Advertisement

அத்தியாயம் –4
ராம்குமாரும் அவளும் ஒரே தளத்தில் தான் வேலை செய்வதால் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர்.
ராம்குமார் சொன்னதற்காகவே அவன் தினமும் ரஞ்சித் மற்ற நண்பர்களை சந்திக்கப் போகும்போது கூடவே இவளும் போனாள்.
தானாக பேசவில்லை என்றாலும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வாள். மீதி நேரம் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.
அன்றாடம் வரும் சோதனைகளை அவள் சகித்துக்கொள்ள ராம்குமாரோடு நிற்கும் அந்த சில நிமிடங்கள் தான் உதவியாக இருந்தது.
அதற்கு தினமும் முகநூலில் அவள் போடும் போஸ்டே சாட்சி. நட்பை பற்றியும் அன்பைப் பற்றியும் கூகுளில் தேடித் தேடி போடும் எல்லா போஸ்டிலும் ராம்குமாரும் லாவண்யாவும் டேக் செய்யப் பட்டு இருந்தனர்.
ராம்குமார் அதை நட்புக்கான போஸ்டாக மட்டுமே எடுக்க அவனுக்கு இன்னும் வஞ்சு மனதில் அவன் ஏற்படுத்திய தாக்கம் புரியவில்லை.
ஏன் வஞ்சுவுக்கும் கூட அது புரியவில்லை.
முதல் இரண்டு நாட்கள் தாக்கு பிடித்து பார்த்த வஞ்சுவால் அவள் டீம் லீடர் ரவியின் அட்டுழியத்தை அதற்கு மேல் சகிக்க முடியாமல் போனது.
அவள் அவனிடம் பேசப் போனால் அவளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து நிற்க வைத்தே அலைக்கழிப்பான்.
ப்ரொஜெக்டில் இருப்பதிலேயே உதவாத வேலையை அவளுக்கு கொடுத்து விட்டு அதிலும் குறை சொன்னான்.
அதுவும் அவள் என்ன செய்தாள் என்று பார்க்கவே இல்லாமல் குறை சொன்னதை தான் அவளால் தாங்க முடியவில்லை.
அவள் எதுவும் உருப்படியாக செய்திருப்பாள் என்றே அவனுக்கு நம்பிக்கை இல்லை.
ராம்குமாரின் அறிவுரையை பிடிவாதமாக நினைவில் வைத்துக் கொண்டு பல்லைக் கடித்து பொறுத்துப் போனாள் வஞ்சு.
ப்ராஜெக்ட் வேலையை எடுத்துப் போட்டு செய்தாள். மற்றவர்கள் பேசவில்லை என்றாலும் தானே போய் பேசினாள். அதற்காக யாரும் அவளிடம் இளகி விடவில்லை.
கல்லூரியில் போலவே அவளிடம் வேலை வாங்கிக் கொண்டு அதன் பிறகு முகத்தை திருப்பிக் கொண்டு தான் சென்றனர். அதையும் பொறுத்துப் போனாள்.
 அப்போதும் ரவி கிளையன்ட் மீட்டிங்கிலேயே அவளை மட்டம் தட்டிப் பேச அவளால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
என்ன செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது என்று சலிப்பு வர பேசாமல் வேலையை விட்டு விட்டு போவோமா என்று முதல் நாள் போலவே தோன்ற ஆரம்பித்து விட்டது.
அதனால் அவள் முகவாட்டத்தைப் பார்த்து ராம்குமார் கேட்ட போது அவளால் மறைக்க முடியவில்லை.
அவள் வந்த அன்று அவன் சொன்ன எதுவாயிருந்தாலும் என் கிட்ட தயங்காமல் கேளு என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்திக் கொண்டாள்.
 டீம் லீடரும் மற்றவர்களும் நடந்து கொள்ளும் மட்டமான விதத்தை சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்தது.
அவர்கள் பேசிய போது எல்லாம் மறைக்க முடிந்த அழுகை அவன் எதிரில் தடையின்றி வந்தது.
சொல்லிவிட்டு மூக்கை உறிஞ்சியபடி நின்ற வஞ்சு அவனுக்கு கல்லூரியில் பார்த்த வஞ்சுவாக தான் தெரிந்தாள்.
இதற்கு ஆறுதலோ அறிவுரையோ பயனில்லை என்று உணர்ந்த ராம்குமார் அவள் தோளில் தட்டி விட்டு விடு வஞ்சு! நான் பாத்துக்கறேன்! என்று அவளோடு அவள் இடத்திற்கு போனான்.
ராம்குமாருக்கு அவள் தோற்றம் தான் அவளுக்கு எதிரி என்று நன்றாகவே தெரிந்தது.
திறமையை விட அல்ட்ரா மாடர்ன் தோற்றமும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக பந்தா காட்டுவது தான் ஐடி கம்பெனியில் தாக்குப்பிடிக்க முக்கிய தேவை என்று அறிந்தவன் அவன்.
ஆனால் அதை வஞ்சுவிடம் சொல்ல ஒரு தயக்கம். எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று யோசனை.
அதனால் இதை வேறு வழியில் அணுக நினைத்தான். 
அவளைத் தனியாக பார்த்த போது அவ்வளவு கேவலமாக திட்டிய ரவி இப்போது ராம்குமாரோடு அவனிடம் போன போதும் அவன் பார்வையில் முதலில் ஏளனம் தான்.
அடுத்து சிபாரிசோட வந்துடுச்சா? இதுங்களுக்கெல்லாம் இதே பொழப்பு!
மனதில் நினைப்பதை முகம் அப்படியே காட்டியது. அதை மறைக்கவும் அவன் தயாராக இல்லை.
ராம்குமார் அதை கவனித்தான் தான். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
எல்லா இடத்திலும் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள் என்று அவனுக்கு தெரியாதா?
அதிலும் அவன் ஒரு சொணை என்று ராம்குமார் ஏற்கனவே அறிவான்.
இவன் நினைத்தால் வஞ்சுவின் வேலையையே காலி செய்ய முடியும் என்பதும் தெரியும்.
மேலிடத்தில் அவன் பேசுவது தான் எடுபடும். வேலை செய்வது முன்னே பின்னே இருந்தாலும் பேச்சு சாமர்த்தியம் இங்கே ரொம்பவே முக்கியம் என்று இந்த மூன்று ஆண்டுகளில் ராம்குமார் நன்றாக கற்றிருந்தான்.
ராம்குமார் வஞ்சுவிடம் அவள் இடத்திற்கு போகச் சொல்லி தலையாட்டிவிட்டு ரவியை நோக்கி போனான்.
ஆடுற மாட்டை ஆடிக் கற! பாடுற மாட்டை பாடிக் கற!
என்று அன்றே சொன்ன வார்த்தைகள் எதற்கு இருக்கிறது?
அதில் மனதில் நினைப்பதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்பது முதல் பாடம்.
அதனால் அவன் ஏளனத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சிரித்த முகத்துடன் அவனை நெருங்கி
ஹாய் ரவி! எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கள். கலக்கறீங்களாம்? அடுத்த ப்ரோமோஷன் லிஸ்ட்ல உங்க பேர் தான் முதல்ல அடிபடுது போல?
அவனின் வீக் பாய்ன்ட் தெரிந்து அதில் அடித்தான் ராம்குமார்.
ரவிக்கு இதற்கடுத்த பதவியான அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவியின் மேல் ஒரு கண் இருக்கிறது என்று ராம்குமாருக்கு நன்றாகவே தெரியும்.
யாருக்குத் தான் முகஸ்துதி பிடிக்காது?
ரவி அவன் பேச்சில் மயங்கினாலும் கவனத்தோடு அவனைப் பார்த்தான்.
இவன் ஏன் இப்ப தேடி வந்து நம்ம கிட்ட இதைப் பத்தி பேசறான்?
இந்த முறை அப்ப்ரைசல் வேற மாதிரி செய்யப் போறாங்களாம். அதாவது டீம் லீடர் அனுபவம், வேலை செய்ற திறமை இதை மட்டும் பாக்காம டீம் மெம்பெர்ஸ் கிட்ட பீட்பேக் வாங்கப் போறாங்களாம். உங்களுக்கு பிரச்சனையே இல்லை? நீங்க தான் டீம் மெம்பெர்ஸ் கூட க்ளோஸ் ஆச்சே!
உண்மையாகவே தான் அரசல்புரசலாக கேட்டதை இதற்கு பயன்படுத்திக் கொண்டான் ராம்குமார்.
மற்ற நாடுகளில் சில கம்பனிகளில் இது வழக்கத்தில் உண்டு.   ராம்குமாருக்கு இது இப்போது அவர்கள் கம்பனியிலும் வரப்போவது அவனுக்கிருந்த தொடர்புகள் மூலம் முன் கூட்டியே தெரிந்திருந்தது.
ரவி ஒரு இறுகிய புன்னகையோடு அதற்கு தலையை மட்டுமே அசைக்க ராம்குமார் சம்பந்தமேயில்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவினான்.
ரவி! அந்த கனடா ப்ராஜெக்ட் இப்ப பண்ணிட்டு இருக்கிங்களே? அதுக்கு coffeescript, node.js ல கோட் பண்ணணுமாமே? அதுல மிஸ் வஞ்சுளவல்லி ப்ராஜெக்ட் பண்ணியிருக்காங்க. நல்லா தெரியுமாம்.
அவங்கள யூஸ் பண்ணிக்கிட்டா இந்த ப்ராஜெக்ட் ஈஸியா முடிச்சிடலாம். ஜாவா ஸ்கிரிப்ட்டில் எல்லோரும் பண்ணிடுவாங்க. ஆனா இதுல இன்னும் நல்ல ஸ்க்ரீன் டிசைன் பண்ணலாம்.
ஆனால் வந்தவன் பேச்சில் இருந்த தொடர்பு ரவிக்கு நன்றாகவே புரிந்தது. உண்மையில் அதில் தேர்ச்சி உள்ளவர்களை அவன் தேடிக் கொண்டிருந்தான் என்பது தான் உண்மை.
 ‘நீ ஆசைப்பட்டது கிடைக்கணும்னா வஞ்சுவும் உனக்கு நல்ல பீட்பேக் தரணும். அதோட ப்ரோஜெக்ட்கும் உனக்கு அவள் உதவி தேவை. அதனால இனி அவ கிட்ட உன் சேட்டைய அடக்கி வை.
ராம்குமார் சொன்னதில் இருந்த செய்தி ரவிக்கு நன்றாகவே புரிந்தது. அவன் பின்புலம் தெரிந்ததால் அவன் சொன்னது உண்மையாக தான் இருக்கும் என்று ரவிக்கு தெரியும்.
உண்மையில் அந்த நேரத்தில் அதற்கு யார் கிடைப்பார்கள் என்று அவன் மண்டையை பிய்த்துக்கொண்டு இருந்தான். அதுவும் டெட்லைன் வேறு நெருங்கி வர டென்ஷன் எகிறியது
மற்ற அனைவரையும் இதை செய்ய முடியுமா என்று கேட்டவனுக்கு வஞ்சுவைக் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.
இதுக்கெல்லாம் C யே உருப்படியா தெரியாது. எங்கருந்து இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்க போகுது?
என்ற அலட்சியம் தான் காரணம்.
வஞ்சுவிற்கு coffee script, node.js தெரியும் என்பதே அவனுக்கு இப்போது தான் தெரிய ரவிக்கு தன் வேலை உயர்வு முக்கியமாக தெரிந்தது.
.தேடி வந்து விஷயம் சொன்னதுக்கு தேங்க்ஸ் ப்ரோ! என்றவன் வஞ்சுவிடம் அதற்கு பிறகு ஒழுங்காக நடந்து கொண்டான்.
ரவி வஞ்சுவிடம் ஒரு சின்ன module கொடுத்து சோதனை செய்ய அவள் செய்திருந்த வேலை நேர்த்தியில் அசந்தே போயிருந்தான்.
அதன் பிறகு அவன் வஞ்சுவிடம் நடந்து கொண்ட விதமே தலைகீழாக மாறியிருந்தது.
அவர்களின் கனடா ப்ராஜெக்டிற்கு கிளையன்டிடம் இருந்து பாராட்டுக்கள் குவிய மற்றவர்களின் பார்வையும் மாறி இருந்தது.
 அவள் திறமையை பார்த்து அசந்து போய் தங்களுக்கு உதவி தேவையென்றால் இப்போது வஞ்சுவிடம் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இதற்கெல்லாம் ராம்குமார் தான் காரணம் என்று வஞ்சுவிற்கு நன்றாகவே புரிந்தது. அன்று நேராகவே அவளிடம் கடுப்பாக இருந்த பாலாஜியை அவன் கையாண்ட விதத்தை தான் அவளே பார்த்தாளே!
அவள் கோள் சொன்னாள் என்று தெரியாத மாதிரி அதே நேரம் அவர்களை சந்தோஷமாகவே அவன் எதிர்பார்ப்பின்படி நடத்திக் கொள்ளும் திறமை அவனிடம் உண்டு என்று அறிவாள்.
அப்படித்தான் இங்கும் ஏதாவது செய்திருப்பான் என்று நினைத்தவள் அவனிடம் இன்னும் நெருக்கமாக உணர்ந்தாள்.
நாட்கள் ஓட வஞ்சு வேலையில் சேர்ந்து இப்போது ஒரு மாதம் ஆகியிருந்தது.இப்போது சூழல் சுமுகமாக மாறியதில் வஞ்சுவிற்கும் வேலை மிகவும் பிடித்துப் போனது.
இருவரும் பேசுவது பெரும்பாலும் பொதுவான விஷயங்களாக இருந்தாலும் வஞ்சுவிற்கு ராம்குமாரிடம் முன்பிருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் இப்போது இல்லை
 இந்த ஒரு மாதத்தில் இருவரும் இன்னும் நெருங்கி இருந்தனர். அவளுக்கு என்ன தேவை என்றாலும் உரிமையோடு அவனிடம் போய் நின்றாள்.
அவள் தங்கியிருந்த பிஜி ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்று அவனிடம் சொன்ன போதும் அவனே விசாரித்து அவளை வீடெடுத்து தங்கியிருந்த இரண்டு பெண்களோடு சேர்த்து விட்டான்.
       மறுநாள் ப்ராஜெக்ட் முடிக்க கடைசி நாள் என்பதால் அன்று ராம்குமார் மும்முரமாக கம்ப்யூட்டரில் தலையை விட்டுக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான்.
      அப்போது வஞ்சு அவனைத் தேடி வந்தாள். வஞ்சுவிற்கு அவனிடம் முக்கியமான ஆலோசனை வேறு கேட்க வேண்டியிருந்தது. இடைவெளை வரை காத்திருக்க பொறுமை இல்லை.
அவள் சற்றுத் தள்ளி வரும்போதே ராம்குமார் அவளை கவனித்து விட்டிருந்தான். அவள் நடையிலேயே ஒரு துள்ளல் தெரிந்தது.
      கல்லூரியில் சேர்ந்த அன்று இருந்தது போலவே இன்னும் அவள் தோற்றம் இருந்தது.
      நீ மாறவே இல்லை சின்ன பேக்கட் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
வஞ்சுவும் சந்தோஷமாக அவனைப் பார்த்து சிரித்து நேராகவே விஷயத்துக்கு வந்தாள்.
குரு! ஒரு முக்கியமான விஷயம். உங்க அட்வைஸ் வேணும்…. என்று ஆரம்பித்தவள் அவன் பிசியாக இருக்கிறானா என்றெல்லாம் பார்க்காமல் பரபரப்பாக மேலே தொடர்ந்தாள்.
 அந்த கனடா ப்ரொஜெக்ட்ல நான் பண்ண பார்ட் சூப்பரா இருக்குனு கிளைண்ட் கம்பனில சொன்னாங்க இல்ல?
அதுக்கு செலப்ரேட் பண்ண இந்த சண்டே ஸ்டார் ஹோட்டல்ல டின்னெர் அரேன்ஜ் பண்ணி இருக்காங்க…என்னையும் கூப்பிட்டு இருக்காங்க தெரியுமா?
அவள் முகத்தில் சொல்லும் போதே பெருமை ஜொலித்தது.
ராம்குமாருக்கு அவள் பரபரப்பு சிரிப்பாக இருந்தது. இதெல்லாம் சாதாரணமாக நடக்கும் ஒன்று.
இந்த மூன்று ஆண்டுகளில் இது போல ஏகப்பட்டதும் பார்த்திருக்கிறான் என்பதால் அவள் குதூகலம் சுவாரசியமாக இருந்தது.
அவன் எதுவும் பேசாமல் சிரித்தபடி அவளைப் பார்க்க வஞ்சு தன் பெருமையில் மூழ்கி இருந்தவள் மேலே அவளே தொடர்ந்தாள்.
டின்னர் ஆரம்பிக்கவே எட்டு மணி ஆகிடுமாம். முடிய ராத்திரி ஒண்ணு ரெண்டு கூட ஆகும்னு சொல்றாங்க. அவ்வளவு லேட்டா எல்லாம் வெளிய இருந்து எனக்கு பழக்கம் இல்லை. நான் வரலன்னு சொல்லிடவா? அதுல ஒண்ணும் தப்பில்லையே? நீங்க என்ன சொல்றீங்க குரு?
அவள் குரலில் ஒரு பக்கம் போக வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் எப்படி இருக்குமோ என்று தயக்கமும் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள்.
எதுவாக இருந்தாலும் ராம்குமார் பார்த்துக் கொள்வான் என்பதோடு அவன் சொல்லும் எந்த யோசனையும் சரியாக இருக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவளிடம் இருந்தது.
ராம்குமார் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிமிர்ந்து அவள் தோற்றத்தை நிதானமாக பார்த்தான்.
நீண்ட முடியை அதே போல் நெளிநெளியாய் தெரிய விரித்து விட்டிருந்தாள். வீட்டில் இறுக்கமாக பின்னலிட்டு இருப்பாள் என்று தோன்றியது.
மை தீட்டாத விழிகள். பவுடர் பார்க்காத முகம். இதில் மேக்கப் எங்கே? வெளிர் சிவப்பாக இருந்த உதடுகள் எனக்கு லிப்ஸ்டிக் என்றால் என்னவென்றே தெரியாது என்றன.
காதில் கல்லூரியில் படிக்கும்போது அணிந்திருந்த அதே வளையம். இப்போது வெளுத்து சாயம் போனது நன்றாகவே தெரிந்தது.
வெளிர் நீல சுடிதார் இறுக்கிப் பிடிக்காமல் சற்றே லூசாக தான் இருந்தது. துப்பட்டா முன்பு போல பின் குத்தவில்லையே தவிர இரு பக்கமும் போட்டிருந்தாள்.
காலில் அணிந்திருந்த செருப்பு பிளாட்பாரத்தில் வாங்கியது என்று நன்றாகவே தெரிந்தது.
அவளைப் பார்க்க பார்க்க ஏன் யாருமே அவளை மதிப்பதில்லை என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
உடைக்கு தரும் மதிப்பை மனிதருக்கு தராத காலம் இப்போது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இங்கு வந்து ஒரு மாதம் ஆகி இத்தனை பெண்களைப் பார்த்த பிறகும் அவள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறாள் என்று அவனுக்கு வியப்பு.
அவன் அறிந்த பெண்கள் எல்லாம் ஷாப்பிங் பிரியர்கள்; அலங்காரம் செய்து கொள்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.
இவள் மட்டும் எப்படி தப்பி இருக்கிறாள் என்று ஆச்சரியம் அவனுக்கு.
தோற்றத்தில் கவனம் செலுத்துவது அழகுணர்ச்சிக்காக என்று மட்டும் இல்லை. தன்னம்பிக்கை தரவும் தான். இதை எப்படி அவளிடம் சொல்வது என்று யோசனையுடன் பார்த்தான்.
என்ன தான் ஜூனியர் என்றாலும் இப்போது நல்ல பழக்கம் என்றாலும் இவ்வளவு பர்சனலாக கருத்து சொல்வது சரியா என்ற சந்தேகம் அவனுள் இருந்தது.
முன்பும் சில முறை சொல்ல தோன்றினாலும் இந்த தயக்கத்தினாலேயே சொல்லாமல் இருந்தான்.
பார்ட்டிக்கு எல்லோரும் எப்படி உடையணிந்து வருவார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இவள் இப்படியே போனால் நிச்சயம் வருத்தத்தோடு தான் வருவாள் என்றும் அனுபவத்தால் அவனுக்கு தெரியும்.
இருந்தாலும் அவ்வளவு தூரம் அவளிடம் உரிமையாக பேச அவனுக்கு ஒரு தயக்கம்.

Advertisement