Advertisement

அத்தியாயம்-2௦

கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது.

ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத நிலை.

அதோடு அவர்கள் இருவரும் குடி போகவென்று புதிதாக பார்த்திருந்த வீட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அடுக்க வேண்டிய வேலை இருப்பதால் சனி அன்றே பெங்களூர் வந்திருந்தனர்.

அந்த திங்கள் முதல் வேலைக்குப் போக வேண்டும். குடித்தனம் வைக்க வருவதாக பானு சொன்னதால் வஞ்சுவின் அம்மா எல்லாம் வாங்கிக் கொடுத்ததோடு ஒதுங்கிக் கொண்டார்.

காதல் திருமணம் அதுவும் தங்கள் எதிர்ப்பை மீறி என்பதால் இரு வீட்டிலும் இன்னும் முழுதாக சமாதானம் ஆகவில்லை.

எல்லாம் பார்சலில் வர ஏற்பாடு செய்து விட்டு ராம்குமாரும் வஞ்சுவும் வெள்ளி இரவே சென்னையில் இருந்து கிளம்பி விட்டனர்.

வோல்வோ பஸ்ஸில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்திருந்தான் ராம்குமார். வஞ்சு பயணத்திற்கு வசதியாக காட்டன் சுடி அணிந்திருந்தாள்.

ராம்குமார் ஷார்ட்ஸ் டீஷர்ட்டில் இருந்தான். இதற்கு முன்னும் இருவரும் பயணம் செய்திருந்தாலும் இப்போது இருக்கும் உரிமை அப்போது இல்லையே.

புதிய வாழ்க்கையின் தொடக்கம் இந்த பயணத்தில் ஆரம்பம். வீட்டிலேயே எல்லோரும் விடை கொடுத்து விட இருவரும் கேபில் வந்து தான் பஸ் ஏறினர்.

அதனால் இரு வீட்டிலும் காட்டிய ஒதுக்கம் கூட இருவரையும் அவ்வளவாக பாதிக்கவில்லை.

வஞ்சுவின் முகநூல் போஸ்ட் அன்று “என் காதலுடன் சொர்க்கத்துக்கு பயணம்..(Travelling to heaven with my love)” என்று இருந்தது.

ராம்குமார் அதற்கு லவ் ரியாக்ஷன் தந்து “waiting….” என்று பதில் போட நண்பர்கள் கூட்டம் எல்லாம் அவர்களை சேர்த்து கலாய்த்தது.

ரஞ்சித் “மச்சி! நீ நல்லவன்னு நினைச்சேன். ஆனா நீ காதல் மன்னன்னு இப்ப தான் புரியுதுடா. கடுமையா உழைச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்ப இப்படி ஸ்டேடஸ் போட்டு என்னை மாதிரி மொரட்டு சிங்கிள் ஸ்டமக்க பர்ன் பண்ற. நல்லா இர்றா..” என்று போட அவர்கள் க்ரூப்பே ஒரே கலாட்டாவாக இருந்தது.

தங்கள் காதல் பெரிய போராட்டத்திற்குப் பிறகு நிறைவேறிய சந்தோஷத்தில் இருவரும் தனி உலகத்தில் இருந்தனர்.

கேபில் இனிமையான காதல் பாடல்களை டிரைவர் தனக்காக போட அவர்களுக்கோ அது தங்களுக்கானதாக தோன்றியது.

ராம்குமார் உரிமையாக வஞ்சுவின் தோளில் கை போட்டு அமர்ந்திருக்க வஞ்சு கிட்டத்தட்ட அவன் மேல் சாய்ந்திருந்தாள்.

இரவும் கேபில் இருந்த இருளும் மெலிதாக வெளியே இருந்து வந்த விளக்கு ஒளியும் வஞ்சுவிற்கு சுதந்திரம் தந்தது.

காதோடு பேசும் சாக்கில் ராம்குமாரின் உதடுகள் வஞ்சுவின் காதிலும் கன்னத்திலும் உரச வஞ்சுவிற்கு இருந்த குளிருக்கே குளிர் விட்டுப் போனது.

அப்படி ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை. தண்ணி பாட்டில் எடுத்தியா? வீட்டு சாவி எங்க இருக்கு என்று கணவன் மனைவி வழக்கமாக பேசும் பேச்சுக்கள் தான்.

பேசிய விதம் மட்டுமே வேறு.

பஸ்ஸில் மேல் பர்த் என்பதால் ராம்குமார் வஞ்சு இருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த தனிமை கிடைத்தது.

தினமும் பேசிய பேச்சுக்கள் தான் என்றாலும் அந்த இரவில் ஓடும் பஸ்ஸில் காதோடு பேசி செல்ல சிணுங்கல் சின்ன சிரிப்போடு பேசியபடி போவது இருவருக்கும் சொர்க்கத்தை காட்டியது.

வஞ்சு இப்போது பழைய பயந்த வஞ்சு இல்லை. அதுவும் ராம்குமாரிடம் அதிக உரிமை வந்திருந்தது.

ராமோடு தனியாக இருக்கும் போது அவள் கூப்பிடும் பெயர் ரம். அவள் போதையில் கண்டெடுத்த லாட்டரி.

விடிய விடிய பயணம் முழுக்க பேசிக்கொண்டே இருவரும் பெங்களூர் வந்து சேர விடிகாலை ஆக கேப் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டில் இருவருமாக சேர்ந்து ஏற்கனவே தேவையான கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெசின், பிரிஜ் போன்ற பொருட்களை வாங்கிப் போட்டிருந்தனர்.

வஞ்சு விடிய விடிய பேசியதில் களைத்து வந்ததுமே அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருந்த பெட்டில் விழுந்தவள் தான்.

ராம்குமார் சிறு புன்னகையோடு அதை பார்த்தவன் அவனே வழியில் வாங்கியிருந்த பாலைக் காய்ச்சி டீ போட்டு அவளுக்கும் ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தான்.

அதற்குள் அவர்கள் சென்னையில் ஏற்றி அனுப்பி இருந்த பாத்திரங்கள் மற்ற சீர் பொருட்கள் வந்திருக்க ராம்குமார் வந்த ஆளோடு எல்லாம் இறக்கி வைத்தான்.

பிறகு தனக்குத் தெரிந்தவரை எல்லாம் எடுத்து வைத்தான்.

சற்று ஓய்வு எடுத்து கொண்டவனுக்கு மணி பத்தாகி இருக்க பசித்தது.

வஞ்சுவை எட்டிப் பார்க்க அவள் இன்னும் லேசாகக் கூட அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“போச்சு! தினம் இவ ராத்திரி முழிச்சா இப்படி காலைல தூங்கினா எப்படி பொழப்பு நடக்கும்…?” என்று சத்தமாக சொல்ல அதற்கும் வஞ்சுவிடம் எந்த அசைவும் இல்லை.

அவனே அருகே சென்று கன்னத்தில் லேசாக தன் மீசையை உரச வஞ்சு அதை தட்டி விட்டவள் அந்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ராம்குமார் வசதியாக அவள் மறுபக்கம் படுத்து “ஒய் சின்ன பாக்கெட்! இப்படி இருந்தா நம்ம நிலைமை ரொம்ப கஷ்டம் டா! எழுந்து ஏதும் டிபன் செய்றியா? பசிக்கிது….” என்று அவள் உதடுகளில் கோலம் போட்டபடி அவளை பொறுமையாக எழுப்ப முயற்சி செய்தான்.

“ரம்! நைட் டூட்டி இல்ல பகல் டூட்டி ஏதாவது ஒண்ணு தான் முடியும். இதுக்கு மேல நா ஆபிஸ் வேலை வேற பாக்கணும்….ஏற்கனவே நைட் முழுக்க முழிச்சிட்டு இருந்து டூட்டி பார்த்தாச்சு. அதனால நீங்களே போய் டிபன் செஞ்சிட்டு என்னை எழுப்புங்க….”

தூக்கத்திலும் வஞ்சுவின் பேச்சு தெளிவாக இருந்தது.

திருமணத்திற்கு வந்திருந்த புவனா, வஞ்சுவும் ராம்குமாரும் பெங்களூருக்கு போன பிறகு மேலும் ஒரு வாரம் அம்மா வீட்டில் இருந்து சீராடிய பிறகே ஊருக்கு கிளம்பினாள்.

ஷ்யாமும் மனைவியின் மனம் அப்போதாவது சமாதானம் ஆகட்டும் என்று அவளையும் மகளையும் விட்டு விட்டு அவன் மட்டும் ஊருக்கு சென்று விட்டான்.

அவர்களும் கிளம்பிய  பிறகே பானு புதுக்குடித்தினத்திற்கு வேண்டிய பொடி வகைகள், ஊறுகாய், நொறுக்குத்தீனி என்று யோசித்து யோசித்து மகளுக்கு கொடுத்தது போலவே மகனுக்கும் மூட்டை கட்டி வைக்க மூர்த்தியும் பானுவும் அந்த வார இறுதியில் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.

ராம்குமார்  அவர்களை வரவேற்ற விதம்அவர்கள் வரவை ஆவலாக எதிர்பார்த்து இருந்தது போல இருந்தது

இந்த ஒரு வாரத்தில் சமையல் வேலை பார்த்தே ராம்குமார் களைத்துப் போயிருந்தான். அவளுக்கும் குடும்பம் நடத்துவது புது அனுபவம் என்று புரிதலோடு பொறுத்திருந்தவனுக்கு அவள் பழையபடியே இருந்தது பொறுமையை சோதித்தது.

அவன் சமைக்கும் போது கூட உதவுவாளே தவிர தானாகவே முன்னெடுத்து எதுவும் செய்ததில்லை. இதில் “ரம்! இன்னிக்கு என்ன மெனு?” என்று அவன் தோளில் தொங்கிக் கொண்டு கேட்கும்போது பொறுமை இழந்து கோபம் ஒரு புறமும் புது மனைவி என்ற காரணத்தால் ஆசை ஒரு புறமும் என்று ஒரு வழி ஆகி இருந்தான்.

அதனால் அம்மா வந்ததும், அவர் இருக்கும் வரை சாப்பாட்டுக்கு தொல்லை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

பானு இயல்பாக மகனின் வீடு என்று சமையல் பொறுப்பை கையில் எடுத்துக் கொள்ள அவருக்கு இது எதுவும் தெரியவில்லை. வஞ்சுவுக்கு அவர் மேல் பெரிதாக பிரியம் என்று இல்லை என்றாலும் மாமியார் என்ற பயம் இருந்தது.

அதனால் அவர் இருக்கும் வரை சமையல் அறையில் அவருடன் கூடக் கூட வேலை செய்ய அவர்கள் இருந்த ஒரு வாரம் நன்றாகவே பொழுது போனது.

பெரியவர்களை அழைத்துக்கொண்டு மாலையில் ஊர் சுற்ற வெளியே சாப்பிட என்று எந்த உரசலும் இல்லாமல் நாட்கள் போனது.

பானு பார்த்து இன்னும் வீட்டுக்கு தேவை என்று பட்டியலிட அதையும் மாலையில் வெளியே போகும் போது மூர்த்தி வாங்கிக் கொடுத்தார்.

ராம்குமார் பணம் கொடுக்க முன்வந்த போதும் பானுவே “அதெல்லாம் அப்பவே குடுப்பார்டா!” என்று தடுத்து விட்டார்.

வஞ்சுவிற்கு மாமியார் மேல் இருந்த மோசமான ஆள் என்ற கருத்து மாறி மாமியார் பரவாயில்லை என்ற நிலைக்கு அவரை ஏற்றி இருந்தாள்.

அதனால் ஒரு வாரம் கழித்து இருவரும் கிளம்பியபோது வார்த்தையால் மட்டும் இல்லாமல் இருவருமே அவர்களை இன்னும் கொஞ்ச நாள் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

ராம்குமாருக்கு அவர் கிளம்பிவிட்டால் மறுபடியும் சமையல் அஅறை பொறுப்பு தனக்கு வந்து விடும் என்ற கவலை வேறு.

Advertisement