Advertisement

அத்தியாயம்-3
 
ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை.
தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான் இன்னும் அவன் கையைப் பிடித்து கொண்டு இருப்பதில் அவளுக்கு தவறாக எதுவும் தெரியவில்லை.
என்னவோ அந்த கையைப் பிடித்துக் கொண்டதில் ஒரு ஆறுதல்.
தெரியாத இடத்தில் தவிக்கும் போது தெரிந்தவரைக் கண்ட ஆசுவாசம். 
அன்று போலவே இன்றும் தனக்கு உதவுவான் என்ற உறுதியான நம்பிக்கை.
ஆர்வமாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் வஞ்சு.
போன் அழைப்பு வந்தும் இன்னும் தன் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான் ராம்குமார்.
அதுவரை சோகமாக அழுது கொண்டிருந்தவளின் முகத்தில் இப்போது தெளிவு தெரிய இதமாகவே ராம்குமார் அவள் கவனத்தை ஈர்த்தான்.
என்னவா இருந்தாலும் பாத்துக்கலாம் ஜூனியர். சரியா? ஒரு நிமிஷம் கையை விட்டா போன் பேசிட்டு உன் ப்ராப்ளம் பத்தி பேசுவோம். ஓகே?
என்று சிறு புன்னகையில் அவளுக்கு ஆறுதல் அளித்த ராம்குமார் அவளாகவே கையை விட காத்திருந்தான்.
அவனுக்கென்னவோ அவளுக்கு பெரிய பிரச்சனை இருப்பது போல தோன்றவில்லை.
அவன் வேலை பார்த்த இந்த மூன்று வருடங்களில் அவனுக்குத் தெரிந்தவரை இந்த கம்பெனியில் எல்லோரும் நட்போடு பழகக் கூடியவர்களே.
 அவளுக்கு வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்ததில் சோகமாய் இருக்கும் என்று நினைத்தவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
கிட்டத்தில் அவளை பார்த்த போது இந்த நாலு ஆண்டுகளில் அவளிடம் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
பதினேழு வயதில் இருந்த அதே பயம், தயக்கம் இன்னும் தெரிந்தது.
பெரிய கண்களில் இன்னும் கண்ணீர் மிச்சம் இருக்க அன்று போலவே மூக்கை உறிஞ்சினாள் வஞ்சு.
அவன் கேட்டதும் சரியென்று தலையாட்டி கையை விட்டு விட்டு பரிதாபமாக அவன் முகம் பார்த்து சாரி ண்ணா! என்று சொல்லி தலையை குனிந்து கொண்டாள் வஞ்சு.
அப்போது தான் தான் செய்தது தப்போ என்று அவளுக்குத் தோன்றியது.
ஏற்கனவே இந்த ஊரும் இந்த கம்பெனியும் வந்த முதல் நாளே அவளை ஏகத்திற்கு பயமுறுத்தியதில் தெரிந்தவனாக அதுவும் முன்பு இதே போல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்தவன் என்பதால் தான் நான்கு வருடங்கள் கழித்து பார்த்த போதும் கூட அவனிடம் ஒரு நெருக்கம் தோன்றியிருக்கிறது 
அதனால் அவன் கையை வெகு நேரம் பிடித்ததில் அவன் தப்பாக நினைப்பானோ என்று அந்த அளவிற்கு யோசிக்கும் நிலையில் எல்லாம் அவள் இல்லை.
எல்லோரும் சொல்வது போல ஜாலியாக அவளுடைய கல்லூரி வாழ்வு அமையவில்லை.
என்ன தான் நன்றாக படித்தாலும் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் சுயநலமான சக வகுப்பு மாணவர்கள் தான் இருந்தனரே தவிர லாவண்யா தவிர யாரும் அவளுக்கு நெருங்கிய நட்பு அமையவில்லை.
அவள் கூட இருந்திருந்தால் சமாளித்திருப்பாளோ என்னவோ?
நான்கு வருடங்களுக்கு முன் இருந்தது போலவே திக்குத்தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல ஒரு பயம்.
அதற்குள் செல் விடாமல் ஒலித்து அதன் இருப்பை காட்ட ராம்குமார் இன்னும் அவள் யோசனையில் இருப்பதைப் பார்த்தபடியே போனை எடுத்தான்.
நினைத்த மாதிரியே ரஞ்சித் தான் அழைத்திருந்தான்.
டேய் மச்சி! என்னடா இன்னும் ஆளைக் காணோம்? பெஸ்ட் எம்ப்ளாயி ஆஃப் தி இயர் அவார்ட் வாங்க ஏதும் எனக்கு தெரியாம பிளான் பண்ணிட்டியா? அவார்டை வேணா நீயே வெச்சிக்க மச்சி!
 கருமம் அது யாருக்கு வேணும்? எனக்கு ஒரு ட்ரீட்டை மட்டும் வெய்ட்டா போட்டுறு. போதும்!
அவனை பேசவே விடாமல் ரஞ்சித் தொடர்ந்து பேச கூடவே அவர்களின் நண்பர்களின்  எங்களுக்கும்! என்ற கோரஸ் குரல்கள் இங்கே வரை கேட்டது.
ராம் சிரித்தவாறே
டேய்! ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வரதுக்குள்ள கற்பனைக் குதிரைய தட்டி விட்டிட்டியா? உன் கூடல்லாம் சகவாசம் வெச்சிட்டு நான் அதெல்லாம் வாங்கிற முடியுமா? போனை வைடா. அங்கே தான் வந்துட்டே இருக்கேன்.
என்றவன் மேலே ரஞ்சித்தை பேச விட்டால் தன் கதி என்னவாகும் என்று தெரிந்ததால் போனை அணைத்தான்.
தேவையில்லாமல் அவனை தொந்தரவு செய்து விட்டோமோ என்று வஞ்சு தயக்கத்துடன் பார்த்தாள்.
வஞ்சுவைப் பார்த்து புன்னகைத்த ராம்குமார்
ரஞ்சித் தான் போன் பண்ணான். உனக்கு அவனை ஞாபகம் இருக்கா? நம்ம காலேஜ் தான். என் கிளாஸ் தான்.
என்று நினைவுபடுத்த வஞ்சு சந்தேகமாக தலையாட்டினாள்.
அவளுக்கு நினைவு வரவில்லை என்று புரிந்து கொண்ட ராம்குமார் மேலே அவளை சங்கடப்படுத்தாமல் வரியா? இன்னும் நிறைய பேர் நம்ம காலேஜுல இருந்து இங்க வேலை பார்க்கறாங்க. அவங்கள எல்லாம் இன்ட்ரோ பண்றேன்.
 இதுக்கு மேல லேட் ஆனா எனக்கு எம்ப்ளோயி ஆப் தி இயர் கட்டவுட்டே ரஞ்சித் வெச்சிடுவான். போயிட்டே பேசலாம். என்று அவளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றான்.
பார்த்து சில நிமிடங்களே ஆனாலும் அவன் அக்கறை மனதுக்கு இதம் தந்ததோடு அதற்குள் அவனைப் பிரிய மனமும் இல்லாமல் போக வஞ்சு அவன் பின்னாலேயே சென்றாள்.
இருவரும் ரஞ்சித்தை சந்திக்கும் வரை ராம்குமார் தான் அதிகம் பேசினான். அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள் வஞ்சு. அவ்வளவுதான்.
அவனும் பொதுவாக என்ன ப்ராஜெக்ட்ல போட்டிருக்காங்க, யார் கூட, என்ன டெக்னாலஜி, இப்படி வேலை சம்பந்தமான கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டு வர வஞ்சு சாதாரணமாகவே பதில் சொன்னாள்.
இப்போது தெரிந்தவராய் அக்கறை உள்ளவராய் ஒரு துணை கிடைத்ததும் அவள் சோகம் கொஞ்சம் பின்னால் போயிருந்தது..
அவன் நடையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க ஓட்டமும் நடையுமாக அவள் வருவதை சில அடிகளில் உணர்ந்த ராம்குமார் தன் வேகத்தை குறைத்து அவளோடு இணைந்து நடந்தான்.
இந்த சின்ன சின்ன செய்கைகள் கூட அவளுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை ராம்குமார் அறியவில்லை.
அவன் குணமே அடுத்தவர்களிடம் இங்கிதமாய் நடப்பது என்பதால் வஞ்சுவிடமும் அது இயல்பாய் வந்தது. அதனாலேயே அவனுக்கு கல்லூரியில் மட்டும் அல்ல இங்கேயும் நிறைய நண்பர்கள் கூட்டம்.
ஆனால் வஞ்சு அது தனக்கு மட்டுமே ஆன பிரத்தியேக அக்கறை என்று எடுத்துக் கொண்டாள்.
கல்லூரியிலும் சரி இங்கும் சரி அவளை சுற்றி  எல்லோரும் சுயநலமான மனிதர்களாகவே தெரிய ராம்குமார் காட்டும் சின்ன சின்ன அக்கறை கூட அவளுக்கு ரொம்ப பெரிய விஷயமாக தெரிந்தது.
இருவரும் பேசிக்கொண்டே போக அவர்களை குறுகுறுவென்று நண்பர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது.
 ரஞ்சித் தவிர அங்கே இன்னும் ஆறு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள். வந்தனா, சோனல், மணிமேகலை தவிர ரவி, ஆதி மற்றும் ரபீக்.
இதில் வந்தனாவும் ஆதியும் அவர்கள் கல்லூரி தான். ராம்குமாருக்கு அடுத்த செட். அவர்களுக்கு வஞ்சுவைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது.
கல்லூரியில் இருந்த வரை தொடர்ந்து ப்ரோபீசியன்சி விருதை அவள் மேடையேறி வாங்கியதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அதோடு காலேஜ் டேயில் வஞ்சு  நடனம் ஆடியதை பார்த்து இருந்தார்கள்.
எப்போதும் மாணவர்கள் ஆடும் குத்துப்பாட்டு அல்லது வெஸ்டர்ன் என்று இல்லாமல் நிறைய பாடல்களை கோர்த்து கதையாக வேறு வேறு வகை நடனமாக அசத்தி இருந்தாள் வஞ்சு.
 
அவர்கள் அருகே வந்ததும் பார்வை கேள்வியாக இருந்தபோதும் லேசாய் புன்முறுவல் செய்தனர்.
இருந்தபோதும் வஞ்சுவிற்கு அவர்களைத் தெரியாததால் ராம்குமார் பக்கத்திலேயே நின்று கொண்டாள். அப்போது தான் தான் அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடைஞ்சலாக வந்து விட்டோமோ என்றே அவளுக்கு தோன்றியது.
ரஞ்சித் அவள் இல்லையென்றால் டேய்! நம்ம ரெட்டை சடை! என்று சொல்லியிருப்பானோ என்னவோ ஆனால் அவள் பக்கத்தில் இருந்ததால் அதை அடக்கிக்கொண்டான்.
இருந்தும் அவன் ராம்குமாரை பார்த்த பார்வையில் இந்த ரெட்டை சடையை இங்கே எங்கே கூட்டிட்டு வந்திருக்கே? என்பது போல பார்த்தான்.
அவனுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் அறிமுகம் செய்யும் விதமாக ராம்குமார்
மச்சீஸ்! இது நம்ம ஜூனியர். இங்க இன்னிக்கி தான் ஜாயின் பண்ணியிருக்கு. நம்ம காலேஜ்ல தான் படிச்சாங்க. இந்த வருஷம் தான் பாஸ் அவுட். பேரு…
என்றவனுக்கு அப்போது தான் அவள் பெயரை இன்னும் கூட கேட்கவில்லை என்பது நினைவுக்கு வர திரும்பி பக்கத்தில் இருந்த வஞ்சுவை பார்த்தான்.
அவன் அறிமுகத்தில் எல்லோரும் அவள் முகத்தை பார்க்க வஞ்சு மெல்லிய குரலில் வஞ்சு…வஞ்சுளவல்லி ணா… என்று சங்கடத்துடன் சொன்னாள்.
எல்லோர் காதிலும் அவள் பேரை விட அவள் ணா என்று ராம்குமாரை சொன்னது தான் நன்றாகக் கேட்டது.
எல்லோரும் உன் தங்கச்சியா இவ? என்று நக்கலாக பார்த்தாலும் வஞ்சுவிற்காக எதுவும் சொல்லவில்லை.
ராம்குமாருக்கு அவள் அண்ணா என்று கூப்பிட்டதில் ஒன்றும் தோன்றவில்லை.
ஆனால் அவர்களின் பார்வையை இத்தனை வருட பழக்கத்தில் புரிந்து கொண்டான் ராம்குமார்.
இதை தொடரவிட்டால் அவர்கள் ஓட்டியே அவனை ஒருவழி பண்ணி விடுவார்கள் என்று தெரியும்.
அதிலும் ரஞ்சித்தின் பார்வை எனக்கு உன்னைப் பத்தி தெரியும்டா! என்பது போலவே இருந்தது.
அவர்கள் வாயில் அரை படாமல் தப்பிக்க வேண்டும் என்று
 ம்..ஓகே வஞ்சு! சீனியர் அண்ணாலாம் காலேஜோட முடிஞ்சு போச்சு.  இங்க எல்லோரையும் பேர் சொல்லி தான் கூப்பிடனும்! புரியுதா?
 ராம்குமார் வஞ்சுவிடம் விளக்க பின்னால் எல்லோரிடம் இருந்தும் ஒரே நேரத்தில் கனைப்பொலி கேட்டது.
எல்லோருக்கும் அவன் தாமதமாய் வந்ததற்குக் காரணம் அவள் தான் என்று இப்போது புரிய ரஞ்சித் ராம்குமார் காதை கடித்தான்.
அது இவ்வளவு நேரம் ரெட்டை சடை கூட பேசும் போது தெரியலியா? இங்க வந்து சீனப் போடற?
அவர்களிடம் எப்படி பேசினாலும் தப்ப முடியாது என்று அவனுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் அவளை வைத்துக் கொண்டு எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தான்.
அவனுக்கு அவர்கள் கிண்டல் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் பேசுவதை விளையாட்டாக எடுத்துக்கொள்வான்.
ஆனால் வஞ்சுவிற்கு இதெல்லாம் புதிது அல்லவா?
அதனால் ரஞ்சித்திடம் டேய் அடங்குடா! என்று முணுமுணுத்தவன்
வஞ்சு! இது வந்தனா, சோனல், மணிமேகலை! இவங்க ரவி, ஆதி மற்றும் ரபீக்.
இதுல வந்தனாவும் ஆதியும் நம்ம காலேஜ் தான். வந்தனா சிஎஸ்சி. ஆதீ இசிஇ.
என்று அறிமுகப்படுத்தி வைக்க வஞ்சு அவர்களைப் பார்த்து லேசாக புன்னகைத்தாளே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
வந்தனா ஹாய் வஞ்சு! நீ வருஷாவருஷம் ப்ரோபிசியன்சி அவார்ட் வாங்குறதை பார்த்திருக்கேன். பெரிய படிப்ஸா நீ?
என்று சகஜமாகவே பேச அதற்கும் வஞ்சுவிடம் இருந்து பதிலே இல்லை.
அந்த கேள்வி வஞ்சுவிற்கு கிண்டல் போல தோன்ற தலையை மட்டும் ஆட்டியவள் அமைதியாக நின்று கொண்டாள்.
அவர்களைப் பார்த்ததும் அவளுக்கு அவள் வகுப்பு மாணவர்கள் நினைவு வந்தது.
தேவைப்படும் போது நன்றாய் பேசி விட்டு அதன் பிறகு முகத்தைத் திருப்பிக்கொள்ளும் மக்கள்.
அடுத்து ஆதி கேட்ட கேள்விக்கும் அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க அங்கே எப்போதும் இருக்கும் கலகலப்பு இல்லாமல் ஒரு சங்கடமான அமைதி நிலவியது.
அதற்குள் எல்லோருமே தேனீர் அருந்தி முடித்திருக்க வஞ்சு ராம்குமாரிடம் ணா!…ம்.. சார்..! நான் கிளம்பவா? அங்கே என்னை தேடுவாங்களோ என்னவோ..? என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அவளால் டக்கென்று அவனை பெயர் சொல்லி அழைக்க வரவில்லை.
 ராம்குமாருக்கும் வேலை இருந்ததால் அவளுடனே கிளம்பி விட்டான்.
இருவரும் மெளனமாக நடக்க அவர்களுக்குப் பின்னால் ஒரு சங்கடமான அமைதி.
சற்று தூரம் வந்ததும் வஞ்சு அவளாகவே நான் வந்ததால உங்களுக்கெல்லாம் இடைஞ்சலா போயிடுச்சா? இல்லனா நீங்க எல்லாம் சிரிச்சு பேசி ஜாலியா இருந்துருப்பீங்க? இல்ல? என்று வருத்தமாக கேட்க ராம்குமார் அதை மறுக்கவில்லை.
அமைதியாக சில நொடிகள் நடந்தவன் வஞ்சு! ஒண்ணு சொல்லவா? நீ தப்பா எடுக்க மாட்டியே? என்று இது தனக்கு தேவையா என்று யோசனையோடே கேட்டான்.
பழக்கமில்லாத பெண்ணிடம் அட்வைஸ் பண்ணினால் அதை அவள் ஏற்றுக் கொள்வாளா என்ற தயக்கம் தான்.
சொல்லுங்க ணா! என்று சொல்ல வந்தவள் அவன் சொன்னது நினைவுக்கு வந்து ணா வை வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.
நீ இப்ப காலேஜ் ஸ்டுடென்ட் இல்ல. ஒரு எம்ப்ளோயி. அப்போ அதுக்கேத்த கெத்தொட நடந்துக்க வேணாமா?
இதமாகவே ராம்குமார் கேட்டாலும் அதில் குற்றச்சாட்டு இருந்தது.
அவன் சொல்வது புரிந்தாலும் அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று வஞ்சுவிற்கு புரியவில்லை.
அவனை புரியாத பார்வையோடு பார்க்க அவள் பார்வையே அவனுக்கு புரிந்தது.
காலேஜ்ல யாரோடையும் பேசாம உன் படிப்ப மட்டும் பாத்திருக்கே. ஓகே.
ஆனா நாலு பேர் கூட எப்படி பழகணும்னு தெரிஞ்சிக்க வேணாமா? இங்கயே இவ்வளவு யோசிக்கிறே நீ? எப்படி நாளைக்கு கிளையன்ட் கிட்ட தைரியமா பேசுவ..ம்..?
அவன் கோபமாக பேசாமல் பொறுமையாகவே பேச அதுவே அவளுக்கு அவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையைத் தந்தது.
சாரி..ணா..! என்று பதில் சொல்ல வந்தவள் நாக்கை கடித்துக்கொண்டு சாரி சார்! இனி நீங்க சொல்லித் தாங்க. நான் பழகிக்கறேன்… என்று பவ்யமாக பதில் சொல்ல ராம்குமார் சிரித்து விட்டான்.
இப்ப தானே அண்ணானு கூப்பிடாதேனு சொன்னேன். அதையே கேக்க மாட்டேன்கிறியே? மத்ததெல்லாம் மட்டும் எப்படி கேப்பே?
என்று அவளை பார்த்து புன்னகையோடு கேட்க வஞ்சு இப்போது அவனிடம் தைரியமாக பதில் சொன்னாள்.
என்னவோ இந்த சில மணிகளுக்குள்ளேயே அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை.
அது.. அது நீங்க என்னை விட பெரியவங்க இல்லே? அதான் பட்டுன்னு பேர் சொல்லிக் கூப்பிட வரல. சீக்கிரம் மாத்திக்கறேன்…
என்று தலையை ஆட்டி சொன்னாள்.
அதற்குள் அவர்கள் இடம் வந்து விட ராம்குமார் அவளிடம் முகம் பார்த்து பேசினான்.
நீ இப்போ பெரிய பொண்ணு. சரியா? எதுக்கும் அழவோ பயப்படவோ கூடாது. நின்னு பேஸ் பண்ணனும். அப்போதான் இங்க ஐடி பீல்ட்ல சர்வைவ் பண்ண முடியும்.
உன் பேச்சையும் தோரணையும் பாத்தே அவங்க உன்னை சரியா நடத்தனும். ஓகேவா?
அவள் அழுததன் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் தானாகவே யூகித்து சொன்னான் ராம்குமார்.
எல்லார்கிட்டயும் நல்லா பேசணும். ஜாலியா பழகணும். வீட்டை விட்டு வந்திருக்கிறோம் நாம். நாம தான் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும்.
அதனால ப்ரீயா பேசு. என்ன? ஒதுங்கி நிக்கக் கூடாது. யாராவது ஓவரா பேசினா பயப்படாம திருப்பிக் குடு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா என் கிட்ட வா.
என்றவன் உரிமையாக அவள் மொபைலை வாங்கி தன் எண்ணை அடித்து மிஸ்ட் கால் கொடுத்தான்.
அவன் பேசப்பேச அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டவளுக்கு இப்போது தைரியம் வந்திருந்தது.
ரைட்டு குரு!
என்று குறும்புப் புன்னகையோடு அவனுக்கு சல்யுட் அடித்து வஞ்சு சொல்ல ராம்குமார் சிரித்தபடியே விடைபெற்று போனான்.
 
தான் சொல்லும் யோசனைகள் எல்லாம் பின்னால் தனக்கே ஆப்பாக முடியும் என்று தெரிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டானோ என்னவோ?
அன்று இரவு தன் பிஜி ஹாஸ்டலில் வஞ்சு முகநூலில் வலம் வந்து கொண்டிருந்தாள்.
கல்லூரியில் படிக்கும் போது அதிகம் உபயோகித்ததில்லை. இப்போது  தனியாக இருந்ததால் லாவண்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக ராம்குமாரிடம் இருந்து நட்பு அழைப்பு.
அதை உடனே ஏற்றுக்கொண்டவளுக்கு காற்றில் பறக்கும் உணர்வு.
அவனைப் பற்றியும் அவன் அக்கறையைப் பற்றியும் வெகு நேரம் லாவண்யாவிடம் சேட்டில் பேசியவள் இதைப் பார்த்ததும் இன்னும் சந்தோஷப்பட்டுப் போனாள்.
சற்று நேரத்தில் அவனிடம் இருந்து ஸ்டே ஸ்ட்ராங். குட் நைட் என்று குறுந்தகவல் வர அவளுக்கு சந்தோஷத்தில் குதிக்க வேண்டும் போல இருந்தது.
தேங்க்ஸ் போர் எவரிதிங் குரு. என்று செய்தி அனுப்பியவள் அவன் குருந்தகவலையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
ஒரு விதை முளைக்க
சூரியனும் நீரும் தேவை.
ஒரு சிற்பம் உருவாக
உளியும் சுத்தியும் தேவை.
என் வாழ்வில் சூரியனும்
சுத்தியுமாக வந்ததற்கு நன்றி
 
என்று ஒரு பூங்கொத்தோடு போஸ்ட் போட்ட பிறகே ஒரு புன்னகையோடு உறங்கப் போனாள்.
ராம்குமார் அவளுக்கு மெசேஜ் அனுப்பிய பிறகு அவளை மறந்தவன் அன்றைய சமூக செய்திக்கு போஸ்ட் போட போய்விட்டான்.

Advertisement