி
 இப்படி டிரஸ் பண்ணிட்டு போனா உனக்கே ரொம்ப ஆக்வர்டா இருக்கும்மா.. என்று சொல்ல வஞ்சு குனிந்து தன் உடையைப் பார்த்துக் கொண்டாள்.
பின் கவலை தோய்ந்த குரலில் இந்த ட்ரெஸ் நல்லா இல்லையா குரு? என்று வஞ்சு கேட்க ராம்குமார் மறுத்து தலையசைத்தான்.
இந்த ட்ரெஸ்ல ஒண்ணும் குறையில்லை. ஆனா காலத்துக்கு ஏத்த மாதிரி இல்லை..
அவள் மனதை நோகடிக்காமல் இதமாகவே சொல்ல முயன்றான்.
வேறு யாராவது சொல்லியிருந்தால் வஞ்சு எப்படி பதில் சொல்லியிருப்பாளோ?
 அவனுக்கிருக்கும் அவசர வேலையை விட்டுவிட்டு அக்கறையாக பதில் சொன்னவனை அவளால் எப்படி தப்பாக யோசிக்க முடியும்?
ஆனாலும் முகம் வாட ஆமா குரு! நீங்க சொல்றது சரிதான். மத்தவங்க ட்ரெஸ் பாக்கும் போது ஆசையா தான் இருக்கு. ஆனா எப்படி அது மாதிரி வாங்குறது எனக்கு தெரியலியே.
என்று கவலையோடு சொன்னவளை பார்த்து ஆதுரமாக புன்ன்னகைத்து இது என்ன பிரமாதம்? அவங்க கிட்டேயே கேக்க வேண்டியதுதான்.
என்று சொல்ல  வஞ்சுவின் முகம் இன்னும் வாடியது.
ஏற்கனவே என்னை இளப்பமா பாக்கறாங்க. அவங்க கிட்ட எப்படி போய் நான் கேக்க? அதைவிட இப்படியே இருந்துக்குவேன்..
பார்க்க எப்படி இருந்தாலும் எனக்கும் கௌரவம் இருக்கு என்பதை அவள் பதில் சொல்லாமல் சொன்னது.
 நான் யார்கிட்டயாவது உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்கவா?
ராம்குமார் இதமாகவே கேட்க வஞ்சு ஆர்வமாக அவன் முகம் பார்த்து நீங்க வரீங்களா? என்று கேட்டாள்.
ராம்குமார் அவள் கேள்வியில் அசந்து போனான்.
நானா?
வஞ்சுவுக்கு வழி கிடைத்த சந்தோஷத்தில் எதையும் கவனிக்கவில்லை.
ஆமா குரு. நீங்க தான்
என்று அழுத்தி சொன்னவள் அவனை ஏற இறங்க பார்த்து
நீங்க நல்லா மாடர்னா தானே போடறீங்க. உங்களுக்கும் எல்லாம் தெரியும் தானே?
 நீங்க கூட்டிட்டு போறதா இருந்தா வரேன். அப்ப தான் பார்ட்டிக்கும் போவேன்.
நீங்க தானே சொன்னீங்க? நான் நத்தையாட்டம் ஒடுங்காம எல்லார் கிட்டயும் நல்லா பேசிப் பழகணும்னு? அப்ப நீங்க தான் எனக்கு இதையும் செய்யணும்.ப்ளீஸ்…. ப்ளீஸ்…..
என்று தன்னிடம் கெஞ்சியவளிடம் மறுக்க மனம் வரவில்லை ராம்குமாருக்கு.
அவன் அக்காவோடு போய் உடைகள் அவளுக்கு வாங்கியிருக்கிறான் தான்.
அந்த அனுபவத்தை வைத்து சமாளிப்போம் என்று தயக்கத்தோடு தலையாட்ட வஞ்சுவின் முகத்தில் சந்தோசம் ஜொலித்தது.
அதற்கு மேல் அவனை பேச விடாமல் குரு! அப்ப இன்னிக்கி ஈவினிங் போறோம். அதுக்குள்ளே வேலைய முடிச்சிடுங்க… என்று உரிமையாக சொல்லிவிட்டு ஓடியவளை சின்ன சிரிப்போடு பார்த்தபடி
சின்ன பேக்கட்! நீ வர வர ரொம்ப வாலாகிட்டே.. என்று  முணுமுணுத்து விட்டு தன் வேலையை வேகமாக முடிக்க ஆரம்பித்தான் ராம்குமார்.
சொன்னபடி ஆறு மணிக்கு சரியாக வந்துவிட்டாள் வஞ்சு. அவனை துணைத்து எடுத்து கிளம்ப வைக்க ரஞ்சித்தும் அவன் வரவுக்காக காத்திருந்தான்.
இருவரும் ஒன்றாக தான் தங்கியிருந்தனர்.
ராம்குமார் வஞ்சுவோடு ஷாப்பிங் போவதாக சொன்னதும் ரஞ்சித்தின் பார்வையே மாறியது.
என்னடா நடக்குது இங்கே என்பது போல நக்கலாக பார்த்தவன் பேசினால் கதை கந்தல் தான் என்று ராம்குமாருக்கு நன்றாகத் தெரியும்.
டேய்! எதுவா இருந்தாலும் நான் ரூமுக்கு வந்த பிறகு பேசிக்கலாம். சரியா? இப்ப அடக்கி வாசி. என்று அவன் காதில் முணுமுணுத்து கெஞ்சுவது போல பார்த்தான்.
பொழைச்சிப் போ! என்று கண்ணாலேயே பதில் சொன்ன ரஞ்சித் அப்படியும் பொறுக்க முடியாமல் என்ஜாய்! என்று சொல்லி கண் சிமிட்டி விட்டே கிளம்பினான்.
ராம்குமாருக்கு அவன் கிண்டல் எல்லாம் சாதாரணம். ஆனால் ஏதாவது சொல்லப் போய் வஞ்சு வருத்தப்பட போகிறாளே என்று தான் அவனை தடுத்ததே.
அவனைப் பொறுத்தவரை இதுவும் ஒரு உதவி. அவ்வளவு தான். வஞ்சுவின் அப்பாவித்தனத்தில் அவள் மேல் அவனுக்கு ஒரு பரிவு இருந்தது.
அதற்காகத் தான் அவன் ஒத்துகொண்டதே! இதெல்லாம் ரஞ்சித்திடம் சொன்னால் அவன் புரிந்து கொள்ள மாட்டான்.
வேறு மாதிரி தான் இதை அர்த்தம் எடுப்பான் என்று தெரியும். இது முதல் முறை கிடையாது.
இதற்கு முன்பும் அவன் எந்தப் பெண்ணோடு பேசினாலும் ரஞ்சித் இப்படி கலாய்ப்பது அவனுக்கு பழகிப் போன ஒன்று.
அதனால் ரஞ்சித்தின் பார்வையோ நக்கலோ ராம்குமார் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
அவனை இன்னொரு நண்பனோடு அனுப்பி விட்டதால் ராம்குமார் தன் பைக்கில் வஞ்சுவை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
அது ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் ஒட்டகம் போல் பின்பக்கம் உயர்ந்து முன்னால் சரிந்து இருந்தது.
வஞ்சுவிற்கு முன்னே பின்னே பைக்கில் போய் அனுபவம் இல்லை என்பதால் அவன் பைக்கில் இரு பக்கமும் கால் போட்டு ஏறிக் கொண்டு இருவருக்கும் இடையே அவள் பையை வைத்தவள் அவன் தோளை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
 
அவள் முன்னெச்சரிக்கையை கவனித்த ராம்குமார் இதிலெல்லாம் சின்ன பேக்கட் விவரம் தான் என்று சிரித்துக் கொண்டாலும் அவள் மேல் அவனுக்கிருந்த மதிப்பு கூடியது.
ராம்குமார் பைக்கை கிளப்ப வஞ்சுவின் முகத்தில் ஒரே உற்சாகம்.
ராம்குமார் அவளை ஒரு டிசைனர் போட்டிக் அழைத்துக்கொண்டு போனான்.
அவன் தோழிகள் அங்கு உடைகள் நன்றாக இருக்கும் என்று முன்பு சொன்ன ஞாபகம்.
அங்கு போனதும் வஞ்சு அதன் ஆடம்பரமான தோற்றத்தில் அசந்து போய் நிற்க ராம்குமார் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனான்.
அங்கே அல்ட்ரா மாடர்னாக உடை அணிந்திருந்த ஒருத்தி அவர்களைப் பார்த்ததும் எஸ்! உங்களுக்கு என்ன வேணும்? என்று அணுகினாள்.
ராம்குமார் வஞ்சுவைக் காட்டி சரளமான ஆங்கிலத்தில் இவங்களுக்கு பார்ட்டி டிரஸ், ஆபீஸ் வேர் எல்லாம் வேணும். என்று கேட்க அந்த பெண் வஞ்சுவை கூர்ந்து பார்க்க அவள் பார்வையில் மிரண்ட வஞ்சு ராம்குமாரை நெருங்கி நின்றாள்.
கம் என்று கை காட்டி விட்டு அவள் முன்னே நடக்க வஞ்சு ராம்குமாரின் கையை சுரண்டினாள்.
குரு! இங்க வெலை அதிகமா இருக்குமோ? என்று கவலையாய் மென்குரலில் கேட்க ராம்குமார் அதை விட கிசுகிசுப்பான குரலில் பதில் சொன்னான்.
பாக்க தான் அப்படித் தெரியுது வஞ்சு. இங்க ரொம்ப ரீசனபள் விலை தான்.
இதுக்கு முன்ன வாங்கின பிரெண்ட்ஸ் சொல்லிருக்காங்க. நம்ம கலீக் நிறைய பேர் இங்க ரெகுலர் கஸ்டமர்.
அவன் பதிலில் சமாதானமான வஞ்சு அதன் பிறகு கடையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளின் ஒல்லியான உடல்வாகுக்கு பொருத்தமாக பென்சில் பிட் டிசைனர் ஜீன்ஸ், ஸ்கர்ட், மிடி அவற்றுக்கு பொருத்தமான ப்ளௌஸ் குர்தி என அவள் கொடுக்க எல்லாமே வஞ்சுவிற்கு அழகாக பொருந்தியது.
ஒவ்வொன்றிலும் ஒன்றை அணிந்து வந்து ராம்குமாரின் ஒப்புதலுக்காக வஞ்சு அவன் முகத்தைப் பார்த்திருந்தாள்.
அவன் சரி என்று சொல்லும் உடைகளை மட்டும் ஓகே செய்தாள்.
கொஞ்ச நேரம் அவர்கள் பழக்கத்தை கவனித்த சேல்ஸ் பெண் அவள் அடுத்த உடையைப் போடப் போகும் போது ராம்குமாரிடம் தன் கருத்தை சொல்லி விட்டாள்.
இந்த ட்ரெஸ் இன்னும் நல்லா எடுக்கணும்னா உங்க கேர்ள் பிரெண்ட் அவங்க ஹேர் ஸ்டைல் அச்செச்சரீஸ் கூட மாத்தனும். இப்படியே போட்டா அவ்வளவு நல்லா இருக்காது.
நீங்க விரும்பினா போர்த் ப்ளோர்ல சாண்டல்ஸ், பேக்ஸ், மேக்கப் கிட் எல்லாம் இருக்கு.
அங்கேயே அட்வைஸ் பண்ண மேக்கப் எக்ஸ்பெர்ட்ஸ் இருக்காங்க. அவங்க எது நல்லா இருக்கும்னு அட்வைஸ் தருவாங்க. அதுக்கு தனி சார்ஜ் எதுவும் நாங்க வாங்கறதில்லை.
ராம்குமார் சொன்னால் தான் வஞ்சு எதுவும் வாங்குவாள் என்று அவளுக்கு கூட தெரிந்திருந்தது.
ராம்குமார் நினைத்ததையே அந்த பெண்ணும் சொன்னதால் வஞ்சு ஓரளவு உடைகள் வாங்கி முடித்ததும் ராம்குமார் அவளை நாலாவது தளத்திற்கு அழைத்துப் போனான்.
எதற்கு என்று கூட கேட்காமல் நாய்க்குட்டி போல் வஞ்சு அவன் பின்னால் சென்றாள்.
ராம்குமார் அவளை அழைத்துக் கொண்டு போய் அந்த மேக்கப் பெண்ணிடம்  விட்டவன் அந்த பெண்ணிடம் மீண்டும் ஆங்கிலத்தில்
சிம்பிள் மேக்கப் டிப்ஸ் அப்புறம் இந்த லாங் ஹேர் கட் பண்ணாம ஈஸியா தானே பண்ணிக்கிற மாதிரி ஹேர் ஸ்டைல் சொல்லிக்குடுங்க. அதுக்கு வேண்டிய மேக்கப் திங்க்ஸ் குடுங்க.
 என்று தானே அவள் தேவையை சொல்லி விட்டவன் வஞ்சுவிடம் நீயும் கேட்டுக்கோ. இதோ வந்திடறேன்.. என்று அங்கிருந்து வெளியே நடந்தான்.
அந்த மாதிரி கடைகளுக்கு எல்லாம் போய் பழக்கம் இல்லாததால் வஞ்சுவின் கண்களில் ஒரு மிரட்சி தெரிய அவனும் கிளம்ப எட்டி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் வஞ்சு.
இங்கே தான் பக்கத்தில் இருப்பேன் வஞ்சு. நான் இங்க நின்னா அவங்களுக்கு ஆக்வர்டா இருக்கும். நல்லா கவனிச்சி கத்துக்கோ… என்று அவள் கையைத்தட்டி சமாதானம் சொன்னவன் கண்களால் தைரியம் கொடுத்து வெளியே நடந்தான்.
அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற வஞ்சுவிடம் அந்த கடைப்பெண் ஹி இஸ் சோ ஸ்வீட்.. என்று சொல்ல வஞ்சு பெருமையாய் புன்னகைத்துக் கொண்டாள்.
…இஸ் ஹி யுவர் லவ்வர்? என்று அவள் ஆர்வமாய் மேலும் நோண்ட வஞ்சு அவள் கேள்வியில் திகைத்துப் போனாள்.
பதட்டத்துடன் நோ…நோ..! ஹி இஸ் ஜஸ்ட் அ பிரெண்ட்…. என்று விட்டு மௌனமாகி விட அந்த பெண் அவள் விருப்பமின்மையை புரிந்து கொண்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
எளிமையான ஹேர் ஸ்டைல், மேக்கப் எப்படி செய்வது என்று காண்பித்து அதற்கு தேவையான மேக்கப் பொருட்களோடு கிளிப் பேண்ட் இன்னும் மற்ற தேவைகளையும் எடுத்துக் காட்ட வஞ்சு எல்லாம் வாங்கி முடிக்க ஒரு மணி நேரம் ஆனது.
அவ்வளவு நேரமும் அந்த பெண் கேட்ட கேள்வியில் அவள் மனம் லயித்து அதிலேயே நின்று விட அரைகுறை கவனத்தோடு அவள் காட்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வாசலுக்கு  வஞ்சு வரவும் ராம்குமார் வரவும் சரியாக இருந்தது.
எல்லாம் வாங்கிட்டியா? போலாமா வஞ்சு? என்று கேட்க வஞ்சு சந்தோஷமாக தலையாட்டினாள்.
அவளை அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டவன் ஒரு கவரை அவளிடம் கொடுத்தான்.
என்ன என்பது போல அவள் பார்க்க நைட்  டின்னர். என்றவன் மேலே நிற்காமல் பாய் வஞ்சு என்று கிளம்பி விட்டான்.
அவன் போன பிறகும் வெகு நேரம் அங்கேயே வஞ்சு அவன் போன வழியை பார்த்துக்கொண்டு நின்றது அவனுக்கு எப்படித் தெரியும்?
அவன் வாங்கி வந்த உணவை யாருக்கும் தாராமல் அவளே சாப்பிட்டதும் தெரியாதே.
சாப்பிட்டு தன் அறைக்கு வந்தவள் முகநூலில் அவன் பக்கத்திற்கு போய் அவனுடைய புகைப்படங்களை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்ததும் தான்.
அதில் லாவண்யாவிடம் பேசக் கூட மறந்ததும் தான்.
எங்கிருந்தோ புயலாய் வந்து சுவாசமாய் என் வாழ்விற்குள் சத்தம் இல்லாமல் ஊடுருவினாய். எப்போது என் யாதுமாவாய்?
என்று முகநூலில் பதிவிட்டு விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ராம்குமாரிடம் இருந்து கமென்ட் வந்தது.
நைஸ் பொயம்.
அவன் கமெண்டை பார்த்து வஞ்சுவிற்கு கோபம் வரவில்லை. புன்னகையோடு தேங்க்ஸ் குரு என்றவள் அப்படியே உறங்கி விட்டாள்.

Advertisement