Advertisement

அவள் நேரம் கடைசி நிமிடத்தில் ப்ரொஜெக்டர் வேலை செய்யாமல் போக
 இப்ப நீ என்ன செய்வியோ தெரியாது? ப்ரொஜெக்டர்  மட்டும் கொண்டு வரல? அவ்வளவு தான். மேம் இப்ப வர நேரம். அவங்க ரொம்ப கோபப்படற டைப். நீ தொலைஞ்ச. நாங்க நீ தான் காரணம்னு சொல்லிடுவோம்.
என்று பாலாஜி அவளை மிரட்ட அவன் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்பியவள் ரொம்பவே பயந்து போனாள்.
என்ன செய்வது என்றே புரியாமல் பயத்துடன் வெளியே வந்த போது தான் ராம்குமாரை பார்த்தாள்.
ராம்குமார் எல்லோரிடமும் இனிமையாக பழகுவதை இந்த சிம்போசியம் திட்டமிடல் தொடங்கிய நாட்களாக பார்த்து வந்தவளுக்கு அவனிடம் ஒரு பிரமிப்பு இருந்தது.
எவ்வளவு பதட்டம் வரும் சூழ்நிலையாக இருந்தாலும் பொறுமையுடன் சமாளிக்கும் விதம், சிரித்த முகம், எல்லோரிடமும் சரளமான பேச்சு என்று திரிபவனை ஒருத்தி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்கு தெரியாது.
சிம்போசியம் அன்று மாணவிகள் எல்லாம் புடவை தான் கட்ட வேண்டும் என்று சீனியர்களிடம் இருந்து ஆணை வந்ததும் வீட்டுக்கு அழைத்தாள். அவளிடம் ஏது புடவை?
அம்மாவிடம் பேசி அவர் வைத்திருந்த புடவைகளில் ஓரளவாவது பொருந்தும் என்று தோன்றிய புடவைகளை கேட்டனுப்ப அவள் அப்பா வந்து கொடுத்து விட்டுப் போனார்.
அம்மாவின் ப்ளௌசையே தன் அளவுக்கு அங்கங்கே பிடித்து லாவண்யா வைத்திருந்த பீத்தல் நகைகளை அணிந்து வழக்கம் போல் இரட்டை ஜடை பின்னி ரிப்பன் வைத்து கிளம்பியவளை பார்த்த லாவண்யாவே டென்ஷன் ஆகிவிட்டாள்.
ஏண்டி!ஏற்கனவே நம்ம கிளாசில் எவளும் நம்ம கண்டுக்கறதே இல்ல. என்னவோ ஆதிவாசி மாதிரி வினோதமா பாத்துட்டு போறாளுக. இதுல நீ இந்த லட்சணத்துல கெளம்பினா வெளங்கிரும். பின்னலை மொத அவுத்து விடுடி.
என்று வஞ்சுவை அதட்டியவள் அவளே வந்து வேகமாக தலைமுடியை விரித்து விட்டாள்.
கூந்தல் அவிழ்ந்து இடுப்பு வரை தொங்க இருவருக்குமே என்ன தலை அலங்காரம் செய்வது என்று தெரியவில்லை.
பிறகு யோசித்து இருவரும் தலைமுடியை விரித்து விட்டே போவோம் என்று முடிவு செய்தனர். பின்னலின் தடம் கூந்தலில் நெளி நெளியாய் தெரிய இரண்டு பக்கமும் சிறு கிளிப் குத்திக் கொண்டு கிளம்பினாள் வஞ்சு.
துவக்க விழா முடிந்து போட்டி தொடங்க அவரவர் இடத்திற்கு மாணவர்கள் போட்டி ஏற்பாடுகளை கவனிக்க பிரிய வஞ்சுவும் மீண்டும் சீனியர்களை சந்திக்க வேண்டுமே என்ற பயத்துடன் தான் போனாள்.
அவர்கள் நண்பர்களுடன் பேசி சிரித்து சாவகாசமாய் வர வஞ்சுவே வாங்கி வைத்திருந்த லேப்டாப்பில் வந்திருந்தவர்களின் ப்ரேசெண்டேஷன் வரிசையாக காபி செய்து வைத்து முன்னரே தாங்கள் டைப் செய்து வைத்திருந்த வரிசையில் எல்லாம் ஒழுங்கு படுத்தியிருந்தாள்.
எல்லாம் சரியாக இருக்கிறது என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளை ப்ரொஜெக்டர் சோதித்தது. அதன் பல்ப் ஃப்யூஸ் போய் விட பாலாஜியும் ஸ்ருதியும் அப்போது தான் வந்தவர்கள் அவள் மேல் பாய்ந்தனர்.
ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியல? எங்கயோ கிராமத்துல இருந்து வந்து நம்மள படுத்துது. சுத்த யூஸ்லெஸ். … என்று ஆரம்பித்தவர்கள் மேலே ஆங்கிலத்தில் சரமாரியாக திட்ட வந்தவர்களின் பார்வை அவள் மேல் பாவமாக படிந்தது.
அவர்கள் பேசப்பேச பதட்டத்தில் வஞ்சுவுக்கு வேர்த்து கொட்ட கண்ணில் கண்ணீர் இப்போது வரப்போகிறேன் என்று எச்சரித்தது.
இப்ப என்ன பண்ணுவியோ தெரியாது! ப்ரொஜெக்டர் இன்னும் 5 நிமிஷத்தில் இங்க வொர்க் ஆகணும். புரியுதா? மேம் இப்ப வந்துடுவாங்க. அவங்க கிட்ட நீ தான் காரணம் என்று சொல்லிடுவோம். கோ மேன்…!
என்று ஸ்ருதி அதட்ட வஞ்சு வாயே திறக்காமல் வெளியே ஓடினாள். வெளியே வந்தாலும் என்ன செய்வது என்று புரியவில்லை.
அவர்கள் பேசுவது எல்லாம் அநியாயம் என்று தெரிந்தாலும் மோத அவளுக்கு தைரியம் ஏது?
ஒரு நிமிடம் படிப்பை விட்டு வீட்டுக்கே போய் விடலாமா என்ற அளவுக்கு யோசித்தாள் வஞ்சு.
என்ன செய்வது என்று யோசித்தபடி வெளியே வந்தவள் காரிடாரில் நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த ராம்குமாரை பார்த்தாள்.
ஏற்கனவே அவன் மேல் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தவளுக்கு அவனிடம் கேட்க எந்த பயமும் தோன்றவில்லை.
உடனே அணுகமுடியாதபடி அவன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பதை கவனித்தாலும் நேரம் ஓடுவதில் கால் மாற்றி நின்று பதட்டத்துடன் காத்திருந்தாள்.
 
என்னைப் பாரு! என்னைப் பாரு! என்று மனதுக்குள் அவனிடம் பேசியபடி நின்றவளை அவன் ஏமாற்றவில்லை.
அவள் நினைத்தது போலவே சில நொடிகளில் திரும்பிப் பார்த்தவன் அவள் விடாமல் அங்கேயே நிற்பதைப் பார்த்து வாய் விட்டு சொல்லத் தேவையில்லாத புரிதலோடு அவள் அருகே வந்தான்.
அவள் கவலையை சொன்ன போதும் கொஞ்சம் கூட பதறாமல் அதே நேரம் அவளிடம் பரிதாபமும் காட்டாமல் சாதாரணமாக பேசியது அவளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்த நேரம் தெரியவில்லை என்றாலும் பின்னாளில் அவனையும் இந்த நிகழ்வையும் பல முறை நினைத்திருக்கிறாள். 
தன்னை மிரட்டிய பாலாஜியை அவன் மிரட்டி வேலை வாங்கியது, சூழலை அழகாக சமாளித்தது எல்லாம் அவன் மேல் அவள் கொண்ட மதிப்பை உயர்த்த அந்த கல்லூரியில் நுழைந்த பிறகு லாவண்யா தவிர்த்து நட்போடு பழகிய ஒரே நபரை அவளால் மறக்கவே முடியாமல் போனது.
ஒரு வழியாக அங்கே தாக்கு பிடித்து படிப்பை முடித்து இங்கே வேலைக்கு வந்தால் இங்கு முதல் நாளே அதை விட மோசமாக இருந்தது.
காலையில் பணியில் சேர்ந்ததும் அவள் டீம் லீடரை சந்திக்க சொல்ல அவள் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியபோது அவன் முகத்திலும் ஏளனம்.
நான்கு வருடங்களாக இந்த பார்வைகளையே பார்த்து பழக்கப் பட்டு விட்டதால் ஒரு பார்வையிலேயே புரிந்தது.
என்னமா? எந்த ஊரு நீயி? இங்கிலீஷ்ல நல்லா பேசுவியா? இல்லனா இங்க உன்னால குப்பை கொட்ட முடியாது. புரியுதா?
வஞ்சுளவல்லி வெறுத்துப் போனாள்.
திறமையை விட தோற்றத்திற்கு தான் மதிப்பா? இதே மாதிரி பேச்சை இவனால் எல்லோரிடமும் பேச முடியுமா?
அவள் நினைத்தது போலவே குட்டி போனிடைல் போட்டு ஜீன்ஸ் குர்தியில் டக் டக்கென்று ஒரு பெண் வர அவளிடம் பல்லை காட்டி அவள் கேட்ட கேள்விக்கு குழைவாக ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.
அவள் சென்ற பிறகு மீண்டும் இவளை முறைத்தவன் என்னமா? சொன்னதெல்லாம் புரிஞ்சிச்சா? இல்லையா? உங்கள எல்லாம் மேச்சு வேலை வாங்கறதுக்குள்ள எங்க தாவு தீந்துறும் போல.. ரொம்பவே சலித்துக் கொண்டான்.
வஞ்சு பதிலே பேசாமல் தலையை மட்டும் ஆட்ட
ஊருக்கு பத்து இன்ஜினீரிங் காலேஜ் திறந்து வெச்சு எங்க உசிர வாங்கறான். ஒண்ணும் தெரியாம வேலைக்கி வந்துடுதுங்க.
அவள் காது படவே முணுமுணுக்க வஞ்சு வழக்கம் போல வாயே திறக்கவில்லை.
சரி மா! அப்படியே உக்காராம போய் வேலைய பாரு. இப்ப போனாங்களே? அவங்க பேரு ப்ரீத்தி! அவங்கள போய் பாரு. எல்லாம் சொல்லுவாங்க.
என்றதோடு தன் கவனத்தை லேப்டாப் பக்கம் திருப்பியவன் அதற்கு மேல் அவளை கண்டு கொள்ளவே இல்லை.
முணுமுணுப்பாய் நன்றி சொல்லி விட்டு எழுந்து போய் ப்ரீத்தியை பார்க்க போனாள் வஞ்சு.
அவள் வந்தது தெரியாமல் ப்ரீத்தி நம்ம டீமில் புதுசா ஒரு கருப்பாயி வேலைக்கு சேந்திருக்காடி! பாத்தாலே தெரியுது பட்டிக்காடு என்று.
அவள் கேலி பேசி சிரிக்க கூடவே அவள் தோழிகளும் சிரித்தனர்.
அதற்கு மேல் அங்கே நின்றால் அழுது விடுவோம் என்று தோன்ற வேகமாக வெளியே வந்து உட்கார்ந்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் கொட்டியது.
பேசாமல் ஊருக்கே போய்விடலாம் என்று வைராக்கியமாய் நினைத்தவளின் காதில் யாரோ கனைக்கும் குரல் கேட்க அட! இங்கயும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்களா? என்று வெறுப்போடு நிமிர்ந்தவள் இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.
தான் அழுது கொண்டிருந்தது கூட மறந்து போயிருக்க ..ண்ணா! என்று அழைத்தபடி பட்டென்று எழுந்தாள்.
அவனை இந்த நேரத்தில் பார்த்ததில் அவளுள் அத்தனை ஆசுவாசம்.
சந்தோஷமாய் முகம் மலர சிரித்தவளை பார்த்த ராம்குமாருக்கு சங்கடம் குறைந்து அவனும் அவளை பார்த்து புன்னகைத்தான்.
கன்க்ராட்ஸ் அண்ட் வெல்கம் டு த கம்பெனி ஜூனியர்! என்று தன் கையை நீட்ட அவள் ஆவலாக தன் கையால் இறுக பற்றிக் கொண்டாள்.
தேங்க்ஸ் ணா! என்னை இன்னும் நினைவு வெச்சிருக்கீங்க! என்று முகம் மலர சொன்னவளை பார்த்து லேசாக புன்னகைத்தான் ராம்குமார்
இங்க என்ன ப்ராப்லம்? கண்ணு வாட்டர்ஃபால் மாதிரி கொட்டிட்டு இருக்கு?
அவள் சகஜமாக பேசியதில் ராம்குமார் உரிமையாக அவளிடம் விசாரிக்க இன்னும் அவன் கையை விடும் எண்ணம் வரவில்லை வஞ்சுவிற்கு.
என்னவோ அவன் கை பிடித்திருந்தால் யானை பலம் வந்தது போல் இருந்தது அந்த சின்ன பாக்கெட்டுக்கு.
அவள் பதில் சொல்லு முன்னே ராம்குமார் செல் அடிக்க ரஞ்சித் அழைத்திருந்தான்.

Advertisement