Advertisement

“அம்மா! ஏன்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பறீங்க? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?” என்று அவர் கையைப்பிடித்து கொண்டு கேட்க பானுவுக்கு உருகி விட்டது.

“அப்பாவுக்கு லீவு இல்லை டா! அப்புறம் வரோம்!” என்று பானு சமாதானம் சொல்ல ராம்குமார் விடுவதாக இல்லை.

“அப்பா வேணா கிளம்பட்டும். நீங்களாவது இருங்கமா!” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.

மூர்த்தி சிரிப்புடன் வேடிக்கை பார்த்தார். அவருக்கு அவர் இல்லாமல் பானு தனியாக இருக்க மாட்டார் என்று தெரியும்.

அது போலவே பானுவும் “இல்லடா! அப்பாவுக்கு அங்க தனியா சமாளிக்க கஷ்டம். அப்புறம் அப்பாவுக்கு லீவு கிடைக்கும்போது மறுபடி வரோம்!”

என்று சொல்லி கிளம்பியே விட்டார்கள்.

இதற்கு மேல் வஞ்சுவை பற்றி சொல்லாமல் அவர்களின் உதவியை கேட்க முடியாது என்று ராம்குமார் மேலும் வற்புறுத்தவில்லை.

அன்று அலுவலகம் முடித்து களைத்துப் போய் வந்த ராம்குமாருக்கு வஞ்சு எப்போதும் போல எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருக்க செம கடுப்பாக இருந்தது.

வஞ்சுவிற்கு அன்று வேலை இல்லாததால் சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்தாள். மதியம் நன்றாக உறங்கி விட்டு முகநூலில் சுற்றிக்கொண்டு இருந்தாள்.

பசியோடு வந்தவனுக்கு உள்ளே எதுவும் சாப்பிட இல்லாமல் இருக்க அவளையே கேட்டு விட்டான்.

“ஒய் சின்ன பாக்கெட்! ஒரு டிபன் கூட செய்யலியா?”

நிதானமாக கோபத்தை அடக்கிக்கொண்டு தான் கேட்டான். அவன் மூட் தெரியாமல் வஞ்சுவின் பதில் வழக்கம் போல் வந்தது.

“ரம்! இது என்ன புதுப்பழக்கம்? என்னை சமைக்கலியா என்று கேக்கறது? வழக்கம் போல் டின்னர் வேலை ஆரம்பிக்க வேண்டியது தானே?”

ராம்குமார் தான் இன்னமும் வீட்டில் எல்லா வேலையும் செய்வது. சமையல் முதற்கொண்டு எதுவும் தெரியாது என்று வஞ்சு முதல்நாளே சொல்லி விட ராம்குமார் தான் எல்லா வேலையும் செய்தான்.

காய் நறுக்குவது, வீட்டை பெருக்குவது என்று சிறு வேலைகளை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டவள் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளக் கூட முயலவில்லை.

எப்போதும் பொறுத்துப் போனவனுக்கு அன்று பொறுமை போக “செய்ய நினைச்சா செய்யலாம். மனசு தான் வேணும்…நீ எப்பவும் சொகுசா வாழவே பழகிட்டே…” என்று கடுப்பாக பதில் சொன்னான்.

அதற்கு வஞ்சு பதில் பேச அவன் பேச சண்டை பெரிதாகி முதல் முறையாக இருவரும் ஒரே கட்டிலில் முதுகைக் காட்டியபடி முறைத்துக் கொண்டு உறங்கினர்.

அன்று கோபத்தில் ராம்குமாரும் எதுவும் செய்யாமல் பட்டினியால் வந்த தலைவலியில் படுத்து விட வஞ்சுவோ அழுதே கரைந்தாள். அது எப்படி என்னை அவன் திட்டலாம் என்று அவளுக்கு கோபம்?

 மறுநாளும் இருவரின் பிடிவாதமும் தொடர  அவர்கள்  பேசியே ஒரு நாள் ஆகி விட்டது. காலையில் ராம்குமார் எதுவும் சாப்பிடாமல் கிளம்பி விட அவன் ஆபிசில் நுழையும் போதே வினய் வழி மறித்தான்.

“என்ன மச்சி! வாலண்டைன்ஸ் டேயும் அதுவுமா சிஸ்டர் கூட ஏன் சண்டை போட்டே?”

தாங்கள் சண்டை போட்டது இவனுக்கு எப்படி தெரியும் என்று ராம்குமார் விழிக்க அவனிடம் எதோ சொல்லி சமாளித்து மேலே நடந்தான்.

அவன் காபின் போவதற்குள் ஏகப்பட்ட பேர் துக்கம் விசாரித்து அட்வைஸ் செய்து என்று ஒரு வழி செய்தனர்.

உனக்கெப்படி தெரியும் என்று கேட்டு தங்கள் சண்டையை எல்லோருக்கும் சொல்ல விரும்பாமல் ராம்குமார் பூசி மெழுகி சமாளித்தான். தங்கள் சண்டை எப்படி ஊருக்கே தெரிந்தது என்று மண்டையை குடைந்தது.

தன் சீட்டில் இருந்தபடி தள்ளி அமர்ந்திருந்த வஞ்சுவைப் பார்க்க, பரிதாபமாக அமர்ந்தவளிடம் அவனால் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

அவளும் பட்டினியாக தானே வந்திருப்பாள் என்று இருவருக்கும் ஸ்விகியில் பிரியாணி ஆர்டர் கொடுத்தான். வஞ்சுவோ டல்லாகவே இருந்தவள் மதியம் லீவு போட்டு விட்டு அவனிடம் கூட சொல்லாமல் வீட்டுக்கு போய் விட்டாள்.

அவனுள் இருந்த புதுக் கணவன் அது அவர்களின் முதல் வாலண்டைன்ஸ் டே என்று நினைவுப்படுத்த மாலையில் வீட்டுக்கு போகுமுன் ஒரு சிவப்பு ரோஜா பூங்கொத்தும் ஒரு ஸ்விஸ் சாக்லேட் பாக்சும் வாங்கிக்கொண்டு இரவு டின்னருக்கு அவர்கள் முன்பு சென்ற ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் செய்து வீட்டுக்குப் போனான்.

வஞ்சு காலையில் அவன் பார்த்த அதே உடையில் அதே கோலத்தில் சோர்ந்து படுத்திருக்க ராம்குமாரின் கோபம் சுத்தமாக மலையேறியது.

வாங்கி வந்த இரண்டையும் ஒரு ஓரமாய் வைத்து விட்டு கண் மூடி படுத்திருந்தவளின் அருகே படுத்தான்.

“ஒய் சின்ன பாக்கெட்! என்ன பண்ணி வெச்சிருக்கே?”

கேள்வி அதிகாரமாக இருந்தாலும் குரல் குழைந்து தான் இருந்தது.

பதிலே வராமல் போக ராம்குமார் அவள் காதில் ஊத அப்போதும் வஞ்சு அசையவில்லை.

“ஆபிஸ்ல எல்லாரும் என்னை கொடுமைப்படுத்தின மாதிரி ஒரே அட்வைஸ். எல்லாம் உன்னால தான்….”

வஞ்சுவிற்கு அவன் சொன்னது கேட்டாலும் இன்னும் அவள் இருந்த இடத்தை விட்டு இறங்கவில்லை.

“பேஸ் புக்ல போஸ்ட் போட்டு ஊருக்கே நாம சண்டை போட்டத சொல்வியா நீ?”

வஞ்சு அவன் சொல்வதை கேட்கிறாள் என்று தெரிந்தாலும் அவளிடம் அசைவில்லை.

“ஒய் அதுல ஐ லவ் யூ புருஷா! முதல் காதல்! முதல் முத்தம்! முதல் பரிசு! இதெல்லாம் நல்லா இருந்துச்சு.

ஆனா இந்த முதல் சண்டை எனக்கு பிடிக்கவே இல்லை. முதல்ல வந்து சாரி கேட்கும் வரை நான் உண்ணாவிரதம்! அப்படின்னு போட்டிருக்கே. நிஜமாவே நீ நான் வாங்கி அனுப்பின  பிரியாணிய சாப்பிடலியா?”

வஞ்சு அதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே இருக்க ராம்குமார் குறுநகையுடன் கேட்டான்.

“அப்ப உன் உதட்டோரம் ஒரு சோத்துப்பருக்கை ஓட்டிட்டு இருக்கே?”

என்று விரலை அவள் உதட்டருகே கொண்டு வர வஞ்சுவின் கை அவளையும் மீறி வாயைத் துடைக்க எழுந்தது.

ராம்குமார் அவள் செயலில் வாய் விட்டு சிரிக்க வஞ்சுவுக்கு அது தலையிறக்கமாகி விட மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

“ஒய் அப்ப நா வாங்கிட்டு வந்த வாலண்டைன்ஸ் டே கிப்ட் வேணாமா?”

வஞ்சு அவனின் வார்த்தையில் மயங்கியதில் அதற்கு மேல் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை.

ஆனாலும் வேண்டா வெறுப்பாக கேட்பது போல் “என்ன கிப்ட் குரு? சொல்லுங்க….” என்று கேட்டாள்.

“அதை நீ இப்படி கேட்டா சொல்ல மாட்டேன்.” என்றவன் அவள் காதில் தன் விருப்பத்தை கிசுகிசுக்க வஞ்சு “குரு! வர வர உங்க பேச்சே சரியில்லை….” என்று எழுந்து ஓடி விட்டாள்.

அவசரமாக தன்னை சுத்தம் செய்து ஒரு ஹை காலர் ஸ்லீவ்லெஸ் கருப்பு குர்தியும் வெள்ளையில் பூ போட்ட லெக்கினும் அணிந்து வந்தவள் இப்போது பார்க்க பூ போல இருந்தாள்.

ராம்குமார் அவள் முன்னால் ஒரு காலில் மண்டியிட்டு பொக்கேவும் சாக்லேட் பாக்ஸும் கொடுத்து “பீ மை வாலண்டைன் ஆல்வேஸ் டியர்!” என்றவன் கன்னத்தில் முத்தமிட வஞ்சுவுக்கு முதல் சண்டை மறந்தே போனது.

ராம்குமார் கொடுத்த பரிசுகளை ஒரு புகைப்படமும் தங்கள் இருவரை செல்பியாகவும் எடுத்துக் கொண்டவள் சுடச்சுட அதை முகநூலில் பதிவிட்டாள்.

மை வலண்டைன்ஸ் கிப்ட்! வீ ஹாவ் patched up!(நாங்கள் சமாதானம் ஆயிட்டோம்) என்று போட்டு ஆடும் பெண்ணின் ஸ்டிக்கரை பதிவிட்டாள்.

ராம்குமார் மணி பார்க்க ஏழு ஆகியிருந்தது.

“எட்டு மணிக்கு டின்னருக்கு டேபில் ரிசர்வ் பண்ணியிருக்கேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு…”என்று சொல்லிவிட்டு வஞ்சுவை பார்த்த பார்வையே சரியில்லை.

வஞ்சுவிற்கும் அந்த பார்வை புரிய “குரு! உன் பார்வையே சரியில்லை!” என்று சொன்னபடி பின்னால் அடியெடுத்து வைக்க ராம்குமார் சிரிப்போடு அவளை முன்னால் நெருங்கினான்.

வஞ்சுவின் கால்கள் சரியாக படுக்கையறைக்குள் போக ஒரு சந்தோஷ சிரிப்புடன் அவளைக் கையில் ஏந்தியவன் “இது வரைக்கும் நடந்ததை எல்லாம் மூஞ்சிபுக்ல போட்டியே! இதையும் போடுவியா?” என்று கேட்க வஞ்சுவின் கை அவன் நெஞ்சில் செல்லமாக குத்தியது,

Advertisement